Published:Updated:

`என் கடன் பணி செய்து கிடப்பதே’ - உழவாரப் பணி செய்து, இறைவனின் உள்ளம் கவர்ந்த நாவுக்கரசர் குருபூஜை!

அப்பர்
அப்பர்

அற்புதங்கள், மகிமைகள், தொண்டுகள் என செல்லும் வழியெங்கும் சிவ பெருமையை நிலைநாட்டிய வாகீசர்!

காலமெல்லாம் அடியார்கள் தோன்றிக்கொண்டேதான் இருக்கிறார்கள். அவர்கள், இறைவனின் துணைகொண்டு அவனுக்கே பணிசெய்து அருள் பெறுகிறார்கள். எதிர்வரும் இடர்களைத் தகர்த்து அற்புதம் நிகழ்த்துகிறார்கள். அப்படி, அற்புதங்கள் நிகழ்த்தி, ஆலயங்களைத் திருத்தி, உழவாரப் பணிசெய்து, சிவனாரின் புகழை உலகெங்கும் பரப்பி சிவத்தொண்டாற்றியவர், அப்பர்பிரான்.

திருவாமூரில் புகழனார்-மாதினியார் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தவர். இயர் பெயர், மருள்நீக்கியார். இந்த மருள்நீக்கியார், தன் வாழ்வில் தருமசேனர், நாவுக்கரசர், அப்பர், உழவாரத் தொண்டர், தாண்டக வேந்தர் எனப் பெயர்கள் பெற்றவர்.

அப்பர்
அப்பர்

நாவுக்கரசரின் தமக்கையார், திலகவதியார். மருள்நீக்கியார், சமணத்தைத் தழுவத் தொடங்கினார். சமண சமய நூல்களைக் கற்று, பலரையும் வாதில் வென்றதால், சமணர்கள் நாவுக்கரசருக்கு தருமசேனர் எனப் பெயர் சூட்டினர். இதுகுறித்து வருந்திய திலகவதியார் இறைவனிடத்தில் வேண்டினார். வீரட்டானேஸ்வரர் திலகவதியாரின் கனவில் தோன்றி 'வருந்த வேண்டாம். அவரை ஆட்கொள்வோம்' என அருளினார். அப்போது, தருமசேனருக்கு சூளை நோய் உண்டானது. சமணர்கள் எவ்வளவோ முயன்றும் நோயைக் குணப்படுத்த முடியவில்லை. நாவுக்கரசர் திலகவதியாரைத் தேடிவந்தார்.

திருவருளும் குருவருளும் வழங்கும் காரைக்காலம்மையாரின் குருபூஜை இன்று!

திருநீறே நோய் தீர்க்கும் அருமருந்து என்று தமக்கை கூற, திருநீற்றைப் பெற்று மேனியில் தரித்துக்கொண்டார் தருமசேனர். அடுத்த நொடி அவர் நோய் நீங்கியது. உடனே, வீரட்டானேஸ்வரர் சந்நிதியில் அருள்பெற்று 'கூற்றாயினவாறு விலக்ககலீர்' பதிகம் பாடினார். உடனே, அந்தப் பதிகத்தால் மகிழ்ந்த ஈசன், அசரீரியாய் ‘இனி நாவுக்கரசர் என அழைக்கப்பெறுவாய்’ என்று புதிய நாமகரணம் செய்வித்தார்.

சிவபெருமான்
சிவபெருமான்

சமணர்கள், மகேந்திர பல்லவ மன்னனிடம் சென்று நாவுக்கரசரைக் குறித்துக் குறைகூறி, அவரைத் தண்டிக்கக் வேண்டினர். மன்னனும் நாவுக்கரசரைத் தண்டிக்க உத்தரவிட்டான். சுண்ணாம்புக் காளவாசலில் அடைத்தது, நஞ்சு கலந்த பால் அமுதைத் தந்தது யானையை விட்டுக் கொல்ல முயன்றது, கல்லில் கட்டி கடலில் எறிந்தது என்று அவர்கள் எடுத்த எல்லா முயற்சிகளிலும் ஈசனின் கருணையால் உயிர்பிழைத்தார் நாவுக்கரசர். இதைக் கண்ட மன்னரும் மக்களும் ஆச்சர்யமடைந்தனர். இறுதியில், சமண மன்னனும் நாவுக்கரசரை வணங்கி சைவத்தில் இணைந்து சிவ வழிபாட்டில் கலந்தார்.

இருக்கன்குடி, புன்னைநல்லூர், சமயபுரம்... வேண்டி வழிபட உகந்த மங்கலம் அருளும் மகமாயித் தலங்கள்!

நாவுக்கரசர் திருவரத்துறை, திருமுதுகுன்று, திருவேட்களம், திருக்கழிப்பாலை தொடங்கி சிதம்பரம், திருவாரூர் வரை பல சிவாலயங்களிலும் தங்கிப் பதிகங்கள் பாடி, இறை மனம் குளிரச்செய்தார். சென்ற தலங்களெங்கும் உழவாரப் பணிக்கு முக்கியத்துவம் அளித்தார். இறைவன் குடியிருக்கும் ஆலயம் அசுத்தம் நீங்கி, குறைகள் களைந்து அழகுறத் திகழ வேண்டும் என்பதே அப்பெருமகனாரின் விருப்பம். திருஞானசம்பந்த பெருமானின் பெருமையறிந்த நாவுக்கரசர், அந்த ஞானச்செல்வத்தை சந்திக்க விழைந்தார். அடியார்கள் சூழ்ந்திருக்க சீர்காழிக்கு அருகே இருவரும் சந்தித்து மகிழ்ந்தனர். வயதில் மூத்தவர் என்பதால், 'அப்பரே' என்று சம்பந்தர் விளிக்க, 'அடியேன்' என்று அப்பர் பெருமான் அகமகிழ்ந்தார்.

திருஞானசம்பந்தர்
திருஞானசம்பந்தர்

திருநாவுக்கரசர் சென்ற தலங்களில் எல்லாம் இருந்த இறைவனைப் பாடி பக்தி நெறியை வளர்த்தார். ஒருமுறை வேதாரண்யேஸ்வரர் தலத்திற்கு வந்த சம்பந்தரும் நாவுக்கரசரும் திருக்கதவுகள் திறக்கப் பதிகம் பாட எண்ணினர். நாவுக்கரசர் 'பண்ணினேர்மொழியாள்' என்று பதிகம் பாடி கதவு திறக்காததால், 'இரக்கமொன்றிலீர்' என்ற திருக்கடைக்காப்பு பாடியதும் கதவு திறந்துகொண்டது. அனைவரும் வணங்கி ஆரவாரித்தனர். மீண்டும், சம்பந்த பெருமான் முதல் பதிகம் பாடவும் கதவு தாழிட்டுக்கொண்டது.

Vikatan

ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த நாவுக்கரசர், தாண்டகம், விருத்தம், கோவை எனப் பல்வேறு சிற்றிலக்கிய நடைகள் உள்ளிட்டவற்றில் ஏறத்தாழ 49,000 பாடல்கள் இயற்றியுள்ளார் என்கின்றனர். அற்புதங்கள், மகிமைகள், தொண்டுகள் எனச் செல்லும் வழியெங்கும் சிவபெருமையை நிலைநாட்டிய வாகீசர், நிறைவாக 'எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனா' என்ற பதிகம்தோறும் 'உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே' எனப் பாடி சித்திரை சதய நட்சத்திர நாளில் இறை நீழலில் சரணாகதியடைந்தார்.

சிதம்பரம் நடராஜர் கோயில்
சிதம்பரம் நடராஜர் கோயில்

தமிழும் சைவமும் தழைத்தோங்க இவர் ஆற்றிய பணிகளை நாம் நினைவுகூரும் நாள் இது. இந்த ஆண்டு, நாவுக்கரசர் சுவாமிகளின் குருபூஜை, நாளை (18.4.2020) அன்று நிகழ்கிறது. இந்த நாளில் நாவுக்கரசரை எண்ணி வீட்டிலேயே அவர்தம் பதிகம் பாடித் துதித்து, அப்பெருமானது ஆசியைப் பெறலாம்.

அடுத்த கட்டுரைக்கு