சிவபெருமான் என்றாலே நினைவிற்கு வருவது ஆவினம்தான். உலகத்து ஜீவர்களை 'பசு' என்றே சைவசிந்தாந்தம் அடையாளப் படுத்துகிறது.
சைவ சமயத்தினர் போற்றுதலுக்கும், வழிபாட்டிற்கும் உரியவை பசுக்கள். சகல தேவர்களும் பசுவின் உடலில் வாசம் செய்கின்றனர். எனவே, பசுக்களை வலம் செய்து வழிபடுவதால் சகல வானவர்களையும் ஒரே சமயத்தில் வலம் வந்து வணங்கிடும் புண்ணியம் கிடைத்து விடுகிறது. பூஜைகளிலேயே உயர்ந்தது கோபூஜை. பெருமானின் அருளானது 'கோமுகம்' எனப்பெறும் பசுக்களின் முகத்தின் வழியாகவே கிடைக்கப்பெறுவதாக ஐதிகம்.

பசுவின் முகம் தெய்வத்தன்மை வாய்ந்தது. அதன் இரு நேத்திரங்களிலும் சூரிய சந்திரர்கள் வசிக்கின்றனர். முன் நெற்றி உச்சியில் சிவபெருமான் உறைந்திருக்கின்றார். ஆற்காடு பகுதிகளில் பாயும் ஆறு ஒன்று பசுவின் காரணமாகப் பெருகி வந்தமையால் அதற்கு 'கோமுகி' ஆறு என்பது பெயராயிற்று.
சிவலிங்கத் திருமேனிகளில் ஆவுடையார் எனப்பெறும் வட்டமான பகுதியிலிருந்து நீண்டு, திருமஞ்சனப் புனித நீர் வெளியேறும்படி அமைக்கப்பெற்ற நாளம் சேர்ந்த அமைப்பிற்கு 'கோமுகம்' என்பது பெயர்.
அதேபோல் மூலஸ்தானத்தில் இருந்து அபிஷேகத் திரவியங்கள் வெளியேறும் துவாரமுடைய நீண்ட வாயிலுக்கும் கோமுகம் என்பதே பெயர். பெயருக்கு இயைந்தாற்போல, இதன் முகப்பினை பசுவினுடைய முகம் போன்றே அமைப்பது தொன்மையான வழக்கத்தில் இருந்தது. பிறகு அவ்விடத்தை யாளிகள் ஆக்ரமித்துக் கொண்டன என்பது தனி வரலாறு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கங்கை முதலான சகல புண்ணிய தீர்த்தங்களும் பசுவின் வாயில் இருந்து வெளியேறும் நீரில் உறைத்திருப்பதாக ஐதிகம். எனவே பெருமான் வழிபாட்டிற்கு உரிய திரவியங்கள் பசுவின் வாய்வழியாக வெளியேறும் படியானதொரு ஐதிகத்தின் அடிப்படையில் கெண்டி, சருவம் முதலான பூஜா பாத்திரங்களை பசுவின் முகம் போன்று அமைத்துக் கொண்டிருப்பது வழக்கம்.
அதாவது, சிவபூஜைக்குப் பயன்படுத்தும் நீர்க்கெண்டியானது பசுவின் வடிவமாகவும், அப்பசுவின் வாயிலுள்ள துளை வழியாக உள்ளிருந்து நீர் வெளியேறும்படியும் அமைக்கப் பெற்றிருக்கும்.
இக்கெண்டியின் மூலமாக நீரினை வார்த்து பூஜிப்பது அதீத புண்ணிய பலன்களைக் தந்திடும் என்பது விசேஷம். அதேபோல் வேள்விச் சாலைக் குண்டங்களில் மந்திரங்களை ஓதிக் கொண்டே பசு நெய்யினைச் சமர்ப்பிக்கும் நிகழ்விற்கு 'வசுத்தாரா' என்பது பெயர். நெய்யினை விடும் உலோகக் கரண்டியை 'சுருவம்' என்பர்.

இச்சுருவத்தின் நெய் வெஎளியேற்றும் முகத்தினை பசுவின் முகமாக அமைப்பது மரபு. சிவ பூஜையில் சிறந்தவர்கள் வெள்ளியினால் செய்யப்பெற்ற கெண்டி, சுருவம் ஆகியவற்றினைப் பயன்படுத்துவதைப் புனிதமாகக் கருதுகின்றனர். இத்தகைய சுருவம் பயன்படுத்தியே திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.