செவ்வாய்கிழமையில் வரும் பிரதோஷம் ருண விமோசன பிரதோஷமாகும். ருணம் என்பது கடனைக் குறிக்கக் கூடியது. வேறு விதமாகக் கூறினால் தோஷங்களைக் குறிக்கும் எனலாம். பணமாகப் பெறப்படும் கடன் மட்டுமல்ல. தேவ, பூத, பித்ரு, ஆசார்ய, மனுஷ்ய தோஷம் ஆகியனவும் கடனே.
இவற்றைக் களைய, செவ்வாய்கிழமை ருணவிமோசன பிரதோஷம் நாளான இன்று நந்தியம்பெருமானை வேண்டி வணங்கி, அருகம்புல் மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி, பின் பிரதோஷ வேளையில் சிவபெருமானை பிரதோஷ மூர்த்தியாய் தரிசித்தால் மேற்கூறிய அனைத்து தோஷங்களிலிருந்தும் விடுபெறலாம் என்பது ஐதிகம்.

சிவனுக்கு மட்டுமல்லாமல் ஸ்ரீ மஹா விஷ்ணுவிற்கும் இன்று உகந்த நாளாகும். பிரகலாதனின் பக்தியை மெய்ப்பிக்கவும், இரண்யகசிபுவை வதம் செய்து உலகை காக்கவும், தூணிலிருந்து உக்ர நரசிம்ம மூர்த்தியாக வெளிவந்த காலம் இந்த பிரதோஷ காலம்தான்.
எப்படி ஈசனுக்கு சனிப் பிரதோஷம் மிகவும் மகிமை வாய்ந்ததோ அதே போல நரசிம்மருக்கு செவ்வாய்க்கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்திலும் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை.
இந்த நேரத்தில் நரசிம்மரை வணங்கி விருதமிருந்தால் நினைத்த காரியம் கைகூடும். எதிரி பயம் தீரும். தீவினைகள் விலகும். கடன் தொல்லை விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது புராணச் செய்தியாகும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எனவே துயரத்தின் பிடியில் சிக்கிய மனிதர்கள், சிவனயும் ஸ்ரீ நரசிம்மரையும் வழிபடுவதற்கான காலம்தான் பிரதோஷகாலம். மேலும் துயரத்தின் பிடியில் இருப்பவர்க்கு ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருள் இருந்தால்தான் துயரத்தின் தன்மை குறையும்.

பிரதோஷகாலம் என்பது கோதூளி லக்ன காலம் என்பதால் சிவனையும் விஷ்ணுவையும் வணங்குபவர்களுக்கு ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருளும் சேர்ந்தே கிடைத்திடும். இன்றைய நாளில் வழிபட்டு வளம் பெறலாமே !