திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

தீவினைகள் விலகும் நினைத்தது நடக்கும்!

அய்யாவாடி பிரத்யங்கிராதேவி
பிரீமியம் ஸ்டோரி
News
அய்யாவாடி பிரத்யங்கிராதேவி

அய்யாவாடி ஶ்ரீபிரத்யங்கிராதேவி தரிசனம்

திரேதா யுகம் - இலங்கைத் தீவில் ராம ராவண யுத்தம் நடந்து கொண்டிருந்தது. இந்திரஜித் களம் புகுந்திருந்தான். ராம லட்சுமணரை அழிப்பது எளிதல்ல என்று புரிந்துகொண்டவன், அவர்களை வெல்ல மாபெரும் ஆற்றலைப் பெற வேண்டும் என விரும்பினான். அதற்காக அவன் ஒரு யாகத்துக்கு ஏற்பாடு செய்தான். அது, நிகும்பலா யாகம்!

அய்யாவாடி பிரத்யங்கிராதேவி
அய்யாவாடி பிரத்யங்கிராதேவி

மகா வல்லமையை அருளும் அந்த யாகம், அதர்வணக் காளி எனப் போற்றப்படும் ஶ்ரீபிரத்யங்கிராதேவிக்கானது. ஆனாலும் இந்திரஜித்தின் எண்ணம் ஈடேறவில்லை. யாகம் நிறைவேறுவதற்குள் இந்திரஜித், லட்சுமணனால் வீழ்த்தப்பட்டான்.

இந்திரனையே வெல்லும் பேராற்றல் கொண்ட இந்திரஜித்தே மேலும் ஆற்றல் வேண்டி பிரார்த்தித்தான் என்பதிலிருந்து, ஶ்ரீபிரத்யங்கிராதேவியின் மகிமையை அறியலாம். அதேநேரம், துஷ்ட சக்திகளுக்கு அன்னையின் அருட்கடாட்சம் கிடைக்காது என்பதையும் இந்தச் சம்பவத்தின் மூலம் நாம் தெரிந்துகொள்ள முடியும்.

ஆனால், தர்மப்படி நடந்து அன்புடனும் பக்தியுடனும் தன்னை வழிபடும் அன்பர்களுக்குத் தேவையான வல்லமைகளைத் தந்திடுவாள் இந்த தேவி.

துவாபார யுகம் - விதி வசத்தால் நாட்டை இழந்து, சொத்துசுகங்கள் அனைத்தையும் இழந்து வனத்தில் அலைந்து திரிந்தனர் ஐந்து சகோதரர்கள்.

அவர்களிடம், `பிரத்யங்கிராதேவியை வழிபடுங்கள்; உங்களின் அத்தனை பயத்தையும் போக்குவாள்; பலம் கூட்டுவாள்; வெற்றியைத் தருவாள். அவளைப் பூஜித்து அருள் பெறுங்கள்’ என்று அந்தச் சகோதரர்கள் ஐவருக்கும் பெரியோர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

ஶ்ரீபிரத்யங்கிராதேவி
ஶ்ரீபிரத்யங்கிராதேவி

ஆகவே, அன்னை பிரத்யங்கிராதேவியின் அருள் சாந்நித்தியம் நிறைந்த இடத்தைத் தேடி அலைந்த சகோதரர்கள், ஒருநாள் அதைக் கண்டுகொண்டனர். அங்கே சுயம்புவாகக் காட்சி தந்தாள் அன்னை ஶ்ரீபிரத்யங்கிராதேவி. சகோதரர்கள் மகிழ்ந்தனர். அன்னையை அர்ச்சித்து வழிபட பூக்களைத் தேடினர். அது சித்திரை மாதம் என்பதால், எங்கே தேடியும் பூக்கள் கிடைக்கவில்லை. மனம் கலங்கிய சகோதரர்கள் தேவியையே சரணடைந்தனர். அப்போது அந்த இடத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கும் ஓர் ஆலமரத்தைக் கண்டனர். அந்த மரத்தின் இலையையே பூக்களாக பாவித்து, ஶ்ரீபிரத்யங்கிரா தேவியை அர்ச்சித்து ஆனந்தமாக வழிபட்டார்கள்.

ஐந்து ஐந்தாக ஆலம் இலைகள் அன்னையின் திருப்பாதங்களில் விழுந்தன. இப்படி நெடுநாட்களாக பூஜித்ததன் பலனாக, அவர்கள் தங்களின் பகைவரை வென்றனர். இழந்த தேசத்தை மீண்டும் பெற்றனர். அவர்கள் ஐவரும்தான் பஞ்சபாண்டவர்கள்.

ஐவர் வந்து பூஜித்ததால், அவர்கள் வழிபட்ட அந்தத் தலத்துக்கு `ஐவர்பாடி’ என்று பெயர் ஏற்பட்டது. இப்போது அய்யாவாடி என்று அழைக்கப்படுகிறது. இங்கே கோயில் கொண்டிருக்கும் பிரத்யங்கிராதேவி, தன்னைத் தேடி வரும் பக்தர்களின் பயத்தைப் போக்கி, சத்ரு தொல்லைகளிலிருந்து அவர்களை விடுவித்து, அன்பர்களின் சகல சங்கடங்களையும் போக்கி வெற்றி அருளும் நாயகியாய் அருள்கிறாள்.

தீவினைகள் விலகும் 
நினைத்தது நடக்கும்!
தீவினைகள் விலகும் 
நினைத்தது நடக்கும்!

இந்தத் திருக்கோயிலில் சிம்ம வாகினியாக சூலம், கபாலம், டமருகம், பாசம் ஆகியவற்றை ஏந்தியபடி, நீல நிற வஸ்திரங்களை உகந்து ஏற்பவளாக, வலது காலை தொங்கவிட்டபடியும், இடது காலை சிம்மத்தின்மீது ஊன்றியபடியும் காட்சி தருகிறாள் அன்னை. இந்த அன்னையின் திருவுருவம் சுதை மூர்த்தம்; பசுவின் காலடி மண், புனுகு, ஜவ்வாது, சாம்பிராணி மற்றும் ஏராளமான மூலிகைக் கலவைகளைச் சேர்த்து செய்யப்பெற்ற தெய்வத் திருமேனி. சாந்நித்தியமும் ஈர்ப்பு சக்தியும் அதிகம் என்கிறார்கள். இந்தத் திருமேனிக்கு அபிஷேகம் செய்ய இயலாது. ஆகவே, தை மாதம் முதல் நாள் தொடங்கி ஒரு மண்டல காலம் புனுகுக் கலவை மட்டும் சாத்தப்படுகிறது.

அசுர சம்ஹாரத்தின் பொருட்டு துஷ்ட சக்திகளை அழிப்பதற்காக சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட தெய்வசக்திகளில் முதன்மையானவள் இந்த அன்னை. தட்ச யாகத்தை அழிப்பதில் ருத்ரரோடு முன்னின்று செயல்பட்டவள் என்கின்றன ஞானநூல்கள்.

நரசிம்மத்தின் கோபம் தணிக்க சிவனார் சரபராக அவதரித்தபோது, அவருடைய இரு இறக்கைகளாக பிரத்யங்கிரா தேவியும், சூலினி துர்கையும் அவதரித்ததாகக் கூறுவர். பைரவ மூர்த்தியின் பக்தர்கள், இவளை பைரவ பத்தினியாகப் போற்றுவர். நான்கு வேதங்களில் நான்காவது வேதமான அதர்வண வேதத்தின் பெண் தெய்வம் இவள். எனவே அதர்வணப் பத்ரகாளி, அதர்வண பிரத்யங்கிராதேவி என்றும் பெயர்கள் உண்டு. ஆங்கீரஸர், பிரத்யங்கிரஸ் ஆகிய இரண்டு மகா முனிவர்கள்தான் இவளுக்கான மந்திரத்தைக் கண்டறிந்து உலகுக்கு அளித்தவர்கள்.

தீவினைகள் விலகும் 
நினைத்தது நடக்கும்!

மகா உக்கிரமான தெய்வம்தான் என்றபோதும் தாய்மையின் கருணையும் குழந்தையின் குதூகலமும் கொண்டு அருளக் கூடியவள். ஒப்பற்ற இந்த தேவியை தரிசித்து அருள்பெற, அமாவாசை தோறும் அய்யாவாடிக்குப் பக்தர்கள் திரளாக வந்து செல்கின்றனர்.

பாண்டவர்கள் வழிபட்டதன் சாட்சியாக, இந்த ஆலயத்தின் தலவிருட்சமான ஆலமரத்தில் ஐந்து விதமான இலையமைப்புகளை காண முடிகிறது. அகத்தியர் வழிபட்ட சிவத்தலம் இது. அருள்மிகு தர்மசம்வர்த்தினி சமேத அருள்மிகு அகஸ்தீஸ்வரர் அருளும் தலம்தான் இது. எனினும், தனிச்சந்நிதியில் அருளும் ஶ்ரீபிரத்யங்கிராதேவி அருள் மகிமையைப் போற்றும் வகையில், தற்போது ஶ்ரீபிரத்யங்கிராதேவி கோயில் என்றே அழைக்கப்படுகிறது.

ஸ்தல விருட்சம்
ஸ்தல விருட்சம்

இக்கோயிலில் பூஜை செய்யும் பாலாஜி குருக்களிடம் பேசினோம்.

“அன்னை ஶ்ரீபிரத்யங்கிராதேவி வரப்பிரசாதியானவள். இக்கோயிலில் அமாவாசை தோறும் நிகழும் நிகும்பலா யாகம் பெரிதும் வல்லமை பெற்றது. காலை 10 முதல் பகல் 1 மணி வரை நடைபெறும். இந்த யாகத்தில் மூட்டைக் கணக்கில் மிளகாய் சேர்க்கப்பட்டாலும் சிறிதும் தொண்டைக் கமறுவது இல்லை என்பது வியப்பான விஷயம்.

தீபாவளியையொட்டி வரும் ஐப்பசி அமாவாசை அன்று மட்டும் இந்த யாகம் நடைபெறாது. அன்று பழவகைகள் மட்டுமே நிவேதிக்கப்படுகின்றன. சத்ரு ஜயத்துக்காக புறப் பகைகளால் ஏற்படும் துன்பங்களை மட்டுமல்ல, நம் மனத்தில் தோன்றும் அகத்தின் பகைகளான கீழ்மை எண்ணங்களையும் அழித்து நமக்கு வெற்றியை அருள்பவளே ஶ்ரீபிரத்யங்கிராதேவி.

மிகுந்த நியமங்களும் கட்டுப்பாடுகளும் நிறைந்தது ஶ்ரீபிரத்யங்கிரா தேவி வழிபாடு. ஆகவே, இல்லங்களில் இந்த அன்னையின் திருவுருவப் படத்தை வைத்து பூஜிப்பதையோ, மந்திரங்களை உச்சரிப்பதையோ தவிர்க்கலாம். சத்ரு உபாதை, திருஷ்டி தோஷங்கள், மாந்திரீக தோஷங்கள், செய்வினைக் கோளாறுகள், 64 விதமான பாவங்கள், அதன் பிறகு ஏற்படும் கர்மவினைகள் ஆகியவை இந்த அன்னையை தரிசித்தால் தீரும் என்பது நிதர்சனம். நிகும்பலா யாகத்தில் பழம் புஷ்பம் மற்றும் 96 விதமான மூலிகைகள், மிளகாய்வத்தல் சமர்ப்பித்து நடத்தப்படுகிறது. நிகும்பலா யாகம் நடைபெறும் நாளில் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களின் துயரங்களை இந்த அன்னை நீக்கி அருள்வாள்’’ என்றார் சிலிர்ப்புடன்.

நீங்களும் ஒருமுறை அய்யாவாடிஶ்ரீபிரத்யங்கிராதேவியை தரிசித்து வழிபட்டு வாருங்கள்; அன்னையின் அருளால், உங்கள் வாழ்வில் தீமைகள் நீங்கி நன்மைகள் சூழும்.

எப்படிச் செல்வது?: கும்பகோணம் திருநாகேஸ்வரம் மார்க்கத்தில் ஒப்பலியப்பன் கோயில் அருகில் சுமார் 5 கி.மீ. தூரத்தில், அய்யாவாடி தலம் அமைந்துள்ளது. பேரூந்து ஆட்டோ, கார் வசதியுண்டு. நிகும்பலா யாகம் நடைபெறும் நாளில் இரவு 9 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். ஏனைய தினங்களில் காலை 8 முதல் 12 மணி, மாலை 4:30 முதல் 8:30 மணி வரை கோயில் திறந்திருக்கும். அர்ச்சனை கிடையாது. வெளியிலிருந்து கொண்டு வரப்படும் நெய், எலுமிச்சைப் பழம், மிளகாய் ஆகியவற்றுக்கு அனுமதியில்லை.

நிகும்பலா யாகம்
நிகும்பலா யாகம்

மகா பிரத்யங்கிராதேவியே போற்றி

ஶ்ரீபிரத்யங்கிராதேவி ஓங்காரம் எனும் பிரணவ ரூபிணியாக விஸ்வரூபம் கொண்டவள். முக்கண்கள் கொண்ட ஆயிரம் சிம்ம முகங்கள், விரிந்த கூந்தல், ஆயிரம் திருக்கரங்களுடன் ராஜசிம்ம வாகனத்தில் வீற்றிருப்பாள்.

சூலம், முண்டம், சர்ப்பம், பாசம், டமருகம் முதலானவற்றை திருக்கரங்களில் கொண்டு காட்சியளிப்பாள் என்கின்றன புராணங்கள். வேறுசில நூல்கள், பதினாறு கரங்கள் கொண்டவளாகவும் இந்த அன்னையைச் சித்திரிக்கின்றன.

பில்லிசூன்யம் போன்ற தீவினைகளைப் பொசுக்கும் மாதாவான இந்த தேவியை, ஞாயிற்றுக் கிழமை மற்றும் அமாவாசை தினங்களில், எள்ளு புஷ்பம் கொண்டு அர்ச்சித்து, உரிய மந்திரங்கள் பாராயணம் செய்து வழிபட்டால், சகல தீவினைகளும் நீங்கும். சத்ரு பயம், மனக்கலக்கங்கள் அகலும். எடுத்த நற்காரியங்களில் தடைகள் யாவும் நீங்கி வெற்றி சர்வநிச்சயம் ஆகும்.

ஆங்கிரஸர், பிரத்யங்கிரஸ் ஆகிய ரிஷிகள் இந்த அம்பிகைக்கு உரிய மந்திரத்தைக் கண்டறிந்து விளக்கியிருக்கிறார்கள். அதற்கு உண்டான மூல மந்திரத்தை குரு மூலமாக உபதேசம் பெற்று ஜபித்து வழிபடுவது சிறப்பு.

மேலும், ‘மகா பிரத்யங்கிராதேவியே போற்றி போற்றி’ என்று எளிய முறையில் துதித்து, உடல்உள்ள சுத்தியுடனும் பயபக்தியுடனும் பிரத்யங்கிராதேவியை வணங்கி வழிபட்டால், நமது பிரச்னைகள் யாவும் நீங்கி வாழ்வு செழிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!