Published:Updated:

ஆறு மனமே ஆறு - 40

ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

ஆறு மனமே ஆறு - 40

ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

Published:Updated:
ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி

இடது கைக்கு ஏதேனும் சங்கடம் ஏற்பட்டால், அதனைச் சரி செய்ய வலது கை தன்னிச்சையாக உதவ முற்படும் அல்லவா? அப்படித்தான் நாமும் இக்கட்டான தருணங்களில் மற்றவர்களுக்கு ஆறுதலாக இருக்கவேண்டும்; அவர்கள் கேட்காமலேயே அவர்களுக்கு உதவுவதில் முனைப்பு காட்டவேண்டும்.

ஆறு மனமே ஆறு - 40

மறப்போம் மன்னிப்போம்!

நான் முன்னர் சொன்னதுபோன்று... கண், காது கை, கால், தலை, கழுத்து ஆகியவை வெவ்வேறு பாகங்களாக இருந்தாலும் அனைத்தும் இருப்பது ஓர் உடலில்தான். நம்மையும் அறியாமல் விரல் கண்ணில் குத்திவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக அந்த விரலை வெட்டி எறிந்துவிடுகிறோமா என்ன? அப்படிச் செய்யமாட்டோம்.

ஆக, எவரொருவர் எப்போதோ உங்களுக்குத் தீங்கு இழைத்திருந்தாலும் கூட, அவர் துன்புறும் காலத்தில் அவருடைய பழைய தவறுகளை மறந்து மன்னித்து, இரக்கக் குணத்தோடு அரவணைத்து அவரின் துயரைப் போக்க முன்வரவேண்டும். கடவுளிடம் வேண்டும் போதும் இப்படியான நற்குணத்தையே வேண்டிப் பெற வேண்டும்.

`உயர்திணை அஃறிணை என்ற பாகுபாடு இல்லாமல் சகல உயிர்களிடத்தும் கருணை கொள்ள வேண்டும். இதன் பொருட்டு அன்பு கொண்டு நல்வழியில் நடத்திச் செல்’ என்பதே உங்களுடைய பிரார்த்தனையாக இருக்கவேண்டும். உங்களின் அந்தப் பிரார்த்தனை கடவுளின் திருச்செவிகளை எட்டவேண்டும்; அவரின் கருணையைப் பெற வேண்டும் என் செல்லங்களே.

கடவுளைக் காண்பது எப்படி?

டவுள் தன்னுடைய கண்களுக்குத் தெரியவில்லை எனும் பெரும் கவலை ஒருவனுக்கு இருந்தது. அவன் பலவிதங்களில் முயன்றும் அவனால் கடவுளைக் காண முடியவில்லை. அதற்கான காரணமும் அவனுக்கு விளங்கவில்லை. அதற்காக கடவுள் இல்லை என்றாகிவிடுமா?

இதுகுறித்த பல கேள்விகள் மனத்தில் தேங்கிக்கிடக்க, எவரேனும் தனக்கு வழிகாட்ட மாட்டார்களா எனும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தான்.

ஒருநாள், முகவாட்டத்துடன் அவன் இருப்பதைக் கண்ட வழிப் போக்கர் ஒருவர் அவனை அணுகி `என்ன பிரச்னை உனக்கு?’ என்று விசாரித்தார். அவனும் தனது குறையை அவரிடம் விவரித்தான். `என் கண்களுக்குக் கடவுள் தென்படுவது இல்லையே ஏன்?’ என்றும் கேள்வி கேட்டான்.

வழிப்போக்கர் புன்னகைத்தார். கனிவுடன் அவனைப் பார்த்தவர், “நீ கேட்பது எப்படி இருக்கிறது தெரியுமா... ஒரு பெரிய மரத்தின் பின்னால் நின்றுக்கொண்டு, சூரியன் கண்களுக்குத் தெரியவில்லையே என்று புலம்புவதுபோல் உள்ளது. உனக்கும் சூரியனுக்கும் இடையே மரம் தடையாக இருப்பதுபோன்று சுயநலம், நான், எனது எனும் ஆணவக் குணங்கள் போன்றவை கடவுள் குறித்த உனது பார்வையை மங்கச் செய்து விடுகின்றன. தெளிவற்ற பார்வை கடவுளைக் காணும் மார்க்கத்தை மறைத்துவிடுகிறது... அவ்வளவுதான் மகனே!’’ என்றார். அந்த எளிய விளக்கத்தைப் புரிந்து தெளிந்தான் அந்த மனிதன்.

நாம் எப்போதும் எதற்கெடுத்தாலும் சனாதன தர்மத்தை மேற்கோள் காட்டுகிறோம்.

ஆறு மனமே ஆறு - 40

சனாதன தர்மம் என்ன சொல்கிறது?

கடவுளை... உயர்ந்த மலை உச்சியில் இருப்பவர் என்றோ, அகண்ட ஆகாயத்தில் - பளபளக்கும் நவரத்தின சிம்மாசனத்தில் ஆபரணங்கள் ஜொலிக்க தம்முடைய கணங்கள் சகிதம் காட்சி தருபவர் என்றோ சனாதனம் உருவமைத்துக் காட்டுவதில்லை.

`கடவுள் எந்த வரையறைக்கும் உட்படாதவர்; காணும் திசையெல் லாம் நீக்கமற நிறைந்திருப்பவர்’ என்றே சனாதனம் சொல்கிறது.

ஒளிமயமாக, பரமானந்த பரமாத்மாவாக நம்முள் உறைந்து வழிகாட்டும் பரம்பொருளே கடவுள். அவரே நம் வாழ்க்கையின் ஆதாரம் என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும் மக்களே! இறை பக்தி, இறை வழிபாடு இல்லாத வாழ்க்கை பயனில்லாதது ஆகும்.

ஒரு சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள்…

நண்பர்கள் இருவர் அடுத்தடுத்த வீட்டில் வசித்தனர். ஒருவனுக்கு நீண்டநாள்களாக தாங்கமுடியாத உடம்புவலி. மருந்து வாங்கவும் அவனிடம் பணம் இல்லை. வலி தீர வழியின்றித் தவித்தான். நண்பனிடம் பலமுறை உதவி வேண்டினான். அவனோ மது, மாது என்று சுகபோகங்களில் திளைப்பவன். தன்னுடைய ஆஸ்தி, ஆரோக்கியம், அந்தஸ்து அனைத்துமே விரயமாகிக்கொண்டிருக்க அழிவுப் பாதையில் சென்றுகொண்டிருந்தான்.

ஒருவேளை அவன் தன்னிடம் இருக்கும் மிகுதியை தன் நண்பனுக்கோ அல்லது உதவி தேவைப்படும் வேறு எவருக்கோ கொடுத்து உதவியிருந்தால், அவனுடைய ஆரோக்கியம், அந்தஸ்து, ஆஸ்தி எதுவும் வீணாகாமல் இருந்திருக்கும். மட்டுமன்றி, மற்றவருக்கும் அவை பயன்பட்டிருக்கும். இவனும் அழிவுப்பாதையைவிட்டு விலக வாய்ப்பு கிடைத்திருக்கும்.

ஆக, தன்னலமற்ற பரோபகார செயல்களே உங்களைக் கடவுளுக்கு அணுக்கமாகக் கொண்டுசெல்லும்; அவரின் கருணையைப் பெறும் வழியையும் காட்டும் என் செல்லங்களே!அடுத்து மதம்...

இறைவன், இறை நம்பிக்கை, இறை வழிபாடு அனைத்துமே மதம் சார்ந்தவை எனும் எண்ணம் நம் மனத்தில் ஆழப் பதிந்துவிட்ட ஒன்று. ஆனால், நாம் மதம் என்பதைவிட வாழ்வியல் தர்மமான சனாதன தர்மத்தைப் பின்பற்றி வாழ்கிறோம்.

இத்தகைய தர்மசிந்தனைகள் போதாதா? மற்றவர்களைப் போன்று மதங்கள் தேவைதானா... இதுபற்றி தொடர்ந்து பேசுகிறேன்!

- மலரும்...

ஆறு மனமே ஆறு - 40

ஆன்மிக பயணத்தில்...

`மடம் உருவாக வேண்டும்’ எனும் வேண்டுகோள்கள் குவிந்த வண்ணம் இருந்தன. காளிதேவியின் விருப்பப்படி, அம்மாவுக்குள் உறைந்திருக்கும் தேவியின் வாக்கு உன்னிகிருஷ்ணன் மூலம் வெளிப்பட, `மாதா அமிர்தானந்தமயி’ என்பது அம்மாவின் அவதார திருநாமம் ஆனது.

பின்னர் அனைவருடைய எதிர்பார்ப்பு நிறைவேறும் வண்ணம், 21.1.1988 அன்று, கேரள மாநிலம் - கொல்லம் மாவட்டத்தின் கடலோரக் கிராமமான பறையக்கடவில், `அமிர்தபுரி’ எனும் திருநாமத்துடன், மாதா அமிர்தானந்தமயி மடம் உருவானது. ஆன்மிகப் பணிகள் மட்டுமன்றி சமுதாய அக்கறைகொண்ட சமஸ்தானமாகவும் புவி முழுவதும் சேவை செய்து வருகிறது மாதாஅமிர்தானந்தமயி மடம்.

ஆன்மிகத் தேடலில் அம்மாவின் பயணத்தில் - முதலில் உன்னி கிருஷ்ணன் அம்மாவின் சீடராகும் பாக்கியம் பெற்றார். தொடர்ந்து அம்மாவின் அடிச் சுவட்டில் பாலு, ராமகிருஷ்ணன், ஶ்ரீகுமார், ராவ், நீலு, வேணு, மது, செளம்யா ஆகியோர் நிறுவன சாதகர்களாக இணைந்தனர்.

பாலு எனும் அம்ருதஸ்வரூபானந்த புரி:

பாலு இறை நம்பிக்கை கொண்ட இளைஞன்; பட்டதாரி. அம்மாவின் கிருஷ்ண, தேவி பாவங்களைப் பற்றி அவர் கேள்விப்பட்டது உண்டு. எனினும் அவற்றில் அதீத ஆர்வம் காட்டியதில்லை. ஒருமுறை மாமாவின் வற்புறுத்தலுக்கு இணங்க, அவருடன் அம்மாவை தரிசிக்கச் சென்றார். அங்கே சிறு வயது பெண்ணொருத்தியின் பஜனைப் பாடல் அவரின் உள்ளத்தைத் தொட்டது. ` நீ என் மகன், நான் உன் தாய்’ என அன்பே உருவாக அம்மாவை தரிசித்த அனுபவம், சிலிர்ப்பைத் தந்தது. விரைவில் அம்மாவின் பணியில் ஐக்கியமாகி விடத் துடித்தது அவரின் உள்ளம்.

பாலு நன்றாகப் பாடவும் செய்வார். ஒருமுறை அவரின் பாடலைக் கேட்ட அம்மா, `இது இறைவனுடன் இணையவேண்டிய நாதம். நீ என்னுடன் இருந்துவிடு’ என்றார். இந்த வரத்தைத்தானே பாலுவும் எதிர்பார்த் திருந்தார். மந்திர தீக்ஷை பெற்றுக்கொண்டவர், பின்னர் வீடு திரும்பவில்லை. நாட்கள் நகர்ந்தன. பாலு பேராசிரியர் ஒருவரிடம் மேலை நாட்டுத் தத்துவங்கள் குறித்து படிக்க விரும்பினார். அந்தப் பேராசிரியர் ஆசிரமத்துக்கு வந்து கற்றுக்கொடுக்க மறுத்துவிட்டார். ஆகவே, பாலு சிறிது காலம் திருப்பதியில் இருக்கும் பேராசிரியரின் வீட்டுக்குச் சென்று படிக்க வேண்டியதாயிற்று.

அம்மாவின் அருள்... எவருக்கும் தலைவணங்காத அந்தப் பேராசிரி யர் ஆசிரமத்துக்கு வந்து அம்மாவை வணங்கிச் சென்ற சம்பவமும் நிகழ்ந்தது. இந்த நிலையில் பாலுவின் மனம் முழுக்க ஆசிரமத்தில் லயித்திருந்ததால் படிப்பில் நாட்டம் செல்லவில்லை. தேர்வு எழுத முடியவில்லை.

படிப்பில் கவனம் செலுத்தும்படி அம்மாவிடம் இருந்து கடிதம் வந்தது. அப்போதும் பாலுவின் மனம் அமைதி அடையவில்லை. கடைசித் தேர்வை எழுதாமல் ஆசிரமத்துக்கு வந்தார். அம்மாவின் வார்த்தைகளால் சமாதானமாகி மீண்டும் திருப்பதிக்குச் சென்று தேர்வு களை முடித்துத் திரும்பினார். அன்றிலிருந்து இன்று வரையிலும், `ஸ்வாமி அம்ருதஸ்வரூபானந்தபுரி’ எனும் சந்நியாச நாமத்துடன் அவரின் அரும்பணி தொடர்கிறது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism