புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

ஐயனுக்குத் திருக்கல்யாணம்

ஆர்யங்காவு
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்யங்காவு

ஆர்யங்காவில் திருக்கல்யாண உற்சவம்

பகவான் சாஸ்தாவின் மூன்றாவது கேந்திரமாக விளங்குவது ஆர்ய வனம் என்று அழைக்கப்படும் ஆர்யங்காவு. சபரிமலைக்கு நிகரான பழைமை கொண்ட ஆலயம் இது. பகவான் புலிப்பால் கொண்டு வந்த பிறகு, ராஜசேகர பாண்டியனுக்கு நல்லுபதேசம் நல்கி, சபரிமலைக்குப் புறப்படுமுன் `இங்கேயும் நான் இருப்பேன்’ என்று இந்தத் தலம் குறித்துச் சொன்னதாகக் கூறப்படுகிறது.

ஆர்யங்காவு
ஆர்யங்காவு

மணிப்பூரகம் என்பது, நிலைத்த ஆனந்தத்தைத் தரும் மூன்றாம் சக்ரம். உலக வாழ்வில் இருக்கும் சாதகனை, அதைத் தாண்டிய நிலைக்கு உயர்த்தும் சக்ரம் இது. இதற்கான தலமாகத் திகழ்கிறது ஆரியங்காவு. ஒரு காலத்தில் வனம் சூழ திகழ்ந்த ஆலயம், செங்கோட்டையிலிருந்து கேரளா செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது. நில மட்டத்தில் இருந்து 50-100 அடி தாழ்வான பகுதியில் இருக்கும் ஐயனின் ஆலயம், பேரமைதியுடன் திகழ்கிறது.

இங்கே ஆரியக்கடவுளின் முன் சிறு மண்டபம் ஒன்று உள்ளது. கருவறையில் அக்னி கேசத்துடனும் கையில் பூச்செண்டுடனும், காருண்யம், கம்பீரம், உக்ரம், தேஜஸ் அனைத்தும் ஒருங்கே விளங்க அருள்பாலிக்கிறார் சாஸ்தா.

முன்னொரு காலத்தில், சௌராஷ்டிர இனத்தைச் சேர்ந்த பட்டு வணிகர் ஒருவர், திருவிதாங்கூர் மன்னருக்காகச் சிறப்பான பட்டுத் துணிகளைத் தயாரித்து எடுத்து வந்தார். தன் மகளுடன் அவர் திருவனந்தபுரம் செல்லும் வழியில், ஆரியங்காவை அடைந்தார். பொழுது இருட்டிவிட்டதால் இருவரும் இரவு அங்கேயே தங்கினார்கள்.

விடிந்ததும் புறப்படும் வேளையில் அந்தப் பெண் தன் தந்தையிடம், “அப்பா! எனக்கு இங்கேயே இருந்து ஐயனை எப்போதும் தரிசித்துக்கொண்டே இருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது. ஆகவே, நான் இங்கேயே இருக்கிறேன். நீங்கள் திரும்பும் வழியில் என்னை அழைத்துச் செல்லுங்கள்’’ என்றாள்.

அந்தப் பெண்ணுக்கு ஆரியங்காவு ஐயனிடம் அப்படியோர் ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. வணிகருக்கோ மனம் கேட்கவில்லை. ஆனால் மகள் விடாப்பிடியாக இருந்தாள். மற்றவர்களும் ` அடர்ந்த வனப் பகுதியில் பெண்ணை அழைத்துச் செல்லவேண்டாம். அவள் இங்கேயே இருக்கட்டும். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்றார்கள். வணிகரும் கோயிலின் மேல்சாந்தியிடம் மகளை ஒப்படைத்துவிட்டு யாத்திரையைத் தொடர்ந்தார்.

திருவனந்தபுரத்தில் மன்னரிடம் வணிகம் முடித்துத் திரும்பும் வழியில், ஒற்றை யானை ஒன்று வணிகரைத் துரத்த ஆரம்பித்தது. திக்கற்றவருக்குத் தெய்வம்தானே துணை. வணிகர், மதகஜ வாகனனை மனதார வேண்டிக்கொண்டார்.

ஆர்யங்காவு ஆலயம்
ஆர்யங்காவு ஆலயம்
ஆர்யங்காவு ஆலயம்
ஆர்யங்காவு ஆலயம்

சில நிமிடங்களில் எல்லாம் எங்கிருந்தோ ஒரு வேடன் வந்து நின்றான். தெய்வப் பொலிவுடன் திகழ்ந்த அவன், யானையை மறித்து ``போ’’ என்று அதட்டினான். ஆவேசத்துடன் வந்த யானை வேடன் கட்டளையிட்டதும் ஒருபூனையைப் போன்று பின்வாங்கி ஓடிவிட்டது. வணிகர் வேடனுக்கு நன்றி சொன்னதுடன், அன்புக் காணிக்கையாய் பட்டாடை ஒன்றையும் வழங்கினார்.

அதை உடுத்திக்கொண்டவன் வணிகரிடம் கேட்டான்: ``எப்படி இருக்கிறேன் ஐயா?’’

கம்பீரமாக ஜொலித்த அவனைக் கண்டு வணிகர் வியந்தார்.

“மாப்பிள்ளை போலவே இருக்கிறாயப்பா...”

“மாப்பிள்ளையா? சரிதான்... அப்படியானால் எனக்கொன்று தருவீர்களா?”

“கேளப்பா... என் உயிரைக் காத்த உனக்கு எது கொடுத்தாலும் தகும்!” வணிகர் திருத்தமாகப் பதில் சொன்னார்.

“உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுப்பீர்களா?’’

வணிகர் சிறிதும் யோசிக்கவில்லை அல்லது அந்த இளைஞனின் கம்பீரம் அவரை யோசிக்கவிடவில்லை.

“அதற்கென்னப்பா... அப்படியே செய்கிறேன்” என்று வாக்குக் கொடுத்துவிட்டார்.

வேடனும் மகிழ்ச்சியுடன், ``அப்படியானால் சரி... நான் நாளை உங்களை ஆரியங்காவு கோயிலில் சந்திக்கிறேன்’’ என்று கூறிச் சென்றுவிட்டான். அவன் போன பிறகு வணிகருக்குச் சிந்தனை எழுந்தது `எனக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்பது இவனுக்கு எப்ப டித் தெரியும்’ என்று யோசித்தவராகப் பயணத்தைத் தொடர்ந்தார்.

அதிகாலையிலேயே ஆரியங்காவு கோயிலை அடைந்தவர், ஆலய வாயிலில் காத்திருந்தார். அந்தத் தருணத்தில் கோயில் அர்ச்சகருக்கு ஒரு கனவு வந்தது.

“பக்தா! எழுந்திரு. வாயிலில் வணிகனான என் பக்தன் காத்திருக்கிறான். அவன் தன் பெண்ணை எனக்குத் தருவதாக வாக்களித்ததன் பேரில், அவளை என்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டேன். உன் வீட்டில் தங்கியிருந்த அவன் மகள், என்மீது கொண்ட அபார பக்தியால் என்னுடன் இரண்டறக் கலந்துவிட்டாள்’’ சென்று சாட்சாத் சாஸ்தாவே மொழிந்தார்.

திடுக்கிட்டு எழுந்த அர்ச்சகர் வணிகரின் மகளைத் தேடியபோது அவளை எங்குமே காணவில்லை. ஆலய வாயிலுக்கு ஓடியவர், வணிகரிடம் விஷயத்தைச் சொன்னார். நடை திறக்கப்பட்டது. உள்ளே, வணிகர் கொடுத்த பட்டாடை ஜொலிஜொலிக்க காட்சி தந்தார் சாஸ்தா. அனைவரும் வியந்து நிற்க, `முதல் நாள் வேடனாக வந்தது ஆரியங்காவு வேந்தனே’ என்பதை உணர்ந்த வணிகரும் மெய்சிலிர்த்துப் போனார்.

ஆண்டவனுடன் ஐக்கியம் அடைந்து முக்திபெற்ற அவரின் மகள் புஷ்கலா தேவியின் அம்சமாகவே கருதப்பட்டு, பகவானின் இடப்புறத்தில் சிலையாக வைக்கப்பட்டு, புஷ்கலாதேவி என ஆராதிக்கப்படுகிறாள். இன்றும் ஆரியங்காவு ஆலயத்தில் ஐயப்பனின் திருக்கல்யாண உத்ஸவம் சிறப்பாக நடைபெறுகிறது. 11 நாள் கொண்டாட்டங்களில், சௌராஷ்ட்ர இன மக்களும், திருவிதாங்கூர் மன்னரும் சம்பந்தி உரிமையுடன் சீர் கொண்டு வந்து விழாவைச் சிறப்பாக நடத்துகிறார்கள்.

ஆர்யங்காவு  கணபதி
ஆர்யங்காவு கணபதி

நாகர்கோவில் அருகிலுள்ள அழகியபாண்டிபுரத்தைச் சேர்ந்த தம்பதிக்கு ஆரியங்காவு ஐயனின் அருளால் ஆண் குழந்தை பிறந்தது. சிறு வயது முதலே ஆரியங்காவு அரசனிடம் அதீத பக்தியோடு வளர்ந்தான் அந்தப் பிள்ளை. சுமார் எட்டு வயது இருக்கும் போது, ஐயனின் அழைப்பு அகத்தில் கேட்டது போலும், வீட்டை விட்டுப் புறப்பட்டவன், ஆரியங்காவை அடைந்தான்.

அங்கே ஆலயத்துக்கு பூஜை செய்ய வந்த நம்பூதிரி, சிறுவன் வன மிருகங்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து பயந்து, சுவாமியிடம் பிரார்த்தித்தார். அன்றிரவே அவரின் கனவில் பகவான் தோன்றினார்.

“அவன் என் குழந்தை. நான்தான் அவனை இங்கே வரவழைத்தேன். நான் அவனைப் பார்த்துக்கொள்கிறேன். நீ கவலைகொள்ள வேண்டாம். எனக்கு நைவேத்தியம் செய்யும் பிரசாதங்களையே அவனுக்குக் கொடு” என்று அருள்பாலித்தார்.

சிறுவன் வனத்திலேயே வசிக்கலானான். அங்கிருக்கும் மிருகங்களும் அவனுக்குத் துணையாயின. புள்ளிப் புலிகளும், பாம்புகளும் அவனுக்கு விளையாட்டுத் தோழர்கள் ஆனார்கள்.

ஆண்டுகள் கழிந்தன. பிள்ளையைக் காணாமல் தவித்த பெற்றோர் பகவானிடம் பிரார்த்தித்தார்கள். அவன் ஆரியங்காவில் தன்னிடம் பத்திரமாக இருப்பதாக பகவான் தெரிவித்தார். பெற்றோர் பிள்ளையைக் காணும் ஆவலில் ஆரியங்காவு வந்தார்கள். அங்கே அவன் புலிகள் மற்றும் பாம்புகளின் நடுவே உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு திகைத்தார்கள்.

பகவானிடம் சென்று முறையிட்டார்கள். ``பிள்ளையைக் கொடுப்பது போலக் கொடுத்துவிட்டு, இங்கே மீண்டும் அழைத்துக் கொண்டால் என்ன நியாயம்?” என்று கண்ணீர் விட்டு மன்றாடினார்கள்.

அன்று இரவு அவர்கள் கனவில் தோன்றிய பகவான், ``நீங்கள் மகனுக்குத் திருமணம் செய்ய எண்ணுகிறீர்கள். அவன் வெகு நாள் இல்லறத்தில் இருக்கமாட்டான். ஆனால் உங்கள் குலம் தழைக்கும்” என்று அருள்பாலித்தார். அதேபோல் நம்பூதிரியின் கனவில் தோன்றி, பிள்ளையைப் பெற்றோருடன் அனுப்பிவைக்கும்படி பணித்தார். அவர் ஆணைப்படி அனைத்தும் நடந்தன.

பெற்றோருடன் சென்றவனுக்குத் திருமணம் நடந்தது. ஒரு குழந்தை பிறந்ததும் மீண்டும் அவன் மனம் ஐயனையே நாடியது.

``உன் கடமை முடிந்தது. இனி என்னிடமே வந்து விடு. உன் குலத்தை நான் காப்பேன்” என்று பகவான் அவனை அழைத்தார். அவனும் ஆரியங்காவுக்கு வந்துவிட்டான். ஐயனைத் தியானித்தபடி ஆரியங்காவிலேயே வாழ்ந்தான்.

ஐயன் தன்னுடைய முத்திரைப் பிரம்பை அவனிடம் கொடுத்து அனுக்கிரஹித்தார். அவனை... இல்லையில்லை அவரை அனை வரும் `ஆரியங்காவு சித்தர்’ என்று போற்றினர். ஐயனின் மீளா அடிமையாக தன்னையே ஸ்வாமிக்கு அர்ப்பணித்து வாழ்ந்தவர் நிறைவில் பகவானுடன் லயம் அடைந்தார்.

சித்தருக்கு பகவான் அருளிய முத்ரவடி மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டு, சித்தரின் பரம்பரையினருக்கு அளிக்கப்பட்டது. ஆரியங்காவு சித்தரின் ஸ்தானமும் அனுக்ரஹிக்கப்பட்டது. அந்த முத்ரவடி இன்று வரை அவர்களால் பரம்பரையாகப் பூஜிக்கப்பட்டு வருகிறது. ஆர்யங்காவு திருக்கல்யாணத்தன்று இவர்களும் பகவான் முன் இருப்பதைக் காணலாம்!

எப்படிச் செல்வது?: கொல்லம் திருமங்கலம் நெடுஞ்சாலையில் செங்கோட்டையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆரியங்காவு. தரிசன நேரம்: காலை 5 முதல் 11:45 மணி வரை; மாலை 5 முதல் 8 மணி வரை.