`முழுமுதற் கடவுள்’ என்று போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். இவருக்குப் பிள்ளையார் என்றும் பெயர். இந்த உலகின் ஜகன்மாதா பார்வதி தேவிக்கும் ஆதியும் அந்தமும் இல்லாத அநாதியான பெருமான் சிவபெருமானுக்கும் பிள்ளை. முதற்பிள்ளை என்பதால் ஆர் என்னும் மரியாதை விகுதி சேர்த்து பிள்ளையார் என்று வழங்கும் வழக்கம் ஏற்பட்டது.

விநாயகருக்குச் செய்யும் வழிபாடென்பது ஒருவரை மூவுலகிலும் உயர்ந்து நிற்கச்செய்யும் என்பதை ஔவையார் வாழ்வில் சம்பவம் நமக்கு உணர்த்தும். ஒருமுறை, சேரமான் பெருமானும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் கயிலாயம் செல்லத் தீர்மானித்தனர். அப்போது வழியில் ஔவைப் பாட்டியையும் அழைத்துச் செல்லத் தீர்மானித்தனர். ஔவையைச் சந்திக்க அவர்கள் வந்தபோது, ஔவை விநாயக பூஜையில் ஈடுபட்டிருந்தார். பூஜை நீண்டநேரம் நீடிக்கவே, `பூஜையை முடித்துக்கொண்டு சீக்கிரம் வாருங்கள். கயிலாயம் செல்ல வேண்டும்' என்று அவசரப்படுத்தினர். ஆனால் ஔவையோ, `எனக்கு விநாயகர் பூஜையே முக்கியம் நீங்கள் வேண்டுமானால் கயிலாயம் செல்லுங்கள்' என்று சொல்லிவிட்டுப் பூஜையைத் தொடர்ந்தார்.

இருவரும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். பூஜை நிறைவுற்றது, விநாயகர் மகிழ்ந்து ஔவைக்கு தரிசனம் தந்தார். கூடவே ஔவையைத் தன் துதிக்கையால் சுமந்துகொண்டு விண்ணில் பறந்து இருவருக்கும் முன்பாக கயிலாயத்தில் இருக்குமாறு செய்தார். விநாயகரை வழிபட்டால் உலகில் அனைவருக்கும் முன்பாக உயர்ந்து நிற்கலாம் என்பதை அனைவரும் உணர்ந்துகொண்டனர்.

இத்தகைய சிறப்புகளை உடைய விநாயகப் பெருமான், ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி அன்று அவதரித்தார். எனவே ஆவணி மாத இறையருள் 'வினைகள் அகற்றும் விநாயகர் வழிபாடு' என்னும் மின்னிதழாக அமைகிறது.

சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், சௌரம், காணாபத்யம் என்னும் ஷண்மதங்களுள் கணபதியை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயத்துக்கு `காணாபத்யம்' என்று பெயர். அனைத்து ஆலயங்களிலும் விநாயகர் எழுந்தருளியிருப்பார். சிவன் கோயில்களில் விநாயகர், பிள்ளையார் என்ற திருநாமங்களோடும் வைணவத்தில் தும்பிக்கையாழ்வார் என்ற திருநாமத்தோடும் சந்நிதி கொண்டு அருள்பவர். கோயில்கள் மட்டுமன்றி நீர்நிலைகளின் ஓரத்திலும் மரங்களின் கீழும் எழுந்தருளி எளிய மக்களுக்கு அருள்பாலிப்பவர். இந்த உலகின் ரகசியம் பிரணவம். அந்தப் பிரணவத்தின் பொருளாக விளங்குபவர் விநாயகர். கண்பதியின் பெருமைகளையும் வழிபாட்டுச் சிறப்புகளையும், `கணபதி உபநிஷத்' என்கிற உபநிஷதம் விளக்குகிறது. இந்தியாவின் தொன்மையான வழிபாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் காணாபத்யம் பௌத்த மதப் பிரிவிலும் ஏற்பட்ட வழிபாடாகத் திகழ்ந்து கிழக்கு ஆசியா முழுவதும் பரவியிருக்கிறது. விநாயகரின் பெருமைகளைக்கூறும் புராணம், `விநாயக புராணம்' எனப்படும் `பார்கவ புராணம்' ஆகும். இந்தப் புராணத்தை பிரமன் சிவபெருமானிடம் கேட்டு அதை வியாசருக்கு உபதேசம் செய்தார். இந்தப் புராணத்தின்படி விநாயகரே முழுமுதற்கடவுள். இவரே மும்மூர்த்திகளையும் படைத்து, முத்தொழில்களையும் செய்யுமாறு கட்டளையிட்டார். ஒவ்வொரு கல்பத்தின் இறுதியில் உலகம் அழிந்து புதிய சிருஷ்டி தொடங்கும். அப்போது அனைத்து உயிர்களும் விநாயகருக்குள்ளேயே ஒடுங்கும் என்பதன் இந்தப் புராணத்தின் தாத்பர்யம். பிரளயத்திற்குப் பின் மூவுலகங்களையும் சிருஷ்டிக்க மீண்டும் விநாயகப் பெருமானே கட்டளையிடுவார் என்பது ஐதிகம். பிள்ளையாரின் ஒரு கை பாசத்தை ஏந்தி படைத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே பிரம்மா. தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது. எனவே, இவரே மகாவிஷ்ணு. துதிக்கை அனுக்கிரகம் செய்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது. எனவே, இவரே ருத்திரா். மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது. எனவே, இவரே சா்வ சக்தி படைத்த பரமேஸ்வரனாகவும் விநாயகரே விளங்குகிறார் என்கின்றன சாஸ்திரங்கள்.

`பார்க்கவ புராணம்’ விநாயகப் பெருமானின் அவதாரங்கள் குறித்தும் அவற்றுக்கான காரணங்கள் குறித்தும் விரிவாகக் கூறுகிறது. அதிலிருந்து சில தகவல்கள்...

வக்ரதுண்டர்: காசியை ஆட்சி செய்துவந்த `துராசுரன்' என்ற கொடுங்கோல் மன்னனை அழிக்கச் சிம்ம வாகனத்தில் விநாயகர், வக்ரதுண்டராக அவதாரம் மேற்கொண்டார். துண்டம் என்றால் மூக்கு என்று பெயர். வக்ர துண்டர் என்றால் வளைந்த மூக்கு அதாவது தும்பிக்கையை உடையவர் என்று பொருள். கணபதிக்குரிய காயத்ரி மந்திரத்திலேயே இடம்பெற்றிருக்கும் இந்தத் திருநாமம் மிகவும் சிறப்புவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சிந்தாமணி கணபதி: `கணன்' என்பவன் கபில மகரிஷியைத் துன்புறுத்தி அவரிடம் இருந்த சிந்தாமணியைக் கவர்ந்தான். கணனை அழித்து சிந்தாமணியை மீட்கப் பிள்ளையார் மேற்கொண்ட அவதாரம் இது. கஜானனர்: கஜமுகாசுரனைக் கொன்ற விநாயகரை `கஜானனர்' எனப் புராணங்கள் போற்றிப் புகழ்கின்றன. விக்ன விநாயகர்: கால நூபன் என்னும் அரக்கனைக் கொல்வதற்காக விநாயகர் மேற்கொண்ட ரூபமே `விக்ன விநாயகர்' என்று போற்றப்படுகிறது. வரேண்யன் என்பவனுக்கு விக்ன விநாயகர் உபதேசித்ததே `கணபதி கீதை' ஆயிற்று.

மயூரேச கணபதி: சங்கடஹர சதுர்த்தி விரதம் கடைப்பிடித்து வழிபட்ட பார்வதிதேவியிடம் அவதரித்து, மயில் வடிவினனான `ஸிந்து' என்ற அசுரனை அழித்து, அவனையே வாகனமாகக் கொண்டவர் இந்த விநாயகர்.

பாலசந்திரர்: தேவர்களை அடக்கியாண்ட அனலன் என்ற அசுரனை விநாயகர் விழுங்கினார். அதனால் உண்டான வெம்மை நீங்க, மிகக் குளிர்ச்சியான சந்திரனை நெற்றியில் அணிந்து பாலசந்திரர் என்று பெயர் பெற்றார்.

தூமகேது: புகை வடிவான அசுரன் ஒருவனை அழிப்பதற்காக அவதரித்தவர் `தூமகேது விநாயகர்'. மாதவன், ஸுமுதா என்ற அரச தம்பதிக்குப் பிள்ளையாகத் தோன்றி, தூம கேதுவை வதைத்தார்.

கணேசர்: பலி என்னும் அரக்கனைக் கொல்ல கணங்களுக்குத் தலைவனாக வந்து வெற்றி கண்டதால் கணேசர் என்ற திருப்பெயர் பெற்றார்.

கணபதி: பார்வதி பரமேசுவரர் யானையின் சித்திரத்தைப் பார்த்துக் களிக்கும்போது அவதரித்தவர் கணபதி.

மகோற்கடர்: காச்யப முனிவரின் பிரார்த்தனையால், அதிதியிடம் பிறந்தவர் 'மகோற்கடர்'. தேவாத்த நாராத்ரர்கள் இவரால் சம்ஹாரம் செய்யப்பட்டனர்.

துண்டி கணபதி: 'துராஸதன்' என்ற அரக்கனை அழிக்க, உமையவளின் திருவருளால் அவதரித்தவர் துண்டி கணபதி.

வல்லப கணபதி: மரீசி முனிவரின் மகள் வல்லபையை மணந்து `வல்லப கணபதி' என்று பெயர் பெற்றார்.

விக்னங்களை அகற்றுபவர் விக்னராஜன். ஆலயங்களிலும், ஆற்றங்கரைகளிலும் எழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமானைத் துதித்து வழிபடலாம். விநாயகருக்கான வழிபாடுகள் மிகவும் எளிமையானவை. அனைத்து பூஜைகளிலும் முதன்மையாகச் செய்யப்படுவது விக்னேஸ்வர பூஜை. பிரதான பூஜைக்கு முன்பாக, மண், மஞ்சள், சாணம், சந்தனம் என்று இவற்றில் ஒன்றைக்கொண்டு விநாயகர் சிலையைப் பிடித்துவைத்து பூஜை செய்வது வழக்கம். விக்னேஸ்வர பூஜை முடிந்த பிறகே பிற பிரதான பூஜைகள் தொடங்கும். நெற்றியின் இருபுறமும் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் இட்டு விநாயகரை வழிபடுவது வழக்கம். விநாயகருக்கு அறுகம்புல் மாலை, தும்பைப்பூ மற்றும் எருக்கம்பூ ஆகிய எளிய மாலைகளைச் சாத்த வேண்டும். அறுகம்புல் விநாயகருக்கு மிகவும் விசேஷம். விநாயகரை வேண்டிக்கொண்டு சிதறு தேங்காய் உடைப்பது வழக்கம். நம் வினைகள் எல்லாம் அதன் மூலம் சிதறிப்போகும் என்பது ஐதிகம். பொதுவாக, 16 வகையான பட்சணங்களை விநாயகருக்குப் படைக்கலாம். அவை... கொழுக்கட்டை, பால், தயிர், தேன், அவல்,பொரி, கடலை, சர்க்கரை, பேரீட்சை, தேங்காய், விளாம்பழம், வாழைப்பழம், கொய்யா, மாதுளை, லட்டு மற்றும் சுண்டல். பக்தியோடு சமர்ப்பிக்கும் எதையும் விநாயகர் அன்புடன் ஏற்பார். விநாயகரை வழிபட உகந்த நாள் சதுர்த்தி திதி. வளர்பிறை தேய்பிறை ஆகிய இரண்டு திதிகளின் போதும் விநாயகப் பெருமானை வழிபடுவது பலவிதமான நன்மைகளை வழங்கும். குறிப்பாகத் தேய்பிறை சதுர்த்தி, சங்கட ஹர சதுர்த்தி என்று போற்றப்படுகிறது. சங்கடங்கள் அனைத்தையும் இந்த நாளின் வழிபாடு தீர்க்கும் என்பதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது.

அறுகம்புல்லை `பிள்ளையார் புல்’ என்றே அழைப்பார்கள் பெரியவர்கள். அந்த அளவுக்கு அறுகம்புல் விநாயகர் வழிபாட்டுடன் இரண்டறக் கலந்துவிட்டது. அனலாசுரன் எனும் அசுரன் தேவர்களைத் தாக்கித் துன்புறுத்திவந்தான். தேவர்கள் விநாயகரிடம் முறையிட்டார்கள். விநாயகர் அனலாசுரனுடன் போரிட்டார். விநாயகர் விஸ்வரூபமெடுத்து அனலாசுரனை அப்படியே விழுங்கிவிட்டார். விநாயகரின் வயிற்றுக்குள் சென்ற பிறகும் அனலைக் கக்கினான் அனலாசுரன். கங்கை நீரால் அபிஷேகம் செய்தும் விநாயகரின் வயிற்றெரிச்சல் அடங்கவில்லை. அப்போது, முனிவர் ஒருவர் அறுகம்புல்லைக் கொண்டுவந்து விநாயகரின் தலையில் வைத்தார். அத்தோடு இல்லாமல் அறுகம்புல் சாற்றையும் பருகக் கொடுத்தார். அனலாசுரனும் குளிர்ந்து இறந்து போனான். விநாயகரின் வயிற்றெரிச்சலும் அடங்கியது. அன்றிலிருந்து அறுகம்புல் விநாயகர் வழிபாட்டில் முக்கிய இடம்பிடித்தது. மிக எளிதில் கிடைக்கும் இந்த அறுகம்புல்லின் சிறப்புகள் எண்ணிலடங்காதன. சித்தமருத்துவர்கள் இதன் பெருமைகளைப் போற்றிப்புகழ்கிறார்கள். அவற்றில் சில...

* அறுகம்புல் குளிர்ச்சித் தன்மை வாய்ந்தது. இது உடல் வெம்மையைப் போக்கும்.

* அறுகம்புல் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களைப் போக்கி சுத்தமாக்கும்.

* ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்த சோகை, ரத்த அழுத்தத்தையும் அறுகம்புல் சாறு சீராக்குகிறது.

* அறுகம்புல் சாற்றைப் பருகுவதால் ஞாபக சக்தி பெருகும்.

ஒருமுறை திருமால் குழந்தையாக இருந்த தன் மருமகனான விநாயகருடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது விநாயகருக்கு விளையாட்டுக் காட்ட சுதர்சனச் சக்கரத்தை சுற்றிவிட்டார். அப்போது பாலச்சந்திரனான விநாயகர் மாமனுடன் விளையாடத் திருவுளம் கொண்டு சிரித்தபடியே சுதர்சன சக்கரத்தைப் பிடித்து தனது வாயில் போட்டுக்கொண்டார். விஷ்ணுவோ எப்படியெல்லாமோ கேட்டும் விநாயகர் சுதர்சன சக்கரத்தைத் தர மறுத்துவிட்டார். திருமால் தனது காதுகளைப் பிடித்துக்கொண்டு விநாயகருக்குப் பிடித்த தோப்புக்கரணத்தைப் போட அதைப் பார்த்த விநாயகர் வாய்விட்டு சிரித்தார். அப்படிச் சிரித்தபோது வாயிலிருந்து சக்கரம் வெளியே வந்தது. விநாயகருக்குத் தோப்புக்கரணமிட்டு வழிபடுவதன் மூலம் எந்த வரத்தையும் வேண்டிப் பெறலாம் என்பதை உலகிற்கு உணர்த்தவே திருமாலும் இந்தத் திருவிளையாடலைப் புரிந்தார். எனவே, தோப்புக்கரணம் இட்டு அந்த மூல முதல்வனை வணங்குவோம்.

மேலை நாடுகளில் தற்போது மிகவும் புகழ்பெற்று விளங்குவது சூப்பர் பிரைன் யோகா. அது என்ன சூப்பர் பிரைன் யோகா என்று ஒரு நிமிடம் நின்று பார்த்தால் அட, நம்ம ஊர் தோப்புக்கரணம். முன்பெல்லாம் கோயிலில் தோப்புக்கரணம் போடும் நிறைய பக்தர்களைப் பார்க்க முடியும். இப்பொழுதெல்லாம் அவர்களின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டது. நம்மவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிடும் இந்த அற்புதப் பயிற்சியைத் தான் மேலை நாடுகள் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டன. விநாயகருக்கு முன்பாக தலையில் கொட்டி இரண்டு காதுகளையும் பிடித்துக்கொண்டு முட்டி மடங்க அமர்ந்து எழுவதுதான் தோப்புக்கரணம்.

தோப்புக்கரணம் (சூப்பர் பிரைன் யோகா) போடுவதனால் ஏற்படும் நன்மைகள்...

* தோப்புக்கரணம் போடும்போது மூளையின் நியூரான் நரம்புகள் தூண்டப்பட்டு புத்துணர்ச்சி அடையும்.

* அதனால், மனம் ஒருமுகப்படுகிறது. நினைவாற்றல் அதிகரிக்கும்.

* உடல், புத்துணர்ச்சி பெறும். மன அழுத்தம், மனச் சோர்வு விலகும்.

* இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொள்வதால் அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுவதுடன் மூளை நரம்புகள் சக்தி பெறுவதாகக் கூறுகிறார்கள் நரம்பியல் வல்லுநர்கள்.

* மூளையின் வலது மற்றும் இடது பகுதி சமமாகத் தூண்டப்படுகிறது. மேலும், மூளைக்குச் செய்திகளைப் பரிமாற்றம் செய்யும் நரம்புகள் வலுப்பெறுகின்றன.

ஞான விநாயகனுக்குத் தோப்புக்கரணமிட்டால் ஞானம் பெருகும் என்று நம் முன்னோர்கள் சொன்னதில் அர்த்தம் ஆயிரம் இருக்கிறது.

விநாயகருக்கான புகழ்பெற்ற தலங்களுள் ஒன்று, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில். இது, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே அமைந்துள்ளது. தமிழகத்தின் மிகப் பழைமையான குடைவரைக் கோயில் இது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மலையடிவாரத்தில், குடைவரையில் சுமார் 2 மீ உயரத்தில் விஸ்வரூப தரிசனம் கொடுத்து அருள்புரிகிறார், கற்பக விநாயகர். கற்பக மரத்தைப் போலக் கேட்கும் வரங்கள் அனைத்தையும் அருள்வதாலேயே இவர் `கற்பக விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் துதிக்கை வலம் சுழித்ததாக இருக்கிறது. மற்ற தலங்களில் கைகளில் அங்குசம், பாசம் ஏந்தி அருள்புரியும் விநாயகர் இங்கு இரண்டு கைகளோடு அருள்கிறார். ஒரு கையை இடையில் வைத்துக்கொண்டு, மற்றொரு கையில் மோதகம் மட்டும் தாங்கி அருள்புரிகிறார். மாதாமாதம் வரும் சங்கட ஹர சதுர்த்தி தினத்தின்போது கணபதி ஹோமம் செய்து கற்பக விநாயகருக்குப் பால் அபிஷேகமும் செய்தால் தொழில் விருத்தியடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், செல்வ வளமும் பெருகும் என்பது ஐதிகம்.

விநாயகர் அகவல்

ஔவையார் விநாயகப் பெருமானை நோக்கிப் பாடிய பக்திப் பாடல்களே `விநாயகர் அகவல்’ எனப்படுகிறது. விநாயகர் அகவலில் விநாயகப் பெருமானின் தோற்றம் பற்றியும், மூச்சுப் பயிற்சி பற்றியும் ஔவையார் சிறப்பாகப் பாடியிருக்கிறார். விநாயகர் அகவலைத் தினமும் பாராயணம் செய்வதன் மூலம் தீவினைகள் அனைத்தையும் விரட்டியடிக்கலாம் என்பது ஐதிகம்.

விநாயகர் நான்மணிமாலை

பாரதியார் புதுவை மணக்குள விநாயகரைப் போற்றிப் பாடிய நூல் இது. இது நான்மணிமாலை எனப்படும் பிரபந்த வகையைச் சேர்ந்தது. 40 பாடல்கள் கொண்ட இந்த நூல் வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், அகவல் என்னும் நான்கு பாடல் வகைகளின் கோர்வையாக அமைந்து அந்தாதிச் செய்யுள் அமைப்பையும் கொண்டிருக்கிறது. இந்த நூலில், உலகில் உள்ள உயிரினங்கள் யாவும் இன்புற்று வாழச் செய்வதற்கான சக்தியைத் தனக்கு அருளுமாறு பாரதியார் மணக்குள விநாயகரை வேண்டிக்கொள்கிறார்.

திருக்கடவூர் கள்ள விநாயகர் பதிகம்

விநாயகரின் படை வீடுகளில் ஒன்றாகக் கருதப்படுவது திருக்கடவூர் கள்ளவாரண பிள்ளையார் சந்நிதி. திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நந்திக்கு வலப்புறத்தில் அருள்புரிகிறார் கள்ளவாரண பிள்ளையார். அபிராமியைத் தொழுது அருள்பெற்ற அபிராமி பட்டர் இந்தக் கள்ள விநாயகரைப் புகழ்ந்து பாடியிருக்கும் பதிகம் கள்ள விநாயகர் பதிகம். இதில், தேவர்களின் அமிர்த கலசத்தை மறைத்து விளையாடிய விநாயகரின் திருவிளையாடல் பாடப்பட்டிருக்கிறது.

கணேச பஞ்சரத்னம்

ஆதிசங்கரர் விநாயகப் பெருமானைப் போற்றிப் பாடிய சுலோகங்கள் `கணேச பஞ்சரத்னம்’ என்றழைக்கப்படுகிறது. கணேச பஞ்சரத்னத்தை தினமும் பாராயணம் செய்து வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதிகம்.

விநாயக பரத்துவம்

விநாயக பரத்துவம் என்பது குமரகுருசாமி குருக்களால் எழுதப்பட்ட விநாயகரின் புகழைக் கூறும் நூலாகும். இதில் விநாயகப் பெருமானின் பல்வேறு விதமான மூர்த்தங்களின் சிறப்பு இந்த நூலில் எடுத்துரைக்கப்பட்டிருக்கும்.

தஞ்சாவூருக்கு அருகே உள்ள தலம் மெலட்டூர். இங்கு விநாயகர் ஸ்ரீஸித்தி புத்தி சமேத தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஸ்ரீகர்க மஹரிஷியின் ஞான புராணத்தில் இடம் பெற்றிருக்கும் 108 கணபதி தலங்களில் 81வது தலமாக இத்தலம் அமைந்திருக்கிறது. பொதுவாக தென்திசை நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு தட்சிணாமூர்த்தியே அருள்பாலிப்பார். இந்தத் தலத்தில் விநாயகப் பெருமானே தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து அருள் செய்கிறார். உற்சவர், தம் மனைவியரான ஸித்தி புத்தி சமேதராக வீற்றிருக்கிறார் . இந்த ஆலயம் சிவன் கோயில் போலவே அமைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். சிவாலயத்தில் நடராஜ பெருமான் திருவுருவம் அமைந்திருப்பது போலவே இங்கு நர்த்தன கணபதி அருள்புரிகின்றார். அதேபோல் அஸ்திர தேவரைப் போலவே சூலாயுதம் தாங்கி சூலத்துறை கணபதியும் காட்சி அளிக்கிறார். இவர்களுடன் ஸித்தி புத்தி சமேதராக, செப்புத்திருமேனியில் சிரித்தவண்ணம் காட்சியளிக்கிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி விநாயகர். இத்தலத்து இறைவனை `விவாஹ வரமருளும் விநாயகர்' என்று போற்றுகின்றனர். திருமணம் தடைப்பட்டு வரும் அன்பர்கள், இந்தத் தலத்துக்கு வந்து தட்சிணாமூர்த்தி விநாயகரிடம் வேண்டிக் கொண்டால், உடனே திருமணம் நடைபெறுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். அதேபோல் தம்பதியரிடையே கருத்து வேற்றுமை, குழந்தை பாக்கியம் இல்லாமை போன்ற பல பிரச்னைகளையும் போக்கி மகிழ்ச்சியைத் தரும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறார் தட்சிணாமூர்த்தி விநாயகர்.

உயிருக்கு சகல ஆற்றலையும் நல்கி இறைநிலையை எய்துவிக்கும் கலையே யோக வித்தையாகும். அந்த அற்புத யோக வித்தையின் அடிப்படைக் கல்வியாக இருப்பது மூலாதாரத்தில் உறங்கும் நிலையில் உள்ள குண்டலினி சக்தியை எழுப்புவதாகும். உடலில் உள்ள முதுகுத் தண்டின் அடிமுனையில் மூலாதார ஸ்தானம் உள்ளது. அதை நான்கு இதழ்களைக் கொண்ட தாமரையாக உருவகம் செய்துள்ளனர். அதன் அதிதேவதையாக விநாயகப் பெருமான் விளங்குகிறார். இங்கு குண்டலினி என்னும் சக்தி உள்ளது. யோக வித்தையை முறையாகப் பயில்வதற்கும் அளப்பறிய சக்தியைப் பெறுவதற்கும் ஆதார ஸ்தானமாக இருப்பது மூலாதாரமாகும். இங்கே காற்றுக் கடவுளாக விநாயகப் பெருமான் எழுந்தருளியுள்ளார். இந்த ஆதாரத்தில் மூலாதாரச் சக்தி சுருண்டு உறங்கும் நிலையில் உள்ள பாம்பாக உருவகம் செய்யப்படுகிறது. மூலாதாரம் விழிக்கும் வேளையில் சக்தி செம்பவளச் சோதி போல ஒளி விடுகிறது. இந்த நிலையில் சாதகனுக்கு விநாயகப் பெருமானின் தரிசனம் கிடைக்கிறது. சாதகனுக்கு உடலில் நிலைகொள்ளாத தவிப்பு உண்டாகி ஓரிடத்தும் நில்லாது குதித்து ஆடிப்பாடி மகிழ்கிறான். அதைக் குறிக்கும் வகையில் விநாயகரையும் ஆனந்த நடனம் ஆடும் கோலத்தில் அமைத்துள்ளனர் பெரியோர்கள். திருவாரூர் தியாகேசர் சந்நிதியில் ஒரு தூணில் மூலாதார கணபதியின் திருவுருவம் அமைந்துள்ளது.

சிவபெருமானை அபிஷேகப் பிரியன் என்று சொல்வதுண்டு. அந்தத் திருநாமம் விநாயகருக்கும் பொருந்தும். விநாயகப் பெருமான் எல்லா நீர் நிலைகளின் அருகிலும் வீற்றிருப்பார். அந்தக் காலத்தில் நீர் கொண்டு வரச் செல்லும் பெண்கள், முதலில் ஒரு குடம் நீரை விநாயருக்கு ஊற்றி அபிஷேகம் செய்துவிட்டுப் பின் தம் தேவைக்குத் தண்ணீர் சுமந்து செல்லும் வழக்கம் இருந்தது. சிவனுக்கு அபிஷேகம் என்றால் பால், பஞ்சகவ்யம் ஆகியன விசேஷம். முருகனுக்கோ பஞ்சாமிர்தம், தேன் ஆகியன விசேஷம். ஆனால் விநாயகருக்கோ வேறு எந்த சிறப்பும் தேவையில்லை. வெறும் தண்ணீரால் அபிஷேகித்தாலே மனம் மகிழ்ந்து அருள்புரிவார். இந்தக் காலத்தில் நீர் நிலைகளும் குறைந்துவிட்டன. அங்கு சென்று நீர் சுமந்துவரும் வழக்கமும் இல்லை. அதனால் வீட்டில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் கொஞ்சம் தண்ணீர் கொண்டு விநாயகருக்கு அபிஷேகித்துப் பூஜை செய்து கணநாதனின் அருள்பெறுவோம்.

கார்த்திகை மாதம் சஷ்டி திதியும் சதய நட்சத்திரமும் கூடிய நாளில் பிள்ளையார் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. பிள்ளையார் நோன்பு கார்த்திகை தீபத்துக்கு அடுத்த நாள் ரோகிணி நட்சத்திரத்தில் தொடங்கி, சதய நட்சத்திரத்தன்று நிறைவு பெறும். இந்த நோன்பை நகரத்தார் சமூகத்தினர் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். நோன்பு அன்று பூஜையறையில் பெரிய கோலம் இடுவர். நோன்பின் பூஜைகளைக் குடும்பத்தின் ஆண்களே செய்வர். குடும்பத்தலைவர் தலைப்பாகைக் கட்டிக்கொள்வார். கருப்பட்டிப் பாகும் அரிசி மாவும் கலந்து அதில் பிள்ளையார் பிடிப்பார்கள். குடும்பத்தின் ஆண்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிள்ளையார் பிடித்து வைக்கப்படும். அதன் மேல் எடுத்துவைத்திருக்கும் இழைகளைக்கொண்டு நெய் விளக்கேற்றுவர். விளக்கின் சுடர் தணிந்ததும், அதன் சூடு ஆறுவதற்கு முன்பே அந்தப் பிள்ளையாரை குடும்பத்தலைவர் வாயில் போட்டுக்கொள்வார். அதேபோல் பிற குடும்ப ஆண்களும் அதை உட்கொள்வார்கள். பின்பு சங்கு ஊதி நோன்பினை நிறைவு செய்வர். இந்த நோன்பை நகரத்தார் எங்கு இருந்தாலும் தவறாது கடைப்பிடித்து வருகிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு விநாயகப் பெருமானின் ஆசி கிட்டி எல்லா வளங்களும் சூழ்வதாக நம்புகிறார்கள்.

மேலும் ஒரு தகவல்: தீபாவளி, கார்த்திகை மற்றும் பொங்கலுக்குச் சீர் செய்யும் வழக்கம் போல பிள்ளையார் நோன்பிற்கும் சீர் செய்யும் வழக்கம் உண்டு. சில குடும்பங்களில் தங்க, வெள்ளி விநாயகரைச் செய்து தங்கள் வீட்டுப் பெண்களுக்கு வழங்கும் வழக்கமும் உண்டாம். அந்தப் பிள்ளையாரின் முதுகில் தங்கள் பெயரினைப் பதித்துத் தருகின்றனர்.

கும்பகோணத்துக்கு அருகே உள்ள `திருவலஞ்சுழி' என்னும் கபர்தீஸ்வரர் ஆலயத்தில் கோயில்கொண்டு அருளுகிறார் வெள்ளை விநாயகர். தேவர்கள் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடையும்போது, தடங்கல் ஏற்பட்டது. விநாயகரை வணங்காததால்தான் தடங்கல் உண்டானது என்பதை உணர்ந்த தேவர்கள், பாற்கடலைக் கடைந்ததால் ஏற்பட்ட நுரையைக் கொண்டே விநாயகர் திருவுருவம் செய்து வழிபட்டனர். விநாயகரின் ஆசியுடன் மீண்டும் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற்றனர். பின்னர், அந்த விநாயகரை இந்தத் தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பாற்கடல் நுரையால் செய்யப்பட்ட விநாயகர் என்பதாலேயே அவர் வெள்ளை நிறத்தில் இருக்கிறார் என்றும், இவரை வழிபட்டால் காரியத்தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.