மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 39

ஸ்ரீசாய்பாபா
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீசாய்பாபா

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.

புனேயில் இருந்த கல்லூரியில் சம்ஸ்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றியவர் பாலகிருஷ்ண உபாஸனி. இவரின் சகோதரர் ஸ்ரீ உபாஸனி.

பிளேக் பரவிய காலத்தில் கல்லூரிகள் மூடப்பட்டன. அப்போது என்ன செய்வது என்று அறியாத பாலகிருஷ்ண உபாஸனி தன் தாயை அழைத்துக்கொண்டு புண்ணிய தலங்களுக்கு யாத்திரை சென்று வரலாம் என்று புறப்பட்டார். அப்போது ஒரு தபோவனத்தை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. அந்தத் தபோவனத்தில் ஒரு சாது அமர்ந்திருந்தார். அந்தச் சாது, பாலகிருஷ்ண உபாஸனியை சைகையால் அழைத்தார்.

“நீ மகாராஷ்டிராவில் உள்ள சதானாவைச் சேர்ந்தவனா” என்று கேட்டார்.

பாலகிருஷ்ணனும், “ஆம்” என்றார்.

உடனே அந்த சாது, “நாளை பிற்பகல் இங்கே வா” என்று கூற, பாலகிருஷ்ணன் மகிழ்வுடன் திரும்பினார்.

மறுநாள் தன் தாயாருடன் பாலகிருஷ்ணன் அங்கு சென்றபோது அந்த சாதுவைக் காணவில்லை. எங்கு தேடியும் அவரைக் காணவில்லை. சாதுவின் தரிசனம் நல்ல மாற்றத்தைத் தரும் என்று ஆர்வத்துடன் இருந்த பாலகிருஷ்ணனுக்கு இது ஏமாற்றமாக இருந்தது. வருத்தத்தோடு வீடு திரும்பினர்.

ஸ்ரீசாய்பாபா
ஸ்ரீசாய்பாபா

பின்பு ஒரு நாள் பாலகிருஷ்ணன் தனியாக அமர்ந்திருந்தபோது அந்த சாது அவர் முன் தோன்றினார். எதிர்பாராதவிதமாகக் கிடைத்த சாதுவின் தரிசனம் சிலிர்ப்பூட்டியது. “நான் உன்னை மட்டும்தானே வரச்சொன்னேன். நீ ஏன் உன் தாயாருடன் வந்தாய்?” என்று சாது கொஞ்சம் கடுமையான குரலில் கேட்டார். பாலகிருஷ்ணனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. தன் பிழையைப் பொறுத்தருளுமாறு கூப்பிய கரங்களோடு நின்றார். அப்போது அந்த சாது, வெப்பமான கதிரவனின் முகத்தை மேகங்கள் மூடியதும் உண்டாகும் குளுமையைத் தன் முகத்தில் கொண்டு, “நான் உத்தல் மஹராஜுக்கு ஒரு சாளக்கிராமத்தைக் கொடுத்தேன். அவரோ அதைத் தன் பேரனுக்குக் கொடுத்தார். அந்தப் பேரனான உன் பாட்டனார் அதை உனக்குக் கொடுத்தார். நீ அதைத் தற்போது குறைவான பக்தியுடன் வழிபடுகிறாய். நீ மனதில் பக்தியோடும் நம்பிக்கை யோடும் அந்த சாளக் கிராமத்தை வழிபட்டு வாசகல சர்வ மங்கலங்களும் உண்டாகும்” என்றார்.

இதைக் கேட்டதும் பால கிருஷ்ணனுக்கு மேனி சிலிர்த்தது. தான் சாளக்கிராமக் கல்லை பூஜை செய்வதாகச் சொன்னதோடு, சாது சொன்ன காலக் கணக்கை ஆராய்ந் தால், இந்த சாதுவின் வயதுதான் என்ன என்று வியந்தார். மகிழ்வும் வியப்பும் பயமும் மேலூர அவர் சாதுவை வணங்கியபடியே நின்றார்.

அப்போது சாது, “ஒரு மரத்தில் இருவர் ஏறுகின்றனர். ஒருவர் கீழே இறங்கிவிட்டார். இன்னொருவர் மேலே மேலே என்று சென்று கொண்டிருக்கிறார்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பாலகிருஷ்ணனுக்கு அவர் கூறியது புரியவில்லை. சாதுக்களின் பரிபாஷையைப் புரிந்துகொள்ளும் அளவுக்குத் தனக்குப் பக்குவம் இல்லை என்பதாக நினைத்துக்கொண்டார்.

இது நடந்து சில நாள்கள் கழித்து அவரின் மற்றொரு சகோதரரான ஸ்ரீ உபாஸனி காணாமற்போனார். அவரைத் தேடிப் பல இடங்களில் அலைந்தார் பாலகிருஷ்ணன். அப்போது அவரைக் கோபர்கான் ரயில்நிலையத்தில் சந்தித்த நண்பர் பட், “அருகில் ஷீர்டி என்ற கிராமம் உள்ளது. அங்கு சென்று கலியுகத்தின் கண்கண்ட கடவுளாக விளங்கும் பாபாவை தரிசி. அவரிடம் உன் கவலையைக் கூறு. முக்காலமும் உணர்ந்த அந்த ஞானி உனக்கு நிச்சயம் வழிகாட்டுவார்” என்று கூறினார்.

ஓவியம்: பாலகிருஷ்ணன்
ஓவியம்: பாலகிருஷ்ணன்

பாலகிருஷ்ணனுக்கு நண்பரின் வார்த்தைகள் கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்தன. அவர் அதற்கு முன் பாபாவைச் சந்தித்ததில்லை என்றாலும், அவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தார். தொலைதூரத்தில் நடக்கும் விஷயங்களையும் பாபா தன் ஞானதிருஷ்டியால் கண்டறிந்து கூறுகிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறார். எனவே அவரைச் சந்தித்தால் தன் சகோதரர் குறித்து ஏதேனும் தகவல்கள் கிடைக்கலாம் என்று நம்பிக்கையோடு ஷீர்டி வந்தார். அங்கே பாபாவைக் கண்டு அவர் பாதம் பணிந்தார்.

பாபா புன்னைகையோடு அவரை ஆசீர்வதித்து, “நீ கண்டோபா கோயிலுக்குச் செல்” என்று கூறினார்.

பாபாவின் தரிசனத்தில் ஆழ்ந்து நெகிழ்ந்திருந்த பாலகிருஷ்ணன் “நீங்களே எனக்கு மும்மூர்த்திகளும். ஸ்ரீராமனும் மற்ற தெய்வங்களும். அப்படியிருக்க வேறு தெய்வத்தை இனி நான் தேடிப்போக வேண்டியது என்ன?” என்று கேட்டார்.

பாபா புன்முறுவலோடு, “குரு ஒரு விஷயம் சொன்னால் சீடன் அதை ஏன் என்று கேள்வி கேட்காமல் கடைப்பிடிக்க வேண்டும்” என்றார். உடனே பாலகிருஷ்ணன் பதறி எழுந்து, “பாபா, தங்களின் இஷ்டம்போல் செய்கிறேன். நான் அங்கு செல்ல வேண்டும் என்பது உங்கள் விருப்பம் எனில் அதைக் கட்டாயம் செய்வேன்” என்று கூறி, கண்டோபா கோயிலுக்குச் சென்றார்.

பாலகிருஷ்ணன் கண்டோபா ஆலயத்துக்குச் சென்றதும் ஒருகணம் திடுக்கிட்டார். யாரைத் தேடி ஊரெங்கும் அலைந்தாரோ அவர் அங்குதான் இருந்தார். ஆம், ஸ்ரீ உபாஸனி அங்கிருந்தார். அதுவும் ஆழ்ந்த யோகத்தில் புற உலகின் சிந்தனைகள் இன்றி. பால கிருஷ்ணனுக்கு உடலும் உள்ளமும் மகிழ்ச்சியில் விம்மின. சொல்லாமலேயே தன் குறையை அறிந்து தீர்த்த பாபாவின் நினைவு வந்தது. பாபாவே பரப்பிரம்மம் என்று தான் நினைத்ததில் எந்தத் தவறும் இல்லை என்பதை உணர்ந்துகொண்டார். யோகத்தில் இருந்த தன் சகோதரனைத் தொந்தரவு செய்யாமல் பாபாவின் சந்நிதிக்கு ஓடிவந்தார்.

பாபா தன் கரங்களை உயர்த்தி அவரை ஆசுவாசம் கொள்ளுமாறு சைகை செய்தார். பால கிருஷ்ணனுக்குப் பேச வார்த்தைகள் இல்லை. மாறாகக் கண்ணீர் பெருகியது.

பாபா அவரை நோக்கி, “ஒரு மரத்தில் ஏறிய இருவரில் கீழே இறங்கியவன் நீ. மேலே ஏறியவன் உன் சகோதரன். புரிந்ததா” என்று கூறி பாலகிருஷ்ணனை உற்று நோக்கினார்.

பல வருடங்களுக்கு முன் தன்னிடம் சாது கூறிய அதே வரிகளை பாபா கூறியதைக் கேட்டு வியந்துபோனார் பாலகிருஷ்ணன். பாபா ஷீர்டியில் மட்டும் வாசம் செய்வதில்லை. அவர் இந்த உலகம் முழுவதும் வியாபித்துத் தன் பக்தர்களைக் கண்காணிக்கிறார். அவர்களை நல்வழியில் நடத்துவதே அவரின் பணியாக இருக்கிறது.

(தரிசனம் தொடரும்)

வாசகர் அனுபவம்

சில ஆண்டுகளுக்கு முன் பொருளாதார ரீதியாக மிகவும் துன்பப்பட்டுக்கொண்டிருந்தேன். நிறைய சிக்கல்கள், நிறைய பிரச்னைகள். கிட்டத்தட்ட தற்கொலை செய்துகொள்ளும் மனநிலை என்னை வாட்டி வதைத்தது. வாழ்க்கையில் எவ்விதப் பிடிப்புமின்றி ஏனோதானோ என்று நாள்களை நகர்த்திக்கொண்டு இருந்த வேளையில் சாய்பாபா கோயிலுக்குச் செல்லத் தொடங்கி னேன். கோயிலில் விற்பனைக்கு வைத்திருந்த ‘சாயி சத் சரிதம்’ நூலை வாங்கி வந்து மிகுந்த நம்பிக்கையோடு பாராயணம் செய்ய ஆரம்பித்தேன். வாழ்வைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளும் துணிச்சல் மனதில் அதிகமானது. நாளடைவில், என்னை ஆட்டிப்படைத்த பொருளாதாரச் சிக்கல்களுக்குப் படிப்படியாகத் தீர்வு கிடைத்தது. அதன்பின் படிப்படியாக முன்னேறி என் சிக்கல்களிலிருந்து மீண்டேன். இன்றும் பாபா ஏதோ ஒரு ரூபத்தில் எனக்கு உறுதுணையாக வந்து உதவிக்கொண்டுதானிருக்கிறார். எல்லாம் சாயியின் கருணை.

- அ.கார்த்திகேயன் சேலம்.

பாபாவும் நானும்...

நடிகை அர்ச்சனா
நடிகை அர்ச்சனா

``வழக்கமாக நான் சிவனை வழிபடுவேன். மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு அடிக்கடி செல்வேன். அப்போதெல்லாம் தவறாமல் ஷீர்டி சாயிபாபா கோயிலுக்கும் சென்று வருவேன். என்னைப் பொறுத்தவரை பாபா எல்லோருக்குமான கடவுளாக இருக்கிறார். மற்ற கோயில்களில் சென்று சுவாமியை வழிபடுவதற்கும் பாபா கோயிலுக்குச் சென்று அவரை தரிசிப்பதற்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. எந்தக் கோயிலுக்குச் சென்றாலும், மனதில் ஒரு பயம், பக்தி இருக்கும். ஆனால், பாபா கோயிலுக்குச் செல்லும்போது தோழமையான ஒரு சூழல் அங்கு நிலவும். அதை நம்மால் உணர முடியும். பாபாவிடம் சென்று வழிபடும்போது தோழர்களிடம் நம்முடைய கருத்துகளை, நம்முடைய திட்டங்களை, குறைகளைப் பேசிப் பகிர்ந்துகொள்வதுபோல் பாபாவிடம் நம்மால் பகிர்ந்துகொள்ள முடியும்.நல்லதோர் உறவாக, நல்ல குருவாக, நல்ல நண்பனாக, ஷீர்டி சாயிபாபா அனைவருக்கும் இருக்கிறார். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட சக்தியையும் வலிமையையும் வழங்குபவர் பாபா. அவரைச் சென்று பார்க்கும்போதெல்லாம் என் குடும்பத்தில் உள்ள பெரியோரைச் சந்தித்து, அவர்களிடம் மனம்விட்டு நம்முடைய குறைநிறைகளைச் சொல்லிப் பகிர்ந்துகொள்வது போன்ற ஓர் உணர்வுதான் எனக்கு ஏற்படுகிறது. அதனால்தான் நான் சாயிபாபா பக்தையாக இருக்கிறேன். அவரின் கோயிலுக்குச் சென்று வருகிறேன். அவர் பலருக்கும் அற்புதம் நிகழ்த்துகிறார். ஆனால் என்னைப் பொறுத்தவரை மிக மிக இயல்பான தோழமையுடன் இருக்கக்கூடிய நண்பராக ஷீர்டி சாய்பாபாவைப் பார்க்கிறேன். பாபா ஈஸ் தி மோஸ்ட் ஃபிரெண்ட்லி காட் டூ மீ!

- எஸ்.கதிரேசன்

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.