Published:Updated:

பேச்சரவம் எல்லாம் அந்தக் கேசவனின் பெருமைகளே... தோழியின் துயில் எழுப்பும் கோதையின் திருப்பாவை - 7

ஆண்டாள் காத்திருக்கும் நேரத்தில் பிறர் போலக் கதைபேசுபவள் இல்லை. வம்பு, தும்புகள் அவள் வாயில் வராது. எவ்வளவு நேரம் நிற்கிறாளோ அவ்வளவு நேரமும் அந்தக் கோவிந்தனின் புகழ்பாடுவதில்தான் செலவிடுவாள். கொஞ்சம் தன் வீட்டு வாசலிலுல் நின்று பாடட்டுமே என்று நினைத்தாள் ஒரு தோழி.

திருப்பாவை- 7
திருப்பாவை- 7

கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்பெண்ணே!

காசும்பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ!

நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!

தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!

திருப்பாவை
திருப்பாவை

ஆண்டாளின் தோழிகள் பலவிதம். எப்படி ஜீவாத்மாக்கள் பலவிதமான தன்மைகளோடு இருக்கின்றனரோ அதே போன்று அவர்களும் பல்வேறு குண நலன்களை உடையவர்கள். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் அவர்கள் அனைவருமே ஆண்டாளின் தோழிகள் என்பதுதான்.

இந்த உலகம் நன்மை தீமை ஆகிய இரண்டும் கலந்துகிடக்கிறது. ஜீவாத்மாக்கள் அதில் எது உயரிய தன்மைகொண்டது என்பதை அறியாமல் குழம்பி தம் மனம் போன போக்கில் வாழ்கின்றனர். இறைவனோ ஜீவாத்மாக்களின் மேல் மிகுந்த பிரியத்துடன் இருந்து, அவர்கள் எப்போது ஞானவழியை அடைந்து தன்னை நாடி வருவார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டேயிருப்பாராம்.

ஆனால், இந்தப் பிரபஞ்ச பரிபாலனத்தில் பல விதிகள் உள்ளன. அவை நல்லவர்களைக் காக்கவும் தீயவர்களை அழிக்கவும் உருவாக்கப் பட்டவை. அப்படிப்பட்ட விதிகளை விதித்தவன் பகவான்தான் என்றாலும், அவனும் அந்த விதிகளுக்குக் கட்டுப்பட்டவனே. சுவாமி வேதாந்த தேசிகர் இதை விளக்கும்போது, பகவான் உயிர்கள் செய்யும் பாவங்களைக் கண்டு ஆவேசிக்கும்போது பெரிய பிராட்டி, `பாவம் செய்யாதவர்கள் யார் இருக்கிறார்கள், கொஞ்சம் பொறுங்கள்’ என்று பரந்தாமனை சாந்தப்படுத்துவாளாம். தந்தை தன் பிள்ளைகளைக் கோபித்துக்கொள்ளும்போது தாய் சமாதானம் செய்வதுதானே இயல்பு. அப்படிப் பெரிய பிராட்டி கருணைக் கடலாய் இருந்து நமக்காகப் பரிந்து பேசுவாள் என்றால் பூமாதேவியோ அதனிலும் தயாள குணம் கொண்டவளாக, `பாவிகளா, அப்படி யாருமே இந்தப் பூவுலகில் இல்லையே’ என்பாள் என்று எடுத்துரைப்பார் தேசிக சுவாமிகள்.

திருப்பாவை
திருப்பாவை

பகவானை அடைவதற்கு நல்வழியைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதில் சென்று சேர வேண்டிய பகவானை அறிந்தவராகவும் அதே வேளையில் அழைத்துச் செல்ல வேண்டிய ஜீவாத்மாவின் இயல்பையும் அறிந்தவராக ஒருவர் வேண்டும். அவரையே நாம் குரு என்கிறோம். நம்மிடையே `குருவருளே திருவருள்’ என்று ஒரு சொல்வழக்கும் உண்டு. குருவை அடைந்தவர்கள் திருவாகிய அந்தத் தாயாரை அடைகிறார்கள். அதன்மூலம் பகவானின் இரக்கத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். இதைத்தான் அந்தச் சொல்லாடல் குறிக்கிறது.

கோதையோ பூமிப்பிராட்டியின் அவதாரம். அப்படிப்பட்டவள் தம் தோழிகளில் ஒருசிலரை நேசிக்கவும் ஒரு சிலரை வெறுக்கவும் செய்வாளா... தன்னைச் சேர்ந்தவர்கள் அத்தனை பேரையும் அந்தத் தயாளனிடத்தில் வழி நடத்தாமல் விடுவாளா...

உறக்கத்திலிருந்து விழித்துக்கொள்ள மட்டுமா தோழியரை அழைக்கிறாள் கோதை? - திருப்பாவை 6
திருப்பாவை
திருப்பாவை

போன பாசுரத்தில் ஒரு பெண் தன்னையறியாமலேயே உறங்கிவிட்டாள். அவளை `புள்ளும் சிலம்பின காண்...’ என்று பரிவோடு எழுப்பினாள். ஆனால், அடுத்து அவர்கள் சென்று சேர்ந்த தோழி கொஞ்சம் துடுக்கான பெண். அவள் உறங்கவில்லை. ஆனால், உறங்குபவள்போல் நடித்துக்கொண்டிருக்கிறாள். ஆண்டாளுக்கு அவளையும் அவள் குணங்களையும் தெரியும். ஆண்டாள் காத்திருக்கும் நேரத்தில் பிறர் போல கதைபேசுபவள் இல்லை. வம்பு, தும்புகள் அவள் வாயில் வராது. எவ்வளவு நேரம் நிற்கிறாளோ அவ்வளவு நேரமும் அந்தக் கோவிந்தனின் புகழ்பாடுவதில்தான் செலவிடுவாள். கொஞ்ச நேரம் கோதை தன் கொஞ்சும் குரலில் அந்தக் கேசவனைத் தன் வீட்டு வாசலில் நின்று பாடட்டுமே என்று நினைத்தவளாக, கதவைத் தாழிட்டுக்கொண்டு படுத்திருந்தாள்.

``உள்ளே படுத்திருக்கிறாளே அவள் சாதாரணமானவள் அல்ல. சரியான பேய்ப் பெண். பேயென்றாலும் பேய் அந்தக் கோவிந்த நாமப் பேய் பிடித்தவள். நம்மை கோவிந்த நாமம் சொல்லவிட்டு உள்ளே உறங்குவதுபோல வேஷமிடும் பேய். அடிப் பேய்ப் பெண்ணே, ஆனைச்சாத்தன் என்னும் வலியன் பறவைகள் சத்தமிடுகின்றன. அவை ஒன்றோடு ஒன்று கலந்து பேசிக்கொள்கின்றன. இதுவரை இருந்த இருள் விலகிக்கொள்ளப் போகிறது என்கிற பேராசையால் மகிழ்ச்சி மிகுந்து பேசித் திரிபவை. அவற்றின் பேரரவம் எல்லாம் கோவிந்தனின் பெருமைகளைப் பேசுவதாக அல்லவா உள்ளன. அவை கூடவா கேட்கவில்லை... உன் வீட்டு வாசலில் இருக்கும் மரத்தில்தான் அவை அத்தனையும் பேரரவம் இட்டுக்கொண்டிருக்கின்றன... அது கூடக் கேட்கவில்லையா...

ஆண்டாள்
ஆண்டாள்

சரி, அதிகாலையிலே எழுந்து நல்ல வாசனைப் பொடிகளைப் பூசிக்கொண்டு நறுமணத்தோடு திகழும் ஆய்ச்சியர்கள், தயிர்கடையும்போது அவர்கள் கழுத்தில் அணிந்த அணிகலன்கள் ஒன்றோடொன்று உரசி ஒலி எழுப்பும் சத்தம் கூடவா கேட்கவில்லை... அட, அணிகலன்களின் சத்தம்தான் கேட்கவில்லை குடத்தில் தயிர் உள்ளுக்குள் புரளும் சத்தம் கூடவா கேட்கவில்லை... அடியே நீதான் எங்களில் நடுநாயகம் போன்றவள். நீ நடுவிருக்க அந்தக் கேசவனைப் பாடுவது எவ்வளவு இனிமை தெரியுமா... தோழிகளே இதோ இந்தக் கதவின் துவாரம் வழியாகப் பாருங்கள். நாம் பாடும் இனிமையான கோவிந்த நாம சங்கீர்த்தனத்தைக் கேட்டு அவள் முகம் பூரித்து தேஜஸ் உடையவளாகப் படுத்திருக்கிறாள். பெண்ணே போதும் உன் நடிப்பு கதவைத் திறந்துகொண்டு வெளியே வா” என்று பாடுகிறாள் ஆண்டாள்.