Published:Updated:

அஷ்ட லட்சுமியரும் அருளட்டும்!

அஷ்ட லட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
அஷ்ட லட்சுமி

ஆன்மிகத் துணுக்குகள்

அஷ்ட லட்சுமியரும் அருளட்டும்!

ஆன்மிகத் துணுக்குகள்

Published:Updated:
அஷ்ட லட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
அஷ்ட லட்சுமி

`ஷ்ட லட்சுமியரின் அருளும் இல்லத்திலும் உள்ளத் திலும் குடியிருக்க வேண்டும்’ என்று நாம் ஒவ்வொருவரும் வேண்டிக்கொள்ள வேண்டும் என்பார்கள் பெரியோர்கள். அன்னம் செழிக்கவும், செல்வம் கொழிக்கவும், எண்ணம் சிறக்கவும் இந்த அன்னையரின் அருள் தேவை. நாமும் அஷ்டலட்சுமியர் மகிமைகளைத் தெரிந்துகொள்வோமா?

ஆதிலட்சுமி: அமுதம் பெற வேண்டி தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தபோது லட்சுமியும் வந்தாள். அவளே ஆதிலட்சுமி. ஆதிலட்சுமி தெற்கு நோக்கி வீற்றிருப்பாள். பிறப்பு- இறப்பு இரண்டையும் கட்டுப்படுத்தி ஆள்பவள் ஆதிலட்சுமி.

இவள் பாதத்துக்குக் கீழ் பூர்ண கும்பம், கண் ணாடி, சாமரம், துவஜம், ரிஷபம், பேரிகை, விளக்கு, ஸ்வஸ்திக் ஆகிய மங்கலப் பொருட்கள் இருப்பதாக ஞான நூல்கள் கூறுகின்றன. தன் பொற்பாதம் பற்றியவருக்கு ‘மங்கலம், மங்கலம்’ என்று உணர்த்தவே எட்டு மங்கலச் சின்னங்களையும் கொண்டு திருவருள் புரிகிறாள் இவள்.

தான்ய லட்சுமி: இந்த உலகின் பசுமைக்கு நாயகி தான்யலட்சுமி. உயிர்களுக்கு அவசிய மான உணவு, தானிய வகைகள் அனைத்தையும் அளிப்பவள் இவள்.

லட்சுமி தந்திரத்தில் தான்யலட்சுமி ‘சதாட்சி’ - ‘சாகம்பரி’ என்றெல்லாம் போற்றப்படுகிறாள். எட்டு திருக்கரங்களுடன் திகழ்கிறாள் தான்யலட்சுமி. இவளை வழிபட, தான்ய வளம் கிட்டும்.

தைரியலட்சுமி: வாழ்வில் நம்பிக்கையையும் துணிச் சலையும் தந்து நம்மை இயக்குபவள் தைரிய லட்சுமி. ராமனுடன் லவ-குசன் நடத்திய போரில், மைந்தர்கள் இருவரும் ஒரே பாணத்தில் தங்கள் தந்தையை வென்று விட்டனர். அந்தப் பாணம் சீதா பிராட்டியார் அருள் பெற்ற சீதா பாணம்! அங்கே அந்த லோகநாயகி தைரிய லட்சுமியாகத் திகழ்கிறாள்.

கஜலட்சுமி: கஜலட்சுமியின் மற்றொரு பெயர் ராஜ லட்சுமி. இரு புறமும் யானைகள் கலசத் திருமஞ்சனம் செய்வது போல் எழுந்தருளி இருக்கும் இந்த லட்சுமியின் உருவத்தை நமது இல்லங்களின் நிலைப்படிகளில் காணலாம். ராஜ யோக வாழ்க்கை வழங்குபவள் இவள்.

சந்தானலட்சுமி: சிறந்த செல்வமான மக்கட் செல்வத்தை அளிப்பவள் சந்தானலட்சுமி. ஜடையுடன் கிரீடம், ஆபரணங்கள் தரித்து கரத்தில் குழந்தையை ஏந்தியவளாகக் கன்னிகள் பீடத்தில் கருணையுடன் வீற்றிருக்கிறாள் சந்தானலட்சுமி.

விஜயலட்சுமி: உயர்வான எண்ணங்களை நிறைவேற்று பவள் விஜயலட்சுமி. கொல்லூர் திருத்தலத்தில் அன்னை மூகாம்பிகை, விஜய லட்சுமியாக அருள்கிறாள். குடசாத்திரி மலைச்சாரலில் கொடுமையே உருவாக விளங்கிய அசுரனின் கொடுமைகளைத் தடுத்து, அவனை ஊமை ஆக்கியதன் மூலம், உலகைக் காத்தருளும் விஜயலட்சுமியாகத் திகழ்கிறாள் என்பது ஐதிகம்.

வித்யாலட்சுமி: கலைவாணியையும் லட்சுமியையும் இணைத்து நிற்பவள் வித்யா லட்சுமி.

‘ஜயாக்ய ஸம் ஹிதை’யில் வாகீஸ்வரி (நாமகள்) என்ற பெயருடன் வித்யாலட்சுமியின்பெருமை விவரிக்கப்பட்டுள்ளது. இந்த அன்னையைத் தியானித்து வழிபட்டால், கல்வி-கலைகளில் சிறந்து விளங்கலாம்.

தனலட்சுமி: நமக்குச் செல்வ வளம் அளிப்பவள் தனலட்சுமி. ஆதிசங்கரரும் தேசிகரும் முறையே கனகதாரா, ஸ்துதி பாடி இந்த தேவியின் அருளால் பொன்மழை பெய்வித்ததாக ஞான நூல்கள் கூறுகின்றன.

‘சங்க- பதும நிதிகளை வைத்திருக்கும் தேவி’ என்று தனலட்சுமி பற்றிக் குறிப்பிடுகிறது ப்ரஸ்ந ஸம்ஹிதை. தனலட்சுமியின் கடைக்கண் பார்வை எங்கு படுகிறதோ, அங்கு செல்வங்கள் குவியும்.

- கா.ராஜேஸ்வரி, தூத்துக்குடி