Published:Updated:

வென்று பகைகெடுக்கும் வேல்கொண்ட கோபாலனைப் பாட அழைக்கும் கோதை... திருப்பாவை - 24

திருப்பாவை
திருப்பாவை

கண்ணனை கண்ணனாகக் கண்டு புகழ்வது அவனைப் பாடுவது ஒருவிதம் என்றால் அவனே அனைத்துக்கும் ஆதாரமான ஆதிமூலம் என்று உணர்ந்து போற்றுவது ஞானம். கண்ணனை தரிசனம் செய்யும்போது அவரை மகாவிஷ்ணு என்றுணர்ந்து பணிந்துகொள்ளும்போது அவரே மனதைக் கொள்ளை கொள்ளும் கண்ணன் என்று தெளிதல் மெய்ஞ்ஞானம்.

அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி

சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி

கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி

குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி

என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்

இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

உலகளந்த பெருமாள்
உலகளந்த பெருமாள்

யுகம்தோறும் பகவான் நாராயணர் அவதாரம் செய்து தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டுகிறார். அப்படி அவர் செய்த அவதார மகிமைகளைப் போற்றிப் பாடுவதுவே கலியுகத்தில் முக்திக்கான மார்க்கமாகச் சொல்லப்படுகிறது. யாகங்கள், தவங்கள், உயர்ந்த அனுஷ்டானங்கள் எல்லாம் கடைப்பிடிப்பதில் சிக்கல்கள் நிறைந்த யுகமாகக் கலியுகம் கருதப்படுகிறது. இந்த யுகத்தில் சாமானியரும் கடைத்தேறுவதற்கான ஒரே வழி நாம சங்கீர்த்தனமே. மகாவிஷ்ணுவுக்கு ஆயிரம் நாமங்கள். அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கவே செய்கிறது. அதுமட்டுமல்ல அந்த நாமங்கள் ஒவ்வொன்றும் பொருள் பொதிந்ததும்கூட. அப்படிப்பட்ட நாமங்களில் மகிமையான நாமங்களைத் தேர்த்தெடுத்து அவற்றின் சிறப்புகளை விளக்கும் விதமாகக் கோதை கண்ணனைப் புகழ்கிறாள்.

கண்ணனை கண்ணனாகக் கண்டு புகழ்வது அவன் பெருமைகளைப் பாடுவது ஒருவிதம் என்றால் அவனே அனைத்துக்கும் ஆதாரமான ஆதிமூலம் என்று உணர்ந்து போற்றுவது ஞானம். கண்ணனை தரிசனம் செய்யும்போது அவரை மகாவிஷ்ணு என்றுணர்ந்து பணிந்துகொள்வதும் பள்ளிகொண்ட பெருமாளை தரிசனம் செய்யும்போது அவரே மனதைக் கொள்ளை கொள்ளும் கண்ணன் எனவும் தெளிதலும் மெய்ஞ்ஞானம். அவரை வணங்கினால் அந்தப் பரம்பொருளின் அருகில் நாம் இருக்கிறோம் என்று பொருள்.

ராமர்
ராமர்

ஆண்டாள் பரம்பொருளின் அரண்மனையில் அவன் பள்ளியறைக்கு அருகில் நிற்கிறாள். அவளும் அவள் தோழிகளும் கண்ணனின் தரிசனத்துக்காகக் காத்திருக்கிறார்கள். சுப்ரபாத சேவைக்கான நேரம் நெருங்கிவிட்டது. எந்த நேரத்திலும் அவன் சந்நிதானத்தில் எழுந்தருளி திருத்தரிசனம் தரப்போகிறான். அவன் வருகிறபோது வேறெந்தக் கவலையும் நம்மை ஆட்கொண்டிராமல் அவன் நினைவே நம்முள் நிறைந்து இருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி நாம சங்கீர்த்தனம்.

கோதை அந்த கேசவனின் அவதாரங்களின் மகிமையைப் போற்றத் தொடங்கினாள். அவதாரங்களில் முதன்முதலில் முழு மனித அவதாரமாகப் பெருமாள் கொண்டது வாமன அவதாரம். வாமனராய் வந்துதித்து உலகளந்த பெருமாளாய் மாறிய அவதாரம். பிற அவதாரங்களில் இப்படி ஒரு மாற்றம் இல்லை. எப்படி அவதரித்தாரோ அப்படியே சம்ஹாரமும் செய்வார். ஆனால், இந்த அவதாரம் சற்று மகிமையுடையது.

கிருஷ்ணர்
கிருஷ்ணர்

சம்ஹாரம் செய்ய வேண்டுமென்றால் வாமன ரூபத்திலேயே அவர் செய்திருக்க முடியும். ஆனால், பாகவத பரம்பரையின் வாரிசான மஹாபலியை அவ்வாறு செய்ய விரும்பாமல் பாதாள உலகுக்கு அனுப்பத் திருவுளம் கொண்டதால் ஒரு சிறு நாடகத்தை அங்கு அரங்கேற்ற வேண்டியிருந்தது. மேலும், அந்த அவதாரத்தில்தான் பகவான் கையேந்தி நின்றார். மஹாபலி கேட்காமலேயே அவனுக்கு விஸ்வரூப தரிசனம் வாய்த்தது. இந்தப் பிரபஞ்சத்தின் இணையற்ற மகா உருவுக்கு முன்பாகத் தான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்கிற ஞானத்தோடு மஹாபலி தலை குனிந்து நின்றான். அந்த அவதாரத்தில்தான் அனைவரும் விரும்பிப் போற்றி அடைய விரும்பும் திருவடி அவன் சிரசில் விழுந்தது. இப்படி அந்த அவதார மகிமையைச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். அத்தகைய சிறப்புமிக்க அவதாரம் கொண்டு உலகை அளந்தவனே நீ வாழ்க என்று போற்றுகிறாள் ஆண்டாள்.

சீரிய சிங்கம்போல் தோன்றி எம் குறைதீர்ப்பாய் கோவிந்தா... கோதையின் திருப்பாவை 23!

வாமன அவதாரம் நிகழ்ந்த அதே திரேதா யுகத்தில் நிகழ்ந்த அவதாரம் ராமாவதாரம். மனித வாழ்வுக்கு எடுத்துக்காட்டாகவும் அரச பரிபாலனத்துக்கு உதாரணமாகவும் அமைந்த இந்த அவதாரம் ராவண சம்ஹாரத்துக்காகவே நிகழ்ந்தது. சிங்கத்தை அதன் குகையிலேயே சென்று சந்திப்பதுதான் வீரம். கடல் சூழ் நிலத்தில் கர்வத்துடன் ஆண்டுவந்த ராவணனின் செருக்கை அழிக்க ராமன் இலங்கைக்கே சென்று அவனோடு யுத்தம் செய்து வென்றான். ராவணன் மனம் மாறுவான் என்றால் மன்னிக்க அந்த கருணாமூர்த்தி தயாராக இருந்தபோதும் தன் ஆணவத்தால் விரும்பித் தன் அழிவைத் தேடிக்கொண்டான் ராவணன். பல்லாயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்து இந்த உலகைப் பரிபாலித்த ராமச்சந்திர மூர்த்தியைப் போற்றுகிறாள் ஆண்டாள்.

திருப்பாவை
திருப்பாவை

கிருஷ்ணாவதாரத்தில் அவன் அற்புதங்களுக்கு எல்லையே இல்லை. பாலகன் என்று நினைத்து அவனைக் கொல்ல வந்த சகடாசுரனையும் கன்றுவடிவில் வந்து கொல்ல முயன்ற அரக்கனையும் கிருஷ்ணன் வென்றான். தன் இனத்தைக் காக்க குன்றை குடையாகப் பிடித்தான். அவன் திருவடியைப் போற்றுகிறோம் என்று போற்றும் ஆண்டாள் கண்ணனை வேல் ஏந்திய வீரக் கோலத்தில் கண்டு துதிக்கிறாள்.

வேல் இங்கு வீரத்தின் அடையாளம். குலம் காக்கப் போராடும் வீரனின் ஆயுதம் என்கிற அடிப்படையில் சங்கு சக்கர கதா பாணியாகத் திகழும் ஶ்ரீமன் நாராயணனை கோதை வேல் கொண்ட வீரனாகவும் கண்டு போற்றித் துதிக்கிறாள்.

கண்ணன்
கண்ணன்

இந்த உலகைப் பரிபாலிக்கவே விஷ்ணு அவதரித்தார். பரிபாலனம் என்றாலும் அதுவும் மக்கள் சேவையே. அவதாரங்கள் தோறும் சேவை செய்த அந்தப் பரந்தாமனுக்கு நாம் இப்போது சேவைகள் செய்து அவனைப் பறை கொண்டு வாழ்த்திப் பாடிப் போற்றுவோம். அவனைப் பாடவே நாம் இங்கு கூடியிருக்கிறோம் என்று ஆண்டாள் பாடி கண்ணனின் தரிசனத்துக்காகக் காத்திருக்கிறாள்.

அடுத்த கட்டுரைக்கு