Election bannerElection banner
Published:Updated:

திருவாரூர்: ஆசியாவின் பெரிய தேர் பவனி வரும் ஆழித்தேரோட்டம்... மார்ச் 25-ம் தேதி நடைபெறுகிறது!

திருவாரூர் ஆழித்தேரோட்டம்
திருவாரூர் ஆழித்தேரோட்டம்

சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் நாளை (மார்ச் 25-ம்) தேதி நடைபெறவுள்ளது. தேர்களில் அலங்கார வேலைப்பாடு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

“ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே” என திருநாவுக்கரசரும், “தேராரூம் நெடுவீதி திருவாரூர்” என சேக்கிழாரும் பாடிய சிறப்புமிக்கது திருவாரூர் ஆழித்தேராகும். திருவாரூரில் வீற்றிருக்கும் தியாகராஜர் ஆலயம் சைவ சமய மரபில் பெரிய கோயில் என்றழைக்கப்படுகிறது.

இக்கோயில் சைவ சமயத்திற்கே பெரிய பீடமாய் விளங்குவது மட்டுமல்லாமல் இங்கு பிறந்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி அளிப்பதாகும். பஞ்ச பூத தலங்களில் பூமிக்குரிய தலமாக விளங்கும் இக்கோயில் சனீஸ்வரனும், நளனும் வணங்கி சாபம் போக்கியதன் மூலம் சர்வதோ‌ஷ பரிகாரதலமாகவும் விளங்குகிறது

திருவாரூர்
திருவாரூர்

இக்கோயில் ஆழித்தேர் ஆசியாவிலேயே பெரிய தேராக விளங்குகிறது. திருவாரூர் தேரோட்ட திருவிழாவினை திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் வந்து தங்கி தேரோட்ட ஏற்பாடுகளை பார்ப்பதாகவும் இத்தேரினை இந்திரன் முதலான தேவர்கள் வான்நின்று வணங்கி மகிழ்வதாகவும் ஐதிகம்.

25-ம் தேதி காலை 6 மணிக்கு தியாகராஜருக்கும் தேருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தினை முன்னிட்டு கோயிலின் தேவாசிரிய மண்டபத்தில் இருந்து தியாகராஜர் புறப்பட்டு அஜபா நடனத்துடன் நகர்வலமாக வந்து திருத்தேர் ஏறுகிறார். தியாகராஜர் ஆழித்தேரைத் தொடர்ந்து அம்பாள் மற்றும் சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக ராஜ வீதிகளில் வலம் வரவிருக்கின்றன.

தேரோட்டம் காண ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் வருவார்கள் என்பதால் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருவாரூர் தியாராஜர் தேரானது மூன்றாவது முறையாக உருவாக்கப்பட்டது. இத்தேர் பீடம் உயர்ரக மரங்களால் 36 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் மீது மூங்கில் மற்றும் பனஞ்சப்பைகளால் 60 அடி உயரத்திற்கு கோபுரம் எழுப்பப்பட்டு 96 அடி உயர தேராக காட்சி அளிக்கும். தேர் கோபுரத்தினை சுற்றி சுமார் 5 டன் எடையுள்ள வண்ணத்துணிகள் கொண்டு அலங்கரிக்கப்படும்.

450 டன் எடையுள்ள 96 அடி உயர தேரினை இழுக்க 15 டன் எடை கொண்ட வடக்கயிறு பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வடக்கயிறின் நீளம் சுமார் 1 கி.மீ. தூரமாகும்.

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா, "ஆழித்தேரோட்டம்  நடைபெறவுள்ளதையொட்டி 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 10 வயதுக்குட்பட்டவர்கள் தேரோட்டத்திற்கு வருவதைத் தவிர்க்கவும். மேலும் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி உடையவர்கள் கண்டிப்பாக வீடுகளில் தனிமைபடுத்திக் கொள்ளவும்.

பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறும் முன் முகக்கவசம் அணிந்து வரவும். வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் உள்ளதால் அதிகமான மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு