Published:Updated:

போற்றப் பறைதரும் புண்ணியனைக் கொண்டாடுகிறாள் கோதை... திருப்பாவை - 10

ஆண்டாள்
ஆண்டாள்

`நோன்பினை நோற்று நான் சொர்க்கம் புகுவேன்’ என்று சில தோழிகள் வைராக்கியமும் பேசினார்கள். ஆனால், இந்த மார்கழியின் பனிக்குக் கதவை அடைத்துக்கொண்டு கதகதப்பாய் உறங்குகின்றனர். அவர்கள் வேண்டுமானால் சொன்ன சொல் தவறலாம். ஆனால், நாச்சியாள் தன் நா பிறழ்வாளா?

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ

ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

ஆண்டாள்
ஆண்டாள்

மார்கழி மாதம் பெருமாளுக்குரியது. அதனால்தான் இந்த மாதத்தில் பெருமாளுக்கு உகந்த பாசுரங்களை அதிகாலையில் பாடி அவரை எழுப்புகிறோம். வைணவத் தலங்களுள் திருமலை சிறப்புமிக்கது. அந்தத் திருமலையில் வாசம் செய்யும் வேங்கடவனை சுப்ரபாதம் இசைத்து அதிகாலையில் ஆராதனம் செய்வது வழக்கம். ஆனால், இந்த மார்கழியில் வேங்கடவனுக்கு சுப்ரபாதம் இசைக்கப்படுவதில்லை. மாறாக ஆண்டாள் பாடிய திருப்பாவைகளே இசைக்கப்படுகின்றன. இதுவே, இந்த மாதத்தில் திருப்பாவையை இசைப்பதன் பெருமையை நமக்கு உணர்த்தும்.

திருப்பாவை முழுவதுமே பெருமாளின் பல்வேறு நாமங்கள் சொல்லித் துதித்து மகிழ்வது. அதுவும் அனைவரும் கூடியிருந்து துதிப்பது. ஒருவனுக்குக் கிடைக்கும் புதையலை அடுத்தவனோடு பகிர்ந்துகொள்ள பரம தயாள குணம் வேண்டும். அப்படியே பகிர்ந்துகொண்டாலும் அது விரைவிலேயே தீர்ந்துபோகும். எல்லோரும் கூடிப் பகிர்ந்துகொள்வது செல்வத்தில் இயலாது. கல்வியோ மிகவும் ஆழமான பள்ளத்தில் தேங்கிவிடுகிற நீரைப்போல கற்றவனிடமே சென்று தேங்கிவிடுகிறது. அதைக் கல்லாதவர்கள் பெற்று உய்வதும் சிரமமாய் இருக்கிறது. எனவே, செல்வமும் கல்வியும் கிடைக்காதவர்கள்கூட இந்த உலகில் கடைத்தேற சாதனமாய் இருப்பது நாமஜபம். இதை உலகத்தில் இருக்கிற அனைவரும் கூடிப் பகிர்ந்துகொண்டாலும் மென்மேலுமாய்ப் பெருகுமே தவிர, அது தீர்ந்துபோவதில்லை. நாம ஜபம் கற்றவரையும் கல்லாதவரையும் ஏழையையும் பணக்காரரையும் பேதமில்லாமல் கரையேற்றுகிறது. அதனால்தான் கோதை இந்த மார்கழியில் அனைவரையும் நாம ஜபம் செய்ய அழைக்கிறாள்.

ஆண்டாள்
ஆண்டாள்
மாமாயன், மாதவன், வைகுந்தன் என நாமம் பலவும் நவில அழைக்கிறாள் கோதை... திருப்பாவை - 9

நேற்றெல்லாம் அந்த நாராயணனின் மகிமையைக் கோதை சொன்னபோது கேட்டு சிலிர்த்தனர். `நோன்பினை நோற்று நான் சொர்க்கம் புகுவேன்’ என்று சில தோழிகள் வைராக்கியமும் பேசினார்கள். ஆனால், அப்படிப் பேசியவர்களில் சிலர் இந்த மார்கழியின் பனிக்குக் கதவை அடைத்துக்கொண்டு கதகதப்பாய் உறங்குகின்றனர். அவர்கள் வேண்டுமானால் சொன்ன சொல் தவறலாம். ஆனால், நாச்சியாள் தன் நா பிறழ்வாளா... கூடி நீராடி நோன்பு நோற்போம் என்று சொன்ன சொல்லை அவள் மதித்தாள். அதற்காகவே அவள் ஒவ்வொரு தோழியின் வீட்டு வாசலையும் மிதித்தாள்.

"கதவைத் திற பெண்ணே, நோன்பு நோற்று சொர்க்கம் அடைவேன் என்றாய். நீ அதற்குத் தகுதியானவள்தான். உன் கடமைகளில் நீ ஒருபோதும் பின்வாங்கியதில்லை. அதனால் உனக்கு சொர்க்கம் நிச்சயம் வாய்க்கும். ஆனால், நோன்பும் நோற்போம் என்று நீ சொன்ன சொல்லை மறந்துவிட்டாயா... நாங்கள் இத்தனை தோழிகள் வீட்டின் வாசலில் வந்து நின்று அந்த நாராயணனின் திருநாமத்தை சத்தமாய்ப் பாடிக்கொண்டிருக்கிறோம். அதெல்லாம் உன் காதுகளில் விழுகிறதா இல்லையா... அப்படியே விழுந்தாலும் கதவைத் திறந்து வெளியே வரத்தான் மனமில்லை, பதில் வார்த்தை ஒன்றாவது சொல்லக்கூடவா தயவில்லை... நன்கு மணம் வீசும் துளசி மாலையைச் சூடியிருக்கும் நாராயணனை நாம் பறை இசைத்துப் போற்றிப் பாடி மகிழ்கிறோம்.

ஆண்டாள்
ஆண்டாள்
கண்ணனையே தன் அன்பினால் கட்டியவளே, சீக்கிரம் வெளியே வா... கோதையின் திருப்பாவை - 8

இவையெல்லாம் உனக்குக் கேட்கவில்லையா என்ன... முன்னொரு காலத்தில் தர்மமே வடிவமாய் உதித்த ராமச்சந்திர மூர்த்தியால் எமனின் வாயில் தள்ளப்பட்ட கும்பகர்ணன் உனக்குத் தனது குணமான பெருந்துயிலைத் தந்தானோ, இப்படிப் பெருந்தூக்கம் தூங்குகிறாயே...

உன்னை எனக்குத் தெரியும் நீ பெண்களுள் சூடுவதற்கு அரிதான அணி... உன்னை விட்டுவிட்டு நாங்கள் மட்டும் தனியே சென்று நோன்பு நோற்று அந்த நாராயணனைச் சேர்வோம் என்று நினைக்காதே... சீக்கிரம் தெளிந்து வெளியே வா” என்று அழைக்கிறாள் கோதை.

அடுத்த கட்டுரைக்கு