
திருமகள், இவ்வூரில் தங்கியிருந்த போதுதான் ஸ்ரீநிவாஸப் பெருமாள் தன்னைத் தேடி பூலோகம் வந்துவிட்டார் என்ற தகவலை அறிந்தாளாம்.
காஞ்சி அத்தி வரதர், பழைய சீவரம் ஆதிவரதர், ஆட்சிப்பாக்கம் அட்சய வரதர் இம்மூவருமே மண்ணுலகுக்கு வந்த ஆதியான வடிவங்கள் என்கின்றன ஞான நூல்கள்.
காஞ்சிபுரம், பழைய சீவரம், ஆட்சிப்பாக்கம் ஆகிய மூன்று தலங்களிலும் ஒரே நாளில் கருடசேவை நடைபெறுமாம். மூவருமே வரதர் என்பதால் இப்படியான ஏற்பாடு என்கிறார்கள். காஞ்சி, பழைய சீவரம், திண்டிவனம் அருகேயுள்ள ஆட்சிப்பாக்கம் வரதர் மூவரையும் ஒரே நாளில் தரிசித்தால், பூலோக வாழ்வுக்குத் தேவையான சகல சம்பத்துகளும் பொங்கிப் பெருகும். வாழ்வின் நிறைவில் முக்தியும், வைகுந்த பதவியும் வாய்க்கும் என்கிறார்கள்.
மும்மூர்த்திகளில் யார் பொறுமை மிக்கவர் என்று சோதிக்கப் புறப்பட்ட பிருகு முனிவர் எட்டி உதைத்ததால் திருமகள் கோபம் கொண்டு பூமிக்கு வந்த புராணம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அப்படி பூலோகம் வந்தவள் தென்பரதக் கண்டத்தில் பல திருத்தலங்களில் தங்கி தவமியற்றினாள் என்கின்றன புராணங்கள்.
அவ்வாறு அலைமகள் தங்கியிருந்து தவம்புரிந்த தலங்களில் ஒன்றுதான் ஆட்சிப்பாக்கம். இந்தத் தலத்தில்தான், குபேரன் தான் இழந்த நவநிதிகளையும் திரும்பப் பெற்றாராம். ஆம்! குபேரனுக்கு அருள்பாலித்ததால் அளகாபுரி; திருமகள் விஜயம் செய்ததால் விஜயபட்டினம் ஆகிய சிறப்புப் பெயர்களைப் பெற்றுத் திகழ்கிறது ஆட்சிப்பாக்கம். அட்சயபுரி என்ற ஒரு திருப்பெயரும் இதற்கு உண்டு.

திருமகள், இவ்வூரில் தங்கியிருந்த போதுதான் ஸ்ரீநிவாஸப் பெருமாள் தன்னைத் தேடி பூலோகம் வந்துவிட்டார் என்ற தகவலை அறிந்தாளாம். விரைவில் திருமாலை அடையப்போகிறோம் என்று எண்ணி மகிழ்ந்தாளாம். அப்போது தன்னைச் சேவிக்க வந்த தேவர்களுக்கு வேண்டிய வரங்களை வாரி வழங்கினாளாம். அதனால் இந்த ஊர் அட்சயபுரி என்றும் அழைக்கப்படுகிறது.
திருவேங்கடவன் திருமலையில் எழுந்தருளிய பிறகு, திருமகளை மகிழ்விக்கும் விதமாக அவள் பூலோகத்தில் தங்கி தவம் செய்த எல்லாத் தலங்களிலும் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக எழுந்தருளி, அங்குள்ள அன்பர்களுக்குக் காட்சியளித்தாராம்.
அவ்வண்ணம் ஆட்சிப்பாக்கத்திலும் தேவியர் சமேதராக, அருள்மிகு அட்சய வரதராக, அள்ளித்தரும் கலியுக வள்ளலாக எழுந்தருளினாராம். திருமகளும் கொடையில் சிறந்த பெருந்தேவித் தாயாராக இங்கு அருள்பாலிக்கிறார். பெருமாளின் திவ்ய கோலத்தை தரிசித்த தேவர்கள், இங்கேயே அவருக்கு அழகிய ஆலயம் எழுப்பி, பிரமோற்சவ விழா எடுத்துக் கொண்டாடினார்கள் என்கிறது தலபுராணம்.
வடதேசத்தில் சீரும் சிறப்புமாய் ஆட்சி செய்துகொண்டிருந்த மன்னன் ப்ருவரன். எதிரிகளால் நாட்டை இழந்தான். இதனால் ப்ருவரன் வெகுதூரம் பயணித்து இந்த அட்சய புரியை (ஆட்சிப்பாக்கம்) வந்தடைந்தான். சிதைந்துகிடந்த பெருமாளின் ஆலயத்திலேயே தங்கி வழிபாடு செய்துவந்தான். இந்த நிலையில் அந்த ஊருக்கு வந்த முனிவரிடம், தனக்கு ஏன் இப்படியான நிலை என்று கேட்டான். அவர் அவனுடைய முன்வினையை எடுத்துச் சொன்னார். முற்பிறப்பில் திருடனாக இருந்ததால் இந்த நிலை என்றும் அவர் சொன்னார்.

முற்பிறப்பில் திருடனாக இருந்தேன் என்றால், இப்பிறப்பில் நான் மன்னனாகப் பிறப்பெடுக்கும் பாக்கியம் கிடைத்தது எப்படி, இப்போது பெருமாளுக்குச் சேவகம் செய்யும் பேறு கிடைத்தது எப்படி என்று கேட்டான் மன்னன். ‘‘திருடனாக இருந்த அதே பிறப்பில் ஒரு யோகியைக் காப்பாற்றும் புண்ணிய காரியமும் செய்தாய்'' என்று சொன்னார் முனிவர். ‘‘முற்பிறவியில் நீ யோகியைக் காப்பாற்றிய இடம் இந்த அட்சயபுரிதான்'' என்றும் சொன்னார்.
‘‘அதனால் இந்த அட்சய வரதரை விடாமல் பிடித்துக்கொள். நீ இழந்தவற்றை மட்டுமல்ல அந்த இந்திரலோகத்தையே அவரிடம் வரமாகப் பெற்று மகிழலாம்’’ என்று கூறிய முனிவர் அவனிடம் விடைபெற்றார்.
அவர் சொன்னபடியே மன்னன் அட்சய வரதரைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டான். அனுதினமும் அவரை வழிபட்டு மகிழ்ந்தான். வரதரின் அருளால், இழந்த நாட்டையும் செல்வத்தையும் விரைவில் பெற்றான். இந்தத் தலத்தில் அட்சய வரதருக்குச் சிறப்பாகக் கோயில் எழுப்பி, நிவந்தங்களும் எழுதிவைத்தான். ஆண்டுக்கு 13 திருவிழாக்கள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்தான் என்கிறது தலபுராணம்.
இத்தகு புராண - புராதனப் பெருமைகள் கொண்ட திருத்தலத்தில், நடுநாயகமாக அமைந்திருக்கிறது அருள்மிகு அட்சயவரதர் ஆலயம். ஒற்றைப் பிராகாரம் கொண்ட இந்தக் கோயிலில் ஸ்ரீஅட்சய வரதரும் ஸ்ரீபெருந்தேவி தாயாரும் எழில் கோலத்தில் அருள்கிறார்கள்.

நின்ற திருக்கோலத்தில் அருளும் அட்சயவரதர் மேலிரு கரங்களில் சங்கு-சக்கரம் ஏந்தி, கீழ் வலக் கரத்தால் அபயம் காட்டி, கீழ் இடக் கரத்தை இடுப்பில் தாங்கியபடி, தேவியருடன் காட்சி தருகிறார். தனிச் சந்நிதியில், அழகிய பெருந்தேவி தாயார் புன்னகை ததும்பும் எழில் வடிவில் வரப்பிரசாதியாக எழுந்தருளியுள்ளார். கருடாழ்வார், அனுமன் ஆகியோரையும் கோயிலில் தரிசிக்கலாம்.
பொங்கல் பாரி வேட்டை, வைகுண்ட ஏகாதசி என ஆண்டுக்கு 13 திருவிழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. பிரம்மனால் கொண்டாடப்பட்ட வைகாசி பிரம்மோற்சவ விழா இங்கு பன்னெடுங்காலமாக நடைபெற்றுவருகிறது. சோழர்களும், பிற்காலப் பாண்டியர்களும், நாயக்க மன்னர்களும் திருப்பணிகள் செய்து கொண்டாடிய ஆலயம் இது என்பதற்குச் சான்றாகக் கல்வெட்டுகள் உண்டு.
ஆட்சிப்பாக்கத்துக்கு ஒருமுறையேனும் சென்று அட்சய வரதராஜரை தரிசித்தால் போதும், அவர் அருளால் நாம் வேண்டியது கிடைக்கும், இழந்த பதவி, தொலைத்த செல்வம், உதறிய உறவுகள் யாவற்றையும் மீண்டும் பெறலாம் என்று சத்திய சாட்சி சொல்கிறார்கள் இங்குள்ள பெரியோர்கள்.
பிள்ளை வரம் அருளும் கலசத் தீர்த்தம்: வைகாசி பிரம்மோற்சவத்தின்போது இவ்வூரில் நிகழும் கலசப் பூஜை மிகவும் சிறப்பானது. 10 நாள்களும் யாக குண்டத்தில் வைத்து வேத மந்திரங்களால் பூஜிக்கப்படும் கலச நீரை, பெருமாளுக்கு அபிஷேகம் செய்து அதை பக்தர்கள்மீதும் தெளிக்கிறார்கள். இந்தப் புனித நீரில் நனைந்தால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அட்சய வரதராகவும் பெருந்தேவி தாயாகவும் இங்கே திருமாலும் திருமகளும் வீற்றிருப்பதால், திருமண வரம் வேண்டியும் செல்வவளம் வேண்டியும் வருபவர்களும் அநேகம் என்கிறார்கள். திண்டிவனத்திலிருந்து ஆவணிப்பூர் செல்லும் வழியில் 22 கி.மீ தொலைவில் உள்ளது ஆட்சிப்பாக்கம்.