Published:Updated:

பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்த கோதண்டனைப் பாட அழைக்கிறாள் கோதை... திருப்பாவை -13

கிருஷ்ணன்
கிருஷ்ணன்

இளமையில் இறைவனை நாடி வருகிறபோது அதிகமான தயக்கத்தோடே வருகிறோம். சில நேரங்கள் அருகில் செல்கிறோம். பின்பு அஞ்சி விலகிக் கொள்கிறோம். இன்னும் கொஞ்சம் காலம் ஆகட்டும் என்று காத்திருக்கிறோம்.

,புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்

குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே

பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

கிருஷ்ணன்
கிருஷ்ணன்

மார்கழியில் நீர் நிலைகள் எல்லாம் குளிர்ந்து கிடக்கும். பனிபொழியும் அந்தக் காலையில் நீரில் கால்வைப்பதற்கு நிறைய தயக்கம் எழும். அதன் அருகே சென்று அதைத் தொட்டு உணர்ந்து பின்பு பின்வாங்கி, உடன் வந்தவர் கிண்டல் செய்ய மீண்டும் முயற்சி செய்து மெல்லக் கால் வைத்து உள்ளே இறங்கி சில நொடிகள் நம் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்து விரைக்கும். மூச்சின் ஆசுவாசம் அடங்கிய பின்பு குளிர் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். குளிர் விலகியதும் உடல் மெல்லத் தளர்ந்து அந்த நீராடலை அனுபவிக்கும். இப்போதும் நிலத்தில் குளிர் இருக்கிறது. ஆனால், நீராடும் நமக்குக் குளிர்விட்டுப் போகிறது.

நாமும் அப்படித்தான் இறைவனை நாடி வருகிறபோது அதிகமான தயக்கத்தோடே வருகிறோம். சில நேரங்கள் அருகில் செல்கிறோம். பின்பு அஞ்சி விலகிக் கொள்கிறோம். இன்னும் கொஞ்சம் காலம் ஆகட்டும் என்று காத்திருக்கிறோம். இளமை முடியட்டும் என்கிறோம். இல்லறம் சிறக்கட்டும் என்று காத்திருக்கிறோம். செல்வங்களும் பிற சுகங்களும் சேரட்டும் என்று காத்திருக்கிறோம். பின்பு முதுமையில் இறைவனில் மனதைச் செலுத்துவோம் என்று காத்திருக்கிறோம். ஆனால், முதுமையோ நினைவுகள் தொலைந்த ஒரு காலமாக, சொல்ல விரும்பும் பெயர்களைக் கூடச் சொல்லமுடியாததாக மாறிவிடக் கூடும் ஆபத்துகள் நிறைந்தது என்பதை நாம் அறிவதில்லை.

ஆண்டாள் மார்கழி நீராடிப் பாவை நோன்பு நோற்கத் தன் தோழிகளை அழைக்கிறாள். சில தோழிகள் அதிகாலையிலேயே எழுந்து ஆண்டாளுடன் சேர்ந்துகொண்டனர். இன்னும் சிலர் உறக்கத்தில் ஆழ்ந்திருக்க ஆண்டாள் அவர்களை வீடு தேடிச் சென்று அழைக்கிறாள்.

ராம்
ராம்

இந்தப் பெண் கண்ணன் மேல் பேரன்பு கொண்டவள். அவள் உணர்விலும் உறக்கத்திலும் கண்ணனே நிறைந்திருக்கிறான். அப்படிப்பட்டவள் இன்னும் தன் உறக்கம் விட்டு எழுந்து வரவில்லை. அவள் கண்ணனின் வீர பராக்கிரமங்களையும் அவனின் அழகையும் தன் நினைவுகளில் கொண்டு அதில் திளைத்துக் கிடக்கிறாள்.

தனியாகத் தியானித்து இருப்பது நல்லதுதான். ஆனால், அதைவிட கூடியிருந்து நாம ஜபம் செய்து அந்த நாராயணனைப் பாடிப் பறைகொள்வது அதைவிட மேலானது. அந்தப் பரந்தாமனே பாகவதர்கள் குழாம் எங்கு இருக்கிறதோ அங்கு விரும்பி வந்து வசிப்பவன் அல்லவா...

விஷ்ணு
விஷ்ணு

இவற்றை அறியாத அந்தத் தோழியை ஆண்டாள், பெருமாளின் பராக்கிரமங்களைச் சொல்லி எழுப்புகிறாள்,

``பெண்ணே, பறவையாக மாறிவந்த அசுரனை வென்றவனும் அந்தப் பொல்லாத அசுரனாகிய ராவணனின் தலையைக் கிள்ளி எறிந்து கொன்றவனுமான அந்தத் திருமாலின் நாமத்தைப் பாடிக்கொண்டே நம் தோழிகளில் சிலர் குறிப்பிட்ட நேரத்தில் துயிலெழுந்து மார்கழி நீராடி பாவை நோன்பு மேற்கொள்ள வந்து இதோ உன் வீட்டு வாசல் முன்பாகக் காத்திருக்கிறோம். பிறரோ நீராடப் போயினர். ஆனால் நீ இன்னும் உன் படுக்கையை விட்டு எழுந்துகொள்ளவில்லை.

நீ இன்னும் நேற்றுமுடிவடையவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா... வியாழனாகிய நேற்று உறங்கப் போய்விட்டது. வெள்ளியாகிய சுக்கிரனும் எழுந்துவிட்டது. இன்னும் நீ உறங்கிக்கொண்டிருப்பது சரியா...

நாராயணன்
நாராயணன்
ஆண்டாள் வருவாள் என்று அறிந்தும் தோழிகள் உறங்கும் காரணம் என்ன? -கோதையின் திருப்பாவை- 12!

பார், பறவைகள் எல்லாம் இரை தேடக் கிளம்பி சத்தமிட்டபடி பறக்கின்றன. உனக்கு அவற்றின் சத்தம் கேட்கவில்லையா... அழகிய கண்களையுடைய பெண்ணே, இந்தக் குளுமையான நேரத்தில் குளுமையான நீரில் வீழ்ந்து நீராடி இன்புற்று அந்தக் கண்ணனைப் பாடியிருப்பதை விட்டுவிட்டு நீ தனித்து உன் படுக்கையில் இருப்பது ஏன்... தனித்திருந்து அந்தக் கண்ணனின் நினைவில் வாழும் கள்ளத்தை விடுத்து ஓடிவந்து எம்மோடு கலந்துகொள். நாம் கூட்டமாய் இருந்து அந்தக் கண்ணனைப் பாடிக் குளிர்வோம் வா" என்று பாடியழைக்கிறாள் கோதை.

கோதையின் இந்த அறிவுரையைக் கேட்டதும் அந்தப் பெண் தன் துயில் நீங்கி ஓடிவந்து ஆய்ச்சியரோடு கலந்துகொண்டு அந்த மா ஆயனைத் துதிக்கத் தொடங்கினாள்.

அடுத்த கட்டுரைக்கு