Published:Updated:

ஆடித் தபசு 2022 - வியக்கவைக்கும் சங்கரன்கோவில் பரிகார வழிபாடுகள்!

ஆடித் தபசு 2022

ஆடித் தபசு 2022: சங்கரன்கோவிலில் அன்னையான கோமதிக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. இங்கு பிறந்த குழந்தைகளை தத்து கொடுத்து வாங்கும் சடங்கைச் செய்கிறார்கள்.

ஆடித் தபசு 2022 - வியக்கவைக்கும் சங்கரன்கோவில் பரிகார வழிபாடுகள்!

ஆடித் தபசு 2022: சங்கரன்கோவிலில் அன்னையான கோமதிக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. இங்கு பிறந்த குழந்தைகளை தத்து கொடுத்து வாங்கும் சடங்கைச் செய்கிறார்கள்.

Published:Updated:
ஆடித் தபசு 2022
சங்கரன்கோவிலின் பிரசித்திபெற்ற திருவிழா ஆடித்தபசு வைபவம். இந்த நாளில் (ஆகஸ்ட்-10) சங்கரநாராயணராக காட்சி தரும் சுவாமியையும், கோமதிஅம்பாளையும் தரிசித்து வழிபடுவதால் சகல சுபிட்சங்களும் கைகூடும்.

இந்த வைபவம் மட்டுமல்ல, ஶ்ரீசக்கரக்குழி பிரார்த்தனை, வேண்டுதல்பெட்டி வழிபாடு, நாகசுனை பரிகாரம், புற்றுமண் பிரசாதம் என சங்கரன்கோவிலின் வழிபாடுகள் ஒவ்வொன்றும் அற்புதம் நிறைந்தவை!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆடித் தபசு விழா எதற்காக?

ஒருமுறை பார்வதிதேவிக்கு, ‘பரமன்- பரந்தாமன்... இருவரில் பெரியவர் யார்?’ என்ற சந்தேகம் எழுந்தது. ‘பூவுலகில் புன்னைவனம் சென்று தவமியற்றினால், அங்கே காட்சி தந்து உன் சந்தேகம் தீர்ப்போம்’ என்று வழிகாட்டினார் சிவனார்.

அதன்படி பூமியில் புன்னைவனமான சங்கரன்கோவில் தலத்துக்கு வந்து தவமிருந்தாள் அன்னை பார்வதி. நாட்கள் நகர்ந்தன. ஆடி மாதம், உத்திரட்டாதி நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடிய நன்னா ளில் அம்பிகைக்குச் சங்கரநாராயணராகக் காட்சி கொடுத்தார் இறைவன். அரியும் சிவனும் ஒன்றே என்றுணர்ந்தாள் அம்பிகை.

பிறகு, ஈசனின் சுயரூப தரிசனத்தைக் காண வேண்டி மீண்டும் தவத்தைத் தொடர்ந்தாள் தேவி. அதன் பலனாக தனது சுயரூபத்தில் காட்சித் தந்த சிவனார், உமைவளுடன் திருமணக் கோலம் கண்டார்.

சங்கரநாராயண தரிசனம் காண்பதற்காக பார்வதி தேவி புரிந்த முதல் தவம் குறித்த விழாவாக ஆடித் தபசும், சிவனாரின் சுயரூப தரிசனம் காண, அம்பாள் புரிந்த இரண்டாவது தவம் குறித்த விழாவாக ஐப்பசி திருக்கல்யாண விழாவும் கொண்டாடப்படுகின்றன. இந்த வைபவத்தில் கலந்துகொண்டு சங்கரநாராயணரையும், கோமதி அம்மனையும் தரிசிப்பதால் தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; தடைகள் நீங்கி வீட்டில் சுபகாரியங்கள் கூடிவரும்; தொழிலில் அபிவிருத்தி, உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும் என்பார்கள்!

சங்கரன்கோவில்
சங்கரன்கோவில்

சங்கரலிங்க சுவாமி சந்நிதியில் சூரிய பூஜை!

தட்ச யாகத்தில் பங்குகொண்ட சூரிய பகவானை கடுமையாக தண்டித்தார் அகோர வீரபத்திரர். அதனால் ஏற்பட்ட உடற் துன்பமும், சிவ நிந்தை செய்ததால் ஏற்பட்ட பாவமும் தீர, சூரிய பகவான் 16 க்ஷேத்திரங்களில் சிவ பூஜை செய்தார். அவற்றில் ஒன்று சங்காரன்கோவில். இங்கே புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் சூரியக் கதிர்கள் மூலவர் சங்கரலிங்கத்தின் மீது விழுந்து பூஜிப்பதைக் காணக் கண்கோடி வேண்டும். இதை தரிசிப்பதால் சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதிகம்.

ஶ்ரீசக்ரகுழி வழிபாடு

கோமதியம்மை சந்நிதி முன் உள்ள ஸ்ரீசக்கரம் மகிமை வாய்ந்தது. இதை பிரதிஷ்டை செய்தவர், திருவாவடுதுறை ஆதினம் 10-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக சுவாமிகள். அம்பாளின் திருப்பார்வையில் உள்ள இந்த ஸ்ரீசக்கரம் பதிக்கப்பட்ட பள்ளத்தில் அமர்ந்து அம்மையை தியானித்து வழிபட்டால், எண்ணிய காரியம் நிறைவேறும். பிணிகள் மற்றும் பில்லி- சூனியம் போன்றவை அகலும் என்பது ஐதீகம். பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் இந்த இடத்தில் அமர்ந்து 11 நாட்கள் காலை முதல் இரவு வரை தொடர்ந்து ஸ்லோகங்கள் கூறி அம்பாளை வழிபட்டால் மகப்பேறு நிச்சயம் கிட்டும் என்கிறார்கள்.

ஆடித் தபசு 2022
ஆடித் தபசு 2022

புற்று மண் பிரசாதம்

அம்மன் சந்நிதியின் பிராகார வாயு மூலையில் புற்று மண் பிரசாதம் சேமிக்கப் பட்டுள்ளது. இது, சகல தோல் நோய்கள் மற்றும் விஷக் கடிகளுக்கு சிறந்த மருந்தாகும். இந்தப் புற்று மண்ணை நீரில் குழைத்து நெற்றியில் சந்தனம் போல் இட்டு, குங்குமம் அணிந்தால் கெடு பலன் குறையும். நிம்மதி பெருகும்.

மீனாட்சியம்மனின் சகோதரி கோமதியம்மன்!

ஸ்ரீகோமதி அம்மன் - மதுரை மீனாட்சியம்மனின் சகோதரியாகக் கருதப்படுகிறாள். ஸ்ரீகோமதி அம்மனை தரிசிக்கச் செல்லுமுன், மதுரை- ஸ்ரீமீனாட்சியை தரிசித்து ‘உன் சகோதரியை காணச் செல்கிறேன். எனக்கு நல்லருள் புரிவாய்!’ என்று வழிபட்டுச் செல்வதுடன் கோமதியம்மனை தரிசித்த பின்னர், மீண்டும் மதுரைக்குச் சென்று மீனாட்சியம்மனிடம், ‘உன் சகோதரியை நன்றாக தரிசித்தேன், நன்றி!’ என்றும் கூறி வழிபட வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

ஆடித் தபசு 2022
ஆடித் தபசு 2022

மாவிளக்கும் விசேஷ பிரார்த்தனைகளும்

சங்கரன்கோவிலில் அன்னையான கோமதிக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. இங்கு பிறந்த குழந்தைகளை தத்து கொடுத்து வாங்கும் சடங்கைச் செய்கிறார்கள். மேலும், வேண்டுதல் நிமித்தம் செவ்வரளி மலர்களைப் பரப்பி அதன் நடுவே இரட்டை தீபங்கள் ஏற்றி வைத்தும் இந்த அம்மனை வழிபடுகிறார்கள். நாகதோஷம் மற்றும் தேள் முதலான விஷ ஜந்துக்களின் தொல்லைகள் நீங்க... வெள்ளி மற்றும் தாமிரத்தாலான அவற்றின் வடிவங்களையும், கண் மற்றும் கை- கால்களில் ஏற்படும் நோய் மற்றும் குறைபாடுகள் நீங்க... வெள்ளி மற்றும் பித்தளையால் ஆன (குறிப்பிட்ட) உடல் உறுப்புகளையும் இறைவனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.

அதேபோல், மனநோய் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நாக சுனையில் நீராடி, கோமதி யம்மன் மற்றும் சங்கர லிங்கனாரை வழிபட்டால் நோய் நீங்கி குணம் பெறலாம் என்பது ஐதீகம்.கன்னிமூலையில் நாக ஆபரணம் ஏந்திய ஸ்ரீசர்ப்ப விநாயகர். வாயு மூலையில் ஸ்ரீநாக ராஜனுக்குப் புற்றுக்கோயில் உள்ளது. சர்ப்ப விநாயகரை வணங்கி நாகராஜனுக்கு பால், பழம் முதலானவற்றை நைவேத்தியம் செய்தால் நாக தோஷம் நீங்கும் என்பது ஐதிகம்.