மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 40

ஸ்ரீசாயிபாபா
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீசாயிபாபா

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.

பாபாவின் மீது அதீத மரியாதையும் அன்பும் கொண்டு வாழ்ந்தவர் ரகுவீர் புரந்தரே.

தாஸ்கணு மகாராஜ் மூலம் பாபாவின் பெருமைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைச் சந்திக்க வேண்டும் என்று தீராத ஆவல் கொண்டார். மிக எளியவர். ஆனால் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர். ஷீர்டி வந்து தரிசனம் செய்துகொண்ட பிறகு சாயியைத்தவிர வேறு தெய்வம் தனக்கு இல்லை என்று ஆழ்ந்த நம்பிக்கையும் அன்பும் அவருள் உருவாயிற்று.

ஆனால் அவர், ஆறு அல்லது ஏழு பேர் கொண்ட ஒரு குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும். இதில் ஷீர்டிக்கு சாயியை தரிசனம் செய்யக் கிளம்புவது என்பது எளிதான காரியம் அல்ல என்றாலும், பாபாவை தரிசனம் செய்யும் ஆர்வம் அவரை விடவில்லை. ஒருமுறை தன் தாய், மனைவி, குழந்தையுடன் அவர் ஷீர்டி நோக்கிக் கிளம்பும்போது குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல்போனது. ஆனால் பிடிவாதமாய் பாபாவிடம் சென்றால் அனைத்தும் சரியாகிவிடும் என்று நம்பிக்கையோடு கிளம்பி வந்தார். அதேபோல் குழந்தையின் காய்ச்சலும் சரியானது. பாபாவைக் கண்டதும் அவர் தன்னை மறந்தார். அவருடைய அன்பு மேன்மேலும் ஆழப்பதிந்து பாபாவுடன் பல பிறவிகள் தொடர்பு கொண்டதாக அவர் நினைக்கத் தொடங்கினார்.

புரந்தரே அடிக்கடி கோபப்படுவார். பாபா அந்த குணத்திலிருந்து அவரை முழுவதுமாக வெளியேற்றி அன்பின் பாதையில் திருப்பினார்.

பாபாயணம்
பாபாயணம்

புரந்தரே ஓர் ஏழை குமாஸ்தா. ஆனால் பணத்தாசை பெரிதாக அவரிடம் இல்லை. தன்னுடைய வருமானத்தில் குடும்பத்தைக் காப்பாற்றுவது பெரிய விஷயம் என்று நினைக்கும்போது பாபா ஆச்சர்யப்படத்தக்க முறையில் அவருக்கு நல்லது செய்ய விரும்பினார்.

பாபா புரந்தரேவிடம் “நீ ஏன் ஒரு பங்களா வாங்கக் கூடாது” என்று கேட்டார்.

ரயில்வேயில் சொற்ப சம்பளம் வாங்கும் தன்னால் சொந்த வீடு வாங்குவது என்பது கனவிலும் நடக்காது என்று நினைத்தார் புரந்தரே. பாபாவின் விருப்பத்தைப் புரிந்துகொண்ட நானா, காகாதீட்சித் ஆகியோர் பாபாவிடம், “நீங்கள் விரும்பினால் நாங்கள் அவருக்கு ஒரு வீடு கட்டித் தருகிறோம்” என்று விண்ணப்பித்தனர். ஆனால் பாபாவோ “அவனுக்கு வேண்டிய பணத்தை நான் கொடுப்பேன். நான் ஒருவனே அவனை வசதியாக வாழ வைக்க முடியும்” என்று கூறி மறுத்துவிட்டார்.

அடிக்கடி பாபா புரந்தரேவை நச்சரித்துக் கொண்டே இருந்தார். இதனால் புரந்தரேவும் ஓர் இடம் மட்டுமாவது வாங்கலாம் என்று நினைக்கத் தொடங்கினார். அப்போது ஒரு நண்பர் மனை வாங்கும் அளவு பணம் கொண்டுவந்து புரந்தரேவின் கையில் கொடுத்தார்.

‘`இதை எப்படித் திருப்பித் தரவேண்டும்...’’ என்று புரந்தரே கேட்டதற்கு, “முதலில் வீட்டைக் கட்டு. அதன் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்” என்று நண்பர் சொல்லிச் சென்றார்.

இதைப் புரந்தரே பாபாவிடம் சொன்னபோது, “வீடு கட்டும் வேலையை ஆரம்பி. அதற்கான பணத்தையும் நான் தருவேன்” என்றார். வீடுகட்டும் பணியைத் தொடங்கினார் புரந்தரே. அப்போது அவரது அலுவலகத்தில் வீடு கட்டுவதற்குக் கடன் கொடுக்கும் நடைமுறை உண்டானது. புரந்தரே, உடனே ஆபீஸில் மனு கொடுத்துக் கடன் பெற்றார். ஆனால் வீட்டு வேலையைக் கவனிக்க முடியாத அளவுக்கு அவர் தலைவலியால் பாதிக்கப்பட்டார் என்றாலும், எல்லாமே தடையில்லாமல் கிடைத்து வீடு கட்டி முடிக்கப் பட்டது.

வாஸ்து பூஜை செய்து அந்த வீட்டுக்குள் குடிபுகுந்த பிறகு அவர் தலைவலி முற்றிலும் மறைந்தது. தனிமையான ஒரு மனையில் வீடு இருந்தது. தாங்கள் அனைவரும் வேலைக்குச் சென்ற பிறகு மனைவி, தாய் குழந்தைகள் தனியாக எப்படி இருப்பார்கள்... அவர்களுக்குப் பாதுகாப்பு ஏது” என்று புரந்தரே பயந்த போது, “பயப்படாதே எல்லா நேரமும் உன் குடும்பத்தின் பாதுகாப்புக்கு நான் இருக்கி றேன்” என்று உறுதிமொழி கூறினார் பாபா.

அதன்பின் பாபாவின் திருவருள் எப்போதும் அந்த வீட்டில் இருந்து காத்தது.

ஸ்ரீசாய்பாபா
ஸ்ரீசாய்பாபா

ஒருமுறை அவர் மனைவி காலராவால் பாதிக்கப்பட்டு உடம்பின் நீர்ச்சத்து குறைந்து, இதயத்துடிப்பு மிகவும் பலவீனமாகிவிட்டது. மருத்து வர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்.

ஆனால் தன்னுடைய மருத்துவர் ஷீர்டி சாயிநாதனே என்பதில் புரந்தரே உறுதியாக இருந்தார். பரிபூரணமான நம்பிக்கையோடு அவர் பாபாவை நினைத்து வேண்டிக் கொண்டார். அப்போது, அங்கிருந்த மாருதி கோயிலில் பாபா தோன்றி அவருக்கு தரிசனம் அளித்தார்.

‘`அஞ்சாதே, அவளுக்கு உதியும் தீர்த்தமும் கொடு” என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். உடனே புரந்தரே வீட்டுக்குச் சென்று உதியை நீரில் கரைத்து அவள் வாயில் புகட்டினார். அவர் மனைவி அதைப் பருகினார். ஒரு மணி நேரத்தில் மூச்சு சீராக வரத்தொடங்கியது.

புரந்தரேவுக்கு மட்டுமல்ல, தன் மேல் அன்பும் பக்தியும் கொண்ட அனைவரின் குடும்பத்தையும் அருகிலேயே இருந்து இன்றும் வழிநடத்திப் பாதுகாக்கிறார் என்பதுதான் சாயி பக்தர்களின் வாழ்வின் ஆதாரம்.

(தரிசனம் தொடரும்)

வாசகர் அனுபவம்

ங்கள் குடும்பத்தில் அனைவரும் கடவுள் மறுப்பாளர்கள். நானும் அப்படித்தான் இருந்தேன். என் நண்பர் ஒருவர் பாபவைக் குறித்து அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். நான் ஆர்வமாகக் கேட்பதில்லை. ஆனாலும் உள்ளூர ஓர் ஈடுபாடு தோன்றியது. 2007-ம் ஆண்டு எனக்கு ஓர் அறுவை சிகிச்சை நடந்தது. உண்மையில் மிகவும் பயந்துவிட்டேன். பயத்தில் மூச்சுத் திணறல் அதிகரித்து செயற்கை சுவாசம் வைக்கும் அளவுக்கு உடல்நிலை மோசமானது. அப்போது எனக்கு பாபாவின் நினைவுவந்தது. மனதை பாபாவின் மேல் செலுத்தினேன். அப்படியே மயங்கிவிட்டேன். அறுவைசிகிச்சை முடிந்து அறையில் கிடத்தப்பட்டிருந்தேன். கண்விழித்தபோது என் அருகே ஒரு பெரியவர் இருந்தார். அவர் யார் என்று முதலில் புரியவில்லை. பிறகு அது பாபா என்று புரிந்தது. கண்ணீர் மல்கியது. `கவலைப்படாதே... நான் இருக்கிறேன்’ என்று சொல்லி ஆசீர்வதித்து மறைந்தார். அந்தச் சொற்கள் என் காதுகளிலேயே ஒலித்துக்கொண்டிருந்தன. அதன்பின் மருத்துவர்கள் எதிர்பார்த்ததைவிட விரைவாக குணமாகி இன்றும் நலமாக உள்ளேன். எல்லாம் சாயியின் பெருங்கருணையே.

- ந.சோலையப்பன் திருவப்பூர்.

பாபாவும் நானும்...

ஷீர்டி சாயி பாபா, ஜீவனோடு இருக்கும் பிரத்யட்சமான கடவுள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரைகூட நான் பாபாவின் தீவிரமான பக்தை என்று சொல்லமுடியாது. `இலக்கிய வழியாக இந்திய இணைப்பு' என்ற இலக்கியப் பணிக்காக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தேன். அப்போதுகூட எல்லாக் கோயில்களுக்கும் செல்வது போல்தான் நான் ஷீர்டிக்கும் சென்று வந்தேன்.

எழுத்தாளர் சிவசங்கரி
எழுத்தாளர் சிவசங்கரி

ஒருமுறை என் தாயாருக்கு உடல் நலமில்லாமல் மணிக்கட்டில் ஒரு பிரச்னை ஏற்பட்டது. 89 வயதில் அவருக்கு அனஸ்தீசியா கொடுத்து ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை. ஆனால், அந்த பிளேட் சரியாகப் பொருந்தவில்லை. மீண்டும் ஒரு வாரத்திலேயே மறு ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டாவது முறை ஆபரேஷன் செய்தும் பிளேட் நிற்காமல் நகர்ந்து கழன்றுவிட்டது.

மிகவும் கவலையாகப் போய்விட்டது. நண்பரிடம் சொல்லி வருத்தப்பட்டேன். அவர், `கவலைப்படாதீங்க பாபா எல்லாம் பார்த்துக்கொள்வார்' என்று சொன்னார்.

நான் பாபாவை நினைத்து மனமுருகி வேண்டினேன். ஒன்பது வாரங்கள் விரதம் இருந்து சாயிபாபாவை வணங்கினால், நம் மனதில் நினைத்த காரியம் நடைபெறும் என்பது ஒரு நம்பிக்கை. இது பாபா பக்தர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நானும் என் அம்மா உடல்நலம் அடைய வேண்டுமென வேண்டி ஒன்பது வாரங்கள் விரதம் இருந்தேன். அந்த பிளேட் தானாகவே செட்டாகிவிட்டது. அதன் பிறகு மூன்றாண்டுகள் என் தாயார் என்னுடனேயே இருந்தார். எந்தவித ஆபரேஷனும் செய்யவில்லை, எல்லாம் பாபாவின் அருள்தான். இப்படி ஆரம்பித்தது இன்று அவரே எல்லாம் என்று ஆகிவிட்டது. ஷீர்டி சாயி பாபாவைப் பற்றி நானே இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளேன்.

- எஸ்.கதிரேசன்

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.