Published:Updated:

எங்கள் ஆன்மிகம்: தாயினும் சாலப்பரிந்து...

அனுக்ரஹா ஆதிபகவன்
பிரீமியம் ஸ்டோரி
News
அனுக்ரஹா ஆதிபகவன்

பட்டிமன்ற பேச்சாளர் அனுக்ரஹா ஆதிபகவன்

ந்த உலகத்திலேயே உயர்ந்தது தாயின் அன்பு. ஒரு பிஞ்சுக் குழந்தைக்குப் பசிக்கிறது, `தனக்கு பசிக்கிறது' என்று சொல்லக்கூட பேச்சு வரவில்லை.

குழந்தை அழுதால் பசிக்கிறது என்று அர்த்தம். பசியறிந்து பாலூட்டக்கூடியவள் தாய். தாயைக் காட்டிலும் அன்பு காட்டக் கூடியவன் இறைவன்.

பால் நினைந்து ஊட்டும் தாயினும்

சாலப் பரிந்து, நீ பாவியேனுடைய

ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி,

உலப்பு இலா ஆனந்தம் ஆய

தேனினைச் சொரிந்து, புறம் புறம்

திரிந்த செல்வமே சிவபெருமானே

யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

எங்கு எழுந்தருளுவது இனியே...

என்று பாடுகிறார் மாணிக்கவாசகப் பெருமான்.

இந்த உலகத்தில் எத்தனையோ உறவுகள் இருக்கின்றன. அப்படிப்பட்ட உறவுகளில் அற்புதமான உறவு ஒன்று உண்டென்று சொன்னால், அதுதான் தாய் - சேய் உறவு. மனித இனத்தில் மாமன், சித்தப்பா, பெரியப்பா, மாமி என்று பல உறவுகள் உண்டு. அது மற்ற உயிரினங்களில் இல்லை.ஆனால் தாய் - சேய் உறவு எல்லா உயிரினங்களிலும் உண்டு. கொடுங்குணம் நிறைந்த சிங்கம், புலி விலங்குகளில்கூட அன்பு நிறைந்த தாய் - சேய் உறவு உண்டு. தான் பெற்ற குழந்தைக்காகத் தன்னையே முழுவதுமாக அர்ப்பணிப்பவள் தாய். அதனால்தான் இறைவனைத் தாய் என்று போற்றுகிறது திருவாசகம். அதிலும், தாய் என்று பொதுவாகக் குறிப்பிடாமல் ‘பால் நினைந்தூட்டும் தாய்' என்கிறது.அதனினும் சாலப்பரிந்து என்று இறை வனின் கருணையை, அன்பை விளக்குகிறது திருவாசகம்.

அனுக்ரஹா ஆதிபகவன்
அனுக்ரஹா ஆதிபகவன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருச்சி மாநகரில் இறைவன் தாயுமானவராகவே அருள்கிறார். முன்னொரு காலத்தில் தனகுத்தன் என்ற வணிகன் திருச்சி நகரில் வசித்து வந்தான். நிறைமாத கர்ப்பிணியான அவன் மனைவி தன்னுடைய பிரசவ கால உதவிக்காக தன்னுடைய தாயை வரச் சொல்லி அழைத்திருந்தாள். மகள் ரத்தினாவதியின் பிரசவத்துக்காக அவள் தாயும் கிளம்பி வந்தாள்.

வரும் வழியில் காவிரி குறுக்கிட்டது. அகண்ட காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தோட, தாய் மலைத்துப் போனாள். இந்த வெள்ளத்தைப் பெரும் படகுகளே கடக்க முடியாத நிலையில் மாட்டு வண்டியில் வந்த தான் எப்படி கடப்பது என்று தவித்துப் போனாள்.

திக்கற்றவருக்குத் தெய்வம்தானே துணை. அந்தத் தாய், சகலருக்கும் தாயான அந்த ஆதிப் பரம்பொருளைத் தன் மகளுக்கு உதவுமாறு வேண்டிக்கொண்டாள்.

அங்கே ரத்தினாவதிக்குப் பிரசவ வலி வந்துவிட்டது. தவித்தாள்; துடித்தாள். தாயின் வருகைக்காக ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்தாள். உயிர் போய் உயிர் வரும் அந்த ஆபத்தான கட்டத்தில் அந்தப் பெண்ணுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுக்கக்கூட ஆள் இல்லை. அவள் கணவனும் தவித்தபடி இறைவனை வேண்டிக்கொண்டிருந்தான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அப்போது, சிராப்பள்ளி சிவபெருமான் அவள் தாயின் வடிவம் ஏற்று வந்தார்.அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தார். ஈருயிரையும் வேறு வேறாக பக்குவமாகப் பிரித்தெடுத்துக் கொடுத்தார். காவிரியில் ஒரு வாரம் வெள்ளம் குறையவில்லை.

அந்த ஒரு வாரம் முழுக்க ஈசனே அருகிருந்து அந்தப் பெண்ணுக்கு உதவி வந்தார்.

எங்கள் ஆன்மிகம்: தாயினும் சாலப்பரிந்து...

வெள்ளம் வடிந்ததும் பெரும் தவிப்போடு `மகளுக்கு என்ன ஆயிச்சோ' என்ற எண்ணத்துடன், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பெண்ணின் தாய் ஓடி வந்தாள். வந்ததும்தான் தெரிந்தது... பெண்ணுக்குச் சுகப் பிரசவம் என்று. அத்துடன், மகள் வீட்டில் தன்னைப்போலவே ஒரு பெண்மணி இருக்கவும் திகைத்துப் போனாள். சகலரும் குழம்ப, ஈசன் சிரித்தபடியே ரிஷப வாகனராகக் காட்சியளித்து; தாயுமானவராக அருள்பாலித்தார்.

ஆறறிவு படைத்த மனிதருக்கு மட்டுமல்ல சகல ஜீவ ராசிகளுக்கும் இறையே அன்னையாய் அருள்கிறது.

`சிற்றெறும்பு முதல் குஞ்சரக்

கூட்டம் முதலான சீவ கோடிகள் தமக்குப் புசிக்கும்

புசிப்பினைக் குறையாமலே கொடுத்தும்,

நீடாழி உலகங்கள் யாவையும் நேயமாய் நின்

உதர பந்தி பூக்கும் நின்மலீ அகிலங்களுக்கு அன்னை...'

என்று அபிராமி பட்டர் பாடுகிறார். `கல்லிடைப் பட்ட தேரைக்கும் அன்று உற்பவித்திடு கருப்பையுறு சீவனுக்கும்...' தேடிச் சென்று உணவளிக்கும் சிறந்த தாய் என்று அபிராமியைப் பாடுகிறார் அபிராமி பட்டர்.

சிறிது நேரம் அழுத ஞானசம்பந்தரின் அழுகையைக்கூட பொறுக்க முடியாத ஈசன், அம்மையை அனுப்பி அமுதூட்டினான் என்றால், அது அவனின் தாயுள்ளத்தை வெளிப்படுத்தும் அருள் செயல் அல்லவா!

சைவமும் வைணவமும் இறைவனைத் தாயினும் சிறந்த தயாபரன் என்றே போற்றுகின்றன. உருவாக்குவதும் தாய்; அதை உணர்வோடு பாதுகாப்பதும் தாய். இறையும் அவ்வண்ணமே. ஆக, `இறையே தாய்' என்று அறிந்து அச்சமின்றி வாழ்வோம். எந்த நிலையிலும் அவன் தாள் பணிந்து மீள்வோம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`பரமசிவ அன்பு!'

வ்விதக் காரணமும் இன்றி எதிர்பார்ப்பும் இன்றி பிரியமாக இருப்பதுதான் உண்மையான அன்பு. இப்படியான அன்பு யாரிடம் இருக்கும். ஸ்வாமியிடம் மட்டுமே. ஸ்வாமிக்கு நம்மிடம் இருக்கும் அன்புக்கு ஒரு காரணமும் இல்லை. அவர் காரணம் பாராட்டுவதாக இருந்தால், நமக்கு ஒருவேளை சோறுகூட போடமாட்டார்!

எங்கள் ஆன்மிகம்: தாயினும் சாலப்பரிந்து...

ஆக, காரணமற்ற பரமசிவ அன்பை நாமும் அப்பியசிக்க வேண்டும். ஆரம்பத்தில் ஒரே ஒரு மனிதனிடம் காரணமில்லாத தூய அன்பை வைக்கப் பழகிவிட்டால், பின்னால் அதுவே நம்மை அன்பு மயமாக்கிவிடும்.

- மகாபெரியவா

ஓவியம்: பிள்ளை