திருத்தலங்கள்
Published:Updated:

இழந்த பதவி-புகழ்-பொருள் மீண்டும் கிடைக்கும்!

அசுவினி நட்சத்திர சிவாலயம்
பிரீமியம் ஸ்டோரி
News
அசுவினி நட்சத்திர சிவாலயம்

அசுவினி நட்சத்திர அன்பர்கள் வழிபட வேண்டிய சிவாலயம்! - பழங்காமூர் மோ.கணேஷ் -

அசுவினி நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபடவேண்டிய அற்புதமான சிவாலயம் ஒன்று திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகில் உள்ளது. பொன் - பொருள், பதவி, சொத்து, செல்வம்-செல்வாக்கு போன்ற வற்றை இழந்து தவிக்கும் அன்பர்கள், இந்தத் தலத்துக்கு ஒருமுறை சென்று வழிபட்டால் போதும்; இழந்த சிறப்புகளை மீண்டும் பெற்று மகிழலாம் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியவர்கள்.

அசுவினி நட்சத்திர சிவாலயம்
அசுவினி நட்சத்திர சிவாலயம்


பெரிய கொழப்பலூர் என்று வழங்கப்படும் இவ்வூர், இந்திரனும் பாற்கடலில் தோன்றிய வெள்ளைக் குதிரையும் வழிபட்டு சிவனருள் பெற்ற க்ஷேத்திரம் என்கின்றன புராணங்கள். முற்காலத்தில் திருக்குழசை, திருக்கோளிப்புதூர், குழைந்தபல்லூர், திருக்குரேஸ்வரம், குழசைபதி ஆகிய பெயர்களிலும் இவ்வூர் வழங்கப்பட்டு வந்ததாம்.

ஒருமுறை நாரத முனிவர் கடற்கரை வழியே சென்று கொண்டிருந்த போது, வெண்குதிரை ஒன்று கண்ணீர் வடித்தபடி நின்றிருந்ததைக் கண்டார். அருகில் சென்றதும் அது, பாற்கடலில் உதித்த அபூர்வ புரவி என்பதை அறிந்துகொண்டார்.

``அமிர்தத்துடன் பிறந்த உனக்கு என்ன அவலம் நேர்ந்தது. ஏன் இங்ஙனம் வருத்தத்தில் இருக்கிறாய்?’’ என்று விசாரித்தார் நாரதர்.

``கத்ரு எனும் நாகக் கன்னிகைக்கும் அவளின் சகோதரி விநதைக்கும் இடையே உண்டான போட்டியை நீங்கள் அறிவீர்கள். என் வால் என்ன வண்ணத்தில் திகழ்கிறது என்பது குறித்துதான் அவர்களுக்கு இடையேயான வாக்குவாதமும் போட்டியும். என்னுடைய வால் கறுப்பு நிறத்தினாலானது என்பது கத்ருவின் வாதம். அதை மெய்ப்பிக்க வெண்மையான என் வாலில் தன் நாகக் குழந்தைகளைச் சுற்றிக்கொள்ளச் செய்தாள். கபடத்தால் சகோதரியை அடிமையாக்கினாள் என்பதை அறிவீர்கள்.

இந்த நிலையில், என் வாலில் சுற்றிய நாகங்களில் ஒன்றான தக்ஷகனின் விஷம் என் தொடைப் பகுதியைத் தாக்கியது. நான் பாற்கடலில் பிறந்த காரணத்தால், உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால் என் தூய வெண்மை நிறம் கொஞ்சம் கொஞ்சமாக பாழ்ப்பட்டு வருகிறது. இந்தக் கோலத்தில் நான் எப்படி தேவலோகம் செல்வது’’ என்று வருந்தியது.

சற்றுநேரம் சிந்தித்த நாரதர், ``சான்றோர் நிறைந்த தொண்டை நாட்டில், காஞ்சிபுரத்துக்கும் திருவண்ணாமலைக்கும் இடையே திருக்கோளிப்புதூர் திவ்ய க்ஷேத்திரம் ஒன்று உள்ளது. அங்கே வடக் குப் புறத்தில், குரா மரத்தடியில் சுயம்பு லிங்கமாக அருள்கிறார் குரேசப் பெருமான். சித்தர்கள் பலரும் மகரிஷிகளும் அந்தப் பெருமானை வழிபட்டு அருள்பெற்றிருக்கிறார்கள். நீயும் அங்கு சென்று ஈசனை வழிபட்டால், விமோசனம் பெறலாம்’’ என்று ஆலோசனையும் ஆசியும் கூறிச் சென்றார்.

வெண்புரவியும் நாரதர் குறிப்பிட்ட திருக்கோளிப்புதூர் எனப்படும் பெரிய கொழப்பலூர் தலத்தை அடைந்தது. அங்கே சேயாற்றில் நீராடி சுயம்புவாய் திகழும் குரேசப் பெருமானை நாவால் நக்கியும், நறுமணப் பூக்களால் அர்ச்சித்தும் வழிபட்டது. அதன் பக்தியை மெச்சிய சிவபெருமான், தன்னை ஒருமண்டல காலம் பூஜிக்கும்படி அசரீரியாக அருள்வாக்குக் கொடுத்தார்.

உமையம்மை
உமையம்மை
நந்தி
நந்தி
பிள்ளையார்
பிள்ளையார்


அதன்படி 48 நாட்கள் பூஜித்து வழிபட்டது வெண்புரவி. நிறைவில் உமையம்மையுடன் ரிஷபாரூடராக அந்தப் புரவிக்குக் காட்சி கொடுத்த சிவபெருமான், அதன் மேனியை மீண்டும் பொலிவுறச் செய்தார். புரவி மகிழ்ந்தது. ``இறைவா! உங்கள் மீதான பக்தியில் நான் மனம் குழைந்து பூஜித்த இந்தத் தலம் இனி `குழைசை’ என வழங்கப் பெற வேண்டும்’’ என்று வேண்டியது. இறைவனும் அப்படியே வரம் தர, அவரை வணங்கித் தொழுத வெண்புரவி தேவலோகத்தை அடைந்தது.

இங்ஙனம் வெள்ளைக் குதிரை வழிபட்டதால், இவ்வூர் இறைவனுக்கு ஸ்வேதபரீஸ்வரர் என்றும் ஸ்வேத அஸ்வேஸ்வரர் என்றும் திருப்பெயர்கள் உண்டு. அதேபோல் இப்பெருமான் குரா மரத்தடியில் அருள்வதால், திருக்குராவடி நாதர், திருக்குரா ஈஸ்வரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

அசுரர்களின் தொல்லைகளிலிருந்து விடுபடவும், அவர்களை வீழ்த்தவும் எண்ணிய இந்திரன், நாரதர் மூலம் இவ்வூரின் மகிமையை அறிந்து இந்தத் தலத்துக்கு வந்து சிவனாரை வழிபட்டுப் பேறுபெற்றான்.

இவ்வூரின் நிருதி திக்கில் பண்டக சாலை அமைத்து, நீரோடையும் உண்டாக்கினான். குபேரனை வேண்டி பூஜைக்குரிய பொன் பாத்திரங்களைப் பெற்றான். இவற்றைக் கொண்டு கார்த்திகை மாதம், பஞ்சமியும் சோமவாரமும் கூடும் நன்னாளில், காமதேனுவின் பாலால் இறைவனை அபிஷேகித்து, பட்டு வஸ்திரம் அணிவித்து, குபேரனிடம் பெற்ற பொன்னாபரணங்களைச் சூட்டினான். மந்தாரை, இருவாட்சி, கொன்றை, மல்லிகை, முல்லை போன்ற மலர்களைச் சமர்ப்பித்து வழிபட்டான்.

நிறைவில் உத்திராயனக் காலத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமி யும் சேர்ந்து வந்த நாளில் இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தந்து இந்திரனுக்கு அருள்புரிந்தார். அத்துடன், ததீசி முனிவரின் முதுகெலும்பில் வஜ்ராயுதம் செய்யும் சூட்சுமத்தையும், `அதில் யாமும் பராசக்தியும் அந்த ஆயுதத்தில் சூலக்குறிகளாகத் திகழ்ந்து உனக்கு வெற்றி அளிப்போம்’ என்ற வரத்தையும் தந்தருளினாராம் இறைவன்.

இந்திரன் மலர்வனம் அமைத்து தியானித்த இடம் இன்றும் `இந்திர வனம்’ என்று அழைக்கப்படுகிறது. மட்டுமன்றி, இத்தலத்துக்கு அருகில் கங்காபுரம் எனும் இடத்திலுள்ள துர்வாசரால் பூஜிக்கப்பட்ட கங்காதேஸ்வரரையும் சேயாற்றின் வடகரையில் விநாயகபுரம் எனும் இடத்தில் உள்ள தேவநாயகி உடனமர் விருபாட்சீஸ்வரரையும் இந்திரன் வழிபட்டதாக தலவரலாறு கூறுகிறது.

ஊரின் வடக்கே அமைந்துள்ளது ஈசனின் ஆலயம். ஸ்வாமி கிழக்கு நோக்கி அருள்கிறார். இரண்டு கோஷ்டங்கள் உள்ளன. கருவறையில், குதிரையின் குளம்படி பட்ட அடையாளத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார் ஸ்வேத அஸ்வேஸ்வரர். அம்பாள் சிவசுந்தரி சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. அம்பாள் திரிபுரசுந்தரி என்றும் அழைக்கப்படுகின்றாள்.

ஆலயத்தின் வாயு மூலையில் வாயு லிங்கம், ஈசான்ய திசையில் பரமேச கூபம் கிணறு ஆகியன உள்ளன. சோழர்காலத்துக் கல்வெட்டு களும் இங்கே உள்ளன. கார்த்திகை பிரம்மோற்சவம் நடத்தவும், தூங்கா விளக்கெரிக்கவும், பசுமடம் பராமரிப்புக்காகவும், ஆதிசைவ அந்தணர்களுக்கு உடை - உறைவிடம் - உணவுக்காகவும் கண்டராதித்தச் சோழர் நிலங்கள் அளித்த தகவலை இங்குள்ள கல்வெட்டு மூலம் அறியலாம். இவர் இங்கு திருக்குளங்கள் எடுப்பித்து, கோட்டை அமைத்து வாழ்ந்துள்ளார்; இவ்வாலயத்தின் திருப்பணிகள் பலவற்றைச் செய்துள்ளார் என்ற தகவலும் உண்டு.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கால பூஜை நடக்கும் ஆலயம் இது. ஆலயத்தின் எதிரில் உள்ள ஸ்வேத அஸ்வ தீர்த்தம் சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. தலவிருட்சம் குரா மரம். ஆலய வளாகத்தின் உள்ளேயே பூந்தோட்டம் அமைந்திருப்பது சிறப்பு.

அஸ்வமாகிய குதிரை வழிபட்டதால் அஸ்வினி நட்சத்திரப் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது இந்த ஆலயம். வெள்ளைக் குதிரை இழந்த பொலிவை மீண்டும் பெற்ற தலம், இந்திரன் தன் செல்வாக்கை அதிகாரத்தை மீட்டெடுக்க வரம் தந்த க்ஷேத்திரம் இது அல்லவா? ஆகவே நாமும் இழந்த செல்வங்களையும் செல்வாக்கினையும் மீண்டும் பெற இந்த ஆலயத்துக்குக் குடும்பத்துடன் சென்று வழிபட்டு வரம் பெறலாம்!

எப்படிச் செல்வது? திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப் பட்டிலிருந்து ஆரணி செல்லும் நெடுஞ்சாலையில், சேத்துப்பட்டில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பெரிய கொழப்பலூர்.

மண் பானை சொல்லும் பாடம்!

உடைந்துபோன ஒரு மண்பானையின் கழுத்து பூமியில் கிடந்தது. வழிப்போக்கன் ஒருவன் அதைக் கவனிக்காமல், கால்களால் மிதிக்கப் போனான்.

`மிதிக்காதே' என்று பானையின் கழுத்து சத்தமிட்டது.

`இனி உனக்கென்ன வாழ்வு? உன்னை மிதித்தாலென்ன, உடைத்தாலென்ன? நீ இப்போது பானையல்ல. உடைந்து போன வெறும் கழுத்து' என்றான் வழிப்போக்கன்.

`முன்பு நான் பானை, இப்போது கழுத்து, நாளை மீண்டும் களிமண். பிறகு, ஒரு புதிய பானை. ஆனால், நீ?' என்று கேட்டு, பானையின் கழுத்து சிரித்தது. வழிப்போக்கன் அதைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு நடந்தான்.

பானை உடைந்தால் மீண்டும் பானையாக வழி உண்டு. மனிதன் இறந்தால், அந்தச் சாம்பலைக் கொண்டு என்ன செய்ய முடியும்? ஆகவே, இருக்கும் வரையிலும், ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கை முறையால் சிறக்க வேண்டும். பிறருக்கு உதவிகள் புரிந்து அவர்களின் மனதில் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும்.

-சி.கீதா, முசிறி