Published:Updated:

அருவுருவமாய் அருளும் முருகக்கடவுள்! - அழகன் முருகனின் அற்புத ஆலயங்கள்

நமசிவாயம்

பிரீமியம் ஸ்டோரி

விருத்தாசலத்தில் இருந்து மேற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள மணவாள நல்லூரில் அமைந்துள்ளது, அருள்மிகு கொளஞ்சியப்பர் ஆலயம்.

வேப்பூர் நோக்கிச் செல்லும் அனைத்து பேருந்துகளும் கொளஞ்சியப்பர் திருக் கோயில் வழியாகச் செல்லும்.

தந்தைக்குப் பிரணவப் பொருள் உரைத்து தகப்பன் சாமி என்று போற்றப்பெறும் அழகு முருகன், தந்தை சிவலிங்க வடிவில் அருவுருவமாகக் காட்சி தருவது போலவே தானும் அருவுருவமாகக் கோயில் கொண்ட திருத்தலம் மணவாள நல்லூர்.

அருவுருவமாய் அருளும் முருகக்கடவுள்! - அழகன் முருகனின் அற்புத ஆலயங்கள்

இந்தக் கோயிலில் தனிச் சிறப்பான வழிபாடு ஒன்று நடக்கிறது. திருமணத் தடை, குழந்தைபாக்கியம் இல்லாத குறை, வழக்குகளில் சிக்கல், வீடு கட்ட, தொழில் தொடங்க, வேலை கிடைக்க என்று பிரச்னைகளால் துன்பப்படும் பக்தர்கள், அதை விண்ணப்பக் கடிதமாக எழுதி, ஸ்ரீகொளஞ்சியப்பர் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

பிறகு அந்தக் கடிதத்தை முனியப்பர் சந்நிதிக்கு எதிரில் உள்ள வேலில் கட்டி விடுகிறார்கள். இப்படிச் செய்த 3 நாள் கள் அல்லது 3 வாரங்கள் அல்லது 3 மாதங் களுக்குள் தங்கள் வேண்டுல் பலிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அருவுருவமாய் அருளும் முருகக்கடவுள்! - அழகன் முருகனின் அற்புத ஆலயங்கள்

மேலும் கை - கால்களில் வலி, காயம் மற்றும் பலதரப்பட்ட தோல் சம்பந்தமான நோய்களால் கஷ்டப்படும் பக்தர்கள், ஸ்ரீகொளஞ்சியப்பர் சந்நிதியில் வேப்ப எண்ணெயை வைத்து அர்ச்சனை செய்து பிரசாதமாகப் பெற்றுக் கொள்கிறார்கள்.

பின்னர் அந்த எண்ணெயை அருகம் புல்லால் தொட்டு பிரச்னை உள்ள இடத்தில் தடவி வந்தால், நிவாரணம் கிடைக்கிறது என்கிறார்கள் பக்தர்கள்.

காங்கேயனுக்கு நல்ல ஊர்!

வேலூருக்கும் காட்பாடிக்கும் இடையே விளங்கும் அழகிய ஊர் காங்கேயநல்லூர். விசைத் தறிகளும் விவசாயமும்தான் இந்த ஊரின் வாழ்க்கை. பாலாற்றின் கரையோரம் அமைந்துள்ளது.

இவ்வூரில் வாழ்ந்த அருளாளர் மல்லையாதாஸ் பாகவதர். இவர் ஓர் ஆன்மிகச் சொற்பொழிவாளர். வெண்கல சாரீரமும், நல்ல தேகமும் கொண்டவர் இவர். ஒலி பரப்பும் கருவி இல்லாத அந்தக் காலத்திலேயே நெடுநேரம் கம்பீரமாக விரிவுரை நிகழ்த்துவார். சொற்பொழிவுகள் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு இந்த ஊரின் முருகன் கோயிலுக்குத் திருப்பணிகளைச் செய்தவர்.

அருவுருவமாய் அருளும் முருகக்கடவுள்! - அழகன் முருகனின் அற்புத ஆலயங்கள்

பிற்காலத்தில் இவரின் புதல்வரும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். முருகப்பெருமானின் புகழை பாரெங்கும் பரப்பினார். ஆம்! அவர்தான் திருமுருக கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள். இவர், மல்லையாதாஸ் பாகவதரின் நான்காவது புதல்வர். காங்கேயநல்லூர் முருகன் கோயிலுக்கும் திருப்பணிகள் செய்துள்ளார் வாரியார் சுவாமிகள்.

சரி, இந்த ஊருக்கு காங்கேயநல்லூர் எனும் திருப்பெயர் வரக் காரணம் என்ன?

சிவபெருமானின் ஆறு நெற்றிக் கண்களில் தோன்றிய ஆறு அருட் பெரும் ஜோதிகள் சிறிது நேரம் கங்கை ஆற்றில் தவழ்ந்து சரவணப் பொய்கை சேர்ந்து ஆறுமுகத் தெய்வமாக ஆயிற்று. அதனால், பரமனின் அந்தக் குமாரர் காங்கேயன் (கங்கையின் புதல்வன் என்பதைக் குறிக்கும் வகையில் காங்கேயன் என்பார்கள்) என்ற பெயர் பெற்றார். காங்கேயனுக்கு நல்ல ஊராக விளங்குவதால் இது காங்கேயநல்லூர் ஆயிற்று.

இங்கு வந்து தன்னை வணங்கும் அடியவர்களுக்கெல்லாம் அற்புத வரங்களை அருளும் வள்ளாய் அருள்கிறார், காங்கேயநல்லூர் அருள்மிகு சுப்ரமணிய ஸ்வாமி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அருவுருவமாய் அருளும் முருகக்கடவுள்! - அழகன் முருகனின் அற்புத ஆலயங்கள்

பிரம்மச்சாரி முருகப்பெருமான்!

காராஷ்டிர மாநிலம் புனே நகருக்கு அருகேயுள்ள தலம் ‘பார்வதிமலை’. இந்த மலைக் கோயிலில் கார்த்திகேயன் எனும் திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார் முருகப்பெருமான். ஆறு முகங்களுடன், மயில் வாகனத்தின் மீது அமர்ந்த கோலத்தில் தரிசனம் தரும் இவரது சிலை பளிங்குக் கல்லாலானது. இவர் பிரம்மச்சாரி என்பது ஐதிகம்.

ஆதிமூல ஸ்தானத்தில் முருகன் தரிசனம்!

கோவையிலிருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மருதமலை. சட்டைமுனியின் வழிகாட்டுதலின்படி பாம்பாட்டி சித்தர் தவமிருந்து முருகனின் தரிசனம் பெற்ற புண்ணிய க்ஷேத்திரம் மருதமலை.

இங்கே தம்பிக்கு உகந்த விநாயகரையும், பஞ்சவிருட்ச விநாயகரையும் தரிசித்துவிட்டே மருதமலையானை தரிசிக்கச் செல்கிறார்கள் பக்தர்கள். கோயிலுக்குச் செல்லும் இறுதிப் படிக்கட்டுகளின் நேரெதிரில் ஆதிமூலஸ்தானம் இருக்கிறது. இங்கே முருகன் சுயம்புவாகத் தோற்றம் அளிக்கிறார். முருகப்பெருமான் மட்டுமல்லாது வள்ளியும், தெய்வானையும்கூட சுயம்புவாகத் தோன்றியவர்கள்தான்!

அருவுருவமாய் அருளும் முருகக்கடவுள்! - அழகன் முருகனின் அற்புத ஆலயங்கள்

இந்த முருகன்தான் இந்தத்தலத்தின் ‘ஆதி மூர்த்தி’ என்றும் சொல்லப்படுகிறது. அதனால், ஆதி மூலஸ்தானத்தில் இருக்கும் சுயம்பு முருகனுக்கு பூஜைகள் செய்த பிறகே கருவறையில் இருக்கும் பிரதான முருகனுக் குப் பூஜைகள் நடக்கின்றன.

சிவனுக்கும் அம்பாளுக்கும் நடுவில் முருகன் இருந்தால் அதை சோமாஸ்கந்த தலம் என்பார்கள். இங்கும் வெளிமண்டபத்தில் வலது புறத்தில் பட்டீஸ்வரர் சந்நிதியும், இடதுபுறத்தில் மரகதாம்பிகை சந்நிதியும் அமைந்திருக்க, நடுவில் உள்ள கருவறையில் எழில்கோலக் காட்டுகிறார், தண்டாயுதபாணி.

பழநி முருகனைப் போலவே காட்சியளிக்கும் இந்த முருகனை, பாம்பாட்டிச் சித்தர்தான் வடித்தார் என்று சொல்லப்படுகிறது. அர்த்தஜாம பூஜையில் மட்டுமே மூலவரை சுய வடிவ தண்டாயுதபாணி யாகத் தரிசிக்க முடியும்.

மன நிம்மதியைத் தரும் மகத்தான தலம் மருதமலை. திருமண தோஷம் உள்ளவர்கள், இங்குள்ள மரத்தில் மஞ்சள் கயிறும், புத்திர தோஷம் உள்ளவர்கள் தொட்டிலும் கட்டி வேண்டிக்கொண்டால், தோஷங்கள் விலகி நல்லது நடக்குமாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு