Published:Updated:

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலில் நவகண்ட அரிகண்டச் சிற்பங்கள்; வரலாறு சொல்லும் அதிசயத் தகவல்கள்!

நவகண்ட அரிகண்டச் சிற்பங்கள்

தங்கள் கவனக்குறைவினாலோ, தங்களை மீறியோ, அரசர் உயிருக்கு அபாயம் நேர்ந்து விட்டால், துர்கையின் சந்நிதியில் தங்களுடைய தலையைத் தங்கள் கையினாலேயே வெட்டிக் கொண்டு பலியாவதாகச் சபதம் எடுத்துக் கொண்டவர்கள்.

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலில் நவகண்ட அரிகண்டச் சிற்பங்கள்; வரலாறு சொல்லும் அதிசயத் தகவல்கள்!

தங்கள் கவனக்குறைவினாலோ, தங்களை மீறியோ, அரசர் உயிருக்கு அபாயம் நேர்ந்து விட்டால், துர்கையின் சந்நிதியில் தங்களுடைய தலையைத் தங்கள் கையினாலேயே வெட்டிக் கொண்டு பலியாவதாகச் சபதம் எடுத்துக் கொண்டவர்கள்.

Published:Updated:
நவகண்ட அரிகண்டச் சிற்பங்கள்
திருவொற்றியூரிலுள்ள இச்சிலைகளும் அவ்வாறே ஏதோ ஒன்றின் பொருட்டு இறந்த வீரர்களின் சிற்பங்களே இன்றும் வழிபாட்டில் உள்ளது. இலக்கிய கூற்றின்படி இவ்வீரர்களும் கொற்றவையின் முன்னேயே தம் இன்னுயிரை பலியிட்டிருத்தல் வேண்டும். அதற்கு சான்றாய் இன்றும் வட்டப்பாறை எனும் பிடாரியின் கோயில் திருக்கோயில் வளாகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய வடசென்னையின் முக்கிய பகுதியாக திகழ்கிறது,திருவொற்றியூர். இவ்வூரிலுள்ள ஆதிபுரீஸ்வரர் கோயில் பல்லவர் காலம் முதலே சிறப்புற்று விளங்கியது. இக்கோயிலிலுள்ள ஈசனை தேவார மூவரும் தம் பதிகங்களால் பண் இயற்றி பாடியுள்ளனர்.

இக்கோயிலில் அன்று ஈசனை வழிபடும் நெறிகளில் ஒன்றான காபாலிகம் சிறப்புற்று விளங்கியதற்கு இக்கோயிலில் சான்றுகள் கிடைக்கின்றன.

நவகண்ட அரிகண்டச் சிற்பங்கள்
நவகண்ட அரிகண்டச் சிற்பங்கள்

இக்கோயிலின் வெளிப்புறம் உள்ள வடக்குமாட வீதியில் எட்டு உயிர்க் கொடையாளர்களின் சிற்பமும், ஒரு வீரபத்திரர் சிற்பமும் தாழ்வான ஒருபகுதியில் மேடையிட்டு ஒரே இடத்தில் சில பிரிவினரால் வணங்கப்பட்டு வரப்படுகிறது. இச்சிற்பங்கள் குறித்து யாதும் ஊரே யாவரும் கேளிர் (யாஊயாகே) அமைப்பை சேர்ந்த வே.பார்த்திபன், பி.திருச்சிற்றம்பலம்,மற்றும் திருவொற்றியூர் கோயிலின் ஓதுவார் மணிகண்டன் ஆகியோர் கூறியதாவது,

'இச்சிற்பத் தொகுதியில் ஏழு அரிகண்டம் எனும் ஒரே வீச்சில் தன் தலையை அரிந்து பலிகொடுத்த வீரர்களின் சிற்பங்களும் மூங்கிலில் தன்தலையினை கட்டி தன் தலையினை பலிகொடுத்த "தூங்குத்தலை" எனும் வீரனின் சிற்பம் ஒன்றும். தட்சனுடன் கூடிய வீரபத்திரர் சிற்பம் ஒன்றும் உள்ளது. இவ்வீரர்கள் ஒருகையால் கழுத்தில் கத்தியை இறக்கியவாரும், மறுகையால் தலைமுடியை பிடித்தவாறும் உள்ளனர். ஒரு வீரனின் கழுத்தில் மாலை சூடியுள்ளார். மற்ற அனைவரும் கழுத்தில் ஆபரணங்கள் அணிந்துள்ளனர்.

தூங்குத்தலை சிற்பம்
தூங்குத்தலை சிற்பம்

உடலின் ஒன்பது பாகங்களை தானே அரிந்து கொற்றவைக்கு பலியிடுவது தான் நவகண்டம். இம் மரபு தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. கொற்றவையின் முன்பாக தன் வேண்டுதலை நிறைவேற்ற தலையை அறுத்துப் பலியிட்டு கொண்டவர்களைப் பற்றிய குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் உள்ளன, குறிப்பாக கலிங்கத்துபரணியில் சோழ அரசின் வெற்றிக்காக இப்படி தலையை அறுத்து பலிகொண்ட வீரனைப் பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது.

தனது தலையை ஒரே முயற்சியில் தானே அரிந்து பலியிடுவதற்கு அரிகண்டம் என்று பெயர். இது ஒரு விழா போல் நடத்தப்படும். நவகண்டம் ‍/அரிகண்டம் கொடுப்பதற்கு முன்பு உறவினர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். நவகண்டம் ‍கொடுப்பவர் இடையில் உடைவாளும், மார்பில் கவசமும் தரித்து போர்வீரன் போல் போர்க்கோலம் பூண்டு இருப்பார். கொற்றவைக்கு பூசை முடித்து பின்பு, தனது இடது கையினால் முடியைப் பிடித்து வலது கையினால் கழுத்தை வெட்டிக் கொண்டு இறப்பார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த மாதிரி நவகண்டம் கொடுப்பதற்குப் பல காரணங்கள் உண்டு:

1. வலிமையான‌ எதிரி நாட்டுடன் போர் புரிய நேரும் போது, வெல்வதற்க்கு வாய்ப்பே இல்லை என்ற‌ தருணங்களில் தெய்வத்தின் அருள் நாடப்படுகிறது. துர்கைக்கு பலி கொடுத்தால் தெய்வத்தின் அருள் கிட்டும் என்ற நம்பிக்கையில் நவகண்டம் கொடுக்கப்பட்டது.

2. சில சமயங்களில் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக கிடக்கும் அரசனுக்கு, அவன் நலம் திரும்ப அவரது விசுவாசிகளால் நவகண்டம் கொடுக்கப்பட்டது.

3. நோயினால் சாவை எதிர் நோக்கி காத்திருக்கும் ஒருவன், நோயினால் சாக விரும்பாமல் வீர சொர்க்கம் அடைய விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வது.

4. குற்றவாளி ஒருவன் தான் செய்த குற்றத்தினால் மரண தண்டனைக்கு உள்ளாகும்போது, அவ்வாறு சாகாமல் அரசன் அனுமதியுடன் நவகண்டம் கொடுத்துக் கொண்டு வீர சொர்க்கம் அடைவ‌து.

5. ஒருவன் போர்க்காயத்தினாலோ, நோயினாலோ சாகும் தருவாயில் அவனுக்கு முடிக்க வேண்டிய கடமைகள் ஏதும் இருக்குமாயின் தனது இறப்பை தள்ளிப் போடுமாறு இறைவனிடம் வேண்டுவது. அப்படி நடக்கும் பட்சத்தில் அந்தக் கடமை நிறைவேறியதும் நவகண்டம் கொடுத்துக் கொள்வது. போன்ற பல காரணங்கள் உண்டு

அரிகண்டம்
அரிகண்டம்

இப்பொழுது முக்கியமானவர்களுக்கு பூனைப்படை பாதுகாப்பு மாதிரி முன்பு சோழர்களுக்கு "வேளக்கார படைகள்" மற்றும் பாண்டியர்களுக்கு "தென்னவன் ஆபத்துதவிகள்" என்ற இருவிதமான படைகள் இருந்தன. தங்கள் கவனக்குறைவினாலோ, தங்களை மீறியோ, அரசர் உயிருக்கு அபாயம் நேர்ந்து விட்டால், துர்கையின் சந்நிதியில் தங்களுடைய தலையைத் தங்கள் கையினாலேயே வெட்டிக் கொண்டு பலியாவதாகச் சபதம் எடுத்துக் கொண்டவர்கள்.

"தூங்குத்தலை" எனும் வீரச்சாவு

கொற்றவையை நினைத்து வீரன் அமர்ந்திருக்க, அருகேயுள்ள மூங்கிலை வளைத்து, அதில் அவன்முடி கட்டப்பட்டிருக்கும். அவனுக்கருகேயுள்ள மற்றொருவீரனோ அல்லது அவ்வீரனோ தலையை துண்டிப்பான். உடம்பிலிருந்த தலை அவனுடம்பிலிருந்து தனியாக மேலே நிமிரும். மணிமேகலை, கலிங்கத்துப்பரணி இந்நிகழ்ச்சியினை ஆவணப்படுத்தியுள்ளன.

"உலையா உள்ளமொடு உயிர்க்கடனிறுத்தோர் தலைதூங்கு நெடுமரம்"

"வீங்குதலை நெடுங்கழையின் விசைதொறும்

திசைதொறும் விழித்துநின்று தூங்குதலை"

என இந்நிகழ்வினை இலக்கியங்கள் காட்சிபடுத்துகின்றது.

திருவொற்றியூரிலுள்ள இச்சிலைகளும் அவ்வாறே ஏதோ ஒன்றின் பொருட்டு இறந்த வீரர்களின் சிற்பங்களே இன்றும் வழிபாட்டில் உள்ளது. இலக்கிய கூற்றின்படி இவ்வீரர்களும் கொற்றவையின் முன்னேயே தம் இன்னுயிரை பலியிட்டிருத்தல் வேண்டும். அதற்கு சான்றாய் இன்றும் வட்டப்பாறை எனும் பிடாரியின் கோயில் திருக்கோயில் வளாகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அரிய வகை இச்சிலைகள் பிற்கால பல்லவர்காலமான கி.பி 9-ம் நூற்றாண்டை சேர்ந்தவையாகும்.