
ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி தொகுப்பு எம்.எஸ்.நாகராஜன்
`மாதா, பிதா, குரு, தெய்வம்’ இந்த வரிசையில் தெய்வத்துக்கும் முன்னதாகக் குருவை வைத்துப் போற்றினர் நம் முன்னோர். குருவே இறைவனைக் காணும் உபாயத்தை அருள்பவர்; குருவருள் இறையின் திருவருளைப் பெற்றுத் தர வல்லது. வால்மீகி ராமாயணத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு.
ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம
இந்த ஸ்லோகத்தின் மூலம் குரு எப்படிப்பட்டவராக இருக்கவேண்டும் என்பது தெரிய வரும் மக்களே!

“கஷ்டமான காலத்தில் மட்டுமே நற்கதி தேடும் காரியக்காரனாகட்டும், `சதாசர்வ காலமும் நின் காலடியிலேயே சரணடைந்து கிடப்பேன்' என்ற நிலைகொண்ட பக்தன் ஆகட்டும்... பிரபஞ்சத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு செலுத்தி, பாப விமோசனமும் நற்கதியும் அருள்வேன்'' எனும் திருவாக்கு வால்மீகி ராமாயணத்தில் உண்டு.
இதைச் சொன்னது ஶ்ரீராமனாகவோ அல்லது வேறு எவராகவோ இருக்கட்டும்... குருநாதரின் சங்கல்பம் இப்படித்தான் இருக்கும். ஆக, குருவின் ஆசி இருந்தால் ஆண்டவனின் அருள் எளிதில் கிடைக் கும் என்பதில் யாருக்கும் ஐயம் இல்லையே!
குரு எனும் ஆத்ம நண்பன்
குரு என்பவர் ஓர் உன்னதமான - நம்பிக்கையான நண்பனைப் போன்றவர். “நான் உடல், பொருள், ஆவி, அறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய எலும்பும், சதையும் கொண்ட உருவம் மட்டும் கிடையாது; ஓர் எல்லைக்குள் அடங்கிவிடாத, பரந்துவிரிந்த ஆகாசத்தை போன்றவன் மட்டுமல்ல; நானே முழுமையானவன்” என்று உணர்த்துபவர் குரு.
சூரியனின் ஒளி போன்று எங்கும் படர்ந்திருப்பவர் குரு. ஆனால், அந்த ஒளியை வைத்து நம் வீட்டு சமை யலறை அடுப்பை ஏற்ற முயற்சி செய்யக்கூடாது! அவருடைய தொடர்பு தீக்குச்சியைப் போன்றது. அதனைக் கொண்டுதான் ஆன்மிக தீப ஓளியை ஏற்ற முடியும். அந்த ஒளி நாம் நல்வழியில் செல்லவும், வாழ்வில் முன்னேறவும் பயன்படுத்தப் பட வேண்டும்.
ஆம், குருவை இப்படித்தான் பார்க்க வேண்டும் என் செல்லங்களே!
பந்தத்தில் சிக்கியுள்ள நாம் புவி ஈர்ப்பு சக்தியின் காரணமாகச் சுற்றி சுற்றி வரும் செயற்கைக் கோள் போன்றவர்கள் எனில், குருவானவர் பூஸ்டர் ராக்கெட் போன்றவர். நம்மைச் சிக்கல்களிலிருந்து விடுவித்து நற்கதி அடையச் செய்பவர்.

கலிகாலத்தில் நாம் அனைவரும் விருப்பு, வெறுப்பு எனும் சங்கிலியால் கட்டுண்டு சிக்கித் தவிக்கிறோம். இதுபோன்ற கட்டுகளிலிருந்து விடுபட குருவருள் நிச்சயம் தேவை. பெரும் பாரமுள்ள பெட்டியைச் சுமந்துகொண்டு ஆற்றைக் கடக்கும் சூழல். திடுமென வெள்ளம் ஆர்ப்பரித்து வருகிறது. அப்போது பாரமான பெட்டியைக் கைவிடவேண்டும்; பிடியைத் தளர்த்தினால்தான் மூழ்காமல் தப்பிக்க முடியும்.
ஆனால், குளிரின் காரணமாக விரல்கள் பனி போல் உறைந்துவிட்டால் பிடியைத் தளர்த்த முடியுமா? நம்முடைய விருப்பு வெறுப்புகளும் இப்படித்தான். அவற்றில் இருந்து விடுபட குருவருள் துணை புரியும்.
பொதுவாகவே, எல்லோருக்குள்ளும் இறைவன் இருக்கிறான். நாம் நல்லதொரு குருவின் துணையுடன் இருக்கும்போது, அந்த இறைத்தன்மை வெளிப்படும். நாம் கெட்டியாகப் பிடித்து வைத்திருக்கும், தேவையற்ற பழக்கவழக்கங்கள், ஆசைகள் ஆகியவற்றை அகற்றி, குருவானவர் நல்வழி காட்டும்போது நமக்குள் இருக்கும் தெய்விகம் வெளிப்படுகிறது.
குருவும் சிஷ்யனும்
சீடனை சம்ஸ்கிருதத்தில் ‘சிஷ்யன்’ என்பர். சிஷ்யன் என்றால் குருவுக்காக தன்னையே அர்ப்பணிப்பவன் என்று பொருள். சிஷ்யனானவன் கற்றுக்கொள்ளும் அருகதை உடையவனாகவும் நன்னெறிப்படுத்திக்கொள்ளும் தகுதி உள்ளவனாகவும் இருக்கவேண்டும்.
குரு சொல்வது, செய்வது அனைத்தும் தன்னுடைய வாழ்வை நல்வழிபடுத்தி, நற்கதி அடைய வைப்பதற்காகவே என்று பரிபூரணமாக நம்பவேண்டும்.
நான் இவ்வளவு படித்திருக்கிறேன். அப்படி இருந்தும் இஷ்டப்படி என்னால் செயல்பட முடியாதா, அதற்கான தகுதி எனக்கு இல்லையா, ஏன் கண்ணை மூடிக் கொண்டு குருவைப் பின்தொடர வேண்டும்? அது ஒருவகை அடிமைத்தனம் அல்லவா என்றெல்லாம் கேள்விகள் தோன்றும்.
ஆனால் உண்மை என்ன தெரியுமா?
சிஷ்யன் என்பவன் அகங்காரம் முதலான குணங்களின் காரணமாக தனக்குள்ளேயே அடிமைப்பட்டு கிடக்கிறான். அவற்றை அவனுக்குள்ளிருந்து வெளியேற்றி, அவனுக்கு ஆன்மிக உத்வேகத்தை அளிக்க குருவால் மட்டுமே முடியும்.
நாம் எவ்வளவு காலம் இந்த உலகத்தில் வாழப்போகிறோம் என்று யாருக்கும் தெரியாது. இறப்பு பின்தொடர்ந்து கொண்டே இருக்கும். அதன் பிடியில் சிக்கும் காலம் எதுவென்று தெரியாது.
மனிதப் பிறப்பை குறுகிய கால உலக சுகங்களை அனுபவிப்பதற்காக மட்டுமே வீணடிக்கக் கூடாது. இப்பிறவி, நம்முடைய பிறவிப்பயனை அடைவதற்கான அற்புதமான ஒரு வாய்ப்பாகும்.
இந்த வாய்ப்பைச் சரியான வழியில் பயன்படுத்த வேண்டும். நாம் யார், பிறப்பின் பயன் என்ன, மன அமைதி மற்றும் மகழ்ச்சியான வாழ்க்கைக்கு உண்மையான வழி எது எனும் ஆத்ம சோதனை மூலம் உண்மையை அறிந்து நற்கதி அடையவேண்டும். இதற்கான வழிகாட்டிதான் குரு. குரு-சிஷ்ய உறவும் அப்படித்தான்!
குருவைப் போற்றும் நாள் குரு பூர்ணிமா. `வியாசர் முதல் நமக்கு வழிகாட்டிய, இன்றும் வழிகாட்டிக்கொண்டிருக்கும் குருமார்களை நினைவில் நிறுத்திப் பூரணத்துவம் பெற வேண்டும்' என்பதை நினைவூட்டும் நாளாகக் கருதி, குருவுக்கு நன்றி சொல்லி நாளாகக் குருபூர்ணிமாவைக் கொண்டாட வேண்டும்.
குருவைப் போற்றுவோம். குருவருளோடு இறையின் திருவருளைப் பெறுவோம்.
- மலரும்...
`அம்மா என்றே அழைப்போம்!'
தேவி தரிசனத்திற்கு பிறகு சதா சர்வ காலமும் அம்பிகையின் நினைவில் மூழ்கியிருந்தார் சுதாமணி. மீண்டும் எப்போது அன்னையைக் காண்போம் என்ற ஏக்கத்துடன் காத்திருந்தார்.தேவியோ அவருக்கு வேறு வடிவில் தரிசனம் கொடுக்க சித்தம் கொண்டாள்.
ஒரு நாள், சுதாமணிக்குள் ஒரு குரல் ஒலித்தது. `நான், உனக்கு மட்டுமே தரிசனம் தரும் நோக்கம் கொண்டவள் அல்ல. அனைத்து உயிரினங்களிலும் உறைபவள். அதுபோன்று நீயும் உனக்கென தனிப்பட்ட முறையில் பேரானந்தம் கொள்வதற்காகப் பிறந்தவள் அல்ல. துன்பப்படும் அனைவருக்கும் அபய கரம் நீட்டி, ஆறுதல் அளித்து, வாழ வைக்கப் பிறந்தவள் நீ. உன்னைச் சுற்றிலும் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கு சேவை செய்வதன் மூலம், அவர்களுக்குள் உறைந்திருக்கும் என்னை தரிசிப்பாயாக' என்றது குரல்.
ஒரு முறை கிருஷ்ணபாவ தரிசனத்தின்போது பக்தர் ஒருவர் வேகவேகமாக ஓடி வந்தார். வெளியே நாத்திகர்கள் சிலர் அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவதாகவும், கேலி செய்வதாகவும் முறையிட்டார். அவர்களிடமிருந்து பக்தர்களுக்கு நிவாரணம் வேண்டும் என்றும் பிரார்த்தித்தார்.
அதுவரையிலும் கிருஷ்ணபாவத்தில் புன்னகையுடன் திகழ்ந்த அம்மாவின் முகம் மாறியது. கண்களில் கோபக் கனல் வீசியது. கிராமமே அதிரும்படி பெரும்சிரிப்பு அவரிடம் இருந்து வெளிப்பட்டது. அதுபோன்று அம்மா சிரித்து யாரும் பார்த்தது கிடையாது. ஆம், அந்தச் சிரிப்பொலி கெட்டவர்களுக்கான எச்சரிக்கை போன்று, அந்தப் பிராந்தியம் எங்கும் எதிரொலித்தது.
பக்தர்கள் திகைத்தனர். பண்டிதர்கள் சாந்தி மந்திரத்தை ஓதினர். பஜனைப் பாடல்கள் உரத்தக் குரலில் பாடப்பட்டன. சிலர், தொடார்ந்து ஆரத்தி எடுத்தனர். நீண்ட நேரத்துக்குப் பிறகே அவரின் திருமுகம் சாந்தி அடைந்தது.
ஆம், சுதாமணியிடம் கிருஷ்ண பாவம் கடந்து தேவி பாவம் தொடங்கியது என்றே சொல்லலாம்.
“பக்தர்கள் அனைவரும் தீயவர்களிடம் துன்பப்படுவதைக் காண சகிக்காமல், அவர்களை அழிக்கும் எண்ணத்துடன்தான் தேவியான காளியின் பாவ நிலை வெளிப்பட்டது, அதுமட்டு மல்ல. காலத்தின் கட்டாயத்தால் இந்த தேவி பாவம் மேலும் தொடரும்” என்றார் அம்மா.
தேவி வடிவம் எடுத்தமையால், அவரை நாம் `அம்மா' என்று அழைப்பது மிகவும் பொருத்தம்தான் இல்லையா!