Published:Updated:

சனிதோஷம் தீர்க்கும் பைரவர் வழிபாடு செய்ய உகந்த தேய்பிறை அஷ்டமி தினம் இன்று! #Video

சனி தோஷம் தீர்க்கும் பைரவர் வழிபாடு செய்ய உகந்த தேய்பிறை அஷ்டமி தினம் இன்று!

bairavar
bairavar

சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். பஞ்சபூத வடிவமாகி, இந்தப் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பவர். மூவுலகிலும் அதர்மம் பெருகி நல்லவர்கள் துன்புறும்போது, பல்வேறு அவதாரங்களை எடுத்து, அதர்மத்தை அழித்து நல்லவர்களைக் காப்பவர். துஷ்ட நிக்ரஹமும் பக்த பரிபாலனமும் செய்ய அவ்வாறு அவர் கொண்ட 64 திருவடிவங்களுள் முக்கியமானது காலபைரவ அவதாரம்.

god bairavar
god bairavar

துன்பம் ஒரு வெள்ளம்போல சூழும்போது, அதிலிருந்து தப்ப வழியின்றித் தவிப்பவர்கள், பற்றிக்கொள்ள உகந்த வழிபாடு 'பைரவர் வழிபாடு'. பைரவர், காவல் தெய்வம் போன்றவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து காப்பவர். நவகிரகங்களில் சனியின் குருவாகக் கருதப்படுபவர். குருவை வணங்கினால் சீடன் மகிழ்வார் என்பது இயல்பு இல்லையா... பைரவரை வழிபடுவதன் மூலம் சனியைக் குளிர்வித்து, அவர் பார்வையால் ஏற்படும் கெடுபலன்களை நற்பலன்களாக மாற்றிவிட முடியும்.

சிவாலயங்களில், அனைத்து வழிபாடுகளும் காலை சூரியபகவானிடம் தொடங்கி இரவில் பைரவரிடம்தான் நிறைவு பெறும். இரவில் கோயிலைக் காத்தருள்பவர் பைரவர் என்பதால், அவரின் திருவடிகளில் திறவுகோலைச் சமர்ப்பிக்கும் வழக்கமும் உண்டு. ஆலயங்களைக் காக்கும் பைரவரைத் தினமும் வணங்கி வர, அவர் நம் வீட்டையும் காப்பார் என்பது ஐதீகம். தொடர்ந்து பைரவ வழிபாடு செய்பவர்கள், திருடர் பயம் நீங்கி ஆனந்தமாக வாழலாம்.

lord bairavar
lord bairavar

பைரவர், கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி தினத்தில் அவதரித்தார். எனவே, இந்தப் புண்ணிய தினம் `காலபைரவாஷ்டமி' என்று போற்றப்படுகிறது. அதனால், பைரவரைத் தேய்பிறை அஷ்டமி அன்று வழிபடுவது சிறப்பு. சிவப்பு நிற ஆடை அணிவித்து சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, சிவப்பு நிறப் பழங்களை நிவேதனம் செய்து பைரவரை வழிபடுவது விசேஷம். சனிக்கிழமைகளில் பைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், சனி கிரகத்தால் ஏற்படும் அனைத்துவிதமான தோஷங்களும் விலகும் என்பர்.

இன்று சனிக்கிழமை. இன்று மாலை வேளையில் அஷ்டமி திதியும் வருவது மேலும் சிறப்பு. இந்த நேரத்தில் காலபைரவரை வழிபாடு செய்வதன்மூலம், சனியின் பார்வையால் உண்டாகும் தீய பலன்கள் குறைந்து நற்பலன்கள் கூடும். எனவே, தவறாமல் இன்று மாலை சிவாலயத்துக்குச் சென்று பைரவரை வழிபடுவோம்.

lord bairava
lord bairava

பைரவருக்கு ஐந்து எண்ணெய்கள் கொண்டு ஐந்து தீபம் ஏற்றி வழிபடுவது மேலும் சிறப்பு. மாலை வேளையில், ஆதிசங்கரர் இயற்றிய காலபைரவாஷ்டகத்தினைப் பாராயணம் செய்வதன்மூலம் நற்பலன்கள் பெருகும் என்கின்றன சாஸ்திரங்கள்.

ஆதி சங்கரர் அருளிய கால பைரவாஷ்டகம்! #Spiritual

Posted by Sakthi Vikatan on Friday, September 20, 2019