Published:Updated:

மாசி மகத்தில வழிபடவேண்டிய  திருநல்லூர்! ஏன் தெரியுமா?

திருநல்லூர்

சிவபெருமான் அகத்தியருக்குத் தனது திருமணக் காட்சியைக் காட்டியருளிய திருத்தலம் இது.

மாசி மகத்தில வழிபடவேண்டிய  திருநல்லூர்! ஏன் தெரியுமா?

சிவபெருமான் அகத்தியருக்குத் தனது திருமணக் காட்சியைக் காட்டியருளிய திருத்தலம் இது.

Published:Updated:
திருநல்லூர்

மாசி மகப் புனித நீராடல் என்றாலே கும்பகோணம்தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். ஆனால் அதற்கருகிலேயே அமைந்துள்ள மற்றுமொரு சிறப்புமிக்க மாசிமகத் தலம்தான் சுந்தரகிரி எனப்பெறும் திருநல்லூர். இத்தலத்தில் பர்வதசுந்தரி சமேத கல்யாணசுந்தரேஸவரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.

திருநல்லூர்
திருநல்லூர்

ஒரு முறை, ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் நிகழ்ந்த பலப்பரிட்சையில் கயிலை மலையிலிருந்து தெறித்து விழுந்த இரண்டு சிகரங்களில் ஒன்றுதான் இந்த சுந்தரகிரி. (மற்றொன்று ஆவூர்). அதற்கேற்ப கோச்செங்கட்சோழன் கட்டிய உயர்ந்த மாடக்கோயில் ஒன்று இங்கு விளங்குகிறது. அப்பர் மற்றும் சம்பந்தர் பெருமானால் பாடியருளப்பட்ட 20- வது காவிரி தென்கரைத் தலமிது.

சிவபெருமான் அகத்தியருக்குத் தனது திருமணக் காட்சியைக் காட்டியருளிய திருத்தலம் இது.

சிவனை மட்டுமே வழிபடும் தன்மையரான  பிருங்கி முனிவர் வண்டு உருவில் லிங்கத்தினை வழிபட்ட தலம் இது. வண்டு ஆர்த்ததினால் ஏற்பட்ட துளைகளை இன்றும் மூலவர் திருமேனியில் காணலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்பர் பெருந்தகைக்கு சிவபெருமான் திருவடி சூட்டியருளியது இத்தலத்தில்தான். 

அமர்நீதி நாயனார்  சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு முக்தியடைந்த தலமிது. இத்தலத்து இறைவன் கல்யாண சுந்தரேஸ்வரர் வில்வமரத்தினடியில்  சுயம்புவாகத் தோன்றியவர். தினந்தோறும்  வேளைக்கொரு நிறமாக தாமிரம், இளஞ்சிவப்பு, பொன்னிறம்,  நவரத்தினப் பச்சை, இன்னதென்று சொல்ல இயலாததோர் நிறம்  என  ஐந்து வர்ணங்களில் காட்சியளிப்பதால் இவருக்கு 'பஞ்சவர்ணேஸ்வரர்' என்ற திருநாமம் உண்டாயிற்று.

முசுகுந்தசக்கரவர்த்தி தியாகராஜரைத் திருவாரூரில் ஸ்தாபிக்கும் முன்பு, இத்தலத்தில் அமர்த்தி வழிபாடாற்றியதாக ஒரு ஐதிகம் உண்டு. அதனாலேயே இத்தலத்து சோமாஸ்கந்தர் சிறப்பானவராகப் போற்றப்படுகின்றார்.

திருநல்லூர்
திருநல்லூர்

சோழர் அரசகுடிகளால் பெரிதும் கொண்டாடப்பெற்ற  அன்னை அஷ்டபுஜமகாகாளி இத்தலத்தில்  உறைந்தருளுகிறாள். பெண்களால் பெரிதும் போற்றி வணங்கப்பெறும் அன்னை இவள்.

காசியைப்  போலவே பலிபீட வடிவில்  கணநாதர் காட்சி தந்திடும் தலம் இது.வைஷ்ணவ ஆலயங்களில் பக்தர்களுக்கு சிரசில் சடாரி சார்த்துவது போல, திருப்பாதபடிமத்தினைச் சார்த்தும் மரபு உடைய சிவாலயமும் இது ஒன்றே. 

அப்படிபட்ட  இத்தலத்தில் மாசிமகம்  மிகச்சிறப்பாக நிகழ்த்தப் பெறுவதற்கு காரணம்தான் என்ன?

ஒரு முறை குந்தி தேவியானவள் தனக்கு உபதேசிக்கப் பட்ட மந்திரத்தின் மூலம் புத்திரர்களைப் பெற்றாள். அதனால் அவளைப் பற்றிய தோஷத்தால் வருந்திய குந்தி  நாரதர் சொன்ன உபாயத்தின் பேரில், இத்தலத்து ஈஸ்வரனை வழிபட்டாள்.  நாரதரது தவ வலிமையால் இத்தலத்தில் சப்த சாகரங்களும் ஒன்று கூடின நிலையில், ஒரே நேரத்தில் தீர்த்தமாடி தன்னுடைய தோஷத்தினைப் போக்கிக் கொண்டாள். அந்த தினம் மாசிமகத்தன்று அமைந்ததாக ஐதிகம். அன்றிலிருந்து ஏழுகடல்கள் ஒன்றுகூடும் புண்ணிய தீர்த்தமாக இத்தலத்து  'சப்தசாகர தீர்த்தம்'  கருதப்படுகிறது.

மாசி மகத்தன்று இத்தலத்தில்  புனித நீராடல் மற்றும் இங்கு நிகழும் தீர்த்தவாரி வைபவத்தினைக் கண்டு தரிசிப்பதனாலும்  சகல தோஷங்களும் கழிந்து அளவில்லாத புண்ணிய பலன்களை அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மாசிமகத்தன்று திருவலம் வரும் சுவாமியின் திருமேனியில் வியர்வைத்துளிகள் அரும்புவது இன்றும் கண்கூடு. இத்தலம் தஞ்சை - கும்பகோணம் மெயின்ரோட்டில் பாபநாசத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.