
இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.
ஒருமுறை பாபாவை தரிசனம் செய்ய தானேயில் இருந்து அப்துல் ரஹீம் சம்சுதீன் ரங்காரி என்பவர் ஷீர்டிக்கு வந்திருந்தார். அவர் மனைவிக்குக் கழுத்தில் ஒரு வீக்கம் இருந்தது. அதனால் உணவு உண்ணமுடியாமல் தவித்தார். வைத்தியம் பல பார்த்தும் சரியாகாமல் இருக்கவே, பாபாவின் மகிமையை அறிந்து அவரிடம் தன் மனைவியை அழைத்துக்கொண்டு வந்தார். பாபாவை தரிசனம் செய்து நமஸ்காரம் செய்துகொண்ட தம்பதி அவரிடம் தம் குறையைச் சொல்லி வருந்தினர்.
“எல்லாவற்றையும் அந்த இறைவன் குணப்படுத்துவான்” என்று சொல்லி ஆசீர்வதித்து உதியை வழங்கினார். “இங்கேயே இரு” என்று கட்டளையிட்டு அவர்களை மசூதியில் ஓரிடத்தில் அமர்ந்திருக்கச் சொன்னார். அதை ஏற்றுக்கொண்ட தம்பதி மசூதியில் ஓர் ஓரமாகப் போய் அமர்ந்தனர். அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்தப் பெண்மணியின் கழுத்தில் இருந்த வீக்கம் குறையத் தொடங்கியது. ரங்காரி பார்த்துக்கொண்டிருந்தபோதே அந்த வீக்கம் முற்றிலும் வடிந்துவிட்டது. ரங்காரியின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. வந்த வேலை முடிந்துவிட்டது, ஊருக்குத் திரும்பிவிடலாமே என்று எண்ண ஆரம்பித்தார்.
இரவு சூழத்தொடங்கியது. புதிய இடத்தில் எப்படித் தங்கி உறங்குவது என்ற தயக்கம் ரங்காரிக்குள் ஓடியது. அதற்கேற்ப அவர் கோபர்கானிலிருந்து பிடித்துவந்திருந்த குதிரை வண்டியும் இன்னும் புறப்படாமல் அங்கேயே இருந்தது. பாபாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பலாம் என்றால் அவர் மறுத்துவிட்டால் தர்மசங்கடமாகிவிடும் என்று நினைத்து பாபாவிடம் உத்தரவு பெற்றுக்கொள்ளாமலேயே கிளம்பிவிட்டார் ரங்காரி. குதிரை வண்டி ஷீர்டியைத் தாண்டி நீண்ட தூரம் போய்விட்டது. நள்ளிரவை நெருங்கும் நேரம், நடுக்காட்டுப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது வண்டியின் அச்சு முறிந்துவிட்டது.

ஆள் நடமாட்டமில்லாத அந்த வேளையில் கைவிடப்பட்டவராக நின்ற ரங்காரி தன் தவற்றை நினைத்து வருந்தினார். பாபாவின் உத்தரவு பெறாமல் கிளம்பியிருக்கக் கூடாது என்று எண்ணினார். அச்சம் அவரை ஆட்டுவித்தது. உதவிக்கு யாரேனும் வருவார்களா என்ற எதிர்பார்ப்போடும் ஆபத் சகாயரான பாபாவை வேண்டிக்கொண்டும் நடுங்கியபடியே அமர்ந்திருந்தார் ரங்காரி.
சற்று நேரத்தில் இருளைக் கிழித்துக்கொண்டு ஒரு குதிரை வண்டி வரும் சப்தம் கேட்டது. கூடவே, ‘தானாவாலா, தானாவாலா’ என்று அந்தக் குதிரை வண்டிக்காரர் எழுப்பிய சப்தமும் கேட்டது. உற்சாகமான ரங்காரி சாலையின் மத்தியில் வந்து நின்று அந்தக் குதிரை வண்டியை நிறுத்தினார். குதிரை வண்டிக்காரர், “நீங்கள்தான் தானேவைச் சேர்ந்த ரங்காரியா...” என்று கேட்டார். அப்துலுக்கு ஆச்சர்யம் அதிகரித்தது. “ஆம்” என்றார்.
“நீங்கள் ஆபத்தில் இருப்பதாகவும் உங்களை உடனே அழைத்துவருமாறும் பாபா அனுப்பினார்” என்று சொன்னார். ரங்காரி ஒரு கணம் நெகிழ்ந்துபோனார். தன் மனைவியுடன் அந்த வண்டியில் ஏறி மீண்டும் ஷீர்டி வந்து சேர்ந்தார். ஷீர்டியை அவர்கள் அடைந்தபோது இரவு 2 மணி இருக்கும். பாபா மசூதியின் வாசலிலேயே காத்திருந்தார். ரங்காரி பாபாவினை வணங்கி, உத்தரவு பெறாமல் புறப்பட்டதற்காக மன்னிப்பு கேட்டார். பாபா புன்னகையோடு அவரை ஆசீர்வதித்து, “இன்று இரவு இங்கு தங்கியிருந்து நாளை பிட்சை ஆனதும் உணவு முடித்துக் கிளம்பலாம்” என்று கூறி உறங்க அனுப்பிவைத்தார். அதேபோன்று மறுநாள் பிட்சைக்குச் சென்று பாபா ரொட்டி மற்றும் காய்கறிகளோடு திரும்பினார். அவற்றை அவர்கள் உண்ணக் கொடுத்து ஆசீர்வாதம் செய்து அனுப்பிவைத்தார். நீண்டநாள்களாக உணவு உண்ணமுடியாமல் தவித்த ரங்காரியின் மனைவி அன்று மகிழ்ச்சியோடு அந்த உணவை உண்டார்.
சாயி பக்தர்களில் ஒருவர் சாந்தாராம் பலவந்த் நாசனே. பாபா அவரிடம் ஒருமுறை, “சாந்தாராம், நீ பைத்தியக்காரர்களிடம் ஜாக்கிரதையாக இரு” என்றார். சாந்தாராமுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருமுறை அவர் வீட்டில் தனித்திருந்தபோது மனநிலை பிறழ்ந்த ஒருவர் உள்ளே நுழைந்துவிட்டார்.

“நான், உன் ரத்தத்தைக் குடித்து உன்னைக் கொல்லப் போகிறேன்” என்று கத்திக்கொண்டே அவரின் கழுத்தை இறுக்கத் தொடங்கினார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. சாந்தாராம் தவித்தார், தப்பிக்க முயன்றார். ஆனால் பிடி இறுகிக்கொண்டே போனது. காற்றில் மேலே அலைந்த சாந்தாராம் கைகளில் திடீரென்று ஒரு ஸ்பூன் கிடைத்தது.
சாந்தாராம் அந்த மனிதரின் வாயில் நுழைத்துத் தாக்கினார். அந்த நபர் சிறிது நிலை தடுமாறினார். இதற்கிடையே சந்தைக்குச் சென்றிருந்த அவர் தம்பியையும் தாயாரையும் சாது ஒருவர் தடுத்து, “உடனே வீட்டுக்குப் போங்கள்” என்றார். அவர்கள் அதிர்ந்துபோய் அவசரமாக வீட்டுக்குத் திரும்ப, ஒரு நபரோடு சாந்தாராம் சண்டையிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டனர். ஓடிப்போய் அவருக்கு உதவி அந்த மனிதனை அடித்து வெளியே துரத்தினர்.
சில நாள்களுக்குப் பின் சாந்தாராம் பாபாவை தரிசனம் செய்ய ஷீர்டி வந்தார். அப்போது பாபா, “என்ன சாந்தாராம், ஸ்பூன் உனக்கு உதவியாக இருந்ததா... நல்லவேளை சரியான சமயத்தில் உன் தம்பியையும் தாயாரையும் வீட்டுக்கு அனுப்பினேன்” என்று சொல்லிப் புன்னகைத்தபோது சாந்தாராம் சிலிர்த்துப்போனார்.
பாபா ஒவ்வொரு பக்தரையும் கண்காணித்து, அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குகிறார். அவர்கள் இந்த உலகத்தில் எங்கிருந்தாலும் அவர் ஓடிவந்து காப்பார் என்பதற்கு இன்னும் ஏராளமான சம்பவங்கள் சாயி சத் சரிதையில் உண்டு.
(தரிசனம் தொடரும்)
வாசகர் அனுபவம்
ஆரம்பத்தில் எனக்கு ஷீர்டி பாபாவைப் பற்றி அதிகமாகத் தெரியாது. என் சிநேகிதி சத்யா ஷீர்டி போய் வந்து பாபா உருவச்சிலைகள் இரண்டினைக் கொடுத்தாள். தினமும் சாமி கும்பிடும்போது அதற்கும் சாமந்திப் பூக்கள் வைத்து வணங்கி வந்தேன். ஐந்து மாதங்களுக்கு முன் நான் கீழே விழுந்து முதுகெலும்பில் முறிவு ஆனது (spine fracture). படுத்த படுக்கை ஆகிவிட்டேன். என்னைப் பார்க்க என் மகன் வந்தபோது உடன்வந்த நான்கு வயது பேரன், ‘பாட்டி உங்களுக்கு உம்மாச்சி தாத்தா படம் தரேன்’ என்று சொல்லி பாபாவின் படத்தைக் கொடுத்தான். என் மனம் பாபாவின் அருளை நாடியது. மனமுருக வேண்டிக்கொண்டேன். புதிய தெம்பு வந்தது. சில நாள்களிலேயே மெதுவாக எழுந்து உட்கார்ந்து பிறகு வாக்கர் உதவியால் நடக்க ஆரம்பித்தேன். இப்போது நன்றாக நடக்கிறேன். மாடிப்படி ஏறும்போது பாபாவின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே ஏறும்போது வலி இல்லை. இப்போது தினமும் பாபாவை மலர்களால் அலங்கரிக்கிறேன். பாபா உடனிருக்கும்வரை வாழ்வில் எந்தக் கவலையும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன்.
- திருமதி. பரிமளா ராமாநுஜம், திருச்சி
பாபாவும் நானும்

மயிலாப்பூரில் இருக்கும் ஷீர்டி சாயி பாபா கோயிலுக்கு அடிக்கடி சென்று வணங்கிவருவேன். 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி வாழ்வில் மறக்க முடியாத ஒரு சம்பவம் நடைபெற்றது.
சென்னை, மேற்கு மாம்பலத்தில் இருக்கும் கணேஷ் ஐயர் சிற்பக்கலையில் நுட்பமான அறிவு மிக்கவர். தெய்வாம்சம் பொருந்திய கலைஞர். அவர் பைபரில் உருவாக்கும் மகான்களின் திருவடிவங்கள் உயிரோட்டம் மிக்கவை. ஒருமுறை, ஆந்திர மாநிலம், ஓங்கோலில் இருக்கும் ஓர் ஆலயத்துக்கான ஷீர்டி சாயிபாபாவின் சிலையை வடிவமைத்திருந்தார். இந்த நிலையில் சாயி பக்தரான ஜகந்நாத தாசர் கனவில் பாபா தோன்றி, ‘சிவாஜி குடும்பத்தில் பலரும் என் பக்தர்கள். அதனால் அவரின் அன்னை இல்லத்தில் மூன்று நாள்கள் இந்தச் சிலையை வைத்திருந்து பூஜை செய்தபின் அனுப்புங்கள்’ என்று கூறியிருக்கிறார். இப்படியொரு இன்ப அதிர்ச்சி எங்கள் குடும்பத்தினர் எவரும் எதிர்பார்க்காத ஒன்றாகும்.
மிகுந்த மகிழ்ச்சியுடன் பாபா சிலையை எடுத்து வந்து எங்கள் வீட்டுப் பிள்ளையார் கோயில் அருகே பூரண கும்ப மரியாதையுடன், மேளதாளம் முழங்க, நாகஸ்வர இசையுடன், எழுந்தருளச்செய்தோம். ஷீர்டியில் நடப்பதுபோலவே தினமும் நான்கு ஆரத்திகள் மூன்று நாள்களும் நடைபெற்றன. மயிலாப்பூர் பண்டிட்ஜியே வந்து முன்னின்று நிகழ்ச்சியை நடத்தித் தந்தார்.
பாபாவுக்குப் படைக்கப்பட்ட நைவேத்தியம், பழங்கள், மலர்கள் ஆகியவை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டன. மூன்று நாள்கள் இரவும் பகலும் எங்களின் இல்லத்தில் சாயி பஜனைகளும் பாடல்களும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருந்தன. பக்தர்களுக்கு நாள் முழுவதும் சிறப்பான அன்னதான நிகழ்வும் நடைபெற்றது. இதில் சாயி பக்தர்கள் பலரும் பங்கேற்று எங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஓர் அனுபவத்தைத் தந்தனர். இது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரும் பேறாகும்.
ஓம் ஸ்ரீசாய்ராம்!
சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.