Published:Updated:

மாற்றாரை மாற்றழிக்க வல்லானைப் பாடத் தோழியை அழைக்கும் கோதை... திருப்பாவை 15

கண்ணன்
கண்ணன்

நித்திரை மகாமாயையாய் இருக்கும்போல் தெரிகிறது. இல்லையென்றால் முன் தினம் இரவு கூடிப் பேசி அந்தக் கோபாலனின் மகிமையைக் கோதை சொல்லக் கேட்டு கண்ணீர்மல்கி மெய்சிலிர்த்த தோழிகள் தற்போது சகலமும் மறந்து உறங்குகிறார்கள் என்றால் அதை என்ன சொல்வது...

எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ

சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்

வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்

வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக

ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்

வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

கிருஷ்ணன்
கிருஷ்ணன்

வாழ்க்கையை மாயை என்கிறார்கள். ஆனால், நித்திரை மகாமாயையாய் இருக்கும்போல் தெரிகிறது. இல்லையென்றால் முன் தினம் இரவு கூடிப் பேசி அந்தக் கோபாலனின் மகிமையை கோதை சொல்லக் கேட்டு கண்ணீர்மல்கி மெய்சிலிர்த்தனர் தோழிகள். `எப்போது விடியும்... எப்போது நாம் நீராடி நோன்பை மேற்கொள்ளலாம்’ என்றாள் ஒருத்தி. மற்றொருத்தியோ `உறங்கவே வேண்டாம், அப்படியே பேசிக்கொண்டிருந்தால் விடிந்துவிடும். அப்படியே போய் நீராடி விடலாம்’ என்றாள். சில பெண்கள் `நேரமே உறங்கினால் நேரத்தில் விழித்துக்கொள்ளலாம்’ என்று சொல்லி விடைபெற்றுப் போனார்கள். இப்படி எதுவும் சொல்லாமல் கோதை போகலாம் என்று சொல்கிறவரைக்கும் உடனிருந்து கலைந்தனர் பிற தோழிகள்.

அதிகாலை ஆண்டாள் விழித்துக்கொண்டாள். யாரெல்லாம் எதுவும் சொல்லாமல் கோதை சொல்லைக் கேட்டு அமைதியாகக் கலைந்து சென்றனரோ அவர்கள் எல்லாம் சொன்ன நேரத்துக்கு சொன்ன இடத்தில் கூடிவிட்டனர். யார் யார் எல்லாம் நேற்று மெய்சிலிர்க்கப் பேசினார்களோ அவர்கள் ஒருவரையும் காணோம். கோதை அவர்கள் வீடுதேடிப் போனாள். இது என்ன மாயம்... இரவு விழித்திருந்தபோது கண்ணனின் மகிமைகளைக் கேட்டு மெய்சிலிர்த்தவர்கள் இப்போது அதே கண்ணனின் மகிமைகளை கோதை அவர்களின் வீட்டு வாசலிலிருந்து பாடும்போது உறக்கம் கலைய மறுக்கிறார்கள். உறக்கம் அவர்கள் சிந்தையை மூடி வைத்திருக்கிறது. உறக்கமும் ஓய்வுமே பெரும் சுகம் என்பதாக அவர்கள் மயங்கியிருப்பார்கள் என்றால் தூக்கம் மாமாயைதானோ...

ஆண்டாள்
ஆண்டாள்

ஆனால், தன்னிடம் வந்து சரணடைந்த ஆத்மாக்களுக்கு உண்டாகும் ஆத்ம மயக்கங்களைத் தெளிவித்து சத் பாதையைக் காட்ட வேண்டியது ஆசாரியனின் கடமை அல்லவா... கோதை இங்கே ஆசாரியராக இருக்கிறாள். அவளை நாடி இருக்கும் அவளின் தோழிகள் யாரும் துர் ஆத்மாக்கள் இல்லை. அவர்கள் உண்மையையும் சத்தியத்தையும் நம்புகிறவர்கள். அந்தக் கண்ணனை மனதார நினைத்து வழிபட நிஜமாகவே விரும்புகிறவர்கள். இப்போது அவர்கள் கொண்டிருக்கும் தூக்கம் என்பது சிறு தடை மட்டுமே. அந்தத் தடையை நீக்கவே, அவர்களின் இல்லம் தேடிவந்து அருள்கிறாள் கோதை.

கோதை ஒரு வீட்டின் வாசலில் வந்து நின்றாள். உள்ளே தோழி உறக்கத்தில் இருந்து விழித்தாலும் அப்படியே படுத்துக் கிடக்கிறாள். படுக்கையைவிட்டு எழுந்திருக்க அவளுக்கு மனமில்லை. கோதை ஒவ்வொரு தோழியின் தன்மையையும் அறிந்தவளாய் இருக்கிறாள். உள்ளே இருக்கும் தோழியை, ``எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ...” என்று குரல்கொடுத்தாள். உள்ளே இருப்பவள் கோதையின் குரல் கேட்டு கொஞ்சம் நாணமடைகிறாள். படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்துகொண்டாள். அட, கொஞ்சம் முன்னமாக எழுந்திருந்தால், இந்நேரம் இவர்களோடு சேர்ந்துகொண்டிருக்கலாம். இப்படித் தூக்கக் கலக்கத்துடன் இருக்கும் முகத்தோடு போய் நின்றால் தோழிகள் சிரிக்க மாட்டார்களா... எப்போதும் கேலி செய்யாத தோழியே நம்மை `இளங்கிளியே...’ என்கிறாள் பிற தோழிகள் சும்மா இருப்பார்களா... உள்ளே இருந்தபடியே குரல்கொடுத்தாள்.

கிருஷ்ணன்
கிருஷ்ணன்

``சரி சரி... சில்லென்னும் குளிர்காற்று படுவதுபோல என்னைக் கொஞ்ச வேண்டாம். நீங்கள் முன்னமே போங்கள் நான் பின்னால் வந்துவிடுகிறேன்” என்றாள். பேசாமல் அப்படியே வந்திருக்கலாம் என்பதுபோல கோதை அடுத்த வரியைச் சொன்னாள். ``அடேங்கப்பா, உன்னைப் பற்றி நாங்கள் அறிய மாட்டோமா... இதே போன்ற உன் கட்டுக்கதைகள் அநேகம் கேட்டுவிட்டோம். நீ சொன்ன சொல்லை இதற்கு முன்பு எப்படியெல்லாம் காப்பாற்றினாய் என்பதை நாங்கள் அறிவோம். உன் பேச்சுத் திறத்தை எங்களிடம் காட்டாமல் உடனே வெளியே வா” என்றாள் ஆண்டாள். தேவையா இது என்பதுபோல இருந்தது தோழிக்கு.

``நானா பேச்சுத் திறம் மிக்கவள்... உங்கள் அளவுக்கு எனக்கு அந்தத் திறம் இருக்கிறதா என்ன... சரி... நானே பிழை செய்தேன் போதுமா...” யார்தான் தம் பிழையை உடனே ஏற்றுக்கொள்வார்... இவள் ஏற்றுக்கொள்வாள் போல உள்ளூர கொஞ்சம் வருந்துகிறாளோ என்று எண்ணினாள் ஆண்டாள். ``நீ அடுத்து என்ன சொல்லப்போகிறாய் என்பதை நான் சொல்லவா... எல்லோரும் வந்துவிட்டார்களா... நான் மட்டும்தான் தாமதா என்று அடுத்த பேச்சை ஆரம்பிப்பாய். அந்தக் கவலையே வேண்டாம். எல்லோரும் வந்துவிட்டோம். உனக்கு சந்தேகம் என்றால் வெளியே வந்து எண்ணிக்கொள்.

கிருஷ்ணன்
கிருஷ்ணன்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையனைப் போற்றிடத் தன் தோழியை அழைக்கிறாள் கோதை! திருப்பாவை 14

பெண்ணே நாங்கள் எதற்கு உன்னை அழைக்கிறோம் என்று உனக்குத் தெரியாதா... வலிமை மிகுந்த மதம் கொண்ட யானையைக் கொன்ற அந்தக் கண்ணனை, அவனை வெறுக்கும் காரணத்துக்காக அவன் மேல் பகையும் அவன் கருத்துக்கு மாற்றுக் கருத்தும் கொண்டவர்கள் பலர். ஆனால், அவனோ தன்னிடம் பகை கொண்டவர்களை அழித்தான். அதே வேளையில் தன் கருத்துக்கு மாற்றுக் கருத்துகொண்டவர்களுக்கு அருள் பாலித்து அவர்களின் கருத்துகளை மாற்றினான். அப்படிப்பட்ட நல்லவனும் வல்லவனுமான அந்த மாயக்கண்ணனைப் பாடவல்லவோ அழைக்கிறோம். அதை நீ புரிந்துகொண்டவளானால் உடனே வெளியே வா” என்று அழைக்கிறாள் கோதை. மாயை, குருவின் உபதேசம் கேட்டவுடன் விலகுவதுபோல தோழி ஆண்டாளின் மெய்யான வார்த்தைகளைக் கேட்டுத் தெளிந்தவளாகி ஓடிவந்து குழாமில் கலந்துகொண்டாள்.

அடுத்த கட்டுரைக்கு