சூரியன் மேஷராசியில் உலவுகின்ற சித்திரை மாதம் அதீத வெப்ப காலமாகும். அறிவியல் ரீதியாக, பூமியினுடைய முறையான இயக்கத்தில், சூரியனுடைய வெப்பக்கதிர்கள் பூமியின் மீது நேர் செங்குத்தாக விழுகிற இக்கால கட்டத்தில் அதிக அளவில் சூரியனுடைய உஷ்ணம் பூமியைத் தாக்குகின்றது. பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய அக்னிக்கு பலம் மிகுதியாக உள்ள காலகட்டமாக இந்த சித்திரை மாதம் அமைகிறது. பொதுவாக மூலஸ்தானத்திலுள்ள திருமேனிகள் நுண்மையான பேரதிர்வுகளைத் தன்னுள் அடக்கியவை.

கடும் கோடைகாலத்தில் மூலஸ்தானத்திலிருந்து வெளிப்படும் இந்த அதிர்வுகளை மானுட உடல்கள் தாக்குப்பிடிக்க இயல்வதில்லை. எனவே இத்தகு வெப்பத்தினைத் தவிர்த்திடும் வகையில் கோடாபிஷேகம் எனப்பெறும் சிறப்பான திருமஞ்சனம் நிகழ்த்தப் பெறுதல் மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறையில் தொன்மரபாக உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சோழதேசத்துத் தொன்மையான ஆலயங்களில் கர்ப்ப கிரகத்தினைச் சுற்றி நீர் நிரப்பி வைத்திடும் படியான பள்ளமான அமைப்பினைக் காணலாம். 'சக்தி மண்டலம்' எனப்பெறும் இப்பகுதியில் கடுமையான வறட்சி காலங்களில் தண்ணீரை நிரப்பிவைத்து மூலஸ்தானத்தில் உறைந்திருக்கும் தெய்வத்திற்கும், சுற்றுப்புறத்திற்கும் குளிர்ச்சியை ஏற்படுத்துவது வழக்கம். இப்படிச் செய்வதினால் தண்ணீர்ப் பஞ்சம் நீங்கிடும். மழைப்பொழிவு ஏற்பட்டு பூமி குளிரும். வெப்பநோய்கள் நீங்கிடும். கிராம நலன் மேம்படும் என்பது நம்பிக்கை. இவ்வகையில் திருவாவடுதுறைத் தலைமைத் திருமடத்தில் பிரதானமாக உள்ள ஆதிபரமாசாரியரான
ஸ்ரீ நமசிவாயமூர்த்திக்கு 30.04.2022 'கோடாபிஷேகம்' நடைபெற்றது.

ஏராளமான திரவியங்கள் கொண்டு இந்தத் திருமஞ்சனத்தை குருமகாசந்நிதானமவர்களின் திருக்கரங்களினாலேயே விசேஷ பூஜைகள் நிகழ்த்தப் பெற்றது. மிகப்பெரிய அளவில் அன்னப்படையலாக விசேஷமான முறையில் தயாரிக்கப்படும் சர்க்கரைப் பொங்கல் நிவேதிக்கப்பட்டது. இரவு பூஜை நிறைவில் இந்த சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்தினை சுவாமிகளது திருக்கரங்களினாலேயே திருமடத்து அன்பர்களுக்கு வழங்கினார்கள்.