Published:Updated:

ஆண்டாள் வருவாள் என்று அறிந்தும் தோழிகள் உறங்கும் காரணம் என்ன? -கோதையின் திருப்பாவை- 12!

திருப்பாவை
திருப்பாவை

ஒவ்வொரு தோழிக்கும் ஓர் ஆசை. ஆண்டாள் தம் வீட்டு வாசலில் நின்று ஒரு பாசுரம் பாடிவிடமாட்டாளா... ஆண்டாள் வாசல் வந்தால் பாசுரம் மட்டுமா வரும் அந்தப் பரந்தாமனும் அல்லவா வந்துவிடுவான். அவன் பாத தீட்சை பெற்றுவிட்டால் மோட்சம் என்பதைக் கேட்டுப் பெறவேண்டியது இல்லையே...

கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்

சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்

அனைத்துஇல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

திருப்பாவை
திருப்பாவை

கோதைக்குத்தான் எத்தனை பெரும்பொறுப்பு... எல்லாரையும் அந்த மாலவன் சந்நிதிக்கு வழிநடத்தும் பொறுப்பு... மந்தையாய் இருந்தால் மிரட்டி மேய்த்துவிடலாம், மனிதர்களாய் இருந்தால் பொறுத்துக்கொண்டுதானே தீர வேண்டும். அவள் ஆண்டாளாக அவதாரம் எடுக்கும் முன்பு, பூமிதேவியாக எப்படித் தன் பிள்ளைகளாகக் கருதி மக்களின் பிழைகளைப் பொறுத்துக்கொண்டாளோ அப்படியே ஆண்டாளாய் அவதரித்தபின்பும் ஆய்ச்சியர் பிழைகளைப் பொறுத்துக்கொண்டாள்.

பனி பொழிகிறது. அதில் நனைந்தபடியே பயணிக்கின்றனர். அந்தக் கோவிந்தனைப் பாடிக்கொண்டே தெருக்களில் நடைபயில்கின்றனர் கோதையும் அவள் தோழியரும். வாசல்கள்தோறும் சென்று கோவிந்த நாமம் பாடி நிற்கிறார்கள். தோழியர் வரவை நாடி நிற்கிறார்கள்.

கோதைதான் அந்த ஆயர்பாடிக்கே நடுநாயகமான பெண். தோழிகளுக்குள் அவள் தலைமைத் தோழி. அவளைக் கண்டு அந்த அனந்தனே மயங்கும்போது இந்த ஆய்ச்சியர் மயங்கமாட்டார்களா என்ன... பின்பு எதற்காக இப்படி உறங்குவார்போல் நடிக்க வேண்டும்...

ஒவ்வொரு தோழிக்கும் ஓர் ஆசை. ஆண்டாள் தம் வீட்டு வாசலில் நின்று ஒரு பாசுரம் பாடிவிடமாட்டாளா... ஆண்டாள் வாசல் வந்தால் பாசுரம் மட்டுமா வரும் அந்தப் பரந்தாமனும் அல்லவா வந்துவிடுவான். அவன் பாத தீட்சை பெற்றுவிட்டால் மோட்சம் என்பதைக் கேட்டுப் பெறவேண்டியது இல்லையே... இந்த ஆசையை ஈடேற்றிக்கொள்ளக் கொஞ்சம் தோழிகளும் உறங்குபவர்கள்போல நடிக்கிறார்கள்; மோட்சகதியை அடையத் துடிக்கிறார்கள். ஆண்டாள் இதை அறியாமல் இல்லை. ஆயர்பாடியின் பெருமையையும் குலமுதல்வன் கோகுலனின் கோலாகல குணங்களையும் பாடக் கிடைத்த பாக்கியமாகக் கருதி வாசல் தேடிவந்து பாடி நின்றாள்.

ராமர்
ராமர்

பகவத் குணங்களைப் பாடினால் சிலர் கண்களில் நீர் சுரக்கும். சிலருக்கோ அவன் நாமத்தை நினைத்ததுமே கண்ணீர்மல்க மனம் கனிந்து நிற்கும்.

ஆயர்பாடியின் எருமைகளோ கன்றுகளை நினைத்துக்கொண்டதுமே மடி கனத்துப் பால் சொரியத் தொடங்கிவிடுமாம். பொதுவாக முறையாகக் காலையும் மாலையும் பால் கறந்துவிட்டால் மடி கனக்க வழியில்லை. ஆனால், இந்த எருமைகளோ வள்ளல்போல வாரி வழங்குபவை. ஒரு கட்டத்தில் பால் கறந்த ஆயர்கள் குடங்களை நிறைத்து நிறைத்துச் சலித்துப்போய் இனி நிறைக்கக் குடங்கள் காலியாக இல்லை என்று எருமைகளை விட்டுவிட்டார்கள். கன்றுகளும் எவ்வளவு பாலை அருந்த முடியும்... அவை வேண்டுமட்டும் அருந்திப் பின் விளையாடப் போயின. அதனால் எருமைகள் கன்றுகளை நினைத்துக்கொண்டதுமே பால் சொரிகின்றன. பால் சொரிந்து வீட்டின் முற்றம் எல்லாம் பால் சகதியாகக் கிடக்கிறது. அந்த அளவுக்குச் செல்வச் செழிப்பில் மிதக்கும் ஆயனின் தங்கை இந்த வீட்டுப் பெண். ஆண்டாள் அந்தப் பெண்ணை வாசலில் நின்று அழைக்கிறாள்.

ஆண்டாள் இப்போது கொஞ்சம் சினத்தில் இருப்பதுபோல் பாவனை செய்ய விரும்பினாள். அதனால் அவள் பாடும்போது பரந்தாமனின் கல்யாண குணங்களைச் சொல்லிப் பாடுபவள் இந்தமுறை சினம் கொண்ட பெருமாளையே பாடத் தொடங்கினாள்.

கோதை ஆண்டாள்
கோதை ஆண்டாள்

``அடிப்பெண்ணே, தென் இலங்கை மன்னன் தன் பராக்கிரமத்தினால் போர் செய்யாமலும் தன் வலிமையினால் சிறையெடுக்காமலும் மாய வேடம் புனைந்து சீதையைத் தூக்கிச் சென்றதனால் கோபம் கொண்டான் ராமன். வீரனாகப் போர் செய்திருந்தால் ராவணனுக்கு வனத்திலேயே முடிவு நெருங்கியிருக்கும். தன் சுய உருவோடு வந்து சீதையைக் கவர நினைத்தால் அவள் தன் சுட்டும்விழிப் பார்வையாலேயே சுட்டு எரித்திருப்பாள். அப்போதே அவன் மரணம் உறுதியாயிருக்கும். ஆனால், அவனோ கோழைபோல வேடம் பூண்டான். இதனால் கோபம் கொண்டு போர் செய்து வெற்றிகொண்டான் அந்த மனதுக்கினிய ராமபிரானை, நாங்கள் எல்லாம் உங்கள் வீட்டு முற்றத்திலிருந்து பாடிக்கொண்டிருக்கிறோம்.

நாங்கள் பாடுவதைக் கேட்டதும் உனக்கும் சேர்ந்து பாட ஆசை பிறந்திருக்கும். ஆனால், நீயோ வாய் திறவாது படுத்திருக்கிறாய். இது என்ன பேருறக்கமா இல்லை பேயுறக்கமா... நாங்கள் வாசலிலிருந்து பாடிக்கொண்டிருப்பதைச் சுற்றியிருக்கும் அனைத்து வீடுகளில் எல்லாரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன நினைப்பார்கள்... உடனே எழுந்து வா எம்பாவாய்" என்று ஆண்டாள் கொஞ்சம் உரிமையுடன் கோபம் கொண்டவள் போலக் கூப்பிட்டாள்.

திருப்பாவை
திருப்பாவை

பட்டாபிஷேகம் கண்ட சுக்ரீவன் தன் படை திரட்டி ராமனுக்கு உதவக் கிளம்பாமல் சுகபோகங்களில் திளைத்திருந்தான். அதுகண்டு சினந்த ராமன், தம்பியை அனுப்பி எச்சரித்தான். இளைய பெருமாள் வருவதைக் கண்ட தாரை, வழிமறித்து நல்மொழி கூறி கோபம் தணித்து சுக்ரீவனைக் கடிந்துகொண்டு நல்வழிப்படுத்தினாளாம். அதுபோல கோதை உண்மையிலேயே கோபம் கொண்டுவிடக் கூடாதென்று அதுகாறும் நடித்த தோழி எழுந்து ஓடிவந்து கூட்டத்தில் சேர்ந்துகொண்டாள்.

அடுத்த கட்டுரைக்கு