Published:Updated:

கண்ணனையே தன் அன்பினால் கட்டியவளே, சீக்கிரம் வெளியே வா... கோதையின் திருப்பாவை - 8

கண்ணன்
கண்ணன்

யார் நம் நடுவே இருந்தால் நாம் மகிழ்ந்திருப்போமோ, யார் நம்மோடு பேசிக்கொண்டிருந்தால் நமக்கு மகிழ்ச்சி கிடைக்குமோ, அவர்கள்தானே மகிழ்ச்சியை உடையவர்கள்... அப்படி ஒரு குதூகலம் உடையவள் இந்தப் பெண்.

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக்

கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய

பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

கிருஷ்ணன்
கிருஷ்ணன்

பறவையினங்கள் கண்விழித்து சத்தமிடுகிற வேளையில், சில தோழிகளுடன் தன் இல்லத்திலிருந்து புறப்பட்டாள் ஆண்டாள். ஒவ்வொரு வீடாக வந்து கோதை அவர்களைத் துயில் எழுப்பி நகர்வதற்கு நேரமெடுக்கிறது. இருப்பதிலேயே சிரமமான பணி துயில் எழுப்புவதுதான். தன்னையறியாமல் உறங்கும் உயிர்களை எழுப்பித் தன்னுணர்வு ஊட்டுவதுதானே துயில் எழுப்புவது...

கோதை, தோழிகள் இல்லத்திற்கு முன் வந்தாள். அவர்களைத் துயில் எழுப்பி, மாதவனை நோக்கி வழிநடத்த முன்வந்தாள். பறவையினங்கள் கூப்பிடக் கிளம்பி, இதோ கிழக்கே வெளுத்துவிட்டது. இன்னும் எல்லாப் பெண்களும் எழுந்துவரவில்லை. ஒவ்வொருத்தியாய் வீடுவீடாகச் சென்று எழுப்புவதாக இருக்கிறது.

திருப்பாவை - 8
திருப்பாவை - 8

சொன்ன சொல்லைக் காக்கத் தயாராக இருக்க வேண்டாமா, இப்படியா மறந்து உறங்குவது... என்று சலிப்பு அல்லவா பிறக்க வேண்டும். ஆனால் கோதைக்கோ களிப்பு பிறக்கிறது. இந்தப் பெண்கள் எல்லாம் பொழுதுபோக்க பக்தி செய்பவர்கள் இல்லை. ஒவ்வொருத்தியும் பொழுது முழுமையும் பக்தி செய்பவர்கள். இதோ, கோதை நிற்கும் இந்த வீட்டினுள் உறங்கிக்கிடக்கிறாளே ஒருத்தி, அவள் சாதாரணமானவளில்லை. அவள் கோதுகலம் (மகிழ்ச்சி) உடையவள்.

யார் நம் நடுவே இருந்தால் நாம் மகிழ்ந்திருப்போமோ, யார் நம்மோடு பேசிக்கொண்டிருந்தால் நமக்கு மகிழ்ச்சி கிடைக்குமோ, அவர்கள்தானே மகிழ்ச்சியை உடையவர்கள்... அப்படி ஒரு குதூகலம் உடையவள் இந்தப் பெண். இவளின் மகிழ்ச்சிக்கு இவள் காரணம் இல்லை. இவள் என்றில்லை, கோகுலத்தில் அனைத்துப் பெண்களின் மகிழ்ச்சிக்கும் அந்த கோபாலனே காரணம். அவன் நமக்குடையவனாய் இருக்கும்போது மகிழ்ச்சி எப்படி இல்லாமல்போகும்... அப்படி கிருஷ்ணனை விரும்புகிறவளும் கிருஷ்ணனால் விரும்பப் படுபவளுமான பெண் இவள்.

விஷ்ணு
விஷ்ணு

``பாவாய், எழுந்திருந்து வா. பார் உன் வாசலில் நாங்கள் எல்லாம் வந்து நிற்கிறோம். நம் தோழியரில் சிலர் நீராடும் ஆவலில் சும்மா நின்றுகொண்டிருக்க மனமின்றிச் சென்றுவிட்டனர். சிலரோ, நீ கட்டாயம் எங்களோடு வரவேண்டும் என்று இங்கு என்னோடு காத்திருக்கிறார்கள். பார் , கிழக்கே வெளுத்துவிட்டது. கீழ்வானம் வெளுத்துவிட்டது என்றால் என்ன பொருள் தெரியுமா... இன்னும் சிறிது நேரத்தில் அந்த சூரிய நாராயணனும் எழுந்து வந்து விடுவான். அவன் எட்டிப் பார்க்கும் முன்பாகவே அவன் கிரணங்கள் எட்டிப்பார்த்து இந்த வெளிர்ப்பை உருவாக்கியிருக்கிறது. அவன் வந்துவிட்டால் இன்னும் வெளுத்துவிடும். இந்த உலகம் முழுமையும் இயங்கத் தொடங்கிவிடும். அதற்கு முன்பாக அல்லவா நாம் அவனைக் கொண்டாட வேண்டும்...

நாங்கள் சொல்வதை நம்பு... பார் நம் எருமைகள் எல்லாம் புல் மேயப் புறப்பட்டுவிட்டன. நீ என்னடாவென்றால் இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறாய்... நீ எப்பேர்ப்பட்டவள் என்பது எமக்குத் தெரியும். நீ அந்தக் கிருஷ்ணனை உன் அன்பினால் கட்டிப்போட்ட கோதுகலமுடையவள். ஒருவேளை நீ அவனை அவிழ்த்துவிட வில்லையென்றால், அவனை நாங்கள் தரிசனம் செய்வது எப்படி? அதற்குத்தான் உன்னைக் கேட்கிறோம் எம்பாவையே வெளியே வா.

திருப்பதி
திருப்பதி
பேச்சரவம் எல்லாம் அந்தக் கேசவனின் பெருமைகளே... தோழியின் துயில் எழுப்பும் கோதையின் திருப்பாவை - 7

வா, எங்களோடு சேர்ந்துகொள். குதிரை வடிவில் தோன்றி உலகை இம்சை செய்த கேசி என்ற அசுரனைக் கிழித்து எறிந்தவன் அந்தக் கண்ணன். தன்னோடு யுத்தத்துக்கு வந்த மல்லர்களைத் தோற்கடித்தவன். தேவர்களுக்கெல்லாம் அவன்தான் தேவன். அவனைப் பறைகளை இசைத்து அருந்தமிழ் பாசுரங்களால் பாடுவோம். அப்பொழுது, அவன் நம்மையும் நம் குறைகளையும் கண்டறிந்து, `இவ்வளவு பலவீனமாக இருந்தும் இவர்கள் இப்படி பக்தி செய்கிறார்களே' என்று எண்ணி நம்மேல் இரக்கம்கொண்டு அவன் நம்மைக் காத்து அருள்வான். எம் பெண்ணே வெளியே வா" என்று பாடினாள்.

கோதுகலம் உடையவள் வராமல் இருப்பாளா... அவள் அன்பினால் கட்டிவைத்திருக்கும் கார்மேக வண்ணனை உடைமைப் பொருளாகப் பெற்ற கோதை அல்லவா அழைக்கிறாள்... அவசர அவசரமாக எழுந்து வருபவள் போன்ற பாவனையில் எழுந்து வெளியே வந்து, ஆண்டாளோடும் தோழியர் குழாமோடும் இணைந்துகொண்டாள்.

இந்தப் பாசுரத்தை தினமும் அதிகாலையில் பாடிவர, நம் மனத்தில் உள்ள குறைகளையெல்லாம் இறைவன் நீக்குவான் என்பது ஐதிகம்.

அடுத்த கட்டுரைக்கு