Published:Updated:

ஆறு மனமே ஆறு - 36

நம்பிக்கைத் தொடர் - எம்.எஸ்.நாகராஜன்

பிரீமியம் ஸ்டோரி

அரவணைத்து ஆசி வழங்குதல் பற்றி நிறைய கூறிவிட்டேன். அதனால் நான் அடைந்த ஆனந்தத்துக்கும் அளவில்லை; பட்ட இன்னல் களையும் மறக்க முடியாது என் செல்லங்களே!இருப்பினும் என் ஆன்மிக வாழ்வில் அரவணைத்து ஆசி வழங்குவது இன்னமும் தொடர்கிறது.

ஆறு மனமே ஆறு - 36

அரவணைப்பு - தனிப்பட்ட முறையில் துன்பத்தில் வாடும் ஜீவாத்மாக்களுக்காக என் அனுகூலமான அன்பின் வெளிப்பாடு. அதன் மூலம் சில பல லட்சம் அல்லது சில பல கோடி பக்தர்களின் துயர் விலகியிருக்கும் என்பதில் ஐயமில்லை மக்களே!

பல நூறு கோடி மக்கள் நம்மைச் சுற்றி உள்ளனரே, அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா... அவர்கள்மீது அக்கறை வேண் டாமா... வசதியற்றவர்கள் வாழ்க்கையில் ஓதுக்கப் பட வேண்டுமா... அன்பும், அரவணைப்பும் மட்டுமே போதுமா... இத்தனை கேள்விகள் மீண்டும் மீண்டும் மனதில் எழுந்த வண்ணம் இருந்தன.

நான் வாழும் கடலோரப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமன்றி, நாடு முழுவதும் உள்ள தேவைகள் மிகுந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்; செய்துகொண்டே இருக்க வேண்டும். அவர்களையும் என்னுடன் அரவணைத்துப் பயணிக்க வேண்டும் எனும் எண்ணம் என்னுள் மேலோங்கியிருந்தது மக்களே!

ஆறு மனமே ஆறு - 36

விசாரமும் - நம்பிக்கையும்

உலகையே அரவணைப்பது என்பது எப்படி சாத்தியம். பல நூறு கோடி மக்கள் தொகை கொண்டதாயிற்றே இவ்வுலகம். அனைவரும் என் பிள்ளைகள் அல்லவா.

அப்படி உலகில் உள்ள ஒவ்வொருவருக் கும் ஏதாவது செய்ய முடியுமா. அவர் களைச் சென்றடைவது எப்படி? தனியொருவரால் இது சாத்தியமாகுமா?

ஏதாவது செய்ய வேண்டுமானால் கண்டிப்பாக பெரும் செல்வம் வேண்டுமே... அதற்கெல்லாம் எங்கே போவது?

இது போன்ற விசாரங்களால் நிரம்பியது மனது. ஆனாலும், இவ்வளவு தூரம் பயணிக்கவைத்த ஶ்ரீகிருஷ்ணரும், தேவியும் என்னைக் கைவிட மாட்டார்கள்; என்னுள் இருந்து நிச்சயம் வழிகாட்டுவார்கள் என்ற நம்பிக்கை மட்டும் என்னை விட்டுப் போகவில்லை.

என்ன செய்யலாம்?

தனி மரம் தோப்பாகாது. இதுவே யதார்த்தமான உண்மை. ஆன்மிக சமஸ்தானம் என்பதால், ஒரு வியாபார அலுவலகம் போல இயங்கமுடியாது. வேலைக்கு ஆள் அமர்த்தி எதையும் செய்ய முடியாது. இத்தகைய சத்சங்கத்தில் ஈடுபடுபவர்கள், வியாபார எண்ணம் கொண்டவர்களாக இருக்கக்கூடாது.

இருப்பவர், இல்லாதவர் எல்லோரிட மும் பாகுபாடின்றி அன்பும் அக்கறையும் செலுத்தும் - தவவாழ்க்கை மேற்கொள்ளும் சித்தம் கொண்ட சாதகர்களாக இருக்க வேண்டும். அப்படியானவர்களை எப்படி அடையாளம் காண்பது? இதுவே என்னுடைய பெரும் விசாரமாக இருந்தது.

ஆனால் எனக்குள் நிறைந்துள்ள ஶ்ரீகிருஷ் ணனும், தேவியும் `அப்படிப்பட்ட அன்பர்கள் உன்னைத் தேடி வருவார்கள்' என்று வாக்களித்து வழிகாட்டினர்.

அனுபவமே மிகப்பெரிய குரு. சந்தேகங்கள் பல தோன்றும். என்றாலும் தேடல் மிக அற்புதமானது. குருவிடம் கிடைக்கும் சிறு சிறு அனுபவங்களைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு முன்னோக்கிச் சென்றால், லட்சியங்களை அடைவது மிக எளிது.

அம்மாவின் அனுபவமும் அத்தகையதே. என்னைப் பார்க்க தினமும் பக்திச் சிரத்தை யுடன் வருபவர்கள் பலர் உண்டு. அவர்களில் சிலரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என அம்மா சித்தம் கொண்டதில் வியப்பில்லையே!

1975-ம் ஆண்டு அத்தகைய தேடலுக்கான விடை கிடைத்தது. அம்மாவை தரிசிக்க வரும் அன்பர்களில், இளம் வயது உன்னிகிருஷ்ணன் எனும் பக்தனும் அடக்கம்.

அவன் ஓராண்டு காலமாக அடிக்கடி அம்மாவின் தரிசனத்துக்கு வருவது உண்டு. அவன் சிறந்த ஆன்மிகவாதி. சம்ஸ்கிருத பண்டிதன். தர்க்கம், உபன்யாசம் போன்றவற்றில் தேற்சி பெற்றவன். விவேகானந்தரின் தீவிர பக்தன். சிறு வயதிலிருந்து, ஓரிடத்திலே தங்குவதில் விருப்பம் இல்லாதவன். குளம், நதி, கிணற்றில் குளித்து, கிடைப்பதை உண்டு, அரச மரத்தடியிலும், ஆலய பிராகாரங்களிலும் உறங்கி வாழ்ந்தவன்.

ஒரு நாள், அம்மா “உன்னிகிருஷ்ணன் ஏன் இந்த இடத்தைவிட்டுப் போக நினைக்கிறான்? அவனைப் போகவேண்டாம் என்று சொல்.அவனுக்கென்று ஒரு கடமை இருக்கிறது” என்றேன். தேவியின் வாக்கல்லவா? உன்னிகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தான்!

- மலரும்...

ஆறு மனமே ஆறு - 36

தொடரும் சோதனைகள்...

ன்னைக் கொன்றுவிடுவேன்' என்று மிரட்டியவனிடம் “நான் மரணத்தைக் கண்டு என்றுமே அஞ்சியது இல்லை. என்றேனும் ஒருநாள் மரணிக்கத்தான் வேண்டும். அந்த விதியை யாரும் மாற்ற முடியாது. உன்னால் என் உடலை வேண்டுமானால் அழிக்க முடியும்; என்னுள் இருக்கும் ஆத்மாவை அழிக்க முடியாது.

நீ கொல்ல விரும்பினால்… எனது கடைசி ஆசை... என்னைச் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட அனுமதிக்க வேண்டும். அப்போதுதான், நீ என்னை எளிதாகக் கொல்ல முடியும்” என்று தைரியமாகச் சொன்னார்.

அதற்கு, அந்தக் கூட்டத்தில் ஒருவன் “எங்களுக் குக் கட்டளையிட நீ யார்? உன்னைக் கொல்வதும் நீ சொல்லித்தான் நடக்க வேண்டுமா?” என்றான்.

அதற்கு அம்மா “யார் யாருக்கு உத்தரவிடுகிறார் என்பது முக்கியம் இல்லை; நடக்கப் போவது என்ன என்பதுதான் முக்கியம்” என்றார்.

அவன் கையில் கத்தியுடன் அம்மாவை நோக்கி அடியெடுத்து வைக்க முயன்றபோது, அவனால் நகரக்கூட முடியவில்லை. அவனது மார்பில் தாங்கமுடியாத வலி. வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் நிலைதடுமாறி விழுந்து மயங்கம் அடைந்தான். மருத்துவமனைக்கு எடுத்து சென்றும் பயனின்றி மரணம் அடைந்தான்.

இதைத்தான் அம்மா... `நடக்கப் போவது என்ன என்பதுதான் முக்கியம்' என்று குறிப்பிட்டாரோ?!

இதற்கிடையே தமயந்தி அம்மாவுக்கு சுபகனும் மற்றவர்களும் சுதாமணியை அடைத்து வைத்திருக்கும் செய்தி கிடைத்தது. விரைந்து சென்று அவர்களிடமிருந்து சுதாமணியைக் காப்பாற்றினார். ஆனாலும் சுதாமணி “என்னால் அனைவருக்கும் கஷ்டம். நான் இருந்து என்ன பயன்?” என்றார்.

தமயந்தி அம்மாள் அவரைச் சமாதனம் செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

சுபகன், அவன் சகாக்கள் மற்றும் உறவினர்களின் தொல்லையிலிருந்து சுதாமணியை விடுவிக்க எண்ணினார் சுகுணானந்தர். ஆகவே, ஒரு நாள் தேவி தரிசனத்தின்போது “தேவி! எனக்கு என் மகள் வேண்டும், அவளை என்னிடம் கொடுத்து விடு. அவளுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன்” என்று முறையிட்டார்.

அதற்கு அம்மா தன்னைக் காட்டி ``வளர்ப்புத் தந்தையே... இது உங்கள் மகளா?'' என்றார்.

அவர் `வளர்ப்புத் தந்தையே' என்று அழைத்த தைக் கேட்ட சுகுணானந்தர் கோபத்துடன் “ஆம் என் மகள்தான். தெய்வத்துக்கு வளர்ப்புத் தந்தை என்று எவரேனும் உண்டா?” என்றார்.

அதற்கு அம்மா (தேவி) “ சரி, நீ கேட்டது போல உன் மகளை உன்னிடம் கொடுத்துவிடுகிறேன். ஆனால், உனக்கு எந்தப் பயனும் இருக்காது” என்றார்.

சுகுணானந்தரோ “பரவாயில்லை... என் மகளை விட்டு நீ உன் இடத்துக்குச் சென்றுவிடு. அவளை, நான் என் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன்” என்றார்.

அம்மாவும் (தேவி) “இப்போதே உன் மகளை எடுத்துக்கொள்” என்று சொல்ல... மறுகணம் அனைவரும் அதிர்ந்தனர்.

நடந்தது என்ன?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு