Published:Updated:

ஆறு மனமே ஆறு -37

ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி

நம்பிக்கைத் தொடர் தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

அந்தப் புண்ணிய பூமியில் அம்மா தரிசனம் அளிக்கும் கோயில் மட்டுமே இருந்தது. உன்னிகிருஷ்ணனுக்கு அம்மாவை தரிசிக்கவும் அவருடன் பேசவும் முடியும் என்றாலும், ஞானக் கல்வி பெறுவதற்கு ஏற்ற இடம் இல்லை என்ற எண்ணமும் உள்ளுக்குள் தோன்றியது.

உன்னிகிருஷ்ணன் அம்மாவின் பாதக் கமலங்களில் ஐக்கியமான பிறகு, அவரை விட்டு வெகு தூரம் செல்லவும் அவனுக்கு விருப்பம் இல்லை. அதேநேரம் தேவியின் சந்நிதியில் வாழ்வதும் சாதகம் செய் வதும் கடினம் என்ற எண்ணமும் ஏற்பட்டது. அதனால் ஒருவித குழப்பத்துக்கு ஆளானான் உன்னிகிருஷ்ணன்.

ஆறு மனமே ஆறு -37

ருநாள், அங்கிருந்து சென்றுவிடுவது என்று தீர்மானித்தான். எவரிடமும் சொல்லாமல்கொள்ளாமல் தன்வழியில் நடக்க ஆரம்பித் தான். அவன் உள்ளத்திலோ தடுமாற்றம் சற்றும் குறையவில்லை. அது அவன் நடையிலும் வெளிப்பட்டது. தளர்வுடன் பயணித்தான்.

அவன் இப்படி முடிவெடுத்தபோதிலும் தெய்வத்தின் சித்தம் ஒன்று உண்டு அல்லவா?!

உன்னிகிருஷ்ணனின் நடவடிக்கையை அறிந்த அம்மா, “உன்னி கிருஷ்ணன் இந்த இடத்தைவிட்டுப் போகிறான். அவன் எங்கும் போக வேண்டாம். உடனே திரும்ப வரச் சொல்லுங்கள். அவனுக் கென்று ஒரு கடமை இருக்கிறது’’ என்று உத்தரவிடும் தொனியில் சொன்னார்.

பக்தர்களில் ஒருவர் ஓடோடிச் சென்றார். உன்னிகிருஷ்ணனைச் சந்தித்து அம்மாவின் வாக்கை அவனிடம் எடுத்துச் சொன்னார்.

`என்ன விந்தை இது... என் மனத்தில் உள்ளதும் என்னுடைய நிலைப்பாடும் பயணமும் அம்மாவுக்கு எப்படித் தெரிந்தன... இதென்ன தெய்வத்தின் திருவிளையாடலா...’ என்று வியந்தான் உன்னிகிருஷ்ணன்.

`இப்போது என்ன செய்வது... அம்மாவின் ஆணையை ஏற்றுத் திரும்பி விடுவதா அல்லது பயணத்தைத் தொடர்வதா...’ என்று ஒருகணம் குழம்பவும் செய்தான். ஆனால், அவன் கால்கள் முன்னே செல்ல மறுத்தன. ஆகவே, மனத்தெளிவுடன் முடிவெடுத்தான்; மீண்டும் வந்து அம்மாவின் முன் நின்றான்.

அன்றைய தேவிதரிசனம் நிறைவு பெற விடியற்காலை ஆகி விட்டது. பின்னர், உன்னிகிருஷ்ணனை அருகில் அழைத்து “நீ எங்கும் போக வேண்டாம். இன்றிலிருந்து கோயிலிலேயே நிரந்தரமாகத் தங்கி, ஜபம் - தபம் அனைத்தையும் செய். அத்துடன் தினசரி பூஜைகளையும் நீயே கவனித்துக்கொள். தேவிக்கு லலிதா சஹஸ்ரநாம அர்சனை செய்வதையும் கடமையாகக் கொள்” என்று உத்தரவிட்டார். இந்தச் சம்பவத்தை விவரிக்கும் அம்மா, `இதுவே தேவியின் சித்தமும் வாக்கும் ஆகும்’ என்கிறார்.

அம்மா இப்படி உத்தரவிட்டதும் உன்னிகிருஷ்ணன் அவரிடம், ``அம்மே! என்றோ ஒருநாள் தொலைந்துபோன குழந்தை தன் தாயிடம் சென்றடைந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது’’ என்றாராம்.

``இருக்காதா பின்னே... எனக்கும் அப்படித்தான் இருந்தது’’ என்று பகிர்கிறார் அம்மா!

இது நடைபெற்றது 1976-ம் ஆண்டு ஜனவரி மாதம். உன்னிகிருஷ்ணன், அமிர்தபுரியில் நிரந்தரமாக தங்கி சேவை செய் யும் முதல் பிரம்மசாரியாகவும், பின்னர் சுவாமி துரீயாமிருதானந்த புரி எனும் நாமத்துடன் சந்நியாஸ தீக்ஷையும் பெற்றார். அவர் இன்றைக் கும் தமக்கு அளிக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்றி வருகிறார் என்பது சிறப்பு. இனி, அம்மாவின் அருள்வாக்கைத் தொடர்வோம்.

ஆறு மனமே ஆறு -37

சமஸ்தானத்தின் தொடக்கம்

``அதன் பிறகு, உலகத்தை அரவணைத்து இன்னல்களை நீக்கி, அனைவரின் மனமும் நலமும் வளம் பெற வேண்டும் எனும் எண்ணம் இன்னும் தீவிரமானது.

1978-ம் ஆண்டு முதல், ஆசிரமம் உருவாக்கத்துக்கான பணிகள் தொடங்கின எனச் சொல்லலாம். அதற்கான வேகம், விவேகம், கல்வியறிவு, ஞானம் ஆகியவற்றோடு சமர்ப்பணத்தையும் சங்கல்பமாகக் கொண்ட இளை ஞர்களை பிரம்மசாரிகளை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்தன.

ஆனால் தேவியின் திருவருளால் அப்படி யானவர்களைத் தேடிச் செல்லும் அவசியம் இருக்கவில்லை.

குறுகிய காலத்தில், வல்லிகாவுக்கு அருகில் உள்ள பகுதிகளிலிருந்து பாலகோபால், வேணுகோபால், ஶ்ரீகுமார், ரமேஷ்ராவ், ராமகிருஷ்ணன் ஆகியோர், வெவ்வேறு காலகட்டத்தில் ஆன்மிகப் பணியில் வந்து சங்கமித்தனர். அம்மாவின் கட்டளைப்படி செயல்படத் தொடங்கினர். உரிய பணியையும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட இவர்களின் எண்ணமும், சொல்லும், செயலும் `அம்மா’ என்றே இருந்தன.

நேரம் - காலம் கூடிவந்தால் எல்லாமே தானாக நடக்கும் என்பார்கள். அப்படித்தான் 1981-ம் ஆண்டு, மாதா அமிர்தானந்தமயி பணிக்குழு அறக்கட்டளையாக நிறுவப்பட்டது.

அன்பு, ஆன்மிகம் மற்றும் மக்கள் நலன் மீதான அக்கறையால் உலகம் முழுவதையும் ஈர்த்த ஒரு மாபெரும் சமஸ்தானத்தின் சிறிய தொடக்கமாக இதை எடுத்துக் கொள்ளலாம்!

- மலரும்

ஆறு மனமே ஆறு -37

தெய்வ வாக்கு!

தேவி தரிசனத்தின்போது `தேவி! என் மகளைத் திருப்பிக்கொடுத்து விடு’ என்று சுகுணானந்தர் தேவியிடம் வேண்டுகோள் விடுத்த நிலையில், `இப்போதே உன் மகனை எடுத்துக்கொள்’ என்று அருள் வாக்கு தந்தார் அம்மா (தேவி).

மறுகணம் சுதாமணியின் உடலில் அசைவு ஏதும் இல்லை. அம்மா தரையில் சாய்ந்தார். சுகுணானந்தர் வேண்டிக்கொண்டதால் சுதாமணியைவிட்டு நீங்கிய தேவி, உடலை மட்டும் ஒப்படைத்தாள் போலும். அனைவரும் அதிர்ந்தனர். தமயந்தியும் மயங்கி விழுந்தார். ‘அம்மாவின் இந்த நிலைக்கு சுகுணானந்தரே காரணம்’ என்ற நிந்தனை ஊர் முழுக்க பரவியது.

அம்மாவைச் சுற்றிலும் தீபம் ஏற்றப்பட்டது. சிலர் கண்ணீர் விட்டுப் புலம்பினர்; சிலர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மருத்துவர் வந்தார் நாடித்துடிப்பை ஆராய்ந்தார். துடிப்பு எதுவும் இல்லை!

சுகுணானந்தரும் மயங்கி விழுந்தார். பக்தர்கள் `அதிசயம் எதுவும் நிகழாதா... அம்மா உயிர்த்தெழ மாட்டாரா...’ எனும் எதிர்பார்ப்புடன் கலங்கி நின்றனர். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த சுகுணானந்தர், ``தேவி! என்னை மன்னித்துவிடு. சுதாமணியை மீட்டுக் கொடு. இனி, இதுபோன்று தவறு நடக்காது’’ என்று தேவியிடம் மன்றாடினார். சற்று நேரத்தில் அம்மாவின் உடலில் அசைவுகள் தெரிந்தன. அவர் சுயநினைவுக்குத் திரும்பியபோது கிருஷ்ணபாவத்தில் இருந்தார்.

சுகுணானந்தரிடம் “நீங்கள்தான் பிடிவாதமாக மகள் வேண்டும் என்று கேட்டீர்கள். ஆனால், உடல் மட்டுமே உங்களுக்குச் சொந்தம்; உயிர் அல்ல. ஆகவே உடல் மட்டுமே கிடைத்தது...’’ என்றவர் தொடர்ந்து, ``தேவி இல்லாமல் கிருஷ்ணன் இல்லை. என்னுள் இருப்பது அவர்களே. நான் சுதாமணி அல்ல” என்றார்.

அன்றிலிருந்து சுகுணானந்தரும் மனம் மாறினார்; அம்மாவின் தெய்விகத் தன்மையை ஏற்றுக்கொண்டார். நாடெங்கிலும் இருந்து பக்தர்கள் வரத் தொடங்கினர். அதேநேரம் நாத்திகர்களின் இழிவுப் படுத்தும் நடவடிக்கைகளும் தொடரவே செய்தன. சுபகனும் திருந்த வில்லை.

இந்த நிலையில் இடமண்ணேல் இல்லத்தில் ஏதோ துக்கம் நடை பெறுவதற்கான சகுனங்கள் தென்பட்டன.

``தடைகளை வந்தாலும் அவற்றையும் மீறி மெளன விரதம் இருக்கவேண்டும்’’ என்று வழி காட்டினார் அம்மா. ஆனால் விரதத்தின் தொடக்கநாளிலேயே தடை ஏற்பட்டு நின்றுபோனது. அதுவும் ஓர் அசுபகுனம் ஆனது.

சுபகனுக்கு ஏற்பட்ட யானைக்கால் நோய் தீவிரம் அடைந்தது. அப்போதும் அவன் நல்வழியை நாடவில்லை. தரிசனத்துக்கு வந்த வேற்றுமத பெண்மணியைக் கேலி செய்தான். அம்மா ஆவேசத் துடன், ``பக்தர்களைத் துன்புறுத்துவது யாராக இருந்தாலும், இன்னும் ஏழு நாட்களில் மரணிப்பார்” என்றார்.

சுகுணானந்தர் அவனுக்காக மன்னிப்பு வேண்டினார். அம்மாவோ, “பக்தர்களுக்கு இன்னல் விளைவிப்போரை இறைவன்கூட மன்னிக்க மாட்டார். வினைப்பயனை அனுபவிக்கவேண்டும் என்பது விதி” என்று கூறிவிட்டார்.

2.6.1978 அன்று, `தீராத நோயால் அவதிப்படுவதால், தற்கொலை செய்துகொள்கிறேன்” என்று எழுதிவைத்துவிட்டு முடிவைத் தேடிக் கொண்டான் சுபகன்!

சுகுணானந்தர் மிகவும் வேதனை அடைந்தார். அம்மா அவரைத் தேற்றினார். “கவலைவேண்டாம், சகோதரி கஸ்தூரிக்குத் திருமணம் நடக்கும். இந்த இல்லத்தின் வாரிசாக, சுபகன் தீயவினைகள் நீங்கி மீண்டும் பிறப்பான். பிறக்கும் குழந்தை சிவன் என்ற நாமத்துடன், நல்லவனாக வளர்வான்” என்று அருளாசி வழங்கினார்.