Published:Updated:

சீரிய சிங்கம்போல் தோன்றி எம் குறைதீர்ப்பாய் கோவிந்தா... கோதையின் திருப்பாவை 23!

நரசிம்மர்
நரசிம்மர்

கண்ணனின் தரிசனத்தைக் கண்டதுமே அவன் அழகில் மயங்கி கோபியர்கள் தங்களின் உள்ளக்கிடங்கில் இருக்கும் வேண்டுதல்களைச் சொல்ல மறந்து போவர். எனவே, தங்களையே மறந்தவர்கள் தங்களின் வேண்டுதல்களையா நினைவு வைத்திருப்பர்...

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி

மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்

கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

சீரிய சிங்கா சனத்துஇருந்து யாம்வந்த

காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

நரசிம்மர்
நரசிம்மர்

பரமாத்மாவான நாராயணன் பக்தர்களைப் பரிபாலிக்க எடுத்த அவதாரங்கள் பல. அவற்றில் மிகவும் உக்கிரமானதாகச் சொல்லப்படும் அவதாரம் நரசிம்ம அவதாரம். ஆனால் அந்த உக்கிரம் பக்தர்களைக் காப்பதற்காகப் பரமன் கொண்ட கோலமே அன்றி பக்தர்கள் மீது கோபம் கொள்வதற்காகக் கொண்டது அல்ல. மற்ற அவதாரங்கள் எல்லாம் நாள் நேரம் இடம் குறித்து அவதரித்ததுபோல் இல்லாமல் பக்தனின் வாக்கைக் காப்பதற்காக பகவான் செய்த அவதாரம். ஹிரண்ய கசுபுவினைப் பிளந்த சீரிய சிங்கமான நாராயணன் சிறுவனும் பரம பாகவதனுமான பிரகலாதனுக்கோ அருள்மழை பொழியும் வள்ளலாகத் திகழ்ந்தார்.

இந்த உலகில் முதன் முதலில் காலில் விழுந்து பணியும் வழக்கம் பிரகலாதனிடம் தோன்றியது என்று கூறுவர். நரசிம்மரின் உக்கிரமான கோலத்தைக் காண அஞ்சி பிரகலாதன் சுவாமியின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தான். சிறு குழந்தையான பிரகலாதனின் பயத்தைப் போக்கி பகவான் அவனை ஆசீர்வதித்தார். அன்று முதல் இந்த உலகில் காலில் விழுந்து நமஸ்கரிக்கும் வழக்கம் உண்டானது. மேலும் கருணாசாகரனான அந்த நரசிங்க மூர்த்தியைப் பணிந்துகொள்வதுவே காரியங்களில் வெற்றி கிடைக்க ஏதுவான மார்க்கம்.

நரசிம்மர்
நரசிம்மர்
சாபம் தீர்க்கும் கண்ணனின் கடைக்கண் பார்வையை வேண்டி நிற்கும் கோதை..! திருப்பாவை 22

தன் தோழிகளுடன் நோன்பிருந்து நீராடி அந்த மாதவனின் திருத் தரிசனம் பெற வந்து காத்திருக்கும் கோதை பக்தன் வேண்டிக்கொண்டதும் சிங்கமாக அவதரித்த அந்த நரசிம்ம ஹரியைப்போல எழுந்து வந்து எங்களுக்கு அருள்புரியும் என்றுதான் இந்தப் பாசுரத்தில் வேண்டுகிறாள்.

மழைக்காலங்களில் சிங்கங்கள் மலையின் இடையில் இருக்கும் இருண்ட குகைகளுக்குள் சென்று தங்களின் இணையோடு சேர்ந்து இரண்டும் ஒன்றாகப் பிணைந்திருக்கும். அந்த சிங்கமே உரிய காலத்தில் எழுந்துகொள்ளும். அதுகாறும் அமைதியாய்த் தன் பிணையோடு காதல்கொண்டு ஒடுங்கிக்கிடந்த சிங்கமா என்று வியக்கும் வண்ணம் தன்னுடைய தீபோல சிவந்த விழிகளை உருட்டிக்கொண்டு வரும். தன் பிடறியைச் சிலிர்த்து சிலுப்பிவிட்டுக்கொண்டு நாற்திசைகளையும் தன் கம்பீரமான பார்வையால் பார்த்துவிட்டு சோம்பல் முறித்து கர்ஜித்தபடி வெளியே வரும். அந்தச் சிங்கம்போல், கண்ணா நீயும் நப்பின்னையோடு கூடியிருக்கிறாய்.

திருப்பாவை
திருப்பாவை

நீ எழுந்து சுப்ரபாத சேவை கொள்ளவேண்டிய நேரம். நீ எழுந்து சிங்கம்போல் உன் சிவந்த விழிகளைக் காட்டி எங்களுக்கு அருள்வாய். உன் விழிகள் மலர்ந்த பூவினைப் போன்றன. நாங்கள் உன் தரிசனம் காண வந்து நிற்கின்றோம். நீ உன் கோயிலில் இருக்கும் உன் அழகான சந்நிதானத்தில் உனக்கென்று இருக்கும் சிறந்த உயரிய மதிப்புமிக்க சிங்காசனத்தில் வந்து இருந்து அருள்வாய். நாங்கள் உம் முன்பாகக் கூடியிருக்கிறோம். எங்களைக் கனிவோடு நீ விசாரித்து எங்களின் வேண்டுதல்களைக் கேட்டு ஆராய்ந்து அருள்புரிவாய்" என்று ஆண்டாள் வேண்டுகிறாள்.

நரசிம்மமாக அவதரித்த நாராயணனே கண்ணனாகவும் அவதரித்தான். எனவே அவனின் தோற்றம் ஒரு சீரிய சிங்கம்போல் இருப்பதில் வியப்பில்லை. அப்படிப்பட்ட கண்ணன் தன் சிங்காசனத்தில் அரசனாக அமர்ந்துகொண்டான் என்றால் தமக்கு வேண்டும் வரங்களைப் பெறலாம்.

கிருஷ்ணர்
கிருஷ்ணர்
ஆயர்குலப் பெருமைகளைப் பாடி பெருமாளை கோதை ஆராதிப்பதேன்? - திருப்பாவை 21

கண்ணனின் தரிசனத்தைக் கண்டதுமே அவன் அழகில் மயங்கி கோபியர்கள் தங்களின் உள்ளக்கிடங்கில் இருக்கும் வேண்டுதல்களைச் சொல்ல மறந்து போவர். எனவே, தங்களையே மறந்தவர்கள் தங்களின் வேண்டுதல்களையா நினைவு வைத்திருப்பர்... 'கண்ணா, அந்த நிலையை நாங்கள் அடைந்துவிட்டோம் என்றால் நீயே எங்கள் உள்ளங்களை ஆராய்ந்து எங்களுக்கு அருள்பாலிப்பாய்' என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.

அடுத்த கட்டுரைக்கு