வேளாண்மையே தமிழர்களின் முதன்மைத் தொழிலாக இருந்தபோது போகிப் பண்டிகை சுத்தம் செய்யும் விழாவாக மட்டும் இன்றி சுகாதாரம் பேணும் விழாவாகவும் இருந்து வந்துள்ளது. அந்த ஆண்டு முழுக்க உடுத்திய பழைய உடைகள், கால்நடைகளுக்கு சேமித்து வைத்திருந்த பழைய வைக்கோல் போன்றவை எல்லாம் தீயிட்டு அழித்துவிட்டு புதியவைகளை ஏற்கும் நாளாக போகி இருந்துள்ளது. பழையனப் போக்கி, புதியன ஏற்கும் இந்த நாளில் செய்ய வேண்டியவை என்னென்ன? செய்யக்கூடாதவை என்னென்னெ என்று பார்ப்போம்.

செய்ய வேண்டிய 5 விஷயங்கள் :
1. போகியில் வீட்டு தெய்வங்களை வழிபடும் வழக்கம் நம்மிடம் உண்டு. அதனால் நம் முன்னோர்களை குலதெய்வ கோயிலுக்குச் சென்றோ, நடுவீட்டில் விளக்கேற்றியோ வழிபடலாம். கன்னிப்பெண்கள் இறந்து போய் இருந்தால் அவர்களை சீலைக்காரியாக வழிபடும் வழக்கம் இன்றும் உண்டு.
2. மழைக்காலம் முடிந்து குளிர் உச்சமாகும் காலம் என்பதால் அதிகம் நோய்க்கிருமிகள் பரவும் ஆபத்து உள்ளது. அதுவும் நோய்த்தொற்று பரவும் இந்த சூழலில் பாரம்பர்யமாக நாம் செய்து வரும் மருத்துவ முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக வீடு முழுக்க மஞ்சள்,சாணம் தெளித்து சாம்பிராணி, குங்கிலிய தூபம் போட்டு சூழலை சுத்தமாக்கலாம்.
3. வழக்கமாக போகியில் கடைப்பிடிக்கும் காப்பு கட்டும் சடங்கை செய்யலாம். அதாவது வீட்டு வாசலில், பின் வாசலில் மூலிகைக் காப்பான்களை கட்டி வைக்கலாம். இந்த மூலிகைக் காப்பான்களில் கட்டாயம் மாவிலை, நொச்சி, வேம்பு, ஆவாரம், மஞ்சள் கொத்து, சிறுபீளை, தும்பை, பிரண்டை, துளசி இருக்க வேண்டும். இது சிறந்த நோய்த்தடுப்பானாக இருந்து உங்களையும் உங்கள் கால்நடைகளையும் பாதுகாக்கும்.
4. ஏடு எடுக்கும் தினம் என்று முன்னாளில் கடைப்பிடிக்க நாள் இது. இந்நாளில் பழைய ஓலைச் சுவடிகளை எடுத்து பழைய சிதைந்த ஏடுகளை நீக்கி விட்டு புதிய ஏடுகளைச் சேர்ப்பார்கள். அதேபோல இந்நாளில் புத்தகங்களைப் பராமரிக்கும் பணியைச் செய்யலாம்.
5. போகி அன்று நிலக்கடலை உருண்டை, போளி, ஒப்பிட்டு, வடை, சோமாசு, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் இவற்றுடன் 'நிலைப்பொங்கல்' வைத்து வீட்டு தெய்வங்களை வணங்கும் வழக்கம் இன்றும் கொங்கு பகுதியில் உள்ளது. இந்நாளில் எல்லோரும் குலசாமிகளை, கன்னி தெய்வங்களை வணங்குவது நலம் அளிக்கும்.

செய்யக் கூடாத 5 விஷயங்கள் :
1. இந்திரன், சூரியன், வீட்டு தெய்வங்களை வரவேற்று வணங்கும் நாள் என்பதால் இந்த நாளில் மாமிசம் சமைக்கக் கூடாது. போதை வஸ்துக்கள், பகல் உறக்கம் எதுவும் கூடாது என்பர்.
2. போகி அன்று சிலர் வெள்ளை அடித்து வீட்டை சுத்தப்படுத்துவார்கள். அதைவிட போகிக்கு முன்னரே சுத்தப்படுத்துவதே முறையானது. போகி அன்று வழிபாடு செய்வதே நன்று. மூடப் பழக்கங்கள், தீய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், மனக்கசப்புகள், உறவுகளிடம் சர்ச்சை போன்றவற்றை 'ருத்ர ஞான யக்ஞம்' என்று அழைக்கப்படும் நம் மன யாகக் குண்டத்தில் எரித்துவிட வேண்டும் என்பதே போகி நாளின் தத்துவம்.
3. நகரங்களில் சாஸ்திரத்துக்காக பழைய துணிகள், கிழிந்த பாய்களை கொஞ்சமாக எரித்த காலம் போய், இப்போது எல்லாம் டயர்களையும், பிளாஸ்டிக் பொருள்களையும் எரித்து காற்றை மாசாக்குவது செய்யவேக் கூடாத செயல் எனலாம்.

4. புது மழையால் நிரம்பி இருக்கும் கிணறு, குளம் போன்றவற்றின் நீர் சுவையாகும் வகையில், சுத்தமாகும் வகையில் முன்பு அந்நீரில் நெல்லி, பனை போன்ற மரங்களின் துண்டை போடுவார்கள். இந்த அடிப்படை தெரியாமல் இப்போது கிராமங்களில் பெருமளவு மரங்களை வெட்டி நீரில் போடும் வழக்கத்தை செய்யவேக் கூடாது.
5. பெரும்பாலான கிராமங்களில் இருக்கும் ஏரிகளில் மீன் பிடிக்கும் விழா நடைபெறும். அப்போது ஊர் கூடி மீன் பிடிக்கலாம் தவறு இல்லை. ஆனால் ஏரியை அழித்து மீன் பிடிக்கிறோம் என்ற பெயரில் நீரை எல்லாம் வெளியே இறைத்துவிடுவது தவறானச் செயல். இதைச் செய்யவே கூடாது.
இயற்கைக்கு எதிரான, காற்றை மாசுபடுத்தும் எந்த செயலையும் செய்யாமல் இந்த போகிப் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம்.