Published:Updated:

பாபாயணம் - 50

பாபாயணம்
பிரீமியம் ஸ்டோரி
பாபாயணம்

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.

பாபாயணம் - 50

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.

Published:Updated:
பாபாயணம்
பிரீமியம் ஸ்டோரி
பாபாயணம்
ருமுறை திருமதி தார்கட், ஷீர்டி மசூதியில் பாபாவின் சந்நிதானத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு தொழுநோயாளி பாபாவை தரிசனம் செய்ய வந்தார். தொலைவில் வரும்போதே அவர் மேனியிலிருந்து துர்நாற்றம் வீசியது. அங்கிருந்தவர்கள் எல்லாரும் அருவருப்பு கொண்டு விலகிக்கொண்டனர். ஆனால் பாபா அவரைப் புன்னகையோடு வரவேற்றார். தன் பாதங்களில் விழுந்து பணிந்த அந்த பக்தரின் உடலை அன்போடு தடவிக்கொடுத்தார். அவர் சிரமத்தோடு எழுந்துகொள்ள முயன்றபோது பாபா அவரைத் தொட்டுத் தூக்கி உதவி செய்தார். பின் உதி பிரசாதத்தை அவருக்கு வழங்கினார்.

திருமதி தார்கட் இந்தக் காட்சியைப் பார்த்து வியந்துகொண்டிருந்தாரே தவிர அவரால் தனக்குள் உருவாகும் அருவருப்பைக் கட்டுப்படுத்த இயலவில்லை. திருமதி தார்கட்டின் எண்ண ஓட்டங்களை பாபாவால் புரிந்துகொள்ள முடிந்தது. அதற்குள் அந்த மனிதர் அங்கிருந்து மகிழ்வோடு புறப்பட்டு வாசல்வரை சென்றுவிட்டார். பாபா ஒருகணம் சத்தமிட்டு அந்த மனிதரைக் கூப்பிட்டார்.

ஓவியம்: பாலகிருஷ்ணன்
ஓவியம்: பாலகிருஷ்ணன்

எல்லோருக்கும் ஆச்சர்யம், ஏன் அந்த மனிதருக்கேகூட... பாபாவின் அழைப்பு அவருக்குள் புதுத்தெம்பை அளித்ததுபோல் இருந்தது. திரும்பி ஓட்டமும் நடையுமாக பாபா அருகே வந்தார்.

“எனக்காக வாங்கியவற்றை எனக்குக் கொடுத்துவிட்டுப்போ” என்றார்.

திருமதி தார்கட் பார்த்துக் கொண்டேயிருந்தார். அந்த மனிதர், உணர்வுப்பெருக்கோடு தன் மடியிலிருந்து சில பீடாக்களை எடுத்து பாபாவிடம் கொடுத்தார். அவற்றை வாங்கிய பாபா ஒன்றைத் தன் வாயில்போட்டுக்கொண்டு மற்றொன்றை திருமதி தார்கட்டிடம் கொடுத்தார். பாபா தருவதை மறுக்கவோ வெறுக்கவோ முடியாது. திருமதி தார்கட் அந்த பீடாவை வாங்கி உட்கொண்டார். அந்தக் கணத்தில் தார்கட்டுக்கு அந்த மனிதர்மேல் இருந்த அருவருப்பு நீங்கியது. சாயியின் சந்நிதியில் அனைவரும் சமம் என்பதை உணர்ந்தார். திருமதி தார்கட்டுக்கு மற்றுமொரு அனுபவமும் இதேபோன்று கிடைத்தது.

ஒருமுறை தார்கட் குடும்பம் தங்கள் வீட்டு வேலைக்காரரையும் ஷீர்டிக்கு அழைத்துச் சென்றிருந்தது. அவருக்கோ பொறுக்க முடியாத இடுப்புவலி. ஆனால் பாபாவை தரிசிக்க அவர் ஆவலோடு வந்தார். வரும்வழியெல்லாம் தன்வலியைப் பற்றிப் புலம்பிக்கொண்டே வந்தாலும் சாயியின் சந்நிதிக்கு முன்பாக வந்ததும் வலியைக் காட்டிக்கொள்ளாமல் இருந்தார். பாபாவின் முன் அனைவரும் அமைதியாக நின்றிருந்தார்கள்.

பாபாயணம்
பாபாயணம்

அப்போது பாபா “எனக்கு பயங்கரமாகக் கால் வலிக்கிறது” என்றார். எல்லோரும் பதற்ற மானார்கள். என்ன செய்ய வேண்டும் என்பதுபோல் அவரைப் பார்த்தார்கள். அவரோ, “பச்சிலைகளை அரைத்துப் போட்டால் போதும்” என்றார். ஒவ்வொருவரும் அவரவர்க்குத் தோன்றிய இலைகளைப் பற்றிக் கூறத் தொடங்கினர். அப்போது ஒருவர் “கோர்பாடா (சோற்றுக்கற்றாழை) வலியை நீக்கும் அல்லவா” என்று கேட்டார்.

உடனே பாபா, “ஆம். அதைக் கொண்டு வந்து இரண்டாகக் கிழித்து நெருப்பில் வாட்டி, வலி இருக்கும் இடத்தில் போட்டால் போதும். எப்பேர்ப்பட்ட இடுப்புவலியும் உடனே பறந்துவிடும்” என்று கூறினார்.

இந்த வைத்தியம், முதுகுவலி பற்றிப் புலம்பிக் கொண்டிருந்த தன் வேலைக்காரருக்கானது என்பதைத் திருமதி தார்கட் புரிந்துகொண்டார். பாபா சொன்ன வைத்திய முறையை அவருக்குச் செய்தார்கள். அடுத்த கணம் அந்த வலி பறந்து அவர் உற்சாகமாக எழுந்துவிட்டார்.

திருமதி தார்கட் இந்த நிகழ்வின் மூலம் ஒன்றைப் புரிந்துகொண்டார். சாயியின் சந்நிதானமே சகல நோய்களையும் தீர்க்கும் அருமருந்து என்பதைப் புரிந்துகொண்டார். ஒருமுறை அவருக்குத் தீராத கண்வலி ஏற்பட்டது. இரண்டு கண்களிலும் இருந்து நீர் வடிந்துகொண்டே இருந்தது. அந்த அம்மையார் எந்த வைத்தியமும் செய்ய மனமின்றி மசூதிக்குச் சென்று பாபாவின் முன்பாக அமைதியாக அமர்ந்து விட்டார். சிறிது நேரம் சென்றது. திருமதி தார்கட்டின் கண்களில் வலியும் நீர்வடிதலும் நின்றுவிட்டன. திருமதி தார்கட் மகிழ்வோடு நன்றி தெரிவிக்க பாபாவை நோக்கினார். அப்போது பாபாவின் கண்களிலிருந்து நீர் வடிந்துகொண்டிருந்தது.

தன் கர்மபலன்களால் ஏற்பட்ட வலியை, பாபா ஏற்றுக்கொண்டு தன்னை குணமாக்கிவிட்டார் என்பதைப் புரிந்து கொண்டார் திருமதி தார்கட். அவரின் உடலும் உள்ளமும் சிலிர்த்தன. நன்றியோடு சாயியின் திருவடிகளைப் பணிந்துகொண்டார்.

இது என்றோ நடந்த அற்புதம் அல்ல; ஷீர்டியில் இன்றும் நிகழும் அன்றாடம். சாயியின் சந்நிதானம் பக்தர்களுக்கு ஒரு புகலிடம். அங்கு சென்று அவரைச் சரணடைந்துவிட்டால் எந்த வினையிலிருந்தும் நீங்கள் விடுபட்டுவிடலாம். காரணம் அவர் நம்மை முழுமையாக அறிந்திருக்கிறார்.

(தரிசனம் தொடரும்)

வாசகர் அனுபவம்

பாபாயணம் - 50

நான் கல்லூரியில் இணை பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறேன். ஷீர்டி பாபாமீது பக்தி இல்லாமல்தான் இருந்தேன். ஆனால் என் மாமா ஒரு சிறிய பாபா படத்தைக் கொடுத்து அதைப் பயணம் செய்யும்போதெல்லாம் சட்டைப்பையில் வைத்துக்கொள்ளச் சொன்னார். அவர் மேல் உள்ள பாசத்தில் நான் மறுக்காமல் அதைச் செய்துவந்தேன். சில வருடங்களுக்கு முன் சென்னையிலிருந்து கரூரில் இருக்கும் எங்கள் குலதெய்வம் கோயிலுக்கு காரில் சென்றுவிட்டு சேலம் வழியாகத் திரும்பி வந்துகொண்டிருந்தோம். நண்பகல் வேளையில் சேலம் கடந்து வந்துகொண்டிருந்தபோது, திடீரென்று சாலையின் நடுவில் இருந்த பள்ளத்தில் கார் வேகமாக இறங்கியதில் காரின் வலது பக்க டயர் வெடித்தது. அதனால் எதிரில் வந்துகொண்டிருந்த புதுமணத் தம்பதியின் கார்மீது மோதி யு டர்ன் அடித்து நின்றது. எனது காரின் முன்பக்கம் முழுவதும் சேதமாகியிருந்தபோதும் எனக்கோ என் பெற்றோருக்கோ ஒரு சிறு காயம்கூட இன்றி யாருடைய உதவியும் இல்லாமல் வெளியே வந்தோம். அதே போல் எதிரே வந்த புதுமணத் தம்பதிக்கும் எந்த ஒரு சிறு காயமும் இன்றித் தப்பித்தார்கள். சட்டைப்பையில் இருந்த பாபாவின் படத்தை எடுத்துப் பார்த்தேன். எல்லாம் சாயி கருணை!

- செ.வசந்தகுமார், வேலூர் - 632007.

பாபாவும் நானும்....

1983-ம் ஆண்டுவரை ஷீர்டி சாய்பாபா பற்றிப் பெரிய அளவில் எதுவும் தெரியாது. ஆனால், இன்றைக்கு நான் எல்லோராலும் அறியப்படுகிறேன் என்றால், அதற்குக் காரணம் ஷீர்டி சாயிதான்.

கவிஞர் பிறைசூடன்
கவிஞர் பிறைசூடன்

1983-ம் ஆண்டில் திரைப்படத்திற்கு முதல் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. ராம்ஜி என்ற நண்பரின் வற்புறுத்தலால் எனக்கு அந்தப் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இசையமைப்பாளர், இயக்குநர் முன் ஒரு கவிஞன் எப்படி அமர வேண்டும் என்பதுகூடத் தெரியாமல் கால் மேல் கால் போட்டுக்கொண்டு கவிஞர்களுக்கே உரிய கம்பீரத்தோடு அமர்ந்திருந்தேன். அது அந்தப் படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர், இயக்குநர் ஆகியோருக்குப் பிடிக்கவில்லை. அப்போது, என் உடல் மொழியை கவனித்த தபேலா வசிக்கும் அனந்து என்பவர் பாடல் எழுதி முடித்த பிறகு, என்னை அழைத்துக்கொண்டு மயிலாப்பூர் பாபா கோயிலுக்கு வந்தார்.

‘இந்தப் பையன் நன்றாக வரவேண்டும் பாபா... அதற்கு உங்களின் ஆசிகள் தேவை’ என்று கூறி அங்கிருந்த உதியை எடுத்து என் நெற்றியில் வைத்து, ‘கொஞ்சம் பொறுமையா இருக்கணும். சினிமா வேற... எனக்கென்னவோ நீ எதிர்காலத்தில் நன்றாக வருவாய் என்று தோன்றியது. அதனால்தான் பாபாவிடம் அழைத்து வந்தேன்’ என்று என்னை வாழ்த்தினார்.

அதன்பிறகு அந்தப் பாடல் பதிவு முடிந்தது. அந்தப் படமும் 100 நாள்களைத் தாண்டி ஓடி வெற்றிபெற்றது. தொடர்ந்து பாடல்கள் எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தன. அன்று கிடைத்த பாபாவின் பரிபூரண ஆசீர்வாதம் இன்றுவரை தொடர்கிறது.

- எஸ்.கதிரேசன்

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.