Published:Updated:

ஆறு மனமே ஆறு!

ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜ்

ஆறு மனமே ஆறு!

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜ்

Published:Updated:
ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி

`மேலை நாடுகளுக்குப் பயணிப்பதற்குமுன் பாரதத்தின் மீது தாய்நாட்டுப் பாசம் இருந்தது. அந்த நாடுகளுக்குச் சென்று வந்த பிறகோ, பாரத மண்ணின் ஒவ்வொரு துகளும் மிகப் புனிதமானதாகத் தோன்று கிறது’ என்றார் சுவாமி விவேகானந்தர். உண்மைதான்... பாரத மண்ணின் ஒவ்வொரு துகளும் புனிதமானது.

ஆறு மனமே ஆறு!

ழம்பெருமை வாய்ந்த பரத கண்டம் இது. `ஞானத்தின் பிறப்பிடம்’ என்பார்கள் அறிஞர்கள். இங்கு ஞானத்தை அழுத்திச் சொல்லக் காரணம் என்ன? பண்டைய வேத காலத்தின் மேன்மையை நாம் அறிவோம். ரிஷிகள், தபஸ்விகள், வேதங்கள், யாகங்கள், இறைவனின் அருளாடல்கள் நிறைந் திருந்த காலம் அது. இன்றுபோல் அப்போது பதிவுப் பெட்டகங் கள் இல்லை. எனினும் அப்போதைய ஞானியரின் வழிகாட்டல் கள் பல யுகங்களைக் கடந்து இன்றும் உயிர்ப்புடன் திகழ்கின்றன.

வேதம் தோற்றுவித்த ஞானம்தான் ஞானிகளின் உயிர் மூச்சு. அதுசரி... `வேதங்கள் உண்மை’ என்பதற்குச் சாட்சி என்ன? அதை ஆன்மாவின் மூலமே அனுபவித்து உணர வேண்டும்.

இந்த நிலையே ஆன்மிகத்தின் நுழைவாயில். ரிஷிகளும் தபஸ்விகளும்... ஏன், சாமானியர்களில் பலரும்கூட அவ்வாறுதான் இறைவனைக் கண்டனர். அவர்களின் வாழ்வியல், புராண-இதிகாசங்கள், கடவுளரின் மனித அவதாரங்கள் குறித்த திருக்கதைகள் அனைத் துமே என்றென்றும் நமக்கு வழிகாட்டும் ஞான நூல்களே!


ஆன்மிகத்தின் முதல் நிலை

ஆன்மிகம் என்பது காடு-மலைகளில், குகை களில் அமர்ந்து தவம் செய்து மட்டுமே பெறக் கூடியது என்றில்லை. பலதரப்பு மக்களுடன் இணைந்து வாழ்ந்து, எதிர்மறையான பல சூழல்களைத் தைரியமாகச் சமநிலையுடன் எதிர்கொண்டு வாழ்வதும் ஆன்மிகம்தான். ஆன்மிகம் நம் வாழ்வின் அடிப்படை. அதன் வழியே அனுபவமும், ஆற்றலும், ஞானமும் உருவாகும் எனும் நம்பிக்கை நமக்கு வேண்டும்.

அதேநேரம்... `ஆன்மிகம் என்பது பழங்கதை; மூடநம்பிக்கை சார்ந்தது. முதியவர்களுக்கு மட்டுமே தேவையானது’ என்று இளையோர் சிலர் ஏளனம் செய்கிறார்கள் என்றால், அதுகுறித்து வியக்கவோ, வருந்தவோ தேவை யில்லை; ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழிமுறை.

ஆன்மிகத்தின் முதல் படி கடவுள் ஆராதன எனும் பக்தியே. நம் முன்னோர் பக்தியை ஒன்பதுவிதமாகப் பிரித்துள்ளனர். `அவற்றில் எது சாத்தியமோ, அதில் முழுமனதோடு ஈடுபடுங்கள்’ என்று வழிகாட்டியுள்ளனர். சில தரப்பினருக்கு இதில் நம்பிக்கை இல்லையென்றாலும், மனித வாழ்வின் இலக்கை மாற்றியமைத்ததில் பக்தி மார்க்கத்துக்கு அதீத பங்கு உண்டு என்பது உண்மை!

மனம்

மனம் என்பது உன்னதமானது. அதேநேரம் பயங்கரமான ஆயுதம் அது என்றும் கூறலாம். மனம் நல்லதை நினைத்தால், செயல் உத்தமம் ஆகும். மனம் குறுகிய வட்டத்துக்குள் அடங்கிய ஒன்றாக மாறிவிடக் கூடாது. நல்லன நினைத் தால் நல்லன விளையும். இல்லையேல் விபரீதம்தான். `வினாச காலே விபரீத புத்தி’ என்பார்கள் பெரியோர்கள்.

பாலர் பயிலும் வகுப்பறை அது. ஆசிரியர் குழந்தைகளிடம் கேட்டார்: ``இரவில் வானில் எத்தனை நட்சத்திரங்களைக் காண்பீர்கள்?’’

ஒரு குழந்தை ``ஆயிரக்கணக்கில் பார்ப்பேன்’’ என்றான். மற்றொருவன் ``லட்சம் விண்மீன்கள் தெரியும்’’ என்றான். மூன்றாவதாக ஒரு பிள்ளை ``கோடிக் கணக்கில்...’’ என்றான்.

நிறைவாக ஒருவன் சொன்னான்... ``மூன்று நட்சத்திரங்களை மட்டுமே காண்பேன்’’ என்று. “மூன்று மட்டும்தானா... உன் நண்பர்கள் லட்சம், கோடி நட்சத்திரங்களைக் காண்போம் என்கிறார்களே?’’ எனக் கேட்டார் ஆசிரியர்.

அதற்கு அந்தக் குழந்தை “நான் என்ன செய்வது. என் அறையின் ஜன்னல் வழியே, மூன்று நட்சத்திரங்களை மட்டுமே பார்க் கிறேன்” என்றான். மனதின் எண்ணப் போக்குக்கு இந்தச் சம்பவம் பொருத்தமானது!

1893-ல் சிகாகோ நகரில் நடந்த உலக சர்வசமய மாநாட்டில் `என் அன்பான சகோதர சகோதரி களே’ என்ற சுவாமி விவேகானந்தரின் உரை யின் தொடக்கம் உலகையே அதிரவைத்தது. இத்தனை வருடங்கள் கழித்து இப்போதும் அந்த உரை நிகழ்வு, அதுபற்றிச் சிந்திப்போரைச் சிலிர்க்க வைக்கின்றது. யுக்தி மற்றும் புத்தியின் மொழி கொண்டு சுவாமி விவேகானந்தர் மனதால் பேசிய போது, அவரின் உள்ளத்திலிருந்து வெளிவந்த உரை அது!

அகந்தை மற்றும் சுயநலச் சிந்தை இல்லாமல்... உறுதி, நேர்மை, அன்பு, இறைநம்பிக்கை, கருணை, மற்றவரை ஏளனம் செய்யாமல் கீழ்படிந்து நடப்பது போன்றவற்றுடன் திகழும் மனம் நிச்சயம் அமைதி யுடனும் மகிழ்ச்சியுடனும் விளங்கும்.

ஆறு மனமே ஆறு!

அன்பு - மனிதம் - யோகம்

நம் மனது எந்த அளவுக்கு விசாலமாக இருக்கிறதோ, அந்தளவுக்கு நாம் மற்ற உயிர்களையும் நம்மைப் போல் காண்பதில் வெற்றி கொள்வோம். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவோம். அன்பு என்பது தானாக ஏற்படுவது. அதைச் சொல்லிக் கொடுக்க புத்தகங்கள் தேவையில்லை. தானாகவே எழும் அன்புதான் உண்மையானது!

நம் மனம் விசாலமாக இருக்கவேண்டும் என்றேன் அல்லவா? மனம் விசாலமாக இருந்தால்தான் மனிதம் தானாக வளரும். மனிதம் என்றால்... நீ, நான் எனும் பேதமற்ற அதீத அன்பு. `உனக்கு ஒன்று என்றால் நான் இருக்கிறேன்’ என்று மற்றவருக்குத் தோள் கொடுக்கும் மனதே மனிதம் ஆகும். கல்வி, மருத்துவம் சார்ந்து உதவுவதும் இடர் நேரும் காலங்களில் ஒதுங்கியிருக்காமல் தாமாக முன்வந்து உதவுவதுமான செயல்களே மனிதம்!

உள்ளத்தை - மனதை மலரச்செய்ய அன்பும் கருணையும் எவ்வளவு முக்கியமோ, அதுபோன்று உடல் உறுதிக்கும் ஆரோக்கியத்துக்கும் யோகம் தியானம் போன்றவை அவசியம் என்பேன். ஒரு காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோகமுறைகள் இருந்தன. வை எல்லாவற்றிலும் எல்லோரும் அறிந்து தெளிதல் என்பது சிரமம்தான். அவற்றைச் சீர்படுத்தித் தொகுத்து யோக சூத்திரங்களை நமக்கு அருளினார் பதஞ்சலி முனிவர்.

பின்னர் வந்த ஆன்றோர்கள் பலரும் யோகநெறிகளை அற்புதமான அனுபவங்களாகப் பின்பற்றி மிளிர்ந்தார்கள். இன்றோ, மனிதன் ஓடி ஓடி உழைக்கிறான். ஆனால், அரோக்கியத்தை புறக்கணிக்கிறான். இந்த நிலை கூடாது. அன்றைக்கு நம் முன்னோர் தந்த ஞானப் பொக்கிஷங்களைப் பயன்படுத்துவதும் அவர்களின் வழியைப் பின்பற்றுவதும் அவசியம்!

- மலரும்...

அம்மாவின் பதில்...

? “பிள்ளைகள் கேட்டதைக் கொடுக்கிறோம்; கேட்காமலும் செய்கிறோம். ஆனாலும் இன்றைய தலைமுறைக்குத் திருப்தி என்பதே இல்லை. சொல்வதைக் கேட்பதும் இல்லை. என்ன செய்யலாம்?”

! இன்றைய தலைமுறைக்கு அறிவுரை, விரிவுரை எல்லாம் தேவையே இல்லை. நல்ல ஆரோக்கியமான உரையாடல்கள் மூலமாக அவர் களைப் புரிந்துக்கொண்டு, நல்லதைப் புரிய வைத்தால் போதும்; உங்கள் கவலைகள் தீர்ந்து விடும்.

நல்ல ஆரோக்கியமான உரையாடல்கள் என்பது ஆன்மிகம் சார்ந்ததாக மட்டுமே இருக்கக்கூடாது. ஜாதிமத பேதங்களும், பிறரைப் பழிக்கும் இழிவான எண்ணங்களும் அவர்களின் மனதில் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். அடுத்தவருக்கு உதவும் செயல்களை ஊக்குவிக்க வேண்டும்.

ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்... பணம், பொருள், ஆடம்பர வாழ்க்கையை அளிப்பது மட்டுமே பெற்றோரின் கடமையல்ல. கல்வியுடன், ஆன்மிக, கலாசார நற்பண்புகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆடம்பரமான காருக்குத் திறன் வாய்ந்த எரிபொருளை நிரப்பினாலும், பாட்டரியும் தேவை. அதுபோல் படிப்பு, பணம், பதவி என்று அனைத்தும் இருந்தாலும்கூட, அன்பும் கலாசார நற்குணங்களும்தான் எத்தகைய சூழலையும் சந்திக்கும் திறன் கொண்டவர்களாக அவர்களை மாற்றும். அவர்களுக்குள் நல்ல மாற்றங்கள் தானாகவே ஏற்படும்.

ஆறு மனமே ஆறு!

சிவ சொரூபமாக அம்பிகை!

நாகப்பட்டினம்-கும்பகோணம் சாலையில், நாகப்பட்டினத்துக்கும் சன்னாநல்லூருக்கும் நடுவே அமைந்துள்ளது சீயாத்தமங்கை. இங்கு இருமலர்க்கண்ணி அம்பிகையுடன் அழகுற கோயில் கொண்டிருக்கிறார் அயவந்தீஸ்வரர்.

கடும் மழை பெய்தச் சூழலில், நாகப்பட்டினம் செல்ல வழி தெரியாமல் தவித்த வணிகர் கூட்டத்துக்கு சரியான வழியையும், அவர்கள் தங்குவதற்கு தனது திருக்கோயிலையும் காட்டிய அம்பிகை இருமலர்க்கண்ணி எனப் போற்றுகிறார்கள் பக்தர்கள். சிவசொருபமாக ருத்ராட்சம், சிரசில் கங்கை மற்றும் நெற்றிக்கண்ணுடன்... சிவபாகத்தைக் கொண்டவளாகக் காட்சி தரும் இந்த அம்பிகையின் தரிசனம் அபூர்வமானது!

அம்பாள், அக்னி வடிவமாகத் திகழ்கிறாள். எனவே, அவளைக் குளிர்விக்கும் வகையில், பௌர்ணமி தினங்களில் அபிஷேகங்கள் செய்வித்துப் பிரார்த்தித்தால், உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை. பிள்ளை பாக்கியம் இல்லாதவர்கள், பௌர்ணமியில், அம்பிகைக்கு அபிஷேகம் செய்து தரிசித்தால், விரைவில் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும் என்பது நம்பிக்கை.

- வி.செந்தில், நாகை