Published:Updated:

ஹஸ்தி சைலம்

அத்திவரதர்
பிரீமியம் ஸ்டோரி
News
அத்திவரதர்

1937-ல் நிகழ்ந்த அத்திவரதர் வைபவத்தையொட்டிய சிறப்புக் கட்டுரை

ண்டைத் தமிழ் நாட்டில், சில கோயில்களும் அவற்றிலுள்ள தெய்வ மூர்த்தங்களும் மரத்தினாலானவை என்று தெரிகிறது. கருங்காலி, அத்தி, சந்தனம் இவை போன்ற மரங்களே இந்த வேலைக்கு உபயோகமாயிருந்தன. இன்றும் திருவனந்தபுரத்தில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள், இலுப்பை மரத்தால் ஆனவர். கச்சியில் காட்சி தரும் நெடுமாலின் பழைய பிரதிமையும் அத்தி மரத்தால் செய்யப்பட்டதே.

அத்திமரத்துக்கு `ஔடும்பர விருக்ஷம்' என்று பெயர். அது விஷ்ணுவின் ரூபமென்று சொல்லுவார்கள். ஆகையால், இந்தப் பிரதிமைக்கு அளவற்ற மகிமையிருந்தது. சிற்பிகளின் உளிக்குச் சமைந்து இருப்பது இந்த மரம். இதில் அமையும் சிற்பம் வழவழப்பாகவும் லேசாகவும் இருக்கும். இந்த அபூர்வ மரப்பதுமையால், வரதர் கோயிலுக்கு அத்திசைலமென்ற நாமகரணம் ஏற்பட்டிருக்கலாம்.

ஹஸ்தி சைலம்

இன்றைக்குச் சுமார் 500 வருஷங்களுக்கு முன்பு, அத்தி மரத்தாலான இந்த வரதர் இக்கோயிலில் மூலவராக விளங்கினார். விக்கிரகத்திற்குப் பல இடங்களில் பின்னங்கள் ஏற்பட்டன. பிற்காலத் தில், விஜயநகர சாம்ராஜ்ஜியாதிபதி பழைய வரதர் கோயிலைப் புதுப்பித்துப் பெரிதாகக் கட்டி, ஏறக்குறைய அந்த மரப் பதுமையின் அழகு வாய்ந்த மற்றொரு கற்சிலையை ஸ்தாபனம் செய்தார். இந்த அத்திப் பதுமை கோயிலிலுள்ள அனந்தசரஸ் தீர்த்தத்தில் அமிழ்த்தப்பட்டது. 50 வருஷங்களுக்கு ஒருமுறை, வறட்சிக் காலத்தில் குளம் வற்றியவுடன் சகலரும் கண்டு சேவிக்க வரதரை வெளியே எடுக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இவ்வருஷம் அத்தகைய சந்தர்ப்பம் ஒன்று கிட்டியது. காஞ்சி மண்டலத்தைச் சேர்ந்தவனான நானும் அதைக் கைநழுவ விடவில்லை. அந்த செளந்தர்ய மூர்த்தியைப் பார்க்க வரும் பக்த கோடிகளுள் ஒருவனாக நானும் கச்சிக்குச் சென்றிருந்தேன். சங்கு சக்ர கதாபாணீயான அந்த வனமாலியைக் கண்டேன்; கலிதீர்ந்தேன். ஜன நெருக்கத்தில் மூச்சுத் திணறி உயிர்மீண்டேன். அனந்தசரஸ் கரையிலுள்ள மண்டபத்தில் சற்றுச் சுத்தக் காற்றுக்காக நான் வந்து சாய்ந்தவுடன், இந்தக் கோயிலின் அமைப்பு, அத்திப் பதுமையின் வடிவழகு, ஹரிநாம கோஷம், எதிரே குளத்திலிருக்கும் நீராழி மண்டபம், நான் படித்த சரித்திர வரலாறு - எல்லாம் ஒன்றுகூடி என் மூளையில் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டன. களைப்பும் என் கண்ணிமைகளை அழுத்தியது. அனந்த சரஸிலுள்ள நீராழி மண்டபம் சட்டென்று ஒரு செங்கமல மலராக மாறிற்று. கற்பனைச் சித்திரங்கள் ஒவ்வொன்றாகப் புறப்பட்டன...

ங்க ரேக்குப் போன்ற சரீரமும் சாந்த முக பாவனையுமுடைய ஒரு தேஜஸ்வி, ஹரியின் குண கீர்த்தனங்களைப் பாடியவண்ணம் குளத்து நீரில் ஸ்நானம் செய்துகொண்டிருந்தார். ஸ்நானம் ஜபம் முடிந்ததும் நெற்றியில் திலகமிட்டுச் சென்னியில் துழாய் மாலையைச் சுற்றிக்கொண்டு நீர்க் கலசத்துடன் வரதராஜப் பெருமானின் சந்நிதானத்தை அடைந்தார். அங்கு வெகுநேரம் பகவத் பிரேமையில் ஈடுபட்டுப் பாடிக் கொண்டிருந்தார். பிரதி தினமும் இப்படிப் பகவானை தரிசனம் செய்த பிறகே, இந்தப் பரம வைஷ்ணவர் உஞ்சவிருத்திக்காகச் செல்வது வழக்கம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தெய்வப் புலமை வாய்ந்த இந்த ஸ்ரீதர ஸ்வாமிக்கு அநேக சிஷ்யர்கள் - சம்சாரத்தைத் துறந்தவர்களே இவரை அண்டினர். விஷ்ணு சம்பந்தமான அரிய கீதங்களும் அஷ்டபதிகளும் இவர் இயற்றிப் பல ராகதாளங்கள் அமைத்துப் பாடிவந்தார். பக்தியின் வெள்ளம் கச்சிநகர் முழுவதும் பெருகிச் சென்றது. தாம் கனவிலும் நினைவிலும் காணும் திருமால் இந்த அத்திவரதரையொத்து இருக்கவே, இந்த வைஷ்ணவக் குரவர் கச்சியையே வைகுண்டமாகப் பாவித்து வரதன் இருக்கும் ஊரைவிட்டு அரைக் கணமேனும் பிரியாமல் இருந்து வந்தார்.

வரதராஜப் பெருமாளின் கோயில் மரத்தினால் ஆனதால் அது உளுத்துக்கொண்டே அழிவிற்கு வந்துவிட்டது. தன் இஷ்டதெய்வம் இடமிராது தவிக்குமோ என்ற பெரும் ஏக்கம் இந்த வைஷ்ணவரின் மனதை வாட்ட ஆரம்பித்தது.

ஹஸ்தி சைலம்

ஏழையான அவர் எங்ஙனம் கோயிலைப் புதுப்பிப்பார்? அவருடைய சிஷ்யர்களோ பரம தரித்திரர்கள். அவ்வூர்ச் சிற்றரசனும் இதில் அக்கறைச் செலுத்தவில்லை. ஸ்ரீதர ஸ்வாமி மட்டும் நம்பிக்கையை விடாமல் தினந்தோறும் தம் மனதிடை பிரமாண்டமான ஆலயமொன்றைக் கட்டிக்கொண்டிருந்தார். பக்தியெனும் தூபதீப நைவேத்தியங்களைத் தம் மனோ தெய்வத்திற்குச் சமர்ப்பித்து வந்தார்.

விஜயநகரத்து சாம்ராஜ்ஜியாதிபதி கிருஷ்ணதேவனின் கொலுவில் தமிழ்நாட்டுப் பாடகர்கள் சிலர் திவ்யப் பிரபந்தத்திலிருந்து அழகிய பாக்களையும் ஸ்ரீதர ஸ்வாமியின் கீர்த்தனங்களையும் பாடி அரசனை மகிழ்வித்தனர். ஆண்டாள் திருப்பாவையும், ஸ்ரீதரரின் விஷ்ணு விலாஸ காவ்யமும் அவனுக்கு எல்லாவற்றைக் காட்டிலும் பிடித்திருந்தன. இவை இரண்டிலும் மிளிரும் நாயக - நாயகி பாவனைகளே அவனைத் தெலுங்கு பாஷையில் ‘ஆமுக்த மால்யதா’ (சூடிக்கொடுத்த மாலை) என்ற சிறந்த காவியத்தை எழுதத் தூண்டின. ஒருநாள், அவனுக்குத் தன் ஆட்சியிலிருக்கும் அந்தக் கச்சியம்பதியைக் காண ஆவல் ஏற்பட்டது.

புராதனப் பிரசித்தியுடைய காஞ்சி க்ஷேத்திரத்தை வந்து அடைந்தான். அரசனின் வருகையைக்கூட லட்சியம் செய்யாமல் அகலமானதோர் ராஜவீதியில் பெருவெள்ளமாக ஜனங்கள் நின்றார்கள். விஷயம் என்னவென்று தன் அமாத்தியன் ஒருவனை விசாரிக்க அவன், “பிரபோ! ஸ்ரீதர ஸ்வாமியின் தேவகானத்தைப் பருகவே இவர்கள் இப்படிப் புரண்டுச் செல்கிறார்கள். அதோ வருகிறாரே, அந்த மகா புருஷர்தான் ஸ்ரீதர ஸ்வாமி” என்றான். தேவராயன் மூக்கில் விரலை வைத்தபடியே ஹரிநாமத்தைக் கோஷித்துச் செல்லும் ஜனப் பிரவாகத்தைப் பார்த்து நின்றான். கும்பலின் நடுவிலிருந்து ஒரு திவ்ய கண்டம், சம்ஸ்கிருத கீதங்களைப் பாடுவது அவன் செவிக்கு எட்டியது. தேவராயனின் உள்ளத்தில் அவ்வழகிய மொழி இன்ப ரசத்தைப் பொழிந்தது.

ஸ்ரீதரர் பாடும் ஓர் அஷ்டபதி அரசனை என்னமோ செய்துவிட்டது. அரசனும் அதன் தாளத்திற்கேற்பக் குதிக்கலானான். தன்னையும் மீறி ஹரியின் நாமாவளியை உச்சரித்தான். இருப்புக்கொள்ளாமல் ஜனத்திரளை நோக்கி ஓடினான். வைஷ்ணவோத்தமரும் அரசனைத் தழுவிக்கொண்டு, ‘இதுவும் உன் கிருபையா’ என்ற அர்த்தத்தையுடைய ஒரு பாட்டைப் பாடினார். கிருஷ்ணதேவன் உள்ளம் குழைய, விழிகளிலிருந்து பக்தியின் மாரி பெய்ய அவரை விளித்து, “ஹே மஹாநுபாவா! என்னை உம்முடைய அடிமையாக்கிக் கொள்ளும். எனக்கு நாடும் வேண்டாம்; நிதியும் வேண்டாம். உமது கானாம்ருதமே எனக்குப் போதும்” என்றான் தழுதழுத்தக் குரலுடன்.

ஹஸ்தி சைலம்

அதற்கு ஸ்ரீதரர், “அரசே ! நீ சாம்ராஜ்ஜியாதிபதி. விஷ்ணுவின் அம்சமாயிற்றே. உன்னுடைய பராக்கிரமத்தால் அல்லவோ இந்த நாடு மிலேச்சர்கள் கையில் சிக்காமல் இருக்கிறது! நீ ராஜ்ஜியம் துறக்கவேண்டாம். இதோ இந்தக் கரிவரதனுடைய கோயிலைப் புதுப்பித்து, ஹரியின் பிரேமையை நாடுமுழுவதும் பரவச் செய்ய வேண்டும். இந்த ஆலயம் என்றும் சாசுவதமாக இருக்கும்படி தர்ம கைங்கர்யம் செய்வாய். இதுவே எனக்கு நீ செய்யும் பணிவிடை.

என் மனதில் இத்தனை நாளாக வரதனுக்கு ஒரு கோயிலைக் கட்டிக்கொண்டிருக்கிறேன். சாட்சாத் வைகுண்டவாசனே உன்னை இதைச் செய்யும்படி ஏவியிருக்கிறார். நீ உடனே இந்தக் காரியத்தில் முனைவாய்” என்று கூறி ஹரியின் மகிமையை வியந்து ஜயஜயந்தி ராகத்தில் ‘உன் மனதை யாரறிவார்’ என்ற சம்ஸ்கிருத கிருதியை உருக்கமாகப் பாடினார். அரசன், `இந்த ஒரு பாட்டிற்கே என் ராஜ்ஜியத்தைக் கொடுத்துவிடலாமே' என்று எண்ணியவனாய், ஸ்ரீதரரின் பாததூளியைச் சிரமேற்கொண்டு. ‘தன்யனானேன், தயாபரனே’ என்று உடல் சிலிர்க்க ஹரிகோஷம் செய்துகொண்டே தன் மனையை அடைந்தான்.

ரதர் வீற்றிருக்கும் பழைய ஆலயத்தின் முன் பெரிய பெரிய பாறைகள் வந்து குவியலாயின. ஆயிரக்கணக்கான சிற்பிகளின் உளிகளிலிருந்து அழகிய தூண்களும், முகப்புகளும், ஆளிகளும் தோன்றலாயின. பிராகாரங்களும் அலங்கார மண்டபங்களும், ஊஞ்சல் மண்டபங்களும், ஆனை மாடங்களும் கண்களைக் கவர்வனவாயிருந்தன.

மேற்குப் புறமாக அந்தணர் வீதியைப் பார்த்தாற்போல் அகலமான கோபுரமும் - கிழக்கே உயர்ந்த சிகரங்களையுடைய விண் அளாவும் கோபுரமும் நகரின் எழிலை இன்னும் எடுத்துக்காட்டின. கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி மழையிலும் கஷ்டமிராது வரதப்பன் பவனி வர, தாழ்வாரங்களும் மாடங்களும் ஏற்படலாயின. சுவர்களில் விஷ்ணு லீலைகளைக் காட்ட ஓவியர்கள் சித்திரங்கள் வரைந்திருந்தார்கள். அவற்றின் வர்ண கோலம் கண்ணைப் பறித்தது.

வைகாசிப் பூர்ணிமைக்காக எல்லோரும் காத்திருந்தனர். அன்றுதான் சிலா ஸ்தாபனமும் மூர்த்தி ஆவாஹனமும், கும்பாபிஷேகமும். பழைய மரக்கோயில் இப்போது வைகுண்டமாகவே விளங்கிற்று. அடிக்கடி கிருஷ்ணதேவன் தன் அரசியல் தொல்லைகளுக்கு இடையே காஞ்சிக்கு விஜயம் செய்து, திருப்பணியை நேரில் கவனித்தானென்றால் சொல்லவும் வேண்டுமா? இந்த மகாப் பிரயத்தனத்தை இனிது முடித்தவர் ஸ்ரீதரஸ்வாமி என்றே அரசன் கருதினான். அவருக்கு அவன் ‘ஸார்வபௌமர்’ என்ற பட்டத்தை அளித்தான்.

டுத்த தினம் வைசாகப் பூர்ணிமை. கோயிலில், இரவு வெகுநேரம்வரை மறுநாளைக்குச் செய்யவேண்டிய ஏற்பாடுகளை நடத்துவதில் மும்முரமாக இருந்தனர் பணியாள்கள். பாதி ராத்திரியில் எவர்க்கும் நித்திரை ஏற்படுவது சகஜம். தொழிலாளர் மூலைக்கு ஒருவராகப் படுத்துக்கொண்டனர்.

அன்று இரவு வெகுநேரம்வரை கீர்த்தனங்களைப் பாடிப் பின் கண்ணயர்ந்தவர். ஓர் அபூர்வ கனவு கண்டார் ஸ்ரீதரர். பெரிய சுடர் வட்டத்தினுள் புன்முறுவலுடன் ஜகன்மாயையான

ஸ்ரீமகாவிஷ்ணு பிரசன்னமாகி, “அன்பனே! நாளைக்கு உன்னை நான் ஆட்கொள்கிறேன். வைகறையில் என் சாந்நித்தியத்தை வந்து அடை” என்று சொன்னது போலிருந்தது.

அந்த வார்த்தைகள் தேவவாணீ வீணையின் நாதம் போல் ஒலித்துக்கொண்டிருந்தது. சட்டென்று விழித்துக்கொண்டு ஸ்ரீதரர் என்றுமிராத பேரானந்தம் முகத்தில் பிரதிபலிக்க, “பக்தவத்சலா, எனக்கு உன் இருபாதமலர் தாராய்...” என்று விஷ்ணுவின் செயலை வியந்து கூறிக்கொண்டே, தம் விடுதியைவிட்டு நேராக ஆலயத்தை அடைந்தார்.

‘பகவானுடன் இன்று ஐக்கியமாகப் போகிறோம்’ என்ற எண்ணம் வரும்போதெல்லாம் அவருடைய மெய் சிலிர்த்தது. உன்மத்தம் பிடித்தவர்போல் குளத்து நீரில் குதித்தார். கோயிலிலுள்ளவர் எவரும் இவருடைய போக்கைக் கவனிக்கவில்லை. எல்லோரும் நித்திராதேவியின் உபாசனையிலேயே ஈடுபட்டிருந்தனர். பொழிலிலுள்ள மலர்களை இன்னும் வண்டு வந்து முகரவில்லை. பனி தோய்ந்த புஷ்பங்களை அஞ்சலியாக எடுத்துக்கொண்டு படியேறித் திருமாலின் சந்நிதியை அடைந்தார். கர்ப்பக்கிரகத்தில் குத்துவிளக்குகள் அணையும் தறுவாயிலிருந்தன.

உள்ளத்தில் ஒளி கொண்டவருக்கு வெளி அந்தகாரம் ஒரு பொருட்டா! என்னவோ ஒன்று அவரை அந்த அபூர்வ அத்திப் பிரதிமையிடம் இழுத்துச் சென்றது. காதலர் இருவர் கூடி மகிழ்வது போல் அந்தப் பக்த சிரேஷ்டர் தம் இன்னுயிர் தெய்வமான அத்திவரதனுக்கு மாலையிட்டு அவரை இன்புறத் தழுவிக்கொண்டார். வெகு நாள்களாகப் பதிந்து இருந்த அந்த அத்திவரதரும் தம் பக்தனை அணைத்துக்கொள்ள இடம் பெயர்ந்து சாய்ந்தார்.

ஹஸ்தி சைலம்

அதே நேரம் கீழ்வானம் சிவக்க ஆரம்பித்தது. வைகறைத் தேவியை வந்திக்கப் புள்ளினம் இசைந்தன. காலையில் கர்ப்பக்கிரகத்திற்குப் பரிசாரகர்கள் வந்து அத்திவரதரின் பிரதிமை கீழே குப்புற விழுந்திருப்பதைப் பார்த்துத் திடுக்குற்றனர். அது விழுந்த காரணம் யாருக்குமே புலப்படவில்லை. அதை எடுத்து நிறுத்திவைக்கும் போது, கீழே அன்று பூத்த மலர்களாலான ஒரு மாலை கிடந்தது. அதன் மணம் இன்னும் வீசிக்கொண்டிருந்தது. மாலை அங்கு தோன்றிய அதிசயத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அத்திவரதருக்குப் பதில் கற்சிலை வரதர் வரப்போகிற குதூகலத்தால் இந்தப் பதுமைக்கு ஏற்பட்ட சிதைவுகளை அவர்கள் பொருட் படுத்தவில்லை.

தென்ன, தினமும் பொழுது புலரும்போதே பகவானை வந்து தோத்தரிக்கும் அந்தப் பரமபாகவதரைக் காணோமே! அவருக்காக ஆளை ஏவினான் அரசன். அவர் வீட்டிலும் இல்லை; எங்குமில்லை.

பெருமாள் மறைத்துக்கொண்ட பக்தமணியைத் தேட யாரால் சாத்தியம்? அரசன், மற்றும் அங்குள்ள யாவர் மனதிலும் ஏக காலத்தில் ஓர் எண்ணம் உதித்தது. “இது பகவானுடைய திருவிளையாடலாக இருக்குமோ. கீழேயிருக்கும் மாலைதான் அவர் விட்டுப்போன கடைசிச் சின்னமோ” என்று அதைக் கண்ணில் ஒற்றிக் கொண்டனர் அனைவரும். பட்டர்பிரான் மாயமாக மறைந்ததை நினைத்து அவர்களுக்கு சந்தோஷமும் துக்கமும் ஏற்பட்டன.

புதிய சிலையை நிறுத்தியதும், சிதைவுகள் ஏற்பட்ட அந்த மரப்பதுமையை அனந்தசரஸில் அமிழ்த்திவிட்டனர்.

ன்னுடைய கற்பனைத் தாமரையும் தன் இதழ்களை மெள்ள மூடிக் கொண்டது. களைப்பு நீங்கி என் கண்களும் திறந்தன. இப்போதிருக்கும் கோயில், குளம், மனிதர்கள், அரவம் யாவும் என்னைச் சுற்றியிருந்தன. பழைய யுகத்திலிருந்து மீண்டும் நான் தற்காலத்திற்கு வந்துவிட்டேன்.

ஆஹா! ஸ்வப்னத்தில் கேட்ட அந்த இனிய சாரீரத்தை மறுபடி எங்கு கேட்கப் போகிறேன்? நான் மெள்ள எழுந்து பிராகாரத்தை ஒரு பிரதக்ஷிணம் செய்துவிட்டு, ஹரியின் மஹிமையை நினைத்தவாறு வீடு திரும்பினேன்.

(26.9.1937 தேதியிட்ட ஆனந்தவிகடன் இதழிலிருந்து...)