மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 5

sai baba
பிரீமியம் ஸ்டோரி
News
sai baba

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

மனதை என்னிடம் மையமாக்கு. உன் மனம்

என்னை நோக்கியே இருக்குமானால் உனக்குக்

கிடைக்கும் பலன் நூறு மடங்கு இருக்கும்.

- பாபா.

இந்தப் பிரபஞ்சம் அன்பு என்ற அச்சில்தான் சுழல்கிறது. மனிதர்களுக்குள் நிலவும் அன்புதான் இன்னும் வாழ்வதற்கான சுவாரஸ்யத்தைத் தருகிறது.

அன்பே உருவானவர் பாபா. அவருக்கு அழியும் பொருள்களின் மீது ஆசை இல்லை. மனிதர்களின் ஆழமான உள்ளத்தை அவர் அறிவார். அன்பால் எதையும் ஆட்கொள்ள முடியும். எல்லா உயிர்களும் ஆண்டவனின் குழந்தைகள் என்று நேசித்தார் பாபா.

பாபாயணம் - 5

“நீங்கள் ஒரு மகத்தான வாழ்வை வாழப் பிறந்திருக்கிறீர்கள். உங்கள் மனதையும் இதயத்தையும் திறப்பதற்கான வழி என் நாமத்தையும் என்னையும் நினைப்பதுவே” என்கிறார் பாபா.

வாழ்க்கை நிறைய சவால்கள் நிறைந்தது. அவற்றை எதிர்கொண்டே ஆக வேண்டும். அவற்றிலிருந்து மீண்டுவரும் வழியை பாபா நமக்கு போதிக்கிறார். அன்பு என்ற சக்தி இந்தப் பிரபஞ்சம் முழுக்கப் பரவி நம்மை வழி நடத்துகிறது. அந்த சக்தியின் அங்கம் நாம். நம் வாழ்வின் லட்சியத்தை அடைய அந்த அன்பின் உருவமாக குரு நம்மை ஆட்கொள்கிறார்.

தான் இந்துவா, முஸ்லிமா என்று அறியத் துடித்த ஷீர்டி மக்களை அவர் வெறுக்கவில்லை. அளவுகடந்த அன்புடன் அவர்களை நேசித்தார். நோய்களுக்கு மருந்து அளித்தார். வரப்போவதை அறிந்து கூறினார். மக்களுக்கு எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உதவிகள் செய்தார். பொதுநிலத்தைப் பண்படுத்திப் பூந்தோட்டம் அமைத்தார். கோயில்களுக்கும் மசூதிகளுக்கும் அந்தப் பூக்களை அனுப்பினார்.

 பாபா
பாபா

ஆனால் ஷீர்டி மக்களுக்கு ‘அவர் யார்’ என்று அறிந்துகொள்ளும் ஆர்வம் மட்டும் விடவில்லை. பாபாவிடம் பலமுறை கேட்டும் அவர் புன்சிரிப்பையும் மௌனத்தையும் மட்டும் பதிலாக அளித்தார். எனவே அவர்கள் கண்டோபா தெய்வத்திடம் கேட்க முடிவு செய்தார்கள்.

ஷீர்டியில் கண்டோபா கோயிலில் செவ்வாய்க் கிழமை தோறும் பூஜை செய்யும்போது ஒருவர்மீது தெய்வம் இறங்கிக் குறி சொல்லும். ஒருநாள் பூஜையின்போது பீமா என்ற ஒருவர்மீது தெய்வம் இறங்கியது. அப்போது ஷீர்டி மக்கள் அவரிடம் “வேப்ப மரத்தடியில் இருக்கும் இளைஞன் யார்?” என்றனர். தெய்வம் பதில் சொல்லாமல் ஒரு மண்வெட்டியைக் கொண்டு வரச் சொல்லி வேப்ப மரத்தருகே ஒரு குறிப்பிட்ட இடத்தைக் காட்டி அங்கு தோண்டும்படி கூறியது.

ஷீர்டி மக்கள் அந்த இடத்தைத் தோண்டினார்கள். அங்கு ஒரு ரகசிய அறை இருந்தது. மக்கள் திகைத்து நின்றனர். அவர்களுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அந்தச் சுரங்க அறைக்குள்ளே ஒரு நிலைக்கதவு இருந்தது. அதில் நான்கு, ஐந்துமுக விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. தரைக்குள் இருந்த சுரங்க அறையில் எப்படி விளக்குகள் என்று மக்கள் அதிசயித்தனர். உட்பகுதியில் ஜபமாலைகள், அதை வைத்து பூஜை செய்யும் பசுமுக உருவப்பைகள், மரப் பலகைகள் இருந்தன.

ஷீர்டி மக்கள், அதிக வியப்பு டனும், முன்பைவிட அதிக மதிப்புடனும் பாபாவின் முன் கூடினர். ஆழ்ந்த தியானத்தில் இருந்த பாபா கண் திறந்து அவர்களை அன்புடன் நோக்கினார்.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில். வாரந்தோறும் பாதுகாக்கத் தயாராகுங்கள்!

“நீங்கள் யார் சாயி, நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள், மூடிய அறைக்குள் எப்படி தவம் செய்தீர்கள்?” என்று மாற்றி மாற்றிக் கேள்வி கேட்ட மக்களுக்கு பாபா எந்த பதிலும் சொல்லவில்லை. “நீங்கள் பார்த்தது என் குருநாதர் தவம் செய்த இடம். புண்ணிய தலம் அது. நான் பாதுகாக்கும் இடம். அதைப் பத்திரமாக முன்போல் மூடிவிடுங்கள்” என்றார்.

பாபாயணம் - 5

ஆரம்பத்தில் அவரை மதிக்காத ஷீர்டி மக்கள் நாள்கள் செல்லச் செல்ல அவரைத் தேடி வர ஆரம்பித்தார்கள். பாபா சாப்பிட்டாரா, தூங்கினாரா என்று கவலைப்படவில்லை. அவரின் உள்ளம் முழுவதிலும் அவர் குரு பற்றிய தியானத்திலேயே இருந்தது. அந்த ஆனந்தத்தில் மூழ்கிய அவரை உணவு, ஓய்வு போன்ற விஷயங்கள் நெருங்கவில்லை.

அவரிடம் இயல்பாக மகிழ்ச்சி நிரம்பியிருந்தது. ஆனந்த, அன்பு சாகரமாக இருந்த அவருக்குக் கற்பூர ஆரத்தியோ, நைவேத்தியமோ, கூட்டமோ, தேவையிருக்கவில்லை. ஆனால் மக்கள் அவரை நோக்கி வர ஆரம்பித்தார்கள். மத வேறுபாடின்றி பாபா அனைவருக்கும் வைத்தியம் செய்தார்.

வாழ்க்கையில் சில விஷயங்கள் புரியாத புதிர்களாகவே இருக்கும். மகான்களின் வாழ்க்கையும் அப்படியேதான். ஒருபக்கம் இனிப்பும், மறுபக்கம் கசப்புமான அந்த அதிசய வேப்பமரத்தடி இந்த அழகிய இளைஞன் வாசத்தில் இன்னும் அழகாகிப்போனது. இரவில் காலில் சலங்கை கட்டிக்கொண்டு கபீரின் பாடல்களைப் பாடி ஆடும் அவரின் இனிய குரல் ஷீர்டி மக்களின் உள்ளங்களில் நிறைந்து போனது.

நின் வாசம் என் இதயம் ஆகட்டும்

என் வழிகாட்டியும் நீயே ஆவாய் பாபா.

(தரிசனம் தொடரும்)

தீபாவளி ஷாப்பிங்குக்காக, குடும்பத்தோடு காரில் சென்றோம். வழியில் சாப்பிடுவதற்காக காரை நிறுத்தினோம். தட்டில் கை வைத்தபோதுதான், 40 ஆயிரம் ரொக்கமும் 20 பவுன் நகையும் இருந்த பையை காரிலேயே மறந்துவிட்டு வந்தது தெரிந்தது.

பாபாயணம் - 5

பதறிப்போய்ப் பார்த்தால், கார் கதவு லாக் ஆகாமல் இருந்தது. நாங்கள் அழாத குறை.அங்கேயிருந்த பெரியவர் 'கவலை வேண்டாம். உங்கள் பொருள் உங்களிடம்' என்றார். அதேபோல காருக்குள் பணப்பை இருந்தது. திரும்பிப்பார்த்தால் அவரைக் காணவில்லை.பாபா தான் எங்களுக்கு நம்பிக்கை வார்த்தைகளைக் கூறிச் சென்றவர் என்பதைப் பின்னர்‌தான் உணர்ந்தோம்.!

- சித்ரா கண்ணன், மதுரை.

பாபாவும் நானும்...

‘`என் வீட்டில் நடக்கும் எந்த சுபநிகழ்ச்சியாக இருந்தாலும், முதல் பத்திரிகையை பாபாவின் காலடியில் வைத்து ஆசீர்வாதம் வாங்கிய பிறகுதான் நடத்துவேன்’’ என்கிறார் நடிகை சீதா. பாபாவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவர் நம்மிடம் பகிந்துகொண்டார்.

 சீதா
சீதா

“கோட்டூர்புரத்துல ஒரு சாயிபக்தை இருக்காங்க. அவங்க வீட்டுல எப்போதும் வியாழக்கிழமையில் பெரிய அளவுல பூஜைகள் நடக்கும். எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது அப்பப்ப கலந்துக்குவேன். போன வாரம் அவங்க வீட்டுப் பூஜையில கலந்துக்கிறதுக்காகப் போயிருந்தேன்.

பாபா பூஜையில் கலந்துக்கப் போகும்போது மாதுளம்பழம், ஆப்பிள், லட்டு மூணும் வாங்கிட்டுப் போனேன். அங்க போய் பாபா பாதத்தில் பூஜைக்கு வெச்சுட்டு தீப ஆராதனை, பூஜை முடிஞ்சதும் அதைப் பிரசாதமா எனக்குக் கொடுத்தாங்க.

மாதுளம்பழம், ஆப்பிள், லட்டு இது எல்லாமே காக்கி கவர்லதான் இருந்துச்சு. பூஜை முடிச்சிட்டு எடுத்துப் பார்த்தப்போ மாதுளம்பழத்தைப் பிய்த்துச் சாப்பிட்டிருப்பது தெரிஞ்சுது. எங்களுக்கு இது பெரிய ஆச்சர்யமா இருந்துச்சு. லட்டு, ஆப்பிள் இரண்டிலுமே ஒரு விள்ளல் கடிச்சு சாப்பிட்டிருந்தார் பாபா. எங்க குடும்ப நண்பர் ஒருவர் பாபா பக்தர். அவர்கிட்ட `பாபாவோட சிலை ஒண்ணு வாங்கிட்டு வாங்க’ன்னு அடிக்கடி கேட்பேன். இத்தனைக்கும் அவர் அடிக்கடி ஷீர்டி போயிட்டு வர்றவர். எப்பவும் அவர், `நான் அங்கிருந்து பாம்பே போயிட்டேன். ஸாரி’ன்னு சொல்லுவார். எனக்கோ ரொம்பவும் வருத்தமா இருக்கும். ஆனா, பாபாவோட அற்புதம் பாருங்க. இன்னொரு நண்பர் ஒரு பெரிய அட்டைப்பெட்டி பார்சலோட வந்தார். அந்தப் பெட்டியைப் பிரிச்சுப் பார்த்தால், பாபாவோட சிலை, பாபாவோட காலண்டர், பாபாவோட படம்னு எல்லாம் இருந்துச்சு. எனக்கு ஆச்சர்யத்துல கண் கலங்கிடுச்சு!”

வாசகர்களே!

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.