Published:Updated:

திருச்சியில் 100 ஆண்டுகளைக் கடந்தும் நடந்து வரும் இசை ஆராதனை! நெகிழ வைக்கும் பிரார்த்தனை!

இசை ஆராதனை ( DIXITH )

இசை ஆராதனை: இந்த இசை ஆராதனையில் அருணகிரிநாதரின் திருப்புகழ், அதன்பிறகு தேவாரப் பாடல்களை பாடுவோம். இந்த இசை ஆராதனையால் பல்வேறு நன்மைகள் நிகழும் என்பதை அறிந்து பலரும் வந்து இங்கு பாடுவார்கள்.

திருச்சியில் 100 ஆண்டுகளைக் கடந்தும் நடந்து வரும் இசை ஆராதனை! நெகிழ வைக்கும் பிரார்த்தனை!

இசை ஆராதனை: இந்த இசை ஆராதனையில் அருணகிரிநாதரின் திருப்புகழ், அதன்பிறகு தேவாரப் பாடல்களை பாடுவோம். இந்த இசை ஆராதனையால் பல்வேறு நன்மைகள் நிகழும் என்பதை அறிந்து பலரும் வந்து இங்கு பாடுவார்கள்.

Published:Updated:
இசை ஆராதனை ( DIXITH )

“திருமணமாகி பல ஆண்டுகளாகியும் எனக்கு வாரிசு இல்லை. எனக்கிருக்கும் இந்த குறையைப் போக்கி புத்திர பாக்கியம் வழங்கினால் தினமும் உன்னை இசை ஆராதனை நடத்தி வழிபடுவேன்” என பழனி மலை பாலதண்டாயுதபாணியிடம் மனமுருக வேண்டிய முருகபக்தரான ஆறுமுகத்தின் வேண்டுதலுக்கு செவி சாய்த்த முருகப்பெருமான், நான்கு குழந்தை செல்வங்களை வழங்கி அருளினார்.

இசை ஆராதனை
இசை ஆராதனை
DIXITH

இது நடைபெற்றது 1915-ம் ஆண்டு. இன்றும் ஆறுமுக ஆசாரியாரின் இசை ஆராதனை அவரின் காலத்தோடு நின்றுவிடாமல் நான்கு தலைமுறையாக தொடர்கிறது என்பது தான் இங்கே விசேஷம்.

திருச்சி, பாலக்கரை, எடத்தெரு மார்க்கெட் பகுதியில் உள்ளது ஒரு பொற்கொல்லர் பட்டறை. மாலை 7 மணிக்கு மேல் இப்பட்டறையை கடப்பவர்களின் கவனத்தை ஈர்ப்பது அங்கே நடக்கும் இசை ஆராதனை. பக்தி பாடலை ஒருவர் கஞ்சிரா இசைத்தபடி மனமுருகி பாட, ஒருவர் டோலக் வாசிக்க, மற்றொருவர் ஆர்மோனியம் வாசிக்க நடத்தப்படும் இந்த இசை ஆராதனை அப்பகுதியில் பிரசித்தம். இந்த ஆராதனை குறித்து 1976-ம் ஆண்டு முதல் இங்கு நகை வேலை செய்து, பக்திப்பாடலை பாடி வரும் ஆறுமுகத்தின் உறவினரான ஏ.வரதராஜன் என்பவரை சந்தித்து பேசினேன்;.

இசை ஆராதனை
இசை ஆராதனை
DIXITH

“ஆறுமுகம் வேண்டிக் கொண்டபடி நடைபெற்ற இசை ஆராதனையானது, அவருடைய காலத்தோடு நின்றுவிடாமல் அவருடைய மகன் குழந்தைவேல் தொடர, பின்னர் குழந்தைவேல் மகன் வையாபுரி நடத்தி வந்த நிலையில் அவருக்கு உடல்நலம் குன்றிய காரணத்தினால் அவருடைய அண்ணன் மகன் எஸ்.ஹரிஹரன் என்பவர் நான்காவது தலைமுறையாய் தற்போது நடத்தி வருகிறார்.

நான்காவது தலைமுறையான ஹரிஹரன் படித்துவிட்டு சிங்கப்பூரில் பணியாற்றினார். இதனால் இந்த இசை ஆராதனை இனி தொடருமா என்ற நிலையில் அந்த முருகப் பெருமானின் திருவிளையாடலால், ஹரிஹரனை சிங்கப்பூர் வேலையை விடச்செய்து திருச்சியிலேயே ஒரு நிறுவனத்தில் பணபுரிந்து கொண்டு இந்த பஜனையை தொடர்ந்து நடத்தி வருமாறு செய்திருக்கிறது.

இங்கு வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் மற்றும் சுப்ரமணியரின் படமானது 1915-ல் ஆறுமுகம் அவர்களால் பழனி மலையிலிருந்து வாங்கி வரப்பெற்றது. 107 வருடங்களைக் கடந்தும் இந்த படங்கள் இன்று வரை அதன் தன்மை மாறாமல் அப்படியே இருக்கிறது. மேலும் பாலதண்டாயுதபானியின் உற்சவ சிலையும் ஆறுமுகத்தால் பழனியிலிருந்து வாங்கி வரப்பெற்று, அதற்கு வாரத்தில் செவ்வாய், வெள்ளி ஆகிய இரு தினங்களில் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.

மாலை 7 மணிக்கு தொடங்கி 9.30 மணி வரை நடைபெறும் இந்த பஜனையில் நைவேத்தியம், பொறிகடலை வைத்து பாடல்களை பாடி இசை ஆராதனை முடிந்தவுடன் அனைவருக்கும் பிரசாதமாக வழங்குவோம். இது நாள் வரையில் தங்குதடையின்றி இந்த பஜனை நடைபெறுகிறது. பஜனையில் ஈடுபடுவோர் எவருடைய வீட்டில் துக்க சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்தாலும் கூட பஜனை தடைபடுவதில்லை. அதே வேளையில் மேற்குறிப்பிட்ட பஜனை நாட்களில் எந்தவித துக்க நிகழ்ச்சியும் இதுவரை நடைபெற்றதில்லை என்பது தான் முருகன் அருள்.

இசை ஆராதனை
இசை ஆராதனை
DIXITH

1954-ல் புயல் வந்த போது புயலின் காரணமாக அனைத்து கடைகளும் மூடியிருந்தது. அப்போது விளக்கேற்ற எண்ணெய் கிடைக்காததால் ஆறுமுகம் தண்ணீரில் தீபம் ஏற்றி வழிபட்டார் என்கிறார்கள் இங்குள்ளோர். கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட எவரேனும் ஒருவர் வந்து கதவை பாதியாக மூடிவைத்து இசை ஆராதனை செய்திருக்கிறாராம்.

இந்த இசை ஆராதனையில் அருணகிரிநாதரின் திருப்புகழ், அதன்பிறகு தேவாரப் பாடல்களை பாடுவோம். இந்த இசை ஆராதனையால் பல்வேறு நன்மைகள் நிகழும் என்பதை அறிந்து பலரும் வந்து இங்கு பாடுவார்கள். இங்கே எந்தவித மதபேதமின்றி ஜேசுதாஸ் பாடிய கிறித்தவப் பாடல்களையும், இஸ்லாமியர்களின் பாடல்களையும் கூட பாடுவார்கள்.

இந்த இசை ஆராதனையால் எங்கள் மனம் அமைதியாகிறது. வாழ்வில் சில தடைகள் வந்தாலும் வருவது தெரியாமல் சென்றுவிடுகிறது என்கிறார்கள் இங்குள்ளோர். எல்லோரையும் நெகிழ வைக்கும் இந்த இசை ஆராதனை எப்போதும் நடைபெறட்டும் என்று வாழ்த்தி விடைபெற்றோம்.