Election bannerElection banner
Published:Updated:

அரசியலில் அதிகாரப் பதவி அருளும் அதிர்ஷ்ட யோகங்கள்... அற்புதத் தலங்கள்!

திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி
திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி

ஒருவரது ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் உரிய இடத்தில் அமர்ந்து இயக்கினால் அவர் அரசாளும் அற்புத யோகத்தைப் பெறுவார் என்கின்றன ஜோதிட நூல்கள். அதில் கீழ்கண்ட யோகங்களை உடையவர் பெரிய பிரயத்தனங்கள் இல்லாமலேயே அரசியலில் உயர்ந்த இடத்தைப் பிடிப்பார்களாம்.

* கஜ கேசரி யோகம்: ஒரு ஜாதகத்தில் சந்திரனுக்கு குரு கேந்திரம் எனும் 4-ம் வீட்டில் அல்லது 7-ம் வீட்டில், அல்லது 10-ம் வீட்டில் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். இதனால் அரசியலில் உயர் பதவி வாய்க்கும்.

* குரு சந்திர யோகம்: சந்திரனுக்கு திரிகோணம் எனப்படும் 5-ம் வீட்டில் , 9 - ம் வீட்டில் குரு இருந்தால், இந்த யோகம் ஏற்படும். இந்த அமைப்பு பெற்றவர்கள் பலர் அரசியலில் 40 வயதுக்கு மேல் பெரிய பதவியில் அமர்ந்து புகழ் பெறுவார்கள்.

ஆண்டார்குப்பம் முருகன்
ஆண்டார்குப்பம் முருகன்

* ஹம்ஸ யோகம்: ஜாதகத்தில் குரு லக்னத்துக்கு கேந்திரம் எனப்படும் 4,7,10 -ம் இடத்திலிருந்து, குரு உச்ச பலம் பெற்று நின்றால், இந்த யோகம் ஏற்படும். இந்த யோகத்தோடு ராஜ கேந்திரயோகம் எனப்படும் யோகம் ஏற்பட்டால், அதாவது எல்லா கிரகங்களும் கேந்திரத்தில் பலமானால், அவர் யாராலும் அசைக்க முடியாத ஓர் ஒப்பற்றத் தலைவனாகப் பெயரெடுப்பார்.

* அரசாளும் யோகம்: ஒரு ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் பலம் பெற்று, லக்னத்துக்கு 6, 7, 9 - ம் இடத்து அதிபதிகள் ஆட்சி பெற்றிருந்தால், தன்னுடைய சிறிய வயதிலேயே அரசியலில் பெரும்புகழ் பெற்று அரியணையில் அமர்வார்.

இந்த யோக அமைப்புகள் மட்டுமின்றி சிலவகை வழிபாடுகள், ஆலயங்கள் போன்றவைகளும் அரச பதவியில் உச்ச நிலையை அளிக்கக் கூடியவை என்று சொல்லப்படுகின்றன.

* அரச யோகம் அளிக்கக் கூடியது வன்னிமர வழிபாடு. இந்த வழிபட்டால் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் பல சூட்சம சக்திகளை ஒருவருக்கு அளித்து அவரை அதிர்ஷ்டமும் தைரியமும் கொண்டவராக மாற்றுகிறது என்கின்றன ஞான நூல்கள். வளர்பிறை தசமி திதியில், ராகுகால நேரத்தில், வன்னிமரத்தை ஒன்பது முறை சுற்றி வந்து வணங்கினால் அரசாளும் யோகம் கிட்டுமாம்.

* அரசியலுக்கு அடிப்படை தைரியம். இந்த தைரியம் பெறவும் காரியத் தடைகள் அகலவும் தினமும் அனுமன் சாலீஸாவைப் பாராயணம் செய்து அருள் அடையலாம்.

* சாம்ராஜ்ய லக்ஷ்மி வழிபாடு அரசியலில் முன்னேற்றம் அடையப் பெரிதும் உதவும் என்பார்கள். அதுபோலவே ஸ்ரீராஜராஜேஸ்வரி வழிபாடும் அரசியல் பதவிகளை அள்ளி வழங்கும் என்பார்கள்.

* வித்தை, ஞானம், புகழ், கீர்த்தி, பெருமை, செல்வாக்கு, மேன்மை, செல்வம் ஆகியவற்றை வாரி வழங்குபவர் குரு. எனவே குருவின் தலங்களான திட்டை, ஆலங்குடி, திருப்பெருந்துறை, சென்னை பாடி போன்ற தலங்களுக்கும் சென்று வணங்கி வரலாம்.

* அரசியலுக்கு தைரியமும் திட்டமிடலும் அவசியம் என்பதால் ராகு பகவானின் திருத்தலங்களுக்குச் சென்று வருவதும், ராகு பகவானுக்குப் பரிகாரங்கள் செய்வதும் நலம் அளிக்கும்.

ஸ்ரீராஜராஜேஸ்வரி
ஸ்ரீராஜராஜேஸ்வரி

* காஞ்சிபுரம் மாவட்டம் அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் ஆட்சிபுரீஸ்வரர், உமையாட்சீஸ்வரர் என இரண்டு மூலவர்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள். இளங்கிளியம்மை, உமையாம்பிகை என இரு அம்பிகைகள். இவர்களை வேண்டி வழிபட்டால் ஆட்சி செய்யும் வாய்ப்பு, ஆளுமைத் திறன், பதவி உயர்வு கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

* வேதாரண்யம் திருமறைக்காடர் ஆலயம்: எலி ஒன்று தெரியாமல் விளக்கைத் தூண்டிவிட்ட புண்ணியத்தால் மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்து மூவுலகையும் ஆட்சி செய்தது என்பதால் இந்த ஆலயம் சென்று வழிபட்டால் ராஜயோகம் பெறுவர் என்பதும் நம்பிக்கை.

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்: தமிழக அரசின் சின்னமாகவே இந்த கோயில் கோபுரம் இருப்பதால் இங்கு வந்து வந்து வழிபட்டால் தமிழக அரசில் உயர்ந்த இடத்தை எட்டலாம் என்பதும் பலரின் நம்பிக்கை.

* முருக வழிபாடு: அரசியலுக்கு அடிப்படை நாவன்மை. நாவன்மையை அளிப்பவன் முருகப்பெருமான். அதிலும் குறிப்பாக திருச்செந்தூர் வழிபாடு நாவன்மையை அளிக்கும். தேவ சேனாபதியான முருகனை வழிபட அரசியல் சதுரங்கத்தில் வெற்றி பெற்று முதன்மைப் பதவியை அடையலாம் என்பதும் ஐதிகம்.

* திருவானைக்காவில் எழுந்தருளியிருக்கும் அகிலாண்டேஸ்வரி அம்மை, சப்த மாதாக்களில் வாராஹியின் அம்சமானவள். எனவே அரசியல் செல்வாக்குடன் விளங்க இவளை சரணம் அடைதல் வேண்டும்.

* ராஜ மாதங்கியான அன்னை மீனாள், மதுரையம்பதியின் பேரரசி. திக்விஜயம் செய்து சகலரையும் வெற்றி கொண்டவள். எனவே நிர்வாகத் திறனும், தைரியமும், வசீகரத் தன்மையும் கொண்ட இந்த தேவியை வணங்கினால் அரச போகம் தேடிவரும் என்பது நம்பிக்கை.

நவகிரகங்கள்
நவகிரகங்கள்

* ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் யோக நிலையில் இருந்தால் தலைமைப் பதவி தானாகத் தேடி வரும் என்பது ஜோதிடர் கூற்று. அந்த வகையில் நவதிருப்பதிகளில் திருநெல்வேலி அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம், தொண்டை மண்டலத்தில் சூரியனுக்குரிய கொளப்பாக்கம், கும்பகோணத்தில் சூரியத் தலம் சூரியனார் கோவில் ஆகிய ஆலயங்களுக்கும் சென்று வழிபட விரும்பிய பதவிகள் இறையருளால் கிட்டும் என்பதும் நம்பிக்கை.

* சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்டுச் சாலை வழியாகப் பொன்னேரி செல்லும் வழியில் அமைந்துள்ளது, ஆண்டார்குப்பம். இங்கிருக்கும் முருகப்பெருமானை வழிபட்டால் பதவி யோகம் வாய்க்கும் என்பது பெரியோர் வாக்கு. பிரம்மனை தண்டித்த அதிகாரத் தோரணையுடன் இடுப்பில் கரங்களை வைத்து கம்பீரமாக நிற்கும் திருக்கோலத்தில் முருகப்பெருமான் அருளும் கோயில் இது. அதனால் இங்கு வந்து அவரைத் தரிசிக்கும் அன்பர்களுக்கு அதிகாரம் மிகுந்த பதவிகள் கிடைக்கும், ஏற்கெனவே பதவியில் உள்ளோருக்கு பதவிகள் நீடிக்கும்.

* இவை போன்ற வழிபாடுகள் மட்டுமின்றி கோதானம், வஸ்திர தானம் போன்ற பரிகாரங்களும் பதவி பெற ஆலோசனையாகக் கூறப்படுகின்றன.

நேர்மையும், எளிமையும் நிச்சயம் பதவியைப் பெற்றுத் தருவன மட்டுமில்லாமல் அந்தப் பதவியை நிரந்தரமாகத் தக்க வைக்கவும் செய்யும் என்பதே உண்மை. எனவே உரிய வழிபாடுகள் மட்டுமின்றி உண்மையான நேசமும் கொண்டிருப்போருக்கு எல்லாப் பதவிகளும் தானே தேடிவரும் என்பதும் சத்தியமான சாத்தியமான கூற்றே எனலாம்.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு