Election bannerElection banner
Published:Updated:

முற்றம் புகுந்து, முகில்வண்ணன் பேர்பாட, உறங்கும் தோழியை உரக்க அழைக்கிறாள் கோதை... திருப்பாவை -11

கிருஷ்ணன்
கிருஷ்ணன்

அதிகாலையில் நாம் பாடிப் பயனுறவே ஆண்டாள் தமிழ் மொழியால் தன் திருமொழியைப் பாடினாள். வில்லிபுத்தூரை கோகுலமாக்கிக்கொண்டாள். அவள் தோழிகள் எல்லாம் ஆய்ச்சியர் ஆயினர். கோகுலத்தில் மாடுகளும் கன்றுகளும் மிகுந்து இருப்பதைப் போன்றே இங்கும் மிகுந்து காணப்படுகின்றன.

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றம்ஒன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே

புற்றரவல்குல் புனமயிலே போதராய்

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட

சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டிநீ

எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

மார்கழியில் பகல் தாமதமாகத்தான் தொடங்குகிறது. சீக்கிரம் முடிந்துவிடுகிறது. ஆனால் நோன்பு நோற்கிறவர்கள் அதிகாலையே எழுந்துகொள்கிறார்கள். எழுந்துகொள்ளும்போது இருள் இருந்தது. குளிர் காற்று வீசியது. பனி பொழிந்தது. இறைவனின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே நீராடி, திருமண் இட்டுக்கொண்டதும் புறத்துக்குளிர் உடலுக்குத் தெரிவதில்லை. வெளியே குளிர் மாறிடவில்லை. ஆனால் நம் உடல் மாறிவிட்டது.

கிருஷ்ணன்
கிருஷ்ணன்

இருளோ ஒளியோ `பட்' என்று நிகழவில்லை. படிப்படியாகத் தேய்கிறது வளர்கிறது. ஒரு மலர் தன் இதழ் விரித்து மெல்ல மலர்வதைப்போல பகல் மெல்லப் பரவிப் படர்வதைப் பார்க்க முடிகிறது. இவற்றையெல்லாம் கவனியாது உறங்குகிறவர்கள் இந்த அற்புதத்தைக் காண்பதில்லை.

மேலும் அதிகாலையில் இறைவனின் தரிசனம் நம் மனதுக்குப் புதுத் தெம்பை அளிப்பது. ஒவ்வொரு நாளும் அப்படி ஒரு சௌஜன்யமான தரிசனத்தை அருள பகவான் ஆவலோடு இருக்கிறார். அதற்காகவே சுப்ரபாத சேவை. உறங்கி எழுவது நாம்தான். பகவான் அல்ல. ஆனாலும் அவனை எழுப்புவதுபோலப் பாடி அவனருளை நாடுகிறோம்.

அதிகாலையில் நாம் பாடிப் பயனுறவே ஆண்டாள் தமிழ் மொழியால் தன் திருமொழியைப் பாடினாள். வில்லிபுத்தூரை கோகுலமாக்கிக்கொண்டாள். அவள் தோழிகள் எல்லாம் ஆய்ச்சியர் ஆயினர். கோகுலத்தில் மாடுகளும் கன்றுகளும் மிகுந்து இருப்பதைப் போன்றே இங்கும் மிகுந்து காணப்படுகின்றன. தமிழில் மாடு என்றால் செல்வம் என்று பெயர். சங்ககாலத்தில் போர்கள் மாடுகளில்தான் தொடங்கும். ஒரு குடி சேர்த்துவைத்திருக்கும் பல்கிப் பெருகும் செல்வங்களான மாடுகளை மற்றொரு குடி திருடிச் செல்லும். ஆநிரை கவர்தலே வெட்சித் திணை. தம் செல்வங்களை இழந்த குடி, அவற்றைக் கவர்ந்து சென்றவர்களைப் பின் சென்று போரிட்டு மீட்பார்கள். அதற்கு வஞ்சி என்று பெயர். இப்படித்தான் ஒரு போர் மூளும்.

விஷ்ணு
விஷ்ணு

ஆண்டாள் தன் ஊரில் கன்றுகளும் கறவைப் பசுக்களும் மிகுந்து காணப்படுகின்றன என்கிறாள். இதனால் பகைவர்கள் அங்கு கவர்ந்து செல்ல நாடிவருகிறார்கள். அப்படி வந்த பகைவர்களை ஆயர்குல வீரர்கள் வெற்றிகொள்கிறார்கள். எப்படி? திறன் அழிய... முற்றிலும் கள்வர்களைக் கொல்வதில்லை. அவர்களின் திறன் அழியவே போரிடுகிறார்கள். கவர்ந்து செல்வதுதான் பகைவர்களின் திறம். ஆயர்குல வீரர்கள் அவர்களின் திறமான கவர்தலைத் தடுத்துப் போர்செய்து வெல்கிறார்கள். `எப்பாடு பட்டாலும் பசுக்களைக் கவர முடியவில்லையே...' என்று வருந்திப் பகைவர்கள் தங்களின் செருக்கு அழிகிறார்கள்.

கண்ணன் தன் அவதாரங்களில் அழிப்பதை விட அடக்குவதையே பிரதானமாகக் கொள்வான். அடங்கினால் அருள்வான், அகங்காரம் கொண்டால் அழிப்பான். குழந்தை என்று எண்ணிப் போரிட்டு மாண்ட அசுரர்கள் பலர். ஆனால் காளிங்கனோ போரிட்டு அவன் திருப்பாதம் பட்டு அகங்காரம் அழிந்தான். அதனால் பிழைத்தான்.

இப்படிக் கண்ணனைப் போலக் குற்றம் இல்லாத கோபாலனின் குலத்தில் தோன்றிய பெண்ணின் வீட்டு வாசலில்தான் ஆண்டாள் தற்போது நிற்கிறாள்.

ஆண்டாள்
ஆண்டாள்

இந்த வீட்டுப் பெண் இருக்கிறாளே, அவள் ஆயர் குலத்தில் பிறந்த பொற்கொடி போன்றவள். அவள் அழகை அவளின் அங்கங்களே ஒன்றை ஒன்று கண்டு பொறாமை கொண்டு பகை கொள்ளும் தன்மையுடையன. ஓர் அங்கம் நோக்க அவள் மயிலின் எழில் சாயலையும் மற்றோர் அங்கம் பாம்பின் படத்தையும் போன்றிருக்கும் பேரழகி. அழகு மட்டுமா, அவள் செல்வச் செழிப்பிலும் மிகுந்தவள். ஆனால் இவையெல்லாம் கடைத்தேற உதவுமா...

"அடிப்பெண்ணே உன் அழகு, செல்வம் எல்லாம் கிடக்கட்டும். இந்த ஆயர்பாடியில் கன்றுகளும் கறவைப் பசுக்களும் மிகுந்து பால்வளம் பெருகுவதால் எல்லோர் வீட்டிலும்தான் செல்வம் மிகுந்து கிடக்கிறது. பொருள் செல்வம் இருக்கிறதே என்று சும்மா இருந்துவிட்டால் அருள் செல்வம் கிடைக்காமலே போய்விடாதா... பார் இங்கு வந்திருக்கும் தோழியர்களை... இவர்கள் எல்லோரும் தோழிகள் மட்டுமா, ஒருத்தி அத்தைமகள், ஒருத்தி மாமன் மகள், மற்றொருத்தி உனக்கு சகோதரி முறை. இப்படி உன் சுற்றமெல்லாம் கூடி வந்திருக்கிறோம்.

கண்ணா
கண்ணா
போற்றப் பறைதரும் புண்ணியனைக் கொண்டாடுகிறாள் கோதை... திருப்பாவை - 10

வீட்டுக்குச் சுற்றம் வந்ததும் அவர்களை வரவேற்க ஓடிவருவதுதானே ஒரு பெண்ணின் தன்மை. ஆனால் அதை நீ விடுத்தாய். நாங்கள் வந்து  அமைதியாய் நின்றால்கூடப் பரவாயில்லை. வந்த கணத்திலிருந்து உன் வீட்டு முற்றத்தில் நின்று அந்த முகில் வண்ணனின் பேர் பாடி பஜனை செய்துகொண்டிருக்கிறோம்.

வீட்டு வாசலுக்கு ஓடி வந்து அதிதியை வரவேற்க வேண்டும். அதுவே பகவான் நாமத்தைப் பாடும் பாகவதன் வந்தால் அவனுக்குப் பாத பூஜை செய்து வழிபட்டு உள் அழைக்க வேண்டும். ஆனால் நீயோ எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு சலிக்காமலும் பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாய் என்றால் இதன் பொருள் என்ன? நீயே சொல் எம் பாவையே... விரைந்து வா. நம் குழுவாகச் சேர்ந்து அந்த நாராயணனைப் போற்றுவோம்" என்று ஆண்டாள் பாடி தன் தோழியை அழைக்கிறாள். பாவையின் பாசுரத்துக்கு இரங்கி வரவில்லையென்றால் பாரில் எதற்கு இரங்குவர்... இந்தத் தோழியும் எழுந்து ஓடி வந்து குழாமில் சேர்ந்துகொண்டாள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு