Published:Updated:

பாபாயணம் - 4

sai baba
பிரீமியம் ஸ்டோரி
News
sai baba

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

நீ மாயையில் சிக்கி என்னை மறந்திருக்கிறாய்.

புற உலகை நம்பி வாழ்கிறாய்.

நான் இருக்கிறேன் என்பதை மறந்துவிடாதே.

மனதை மட்டும் என்னிடம் மையமாக்கு.

- பாபா.

ஓம் சேஷசாயினே நமஹ.

பல இடங்கள் சுற்றித் திரிந்து தன் பதினாறாவது வயதில், ஷீர்டியில் ஒரு வேப்ப மரத்தடியில் காட்சி தருகிறார் பாபா. இளம்பாபாவை முதலில் தரிசித்தது நானா சோப்தார் என்பவரின் தாயார் கங்காபாய் என்பவர். மூலிகை பறிக்க விவசாய நிலம் நோக்கி நடந்த அவரை பாலபாபாவின் உருவம் ஈர்த்தது. முகத்தில் தெய்வீகக்களை நிரம்பி ஒளியுடன் விளங்கும் அவரைப் பார்த்தபடியே நின்றார் கங்காபாய். ஆழ்ந்த தியானத்தில் இருந்த பாபா கண் திறந்து பார்த்த அந்த விநாடி கங்காபாய் உடலுக்குள் ஒரு சிலிர்ப்பு. தன்னை மறந்து கைகூப்பி வணங்கினார். சிலிர்ப்பூட்டும் இந்தத் தருணத்தை அவர் ஷீர்டியில் அனைவரிடமும் கூறினார்.

பாபாயணம்
பாபாயணம்

“வேப்பமரத்தடியில் வீற்றிருக்கும் பாலகன் மிகவும் அழகாக இருக்கிறான். மழையோ, வெயிலோ எதுவும் அவனை பாதிக்கவில்லை. இரவில் பாம்புகள் நடமாடும் இடத்தில் அவன் ஆழ்ந்த தியானத்தில் இருந்திருக்கிறான். பார்த்ததும் அன்புகொள்ளும் அளவுக்கு அவன் செயல்கள் இருந்தன.”

மரத்தடியில் நாள் கணக்கில், வாரக் கணக்கில் அமர்ந்திருந்தார் பாபா. அவரை முஸ்லிம் என்று சிலரும், இந்து என்று சிலரும் நினைத்தார்கள். ஆனால் நிச்சயம் அவர் ஒரு மகான் என்ற செய்தி மட்டும் காட்டுத்தீப்போல் ஷீர்டி எங்கும் பரவியது. இந்த நிலையில்தான் மகல்சாபதி அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைச் சந்திக்க வந்தார். ஆரம்பத்தில் அவரும் பாபாவை முஸ்லிம் என்று நினைத்து, அருகில் நெருங்கி வணங்கத் தயங்கினார். ஆனால் கண்திறந்து பாபா அவரைப் பார்த்த அந்த நிமிடம் அவருக்குள் நிகழும் பரவசம் அவரை மாற்றுகிறது. பாபா எழுந்து அன்பும் பாசமுமாக அவரை அழைத்துத் தன்னருகில் அமர்த்திக்கொள்கிறார்.

சாய் பாபா
சாய் பாபா

சாயியிடம் மகல்சாபதி அநேக கேள்விகளைக் கேட்டார். ஆனால் அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லாத சாயி அவரிடம், “நீ நல்லவன். முன் ஜென்மத் தொடர்பால் என்னை நீ சந்தித்துள்ளாய்” என்றார். மகல்சாபதியின் உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது.

தன் பக்தர்கள் தன்மேல் செலுத்தும் அன்பிற்கு நெகிழ்ந்து, கேட்காமலேயே சகல வரங்களும் அள்ளித் தருபவர் பாபா. ‘கண்ணனைக் கட்டி வைக்க முடியாது’ என்று பாஞ்சாலி கூறும்போது தன் மன அன்பினால் கிருஷ்ணனைக் கட்டி வைத்தான் சகாதேவன். அன்புக்குக் கட்டுப்பட்ட கிருஷ்ணனாக பாபாவைப் பார்க்கும் பக்தர்கள் அவரை ‘சேஷசாயினே நமஹ’ என்று போற்றுகிறார்கள்.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில். வாரந்தோறும் பாதுகாக்கத் தயாராகுங்கள்!

அவரை ஒரு சித்தராக நினைத்த ஷீர்டி மக்கள் மெதுவாக அவரை அணுகத் தொடங்கினார்கள். மகல்சாபதி அடிக்கடி பாபாவைப் பற்றி ஆலயத்துக்கு வருபவர்களிடம் அவரின் அற்புதங்களைப் பற்றிக் கூறத் தொடங்கினார். “வேப்ப மரத்தடியில் இருக்கும் பாலகனை நீங்கள் பித்தன்போல் நினைக்கிறீர்கள். ஆனால் அவன் மிகப்பெரும் சித்தர், இறைவனின் பிரதிநிதி, அற்புதங்கள் நிகழ்த்தும் பரப்பிரும்மம்” என்று கூறிக்கொண்டேயிருந்தார். மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாபாவை நெருங்கிவந்தார்கள்.

பாபா அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களின் நோய்களைத் தீர்த்தார். வரப்போகும் துன்பங்களை எடுத்துக் கூறினார். கவலையோடு வந்தவர்களின் பிரச்னைக்குத் தீர்வு சொன்னார். நாள்கள் செல்லச் செல்ல மக்கள் பாபாவை நோக்கித் தயக்கமின்றி வரத்தொடங்கினர்.

சாய் பாபா
சாய் பாபா

ஆரம்பத்தில் அற்புதங்களே மனிதர்களை ஈர்க்கும் என்று தெரிந்திருந்தார் பாபா. உலகாயத விஷயங்களை நிறைவேற்றியே தெய்வ நம்பிக்கையை அவர்களுக்குள் வளரச் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், அற்புதங்களில் தேங்கிவிடாமல் உயர்ந்த ஆன்மிக நெறியில் அவர்களை வழிப்படுத்துவதே தன் கடமை என்றும் அவர் நினைத்தார்.

ஒருவரை குருவாக ஏற்றுக்கொண்ட பின்னும், ‘யார் உண்மையான குரு, இவரை நம்பலாமா, வேண்டாமா’ என்றே பலரின் மனமும் அலைக்கழிக்கப்படுகின்றன. ஆனால் பூரண சரணாகதி அடைந்துவிட்டால், ‘என் பொறுப்புகள் எல்லாம் உன்னுடையவை’ என்று சரணாகதி அடைந்துவிட்டால் மனம் அலைபாய்வது தடுக்கப்படுகிறது.

“நான் ஒளி, நீ வழிப்போக்கன்” என்கிறார் பாபா. “அடிக்கடி குருமார்களை மாற்றிக் கொண்டிருந்தால் உனக்கென ஒரு சொந்த குரு இல்லாமற்போவார். ஏற்றுக்கொண்ட குருவிடத்தில் ஸ்திரமான விசுவாசம் வேண்டும். சித்தம் அலைபாயக் கூடாது. உன் குருவுக்குப் பெயரும் புகழும் அதிகம் இல்லாமலிருக்கலாம். ஆனாலும் உன் குருவிடம் திடமான நம்பிக்கை வேண்டும்” என்கிறார் தேவாதி தேவன் பாபா.

(தரிசனம் தொடரும்)

ன் இளைய மகள் ஓர் இடம் வாங்கினாள். வேறொரு நபர் தனக்கும் அந்த இடத்தில் பங்குண்டு என்று வழக்கு போட்டுவிட்டார். பாபாவிடம் பிரார்த்தியுங்கள் என்று கூறினாள் மகள். நானும் அவ்வாறே ஒவ்வொரு வியாழக்கிழமையும் வேண்டினேன். என்ன ஆச்சர்யம், வழக்கு தள்ளுபடியானது.

sai baba
sai baba

வாங்கிய இடத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை எனக் கூறினாள் மகள். பாபாவைத் தூய்மையான அன்போடு மனமுருகி வழிபட்டால் என்றும் பாபா நமக்குத் துணையிருப்பார்.

- செ.சுப்பையா, வந்தவாசி

வாசகர்களே!

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.

பாபாவும் நானும்...

``ஒரு நாள், நான், என் மனைவி, என் பேரன் சித்தார்த் எல்லாரும் சேர்ந்து, ஈ.சி.ஆர் ரோட்டுல இருக்கிற சாயிபாபா கோயிலுக்குப் போயிருந்தோம். அந்தக் கோயிலின் அண்டர்கிரவுண்டில் ஒரு மெடிட்டேஷன் ஹால் இருக்கு. என்னை மறந்து ரொம்ப நேரம் தியானத்தில் உட்கார்ந்திருந்தேன்.

அப்போ என் பேரன் வந்து, `என் கையைத் தொட்டுப் பாருங்க’ன்னு சொன்னான். அவன் கையைத் தொட்டுப்பார்த்தேன். அந்த இடமே ரொம்பவும் ஜில்லுனு இருந்துச்சு. ஆனா, அவனோட கை சூடா இருந்தது. அந்த இடத்துல நல்ல பவர் இருக்குங்கிறது நல்லாத் தெரிஞ்சுது.

ஏவி.எம்.சரவணன்
ஏவி.எம்.சரவணன்

அதுக்குப் பிறகு பாபா மேல ஓர் ஈர்ப்பு வந்தது.

எங்ககூட இருக்குற ஒரு பொண்ணுக்கு நல்லபடியாக பிரசவம் நடக்கணும்னும், வயசான ஒருத்தர் உடம்பு சரியில்லாதபோது உடம்பு நல்லவிதமாக குணமாகணும்னும் வேண்டிக்கிட்டேன். அவங்ககிட்ட சொல்லாம நான் ரகசியமா வேண்டிக்குவேன். அப்படிப்பட்ட வேண்டுதல்கள் உடனடியாகப் பலிக்க ஆரம்பிச்சுது. அதிலிருந்து நான் சாயிபாபவோட பக்தரா மாறிட்டேன்.

வேற எந்தக் கோயிலுக்கும் நான் பெருசா போறதில்ல. ஷீர்டிக்குப் போனதுகூட ரொம்ப நாள் கழிச்சு, போன மார்ச் மாதம்தான். என்னால ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஒரே இடத்துல உட்கார்ந்து டிராவல் பண்ண முடியாது. ரொம்பக் கஷ்டம். எப்போ ஷீர்டிக்கு ஃப்ளைட் வருதோ அப்போ போகலாம்னு சொல்லிக்கிட்டிருந்தேன். அது மாதிரி 11 வருஷம் கழிச்சு இப்ப அங்க விமான நிலையம் வந்திருக்கு. நான் ரெகுலரா போகிற கிழக்குக்கடற்கரை பாபா கோயில் ரமணிதான் சொன்னார். `சார், உங்க பிரார்த்தனை பலிச்சிடுச்சு. ஷீர்டிக்கு டைரக்ட் ஃப்ளைட் வந்தாதான் என்னால் வரமுடியும்னு சொன்னீங்க. அதே மாதிரி வந்துடுச்சு சார்'னு சொன்னார். ஜனவரி மாதம் அங்கு விமான நிலையம் வந்துச்சு. அதன்பிறகு நான் மார்ச்சில்தான் ஷீர்டிக்கு ஃப்ளைட்ல போயிட்டு வந்தேன். அவரைக் கும்பிட்ட மனசுல நிம்மதி வந்துடுது. நிம்மதி வந்துடுச்சுனா சந்தோஷம் தானா வந்திடும் இல்லையா?’’

படம்: என்.கார்த்திக்