திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

ஆறு மனமே ஆறு! - 22 - ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஶ்ரீமாதா அமிர்தானந்தமயிதேவி
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீமாதா அமிர்தானந்தமயிதேவி

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

வீட்டின் பெயரோ ‘அம்மாவின் கருணை’ - ஆனால் பெற்றோர்கள் இருப்பதோ ‘கருணை இல்லத்தில்.’ இப்படி ஒரு கவிதை வரியை நம்மில் பெரும்பாலானோர் கேட்டிருப்போம். இதுதான் நம் காலத்தின் அபத்த யதார்த்தம். தாயிற் சிறந்த கோயிலும் இல்லை – தந்தை சொல் மிக்க மந்திரமும் இல்லை என்று போற்றும் விதமான வழக்கத்தையும் மரபையும் எங்கோ தொலைத்து வருகிறோம்.

ஒரு மரத்துக்கு எது முக்கியம். விழுதுகளா, வேர்களா? விழுதுகள் மரத்துக்கு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு வேர்களும் முக்கியமல்லவா. ஏதேதோ காரணத்தைச் சொல்லி வேரை வெட்டி வீழ்த்திவிட முடியுமா? அப்படிச் செய்தால் மரம்தான் பிழைக்குமா?

ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி
ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி

`நீங்கள் கொடுக்கும் பரிசு...'

இந்தக் காலத்தில் வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கிறது. வேலை வாய்ப்புகள், தொழில் அனைத்தும் மாற்றமடைந்திருக்கின்றன. ஒரு காலத்தில் கிராமங்களிலிருந்த மூத்தவர்களில் பலருக்கு விவசாயம்தான் தொழில். ஆனால் இன்று அவர்கள் வாரிசுகளோ உலகெங்கும் பணி நிமித்தமாகச் சென்று வாழ்கிறார்கள்.

அவர்கள் தரப்பில்... ‘வேலை கிடைக்கும் இடத்தில்தானே நாங்கள் வாழ முடியும், தோப்பு துரவு இருக்கு, விவசாயம் பார் என்றால் எத்தனை பேர்தான் விவசாயம் பார்க்க முடியும்?’ என்று கேட்கிறார்கள். இவர்களின் வாதத்தில் இருக்கும் சாரத்தையும் கொஞ்சம் கேட்கத்தான் வேண்டியிருக்கிறது.

ஆனாலும், இவர்களின் இந்த வாதம் சரியா?

செல்லங்களே!

உறவுகள்தானே நம்மை, நம் வாழ்வைத் தாங்கி நிற்கும் தூண்கள். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி போன்ற உறவுகள் அனைவரும் நமக்கு இறைவன் அளித்த பொக்கிஷங்கள் அல்லவா. அவர்களைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. அப்படியிருக்கையில் அவர்களைப் பகைவராக பாவித்து ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்ப்பது மிகவும் தவறு அல்லவா?

ஆம், இதைச் சொல்லவே மனது வேதனைப்படுகிறது மக்களே! `நாமும் நம் உறவுகளும்' என்று இருந்த காலம்போய், ‘நாம் மட்டும்’ என்று எண்ணும் காலம் வந்துவிட்டது. ஏதேதோ காரணங்களைச் சொல்லி உறவுகளைக் காணாமல் போகச் செய்துவிடுகிறோம்.

உலகுக்கு அறிமுகப்படுத்தும் தாயாய், முதல் குருவாய், நண்பனாய், நலம் விரும்பியாய் இருப்பவர்களுக்கு - இருந்தவர்களுக்கு நீங்கள் அளிக்கும் பரிசோ ‘முதியோர் இல்லங்கள்.’ இது சரியா? சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

ஆறு மனமே ஆறு! - 22 - ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி

`எனக்குத் தெரிந்த ஒரு கதை...'

“தாத்தாவின் மறைவிற்குப் பிறகு அவருடைய திருவோட்டைத் தூக்கி எறிந்துவிட வேண்டாம். பிற்காலத்தில் அது உங்களுக்கு உபயோகப்படும்” என்று சொன்னானாம் ஒரு மகன். ஆனால், இதிலிருந்து மாறுபட்ட ஒரு கதையை நான் கேள்விப்பட்டேன்.

ஓர் ஊரில் ஆசாரமான அந்தணர் ஒருவர் வாழ்ந்துவந்தார். சிறிய கோயில். அதில்தான் சேவை செய்துவந்தார். பெரிய வருமானம் கிடையாது. பக்தர்களின் பிரச்னைக்கு நிவாரணம் வேண்டி ஆண்டவனிடம் விண்ணப்பிக்கும் அவருக்கு, அன்றாடமே பிரச்னைதான். அவருக்கு ஒரு மகன் இருந்தான். எது எப்படியிருந்தாலும் தன் மகனுக்குத் தரமான கல்வியை வழங்கிவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். சக்திக்கு மீறி செலவளித்தார். தெரிந்தவர்களிடம் கடன் வாங்கினார். கைவசமிருந்த பூர்வீக வீட்டையும் விற்றார். இவை எல்லாம் மகனின் கல்விக்காகத்தான். மகனையும் குறை சொல்ல முடியாது. திறமைசாலி. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திப் படித்துமுடித்தான்.

அவனின் தகுதிக்கேற்ப ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது. நிறுவனத்தில் குறுகிய காலத்தில் நல்ல பெயரெடுத்ததால் வெளிநாட்டுக் கிளைக்கு மாற்றல் கிடைத்தது. நல்ல சம்பளம். அடுத்தது என்ன? கல்யாணம்தான்!

நல்ல பெண்ணாகத் தேடிப் பிடித்து ஜாம்ஜாம் என்று கல்யாணம் செய்து வைத்தார்கள். மகனும் மருமகளும் அமெரிக்கா சென்று விட்டனர். அமெரிக்காவிலிருந்து பெற்றோருடன் தொடக்கத்தில் மணிக்கணக்கில் பேசியவர்கள், பின்பு வாரத்திற்கு ஓரிரு முறை என்னும் அளவுக்குக் குறைத்துக் கொண்டார்கள். பின்னர் அதுவும் குறைந்து, எப்போதோ ஒரு முறை பேசுவதென்றாகியது!

சில நேரங்களில் ‘இங்கு எல்லா வசதியும் இருக்கு, நீங்க ரெண்டு பெரும் கிளம்பி வந்துடுங்க’ என்பான் மகன். அம்மாவின் மனத்தில் அந்த ஆசையும் ஆழப் பதிந்தது. இரண்டு ஆண்டுகள் சென்றன. மகன் ஊருக்கு வருவதாக ஒரு தகவல்.ஒருவேளை கூட்டிப் போகத்தான் வருகிறானோ என்று எண்ணினாள் அம்மா.
பெத்த மனம் பித்து!
பெற்றவள், பிள்ளைக்கு அது பிடிக்கும், இது பிடிக்கும் என்று எல்லாமே தடபுடலாகச் செய்து வைத்துவிட்டாள். ‘இதோ, இதோ’ என்று ஒரு வழியாக மாலையில் வீடு வந்து சேர்ந்தான் மகன். வந்தவன் “ஒரே ஒரு காபி போதும்மா! ஒரு மாதம் லீவு. மாமனார் வீட்டில்தான் தங்கப் போகிறேன், அப்பப்ப வந்து போகிறேன்” என்ற வாக்குறுதி தந்துவிட்டுக் கிளம்பிப்போனான்.

கூட்டிப்போவதைப் பற்றி எந்த பேச்சும் இல்லை. நிறைவில் மாமியாரை அழைத்துக் கொண்டு வெளிநாடு கிளம்பிச் சென்றார்கள்.சில மாதங்கள் கழிந்தன. மருமகள் கருவுற்றாள். உதவிக்குத் தன் மாமியரைக் கூப்பிடச் சொன் னாள் மருமகள். மகனோ, எந்த முகத்தோடு அவர்களை அழைப்பது என்று கலங்கினான்.

அவர்கள் எதிர்பார்த்திருந்த காலத்தில் அழைத்து வந்து உபசரித்திருந்தால், நமக்குத் தேவையிருக்கும் இந்தத் தருணத்தில் உரிமையோடு அழைக்கலாம். ஆனால் அதற்கு வழியில்லாமல் செய்தாயிற்று. கணவன் - மனைவிக்கிடையே வாக்குவாதம் தொடர்ந்தது; மன வருத்தத்தில் முடிந்தது. இருவருமாக மன அமைதி தேடி கோயிலுக்குச் சென்றனர்.

சில மணி நேர கார் பயணத்தில் கோயிலை அடைந்தார்கள். அந்தக் கோயிலுக்கு அவர்கள் வருவது அதுதான் முதல்முறை. அங்கே சுவாமிக்கு அலங்காரம் நடைபெற்றுக்கொண் டிருந்தது. ஆகவே, திரை போடப்பட்டிருந்தது. இருவரும் அமைதியாக அமர்ந்தார்கள்.

மகனின் மனத்தில் தன் தாயின் அன்பும் தந்தையின் தியாகமும் வந்துபோயின. அவன் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது. `இறைவா என்னை மன்னித்துவிடு' என்று மெள்ள கூறினான்.

அப்போது மணி அடிக்கும் ஓசை கேட்டது. திரை விலகி தீபாராதனை செய்யப்பட்டது. மகனின் கண்களில் நீர் இன்னும் அதிகமாகக் கொட்டியது. காரணம், தெய்வத்தைக் கண்டு அல்ல. அந்தத் தெய்வத்துக்குத் தீபாராதனை காட்டிக்கொண்டிருந்த அந்த மனிதரைக் கண்டு. ஆம், அது அவனுடைய அப்பாதான்.

சில மாதங்களுக்கு முன், கிராமத்துக் கோயிலின் தர்மகர்த்தாவிடம் அவரின் உறவினர், வெளிநாட்டில் உள்ள கோயிலுக்கு நல்ல அர்ச்சகர் வேண்டும் என்று கேட்டிருந்தார்.

தர்மகர்த்தா, இவன் அப்பாவைப் பரிந்துரைத் தார். தர்மகர்த்தாவின் உறவினர் இவன் அப்பா வைப் பலவாறு வேண்டி சம்மதிக்க வைத்தார். வயதான காலத்தில் கணவனும் மனைவியுமாக வெளிநாட்டில் குடியேறிவிட்டனர்.

பூஜை முடிந்ததும் மகனும் மருமகளும் அவர் காலில் விழுந்து வணங்கினர். அவர்களைத் தன் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார் அர்ச்சகர். கொஞ்ச நேரம் கழித்து மகன் தன்னோடு வந்து விடும்படி அவர்களை அழைத்தான்.

அதற்கு அம்மா, “அது சரிப்படாதுப்பா! தொப்புள் கொடி உறவற்று போனபோது புது உறவுகள் கிடைத்துள்ளன. கடவுளின் அருள். இங்க அப்பாவுக்கு பூஜை, எனக்கு மடப்பள்ளி பொறுப்பு. கிட்டத்தட்ட 7 லட்சம் ரூபாய் சம்பளம்.

எங்களுக்கு எதற்கு அவ்வளவு பணம்... செலவு போக மீதமுள்ளதைச் சென்னையில் இருக்கும் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பிடுகிறோம். அங்குதானே எங்களைப்போன்ற கைவிடப் பட்ட பெற்றோர்கள் இருக்கிறார்கள்... சரி, அதெல்லாம் இப்போ எதற்கு... நேரம் கிடைத்தால் உன் வீட்டிற்கு வந்து ஒரு வாய் காபி சாப்பிடுகிறேன். போதுமா?” என்று பதிலளித்தாள் அம்மா.

காலம் ஒரு நாள் மாறும். வாழ்க்கைச் சக்கரத்தில் கீழே இருக்கும் உறவுகள் ஒருபோதும் கீழேயே இருந்துவிடமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் செல்லங்களே!

- மனம் மலரும்...

ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி
ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி

அம்மாவின் அற்புதங்கள்...

கிராமத்தில் சிலரால் தொல்லைகள் தொடர்ந்தன. பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கவும், உள்ளூர்வாசிகள் உண்டியல் வைத்துப் பணம் வசூலிக்க ஆரம்பித்துவிட்டனர். அதைக் கண்டு சுகுணானந்தருக்கு மனம் பொறுக்கவில்லை.

அந்த நபர்களின் நடவடிக்கையைக் கண்டிக்கும் முயற்சியில் சுதாமணி ஈடுபட்டதே இல்லை. சுதாமணியைப் பொறுத்தவரையிலும் காலப் போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்பதே எண்ணம். மக்கள் மனத்தில் பக்தி தோன்றுகிறது; வாழ்வில் ஏற்படும் துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது. இதுவே போதுமானது என்பதே அம்மாவின் எண்ணம்.

ஒரு நாள் சுதாமணி தரிசனம் அளித்துக்கொண்டிருந்த போது, சுகுணானந்தர் வணங்கி நின்றார் (கிருஷ்ண பாவ தரிசனத்தின்போது, சுதாமணி வயதில் சிறியவர் என்றாலும் வணங்கிச் செல்வார் சுகுணானந்தார்). பின்னர், `நீங்கள் இப்படி சாலை ஓரத்தில், பொது இடத்தில் தரிசனம் அளிப்பது சரியாகப்படவில்லை' என்று தன் ஆதங்கத்தை வெளிப் படுத்தினார். என்ன பதில் கிடைத்தது தெரியுமா...