Published:Updated:

மாமாயன், மாதவன், வைகுந்தன் என நாமம் பலவும் நவில அழைக்கிறாள் கோதை... திருப்பாவை - 9

மார்கழியின் இந்தக் காலைக்கு இரண்டு தன்மைகள். ஒன்று அறைக்குள் அடைந்துகிடக்கும்வரைக்கும் அதுவே சொர்க்கம் என்று நினைக்கவைப்பது. மற்றொன்று துயில் நீங்கி வெளியே வந்து காலை அழகைக் கண்டதும் இதுவல்லவோ சொர்க்கம் என்று வியக்க வைப்பது.

கிருஷ்ணன்
கிருஷ்ணன்

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்

தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்

மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்

மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்

ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

கிருஷ்ணன் - ராதை
கிருஷ்ணன் - ராதை

அதிகாலையில் எழுந்தாள் ஆண்டாள். மார்கழியின் இதமான குளிரில் மெள்ள ஆயர்பாடி வீதிகளில் நடந்து தன் தோழியரை மார்கழி நீராட அழைக்கிறாள். இந்தப் பாவை நோன்பின் பலன்களைச் சொல்லி அவர்களுக்கு ஏற்கெனவே அவள் விளக்கிவிட்டாள். தானாய் முன்வந்து, வந்தவர்கள் ஒரு கூட்டமாய்க் கோதையின் பின் திரண்டு அந்தக் கோவிந்தனைப் பாடிக்கொண்டு வருகின்றனர். சில தோழிகள் சுணங்குகின்றனர். எப்படி நல்ல பக்தன் கடவுளை விடுவதில்லையோ அதுபோலக் கடவுளும் பக்தனை விடுவதில்லை. தொடர்பும் அன்பும் உடையவர்களாய் ஒருவருக்கொருவர் தொடர்கின்றனர். அதுபோலத்தான் கோதையும்.

கோதையின் தோழியர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். ஒருத்தி நாயகப்பெண். மற்றொருத்தி கோதுகலம் உடையவள், இன்னொருத்தியோ செல்வச் செழிப்பில் புரளும் நங்கை. ஆனால், இவர்கள் எல்லோரையும் இணைப்பது கண்ணன் மீதான பக்தி. இந்த மார்கழி மாதத்தில் அவனைக் கொண்டாடுவதற்காகவேதான் பாவை நோன்பினை மேற்கொண்டோம். அந்த நோன்பில் ஒருவரும் பின்தங்கி விடக் கூடாது என்று எண்ணுகிறாள் ஆண்டாள்.

கண்ணன்
கண்ணன்
கண்ணனையே தன் அன்பினால் கட்டியவளே, சீக்கிரம் வெளியே வா... கோதையின் திருப்பாவை - 8

மார்கழியின் இந்தக் காலைக்கு இரண்டு தன்மைகள். ஒன்று அறைக்குள் அடைந்துகிடக்கும் வரைக்கும் அதுவே சொர்க்கம் என்று நினைக்கவைப்பது. மற்றொன்று துயில் நீங்கி வெளியே வந்து காலை அழகைக் கண்டதும் இதுவல்லவோ சொர்க்கம் என்று வியக்க வைப்பது. அதிலும் அதிகாலையில் நீராடி அந்த இறைவனைத் துதிப்பதன் மூலம் அடையும் பரவசம் சொர்க்கத்தைவிட மேன்மையானது. கோதை அந்த உணர்வை அனைத்துத் தோழியரும் அடைய வேண்டும் என்று நினைக்கிறாள். ஒருவிதத்தில் நல்ல தலைமையின் தனித்துவமான குணமும் அதுதான். யார் எல்லாம் நம்மைச் சேர்ந்தார்களோ அவர்களைக் கைவிடாதவர்களே நல்ல தலைமைகள்.

ஆயர்பாடியில் அனைவரும் உறவினர்தாம். பிடித்தமான உறவு சொல்லி ஒருவருக்கொருவர் அழைத்துக்கொள்வர். அப்படி இந்தத் தோழியின் தாயை மாமி என்றும் தந்தையை மாமன் என்று அழைக்கிறாள் கோதை.

சாதாரணமாக உறங்குபவர்களை எழுப்புவதே அவ்வளவு சிரமம் என்றால் இவளோ தூமணி மாடத்தில் உறங்குகிறாள். தூய மணிகளால் அந்த மாடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த மாடத்தைச் சுற்றி விளக்குகள் எரிகின்றன. தூய அகில் அங்கே மணக்கிறது. பஞ்சணையில் தோழி கண் மூடித் தூங்குகிறாள்.

விஷ்ணு
விஷ்ணு

உறங்குவதனால் அவள் பாவி என்று பொருள் இல்லை. அவள் அந்த நாராயணனை எண்ணி அவன் வசம் தன்னை சரணாகதி செய்த திருப்தியில் நிம்மதியில் உறங்குகிறாள். ஆனாலும் சொற்படிக் காலையில் எழுந்திருந்து வந்திருக்க வேண்டாமோ... இதற்கு முன்னெல்லாம் நாயகப்பெண்ணே, கோதுகலம் உடையவளே என்றெல்லாம் தோழியரைப் போற்றி அழைத்த கோதை இங்கே கொஞ்சம் கறாராக அழைக்கிறாள்.

செல்வத்தின் முன் குரலையும் சொற்களையும் குழையவைக்கவேண்டிய அவசியம் கோதைக்கு என்ன? மேலும், உறவுகளிடம் கடிந்துசொல்லும் உரிமை அவளுக்கு இல்லையா என்ன... தன் சொற்களைக் கடுமையாக்கினாள்.

``மாமி, உன் மகளுக்குப் பதில் சொல்ல முடியாதா... நாங்கள் வாசலில் நின்று அழைப்பது அவள் காதுகளில் விழவில்லையா... அதனால்தான் அவளால் பதிலும் சொல்ல முடியாதபடிக்கு வாயடைத்துப் போயிருக்கிறாளா... ஒருவேளை ஏதாவது மந்திரத்தால் கட்டுண்டு எழுந்திருக்க முடியாத அளவுக்கு மயங்கிக் கிடக்கிறாளா... பாவையே உன் அறையின் மணிக்கதவைத் திறந்துகொண்டு வா... நீ எங்களோடு இணைந்துகொண்டால் அந்தக் கண்ணனை, மாயங்கள் செய்வதில் வல்லவனை, வைகுந்தனை மாதவனை நாம் பல்வேறு நாமங்கள் சொல்லிப் போற்றிப் பாடலாம். பாவையே சீக்கிரம் வா" என்றாள் ஆண்டாள்.

பெருமாள்
பெருமாள்

ஆண்டாளுக்குக் கண்ணனின் மேல் இருக்கும் பிரியம் போலவே தோழிகள் மேலிருக்கும் பிரியமும் மாசற்றது. அத்தகைய பிரியத்தினாலேயே தம் தோழிகளை வலியச் சென்று எழுப்புகிறாள். அந்தக் கண்ணன் இந்த மார்கழியில் அனைவருக்கும் மிக சமீபமாக இருக்கிறான். அவனைப் பாடிப் பணிசெய்து பாக்கியம் பெறலாம்.

இந்தப் பாசுரத்தை தினமும் பாடிவர செல்வச் செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை.