
ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர் ஆலயத்தில் ஶ்ரீலட்சுமிகுபேர பூஜை - அட்சய அர்ச்சனை வைபவம்!
திண்டிவனம் ஆட்சிப்பாக்கம் ஶ்ரீபெருந் தேவி தாயார் சமேத ஶ்ரீஅட்சயவரதர் திருக் கோயிலில், அட்சயதிருதியை திருநாளில் (மே.14), சக்தி விகடன் மற்றும் ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் இணைந்து வழங்கிய ஶ்ரீலட்சுமி குபேர பூஜை - சாம்ராஜ்ய லட்சுமி குபேர மகா ஹோமம் சிறப்புற நடைபெற்றன.

அன்று காலையில் 8:30 மணியளவில் கோபூஜையுடன் தொடங்கியது இந்த வைபவம். தொடர்ந்து வாசகர்களின் பிரார்த்தனைகள், அவர்களின் பெயர்-நட்சத்திரத்துடன் சங்கல் பம் செய்யப்பட பிறகு ஹோமம் ஆரம்பித்தது.
குபேர ஹோமத்தில் வாசகர்களின் நன்மை வேண்டியும், அவர்களின் பிரார்த்தனைகள் விரைவில் பலிக்கும் பொருட்டும், வறுமை நீங்கி அவர்களின் வாழ்வில் பொன்-பொருள் ஆபரண யோகம் செழிக்கவும், உலக மக்கள் பிணியில்லா பெருவாழ்வு பெறும்விதமான வேண்டுதலோடும் சகலவிதமான புனித சமித்துக்களும் சமர்ப்பிக்கப்பட்டு ஹோம வழிபாடு செய்யப் பட்டது. தொடர்ந்து, வில்வம் முதலான தளங்கள் மற்றும் பூக்களால் கூடிய அட்சய அர்ச்சனையும் ஶ்ரீலட்சுமிகுபேர பூஜை யும் நடைபெற்றன. கோயில் பிராகாரத்தில் ஶ்ரீதேவி பூதேவியுடன் அட்சயவரதரின் திரு வுலாவும் நடைபெற்றது. பெருந்தொற்றுக் கட்டுப்பாடு விதிமுறைகளைக் கடைப்பிடித்து நடைபெற்ற வைபவ ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் சிறப்புற செய்திருந்தனர்.


குபேரனுக்கு நவநிதிகளை மீண்டும் அருளிய தலத்தில் - சாம்ராஜ்ய லட்சுமியின் சாந்நித்தியம் பொங்கிப் பெருகும் புண்ணியத் தலத்தில் சிறப்புடன் நடைபெற்ற வைபவங் களால், பெரும் புண்ணியம் கிடைக்கும். சங்கல்பித்துக்கொண்ட வாசகர்கள் வீட்டில் சகல சுபிட்சங்களும் பொங்கிப் பெருகும். அவர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் விரைவில் பலிக்கும்.
அதற்கு ஶ்ரீஅட்சயவரதரின் திருவருள் ஸித்திக்கட்டும் என்று அந்தப் பெருமாளை வேண்டி வணங்கி விடைபெற்றோம்.