மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 48

பாபாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாபாயணம்

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

பாபாவின் அணுக்க பக்தர்களில் ஒருவர் நானா. உறவினர் ஒருவருக்கு உணவிட்டுப் பின் உணவருந்துவதே உயரிய தர்மமென்பதை அறிந்த நாளிலிருந்து அதைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார். சில நாள்கள் உறவினர் ஒருவரும் கிடைப்பதில்லை. இது அவருக்குப் பெரிய மனக்குறையை ஏற்படுத்தியது. பாபாவிடம் இதைப் பற்றிப் பேசினார். அவர் புன்னகையோடு நானாவை நோக்கினார்.

“நானா, மனிதர்கள் மட்டும் இந்தப் பிரபஞ்சத்தின் உயிர்கள் இல்லை. பறவைகள், விலங்குகள் அனைத்தும் அந்தப் பரமாத்மாவின் வடிவங்கள்தான். இந்த உலகின் சகல ஜீவன்களிலும் நீ அவரை தரிசிக்கக் கற்றுக்கொண்டுவிட்டால் நீ விருந்தினர் கிடைக்கவில்லை என்று வருந்தமாட்டாய். பசியோடு வரும் எந்த உயிருக்கும் உணவிடு. அவை வயிறும் மனமும் குளிரும்போது நீ எதிர்பார்க்கும் புண்ணியம் பல ஆயிரம் மடங்கு உனக்கு வந்து சேரும்” - என்றார் பாபா.

நானாவுக்கு இந்த வழிகாட்டுதல் பேருபதேசமாகப் பட்டது. அதன்பின் கண்ணில் படும் உயிர்களின் மீதெல்லாம் அவர் காருண்யம் காட்ட ஆரம்பித்துவிட்டார்.

பாபாயணம் - 48

பொதுவாகவே பக்தர்கள் தம் லௌகிகத் தேவைகளுக்காகவே இறைவனை நாடுவார்கள். பாபாவையும் அப்படி அவர்கள் நாடித் தம் குறைகளை முன்வைத்து வேண்டுவர். பாபாவும் தன் தயாள குணத்தால் அவர்களின் தேவைகள் தீர ஆசீர்வதிப்பார். ஷீர்டியின் சந்நிதிக்கு வறுமையோடு வந்தவர்கள் செல்வம் சேரும் வரங்களோடு சென்றனர். மழலைச் செல்வம் வேண்டியவர்களின் வேண்டுதல்களை பாபா ஆசீர்வதித்தார். இப்படி வருபவர்கள் அனைவரும் ஏதேனும் ஒன்றை பாபாவிடம் பெற்றுக்கொள்ளாமல் போனதில்லை. ஆனால் பாபாவின் கூடவே இருக்கும் சாமாக்கு இதுவரை, தான் எதையும் பாபாவிடமிருந்து பெற்றுக்கொள்ளவேயில்லை என்பது ஒரு குறையாக இருந்தது.

பாபாவின் சந்நிதியைவிடப் பெரும்பொக்கிஷம் என்ன இருக்கப்போகிறது. ஆனாலும் சாமாவின் மனம் அந்தக் குறையைக் கொண்டாடிக் கொண்டேயிருந்தது. ஒருநாள் அதை அவர் பாபாவிடமே கேட்டும்விட்டார்.

“ பாபா, உங்களிடம் வருபவர்களுக்குச் செல்வ வளம் தருகிறீர்கள். அவர்களின் நோய்கள் குணமாகின்றன. அனைத்து வளங்களையும் அவர்களுக்கு அருள்கிறீர்கள். ஆனால் எனக்கு மட்டும் இதுவரை எதையும் தரவில்லை” என்று குறைப்பட்டுக்கொண்டார்.

பாபாயணம் - 48

சாமா குறித்த பாபாவின் சித்தம் வேறானது. பாத்திரம் அறிந்துதானே பிச்சையிட வேண்டும்... சாமா அருளைப் பெற்றுக்கொள்ளத் தகுதியான பாத்திரம். எனவே அவருக்கு எந்நாளும் வாடாத அருட்செல்வத்தையே வழங்கிட வேண்டும் என்று தீர்மானித்திருந்தார் பாபா.

“சாமா, உனக்கு நான் எந்தச் செல்வத்தையும் தரப்போவதில்லை. அவை நிலையில்லாதவை என்பதை நீ அறியமாட்டாயா, உனக்கு எந்நாளும் அழியாத செல்வங்களை வழங்குகிறேன்” என்று சொல்லி, தான் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் விஷ்ணு சஹஸ்ரநாமம், பாகவதம் போன்ற புனித நூல்களைக் கொண்டுவந்தார்.

“சாமா, இதைவிட அழிவில்லாத செல்வம் என்னிடம் வேறு எதுவும் இல்லை... இவை எந்நாளும் உன்னோடிருந்து உன்னை அருளின் வழியில் நடத்தும்” என்று சொல்லி அவற்றை சாமாவின் கரங்களில் கொடுத்தார். இதைவிடப் பெருஞ்செல்வம் வேறேதேனும் உண்டா என்ன... சாமா மன மகிழ்ச்சியோடு அவற்றை ஏற்றுக்கொண்டார்.

இப்படி பாபாவின் பக்தர்கள் ஒவ்வொருவரும் ஒருவிதம். அப்படி பாபாவை வந்து சரணடைந்த ஒரு பக்தர் இமாம்பாய் சோடாகான்; நிஜாம் சமஸ்தானத்தில் சிப்பாயாக இருந்தவர்.

அவருக்கும் அவர் மாமியாருக்கும் இடையே நிலத் தகராறு இருந்தது. குடும்பத்தில் குழப்பம், வேதனை. நிம்மதி இல்லை. எதனால் இவையெல்லாம் என்று தெரியாமல், அது குறித்து மனக்கவலையில் இருந்த கான் சில அடியவர்களின் சொல் கேட்டு ஷீர்டி வந்தார். ஆனால், பாபா அவரை மசூதிக்குள் அனுமதிக்கவில்லை. வசை பொழிந்தார். ஏன் என்று யாருக்கும் புரியவில்லை.

சில நாள்களுக்கு முன்பு சோடாகான் பணியிலிருக்கும்போது ஒருவரைக் கடுமையாகத் தடியால் தாக்கிவிட்டார். அது அவருக்குப் பெரும் சிக்கலை உண்டாக்கியிருந்தது. வேலையை ராஜினாமா செய்துவிட்டுச் சென்றுவிடுமாறு சிலர் அவருக்கு அறிவுரை சொன்னார்கள்.

அப்படி அவர் வேலையை விட்டுவிட்டுத் தான் ஷீர்டிக்கு வந்திருந்தார். சகல உயிர்களையும் சமமாகப் போற்றும் பாபா, சோடாகானின் செயலை ஏற்றுக்கொள்வாரா என்ன... ஒரு கட்டத்தில் பாபா அந்த நிகழ்வைக் குறிப்பிட்டே சோடாகானைத் திட்ட ஆரம்பித்தார். சோடாகானுக்கு இது பெரும் ஆச்சர்யத்தையும் குற்ற உணர்வையும் தந்தது. யாரும் சொல்லாமலே பாபா அந்தக் குற்றத்தை அறிந்திருந்தது குறித்து நடுக்கம் உண்டானது. செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். பாபாவின் தரிசனம் மட்டுமே தன் பாவங்களைத் தீர்க்கும் என்று அறிந்து பாபாவின் சீடர்களான தீட்ஷித், காசிம் பாய் மூலம் பாபாவைச் சந்திக்க முயன்றார். அவர்கள் பாபாவிடம் சோடாகானுக்காக வேண்டிக் கொண்டனர். பாபா, அவரை மசூதிக்குள் அனுமதித்தார்.

பாபா, “உன் பிரச்னைகள் விரைவில் மறைந்துவிடும். நிலத்தகராறுகளும் தீர்ந்துவிடும். ஆனால், எல்லோரிடமும் இணக்கமாக இரு” என்று சற்றுக் கடுமையாகவும் அதே நேரம் கருணையோடும் ஆசீர்வதித்து அனுப்பினார்.

சாயி கருணைக்கடல். அவரிடம் நீங்கள் எதையும் மறைக்க முடியாது. சக மனிதர்கள் மேல் பாசம் வைக்காமல் நீங்கள் அவரின் அருளைப் பெறவும் முடியாது.

(தரிசனம் தொடரும்)

வாசகர் அனுபவம்

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன் இச்சம்பவம் நடந்தது. எனக்குக் கடுங்காய்ச்சல். மறுநாள் தேர்வு. என்னையே அறியாமல் சோர்வினால் உறங்கிவிட்டேன். மறுநாள் ஆனது. ஒன்றுமே படிக்கவில்லை. எப்படியும் மதிப்பெண் குறைவாகத்தான் இருக்கும் என்று நினைத்தபடி பள்ளிப் பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன். எதிரே பாபாவின் புகைப்படம் இருந்தது. மனதில் புதிய நம்பிக்கை எழுந்தது. கிடைத்த நேரத்தில் நம்பிக்கையைத் தளர விடாமல் புத்தகத்தை எடுத்துப் படித்தேன். ஏற்கெனவே படித்த பாடங்களும் நினைவுக்கு வந்தன. ஒருவழியாக நம்பிக்கையோடு தேர்வு எழுதினேன். தேர்வில் முதல் முறை 88 மதிப்பெண் எடுத்தேன். இதற்கெல்லாம் காரணம் பாபாதான். அன்றிலிருந்து பாபா என்றாலே தனி நம்பிக்கைதான்.

- பா.ரேஷ்மா, திருவண்ணாமலை

பாபாவும் நானும்....

மதுரை முத்து
மதுரை முத்து

“நான் ஐந்து வருடங்களாக சாயிபாபாவை வணங்கிவருகிறேன். ஒரு பொங்கல் பண்டிகையின் போது ஷீர்டிக்குச் சென்று தரிசனம் செய்தேன்.அவரிடம் வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனைகள் அதிகம் பலிப்பதால்தான் பாபாவுக்குக் கடந்த 15 ஆண்டுகளில் கோடிக்கணக்கான பக்தர்கள் உருவாகியிருக்கிறார்கள். மதுரையில் பெரியார் பாலத்தின் கீழிருக்கும் ஆண்டாள்புரம் சாய்பாபா கோயிலுக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெருகி வரும் பக்தர்களின் எண்ணிக்கையே இதற்கு சாட்சி. நம் வீட்டில் இருக்கும் பெரியவர் மிக இயல்பாக நமக்கு ஆசீர்வாதம் செய்வது போல் பாபா நமக்கு ஆசீர்வாதம் செய்கிறார். அவரின் தீட்சண்யம் மிக்க பார்வை நமக்கு அருளாசி வழங்கிக் கொண்டே இருக்கின்றது. சிலர் பாபாவிடம் பிரார்த்தனை வைத்த உடனே தனக்கு அது நிகழ்ந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதாவது சுவிட்சை ஆன் செய்ததும் பல்பு எரிவது போல் உடனே அது பலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், பாபாவிடம் நம்பிக்கையும் பொறுமையும் வைத்திருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். அதை நான் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன். ஒருமுறை என் மனைவிக்கும் எனக்கும் சிறிய பிணக்கு ஏற்பட்டு அவர் என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார். குழந்தைகள் அழுதுகொண்டிருந்தார்கள். எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. அவரின் போனை என்னால் ரீச் பண்ணவே முடியவில்லை. அப்போது நான் பாபாவை நினைத்துக் கொண்டேன். என் மனதிலிருந்த வருத்தத்தை பாபாவிடம் வைத்து வணங்கினேன். என் மனைவி திருச்செங்கோட்டில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்யவே சென்றிருந்தார். மூன்றாம் நாள் அவரே என்னிடம் வந்துவிட்டார். இந்த நிகழ்ச்சி என்னை நெகிழவைத்தது. இதுபோன்ற அற்புதங்களை அவ்வப்போது நிகழ்த்துவதற்கு பாபாவையன்றி வேறு யாரைச் சொல்ல முடியும்?”

- எஸ்.கதிரேசன்

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.