Published:Updated:

ஞான குருவான கோதை... பாவை நோன்பில் செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை என்னென்ன? திருப்பாவை - 2

ஆண்டாள்
ஆண்டாள்

ஊருக்கு உபதேசம் செய்பவள் அல்ல கோதை. தானும் அந்தக் கூட்டத்தில் ஒருத்தி என்பதை ஒவ்வொரு சொல்லிலும் உறுதி செய்தாள். செய்யோம், முடியோம் என்று தன்னையும் சுட்டியே சொல்லி முடித்தாள்.

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு

செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்

பையத்துயின்ற பரமனடி பாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

செய்யதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்!

"நாச்சியாரின் பெயர் கோதை என்று சொன்னீர்கள், அவள் ஆண்டாள் என்று அழைக்கப்பட்டது எப்போதிருந்து?"

தேவராயரின் கேள்வியை எதிர்பார்த்திருந்த வைணவர் ஒருவர் எழுந்து பதில் சொல்ல ஆரம்பித்தார்.

"விஷ்ணு சித்தருக்கு நிகரான ஞானி இந்தப் பூவுலகில் இல்லை. அவருக்கு பிரேம பாவத்தின் மகிமையை உணர்த்துவதற்காகவே அவதரித்ததுபோல கிருஷ்ணன் மீதான பக்தியிலும் பிரேமையிலும் அவள் நாளுக்கு நாள் வளர்ந்துவந்தாள்.

கிருஷ்ணா
கிருஷ்ணா

கோதை பிரேமபக்தியில் சிறந்து நிறைந்தவள். தன் தோள் சேர்வது அவன் வன்தோளே என்று உறுதி பூண்டவள். அவன் தோள்சேறும் மாலைகளைத் தான்கட்டி அதைத் தான் அணிந்து அழகுபார்த்துப் பின் அந்த வடபத்ர சாயி சூட அனுப்பிவைப்பாள். ஒருநாள் இந்த ரகசியம் அறிந்த ஆழ்வார், இது தகாது என்று எண்ணினார். மானுடர் சூட்டிய மாலைகளை அந்த மாயவனுக்குச் சூட்டுவதா என்று பதறினார். ஆனால் அந்த கோகுலனோ 'கோதை சூடிய மாலைகளே உகந்தன, என் தோள் சேர இனியன' என்று சொல்லி அவளின் அன்பை உலகறியச் செய்தான். 

அன்றுதான் விஷ்ணுசித்தர் அறிந்துகொண்டார், இந்தப் பூங்கோதை பூக்கட்டி வாழ்பவள் மட்டுமன்று பூ மாலையால் அந்த அரங்கனையே ஆள்பவள் என்று. அன்றிலிருந்து அவளை 'ஆண்டாள்' என்றே அழைத்தார். 

கிருஷ்ணதேவராயருக்கு ஆண்டாள் சரிதம் முழுமையையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. அன்னையின் திவ்ய சரிதம் அனைத்தையும் சொல்லுமாறு அவையோரைக் கேட்டுக்கொண்டான். அவர்களும் மகிழ்வோடு பணிந்துகொண்டு சொல்லத் தொடங்கினர்.

***

ஆண்டாள் தன் தோழியரைக் கண்குளிரப் பார்த்தாள். தான் அழைத்ததும் எழுந்துவந்தது அவர்களின் பெருந்தன்மை என்று தோன்றியது. உறங்குகிறவர்களை அவள் எழுப்பியது வெறுமனே நீராட மட்டும் அல்லவே... 

உறக்கம் என்பது எதையும் அறியாத நிலை. விழிப்பு சகலமும் உணரும் நிலை. சகலமும் என்றால் அதில் அந்த இறைவனும் அடக்கம் தானே. உலக இன்பங்களுக்குள்ளாக உழன்றுகொண்டிருக்கும் இவர்களுக்கு அவனை அடையும் மார்க்கத்தைக் காட்டவேண்டும் என்று விரும்பினாள் ஆண்டாள்.

கோதை
கோதை
`நாராயணனே நமக்கே பறை தருவான்..!' கண்ணனைப் போற்றிப்பாட அழைக்கிறாள் கோதை - திருப்பாவை - 1

இங்கு அவள் தோழி மட்டுமல்ல குருவும் ஆனாள் கோதை. குருவின் பணி வழிநடத்துவது. நன்மைகளை நோக்கி வழிநடத்துவது. குரு கூட இருந்து வழிநடத்தாவிடில் வேறு யார் நம்மை வழிநடத்தமுடியும். ஆண்டாள் குருவானாள், அந்த கோபாலனை அடையத் தானே வழித் துணையானாள்.

"கோதையே இது என்ன பாவை நோன்பு? இதை எப்படிக் கைக்கொள்ள வேண்டும் எங்களுக்குக் கொஞ்சம் சொல்லேன்" என்று கேட்டார்கள் ஆய்ச்சியர்கள். நோன்பின் திறத்தை விளக்கத் தொடங்கினாள் அந்த நாச்சியாள். 

நோன்பு என்றாலே அன்றாடங்களிலிருந்து விலகுதல். ஒருவகையில் தற்காலிகத் துறவு.  இல்வாழ்க்கை ஒரு இடைவெளி பெற்றுத் துறவு பழகுதல். அதற்காகத்தான் நம் மார்க்கத்தில் இத்தனை விரதங்களும் நோன்புகளும்...

கிருஷ்ணர்
கிருஷ்ணர்
கேஷவ்

விரதத்தின் முதல் நிபந்தனை எப்போதும் அந்தப் பரமனைப் பாடிக்கொண்டேயிருப்பது. அதிகாலையில் எழுந்துகொண்டது முதல், கண்மூடித் துயிலச் செல்லும்வரை நாம் அந்த அனந்த சயனனை சேவிக்க வேண்டும். அவன் செவிகுளிர பாடியிருக்க வேண்டும். அதன்மூலம் நாள் முழுவதும் அவன் திருவடிகளைத் தேடியிருக்க வேண்டும். அதுவே விரதம். 

சிந்தனை கட்டுப்பட போஜனமும் மட்டுப்படவேண்டும். ஆயர்பாடியில் பாலும் தயிரும் வெண்ணெயும் நெய்யும் இல்லாத வீடுகள் எவை... அவைதான் பிரதான உணவுகள். நாளெல்லாம் உண்டு பழகிய அந்த உணவுகளைக் கைவிடுவேண்டும். சாத்தியமா... சாத்தியப்படுத்திக்கொள்ள வேண்டும்.

வயிறுவாடியிருந்தாலும் முகம் வாடாமல் இருக்க விரும்புபவர்கள் பெண்கள். அவர்களிடம்  ஒப்பனை செய்துகொள்ளாதீர்கள் என்று சொல்வது அத்தனை எளிதானதல்ல. புற அழகை விடுங்கள் அக அழகைக் கைக்கொள்ளுங்கள் என்பதைக் கோதை அவர்களிடம் 'மையிட்டுத் தங்களின் கண்களை அழகு செய்துகொள்ளாமலும் உங்கள் கூந்தலில் மலரிட்டு அலங்கரித்துக்கொள்ளாமலும் இருங்கள் என்று கண்டிப்போடு கூறினாள்.'

ராதே கிருஷ்ணர்
ராதே கிருஷ்ணர்
மாத ராசிபலன்

ஊருக்கு உபதேசம் செய்பவள் அல்ல கோதை. தானும் அந்தக் கூட்டத்தில் ஒருத்தி என்பதை ஒவ்வொரு சொல்லிலும் உறுதி செய்தாள். செய்யோம், முடியோம் என்று தன்னையும் சுட்டியே சொல்லி முடித்தாள். 

இந்தத் தற்காலிகத் துறவில் இன்பங்களை மட்டுமல்ல கொஞ்சம் செல்வத்தையும் துறக்க வேண்டும் என்றாள். தம் கைப்பொருளை வறியவர்களுக்கும் ஏழைகளுக்கும் தந்து இறைவனை அடையும் வழியை உருவாக்கிக் கொள்ள வலியுறுத்தினாள்.

திருப்பாவை- 2 வையத்து வாழ்வீர்காள்! #Thiruppavai #Spiritual

Posted by Vikatan EMagazine on Tuesday, December 17, 2019

உணவைக் குறைத்து, உடலின் மேல் இருந்த பிரியம் விடுத்து, செல்வத்தால் உண்டாகும் செருக்கையும் கைவிட்டு, நித்தியமான அந்த மாலவனின் திருவடிகளை அடைந்து உய்யும் வழியை நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்று உபதேசித்தாள். அதைத்தான் அவர்களுக்கு உபதேசித்தாள். கோதையின் தோழிகள் மறுமொழி பேசாமல் கேட்டுக்கொண்டனர்.

கிருஷ்ணர்
கிருஷ்ணர்

ஆனாலும் அவர்களுக்குள் சில கேள்விகள் இருந்தன.

'இவளுக்குக் கண்ணன்தான் லட்சியம். அதை அடைய இந்த நோன்பை இவள் மேற்கொள்கிறாள். நாம் ஏன் மேற்கொள்ள வேண்டும்... நமக்கு இந்தப் பாவை நோன்பினால் என்ன கிடைத்துவிடும்?' என்று எண்ணிக்கொண்டார்கள்.

கோதை அவர்களின் உள்ளக்கிடங்கில் கிடக்கும் கேள்விகளுக்கும் பதில் உரைக்க விரும்பினாள்...

அடுத்த கட்டுரைக்கு