கட்டுரைகள்
Published:Updated:

பாபாயணம் - 49

பாபாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாபாயணம்

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.

பாபாவின் பார்வை வெவ்வேறு மனிதர்களின் மீது வித்தியாசமான வழிகளில் தன் அருளைப் பொழியும். அவரிடம் லௌகீக பலன்களை எதிர்பார்த்து வந்தவர்கள்தாம் அதிகம் என்றாலும், தீட்சித், நானா போன்றவர்கள் பக்தி என்ற உணர்வுடன் மெய்ஞ்ஞானம் வேண்டியும் அவரை நெருங்கினார்கள். அவ்வாறு பாபாவை நோக்கி வந்தவர்களுள் பிற்காலத்தில் நாராயண ஆஸ்ரம் என்றழைக்கப்பட்ட டோஸரும் ஒருவர்.

டோஸர் என்பவர் சதாரா ஜில்லா, கங்காபுரி வாய் என்னும் இடத்தில் சுங்க இலாகாவில் பணியாற்றிவந்தார். ஒருநாள் அவர் கனவில் ஒரு சாது தோன்றித் தன்னிடம் வருமாறு அழைத்தார். அந்தக் கனவிற்குப் பின் அவரது மனம் அந்தச் சாதுவின்பால் ஈர்க்கப்பட்டு, சந்நியாசம் பெற்று ஞான வழியில் செல்ல வேண்டும் என்ற உணர்வு அவருக்குள் எழும்ப ஆரம்பித்தது.

அதன்பிறகு 15 வருடங்கள் கழித்து அவர் ஷீர்டி வந்து பாபாவைச் சந்தித்தபோது தன் கனவில் தோன்றிய சாது அவரே என்று உணர்ந்து வியந்துபோனார். பாபாவிடம் தனக்கு சந்நியாசம் வழங்கும்படி வேண்டிக்கொண்டார்.

பாபாயணம் - 49

ஆனால், அவர் துறவியாக மாற பாபா சம்மதிக்கவில்லை. “பொறு” என்றே சொல்லி வந்தார். “ஒவ்வொருவரும் அவரவர் வழியைப் பின்பற்றி நடக்க வேண்டும். சம்சார பந்தத்தில் இருப்பவன் துறவு ஏற்பது பொறுப்புகளை விட்டு விலகி ஓடுவது போன்றது” என்பார் பாபா.

பாபா யாரிடமும் சந்நியாச வாழ்க்கையின் அவசியம் பற்றி ஒருபோதும் பேசியதில்லை. காரணம், அவரவர் தம் கடமைகளிலிருந்து விலக சந்நியாசத்தை ஒரு காரணமாக்கிவிடக்கூடாது என்பதுதான். டோஸருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து சில நாள்களிலேயே இறந்தன. தாய், மனைவி என்று ஒவ்வொருவராக மறைந்தனர். அதன் பின்னரே அவர் துறவு ஏற்றார்.

பாபா தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரின் தலையிலும் தன் உள்ளங்கையை வைத்து ஆசீர்வாதம் செய்வார். சிலர் தலையில் மென்மையாகக் கை வைத்தும், சிலரின் தலையில் தட்டுதல், அழுத்துதல் மூலமும் ஆசீர்வாதம் செய்வார். ஒவ்வொரு செயலுக்கும் ஓர் அர்த்தம், பலன் இருக்கும். முதன்முதலாக டோஸரைச் சந்தித்தபோது அவர் தலையில் கை வைத்து ஆசீர்வதித்து அவருடன் பாபா பேசியது சில சொற்களே என்றாலும், அவை நேரடியாக, புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருந்தன.

டோஸர், பாபா முக்தி அடைந்த பல வருஷங்களுக்குப் பிறகே பந்தங்கள் அகன்று ‘நாராயண ஆஸ்ரம்’ என்ற பெயரோடு சந்நியாசம் ஏற்றார். ‘நாராயண ஆஸ்ரம்’ என்று பெயர் மாற்றிக்கொண்ட அவர் பாபாவின் அனுக்கிரகத்தால் ஆன்மிக சாதனைகளில் பல முன்னேற்றங்களை அடைந்தார்.

பாபாவிடம் நாராயண ஆஸ்ரம் தான் பெற்ற நயன தீட்சை குறித்துப் பல முறை விரிவாகப் பேசியிருக்கிறார்.

“பாபாவின் நயன தீட்சை பெற்றவன் பாவங்கள் அனைத்தையும் தொலைக்கிறான். அமைதியும் நிம்மதியுமான வாழ்க்கைக்கு அவன் அழைத்துச் செல்லப்படுகிறான். அவர் எதிரில் அமர்ந்து, அவர் முகத்தையே பார்ப்பதில் இருக்கும் ஆனந்தம் வேறு எதிலும் இல்லை. பாபாவின் பார்வை நம் மேல் படும்போது ஒரு சிலிர்ப்பு, புல்லரிப்பு உண்டாகி மனம் முழுதும் மகிழ்ச்சி பரவும். அது உணர்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்று” என்கிறார் நாராயண ஆஸ்ரம்.

“நீங்கள் அவரைச் சரணடைந்து விட்டால் ஷீர்டி என்றில்லை, எங்கிருந்தாலும் அவர் பார்வையின் கண்காணிப்பு, கருணையின் சக்தியிலிருந்து யாரும் விலக முடியாது” என்கிறார் நாராயண ஆஸ்ரம். இதற்கு திருமதி தார்கட் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வு மிகச்சிறந்த உதாரணம்.

பாபாயணம் - 49

ஒருமுறை திருமதி தார்கட் இரவு நேரத்தில் மசூதியை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தார். அன்றைய காலகட்டத்தில் ஷீர்டியின் தெருக்கள் மேடுபள்ளமாகவும் விளக்குவெளிச்சம் இல்லாமல் இருளடைந்தும் காணப்படும். அப்போது “நில்” என்று ஒரு குரல் கேட்டது. என்ன ஏது என்று தெரியாமல் அம்மையார் அப்படியே நின்றுவிட்டார். அடுத்த அடி எடுத்துவைக்க முடியாமல் திணறினார். சிறிது நேரத்தில் ஒரு சின்ன வெளிச்சம் அங்கு பரவியது. அந்த வெளிச்சத்தில் அவர்முன் ஒரு பாம்பு படுத்திருப்பதைக் கண்டு நடுங்கினார்.

அடுத்த அடி எடுத்து வைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை அவரால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. பதற்றமும் பயமும் துரத்த அங்கிருந்து விலகி நடந்து மசூதிக்குள் ஓடிவந்தார். அப்போது அங்கு அமர்ந்திருந்த பாபா திருமதி தார்கட்டைக் கண்டு புன்னகை செய்தார். பின்பு குறும்புத்தனமாக, படம் எடுத்து ஆடும் பாம்புபோல் தன் கையை ஆட்டிக் காட்டி, “இந்த முறை அவர் உன்னைத் தொடாமல் காப்பாற்றினேன். இனி இருளில் வராதே” - என்றார். குரலாக வந்து தன்னைக் காத்த பாபாவின் திருவருளை எண்ணி எண்ணிச் சிலிர்த்தார் திருமதி தார்கட்.

திருமதி தார்கட்டைக் காப்பாற்றிய பாபா, எப்போதும் நம்மையும் கண்டுகொண்டே யிருக்கிறார். நமக்கு வரும் துன்பங்கள் அனைத்தையும் அவர் உரிய நேரத்தில் தடுத்துக் காப்பார். இது சாயி பக்தர்கள் தங்கள் வாழ்வில் காணும் நித்திய உண்மை.

(தரிசனம் தொடரும்)

வாசகர் அனுபவம்

நான் கட்டட மேஸ்திரியாக பில்டிங் வேலைகளை எடுத்துச் செய்துகொண்டிருந்தேன்.

2006-ம் ஆண்டில் திடீரென்று என் அம்மா இறந்துபோனார். இரண்டு லட்சத்துக்கும் மேல் கடன். வாழ்க்கை ரொம்ப சூன்யமாகத் தெரிந்தது. 2007-ம் ஆண்டில் ஐயப்பனுக்கு மாலை போட்டபோது என் குருசாமியாக இருந்தவர் பிரதி வியாழன் பாபா கோயிலுக்குச் செல்லும்படி கூறினார். அதற்குப் பிறகுதான் பாபா கோயிலுக்குப் போனேன். அங்கு ஒரு வயதான பெரியவர் சிலை. இதைப் போய் கும்பிடச் சொல்றாருன்னுதான் முதலில் நினைத்தேன். ஆனால் அங்கு போக ஆரம்பித்ததும் என் வாழ்க்கையே மாறிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக ஷீர்டிக்குப் போகணும்னு ஆசை ஏற்பட்டது. மறுநாள் கோயிலில் வழக்கம்போல வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். அர்ச்சகர் என்கிட்ட அவராகவே வந்து 'ஒரு குரூப் நாங்கல்லாம் ஷீர்டி போறோம். நீயும் வர்றியா?'ன்னு கேட்டார்.

எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு... சரி நான் வரேன்னு சொன்னேன். கையில் காசே இல்லை. ஆனால், திடீர்னு ஒரு காண்ட்ராக்ட் கிடைச்சுது. அதுல போயிட்டு வந்தேன். அதன் பிறகு என்னுடைய வாழ்க்கைப் பாதை ரொம்பவே மாறிப்போச்சு. அதுக்குப் பிறகு கிட்டத்தட்ட இதுவரைக்கும் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்களை நானே ஷீர்டி அழைத்துப்போய் வந்திருக்கிறேன். எல்லாம் சாயி அருள்தான்.

- பச்சையப்பன், அம்பத்தூர்

பாபாவும் நானும்....

போஸ் வெங்கட்
போஸ் வெங்கட்

ஒருமுறை என் மகளுக்கு உடல்நலமில்லாததால் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்திருந்தேன். 40 கிலோ எடை இருந்த என் மகள் வெறும் 15 கிலோவாகக் குறைந்துபோனாள். உடல் முழுவதும் சின்னச் சின்னதாக சிவப்பாய் ரத்தப் புள்ளிகள். எலும்பும் தோலுமாக என் பிள்ளை இருந்தாள். அவளை ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து குணமாவதற்கு முன்பே வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன்.

இன்னும் ஓரிரு நாள்கள் பொறுத்துப் பார்ப்பது, ஒன்றும் சரியாகவில்லை என்றால் நானும் என் மகளும் ஆளுக்கு 20 தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு இறந்துவிடலாம் என்றே நான் முடிவு செய்திருந்தேன். இதை வெளிப்படையாகச் சொல்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. உண்மை அதுதான். பாபாவின் காலடியில் நின்று கண்ணீர் விட்டு வணங்கினேன். அப்போது பாபா என் காதுகளில் ‘தீனதயாளுவைப் போய்ப் பார்’ என்று கூறினார். அந்தக் குரல் என்னை மிகவும் வசீகரித்தது. அப்படி ஒரு குரலை நான் கேட்டதே இல்லை. 'தீனதயாளு யார்?' என்பதுகூட எனக்குத் தெரியாது. என்னுடைய அலைபேசியை எடுத்து சோதனை செய்து பார்த்தேன். அப்போது டாக்டர் தீனதயாளு ஹோமியோபதி என்று நான் எப்போதோ பதிவு செய்திருந்த ஓர் எண்ணைப் பார்க்கவும் உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டு நிலைமையைச் சொன்னேன். உடனே அவர் ஒரு மருந்தைக் குறிப்பிட்டு `இந்த மருந்து அருகில் உள்ள கடையில் இருக்கிறதா என்று விசாரித்து வாங்கிக் கொடுங்கள்' என்று சொன்னார். அதன்படியே செய்தேன். ஒரு மணி நேரத்தில் என் மகள் ‘அப்பா பசிக்கிறது, சாப்பிட வேண்டும்’ என்று கூறினார். அவருக்குக் கஞ்சிசாதம் கொடுத்தோம். மூன்றுநாள்கள் அந்த மருந்தைக் கொடுத்து முடித்தேன். இரண்டு மூன்று நாள்களில் விடுவிடுவென என் மகள் குணமாகி, ஐந்தாம் நாள் பள்ளிக்கூடம் போய்விட்டாள். இதை பாபாவின் கருணையன்றி வேறு என்னவென்று சொல்ல முடியும்!

- எஸ்.கதிரேசன்

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.