மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 52

பாபாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாபாயணம்

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்....

ஒருமுறை எஸ்.எம்.பான்சே, சாந்தாராம் மற்றும் சில நண்பர்கள் சேர்ந்து மாட்டு வண்டியில் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை. இரவுவேளை கும்மிருட்டில் ஓர் அடர்ந்த வனப்பிரதேசத்தில் மாட்டு வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தனர். அது புலிகள் நடமாட்டம் அதிகமாக உள்ள ரஞ்சேத் கணவாய்ப் பகுதி. திடீரென்று வண்டி மாடுகள் மிரண்டு பின்னோக்கி நகர ஆரம்பித்தன.

அது மலைப்பகுதியாதலால் ஒருபக்கம் ஆழ்ந்த சரிவு. அச்சத்தில் மாடுகளின் பின்னோக்கிய நகர்தலில் வண்டி சரிவில் உருண்டுவிடும் அபாயம். பான்சே வண்டியிலிருந்து கீழே இறங்கி சரிவில் விழுந்து விடாமல் காக்க எண்ணினார். ஆனால் சாந்தாராம் அவரைத் தடுத்து எதிரில் சுட்டிக்காட்டினார்.

அவர் காட்டிய திசையில், சிறிது தொலைவில் கண்கள் ஒளிவீச ஒரு புலி சாலையின் நடுவில் படுத்திருப்பதைக் காண முடிந்தது. ஆவேசமாகத் தோற்றமளித்த அந்தப்புலி எந்தநேரமும் இவர்கள் மேல் பாய்ந்து தாக்கலாம் என்னும் அபாயம். ஒருபுறம் புலி, மறுபுறம் பள்ளத்தை நோக்கிப் பாயும் வண்டி. அனைவருக்குள்ளும் அச்சம் அதிகரித்தது. ‘சாயியே தங்களை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்ற முடியும்’ என்று நம்பினர். ‘ஜெய் சாயிராம்’ என்று சத்தமிட்டனர்.

அடுத்த கணம் அந்த அற்புதம் நிகழ்ந்தது. வண்டி சரிவை நோக்கிச் செல்வது நின்றது. யாரோ முன்னோக்கி வண்டியை இழுப்பதைப்போன்ற உணர்வு. புலி மெள்ள எழுந்து காட்டுக்குள் ஓடி மறைந்தது. புலி மறைந்ததும் மாடுகள் அமைதியாயின. சில நிமிட ஆசுவாசத்துக்குப் பிறகு பயணம் மீண்டும் தொடர்ந்தது.

இந்தப் பயணத்துக்குப் பிறகு சாந்தாராம் ஷீர்டிக்குக் கிளம்பினார். புகைவண்டி நிலையத்தில் வி.எஸ். சாமந்த் என்பவர் ஓடிவந்து இவரிடம் ஒரு தேங்காயும், இரண்டணாவும் கொடுத்தார். மிகவும் ஏழையான சாமந்த், தான் கொடுத்த அந்த இரண்டணாவுக்குக் கற்கண்டுகள் வாங்கி பாபாவுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று சாந்தாராமிடம் வேண்டிக்கொண்டார். ஆனால் மசூதிக்கு வந்த சாந்தாராம் சாயியை தரிசித்து அந்தத் தேங்காயை மட்டுமே சமர்ப்பித்தார். சாமந்த் சொன்ன கற்கண்டு விஷயம் மறந்து விட்டது. மனம் குளிர சாயியை தரிசனம் செய்துவிட்டுக் கிளம்ப உத்தேசித்த சாந்தாராம், சாயியின் உத்தரவையும் உதியையும் வேண்டி அவர் முன் நின்றார்.

பாபாயணம் - 52

பாபா, புன்னகையோடு அவரை ஆசீர்வதித்து உதியை வழங்கி, “சாந்தாராம், இப்போது நீ ரஞ்சேத் கணவாய் வழியாகக்கூட செல்லலாம். மீண்டும் அந்தப் புலி வராது. நல்லவேளை, மிரண்டுபோன மாடுகள் சரிவில் விழுந்துவிடாமல் நான் அன்று வண்டியை இழுத்துப் பிடித்து நிறுத்தினேன்” என்றார் சாயி.

சாந்தாராமுக்குக் கண்களில் நீர் பெருகியது. சாயியின் சந்நிதானத்திலிருந்து புறப்பட அவருக்கு மனமே வரவில்லை. இருந்தாலும் புறப்பட்டாக வேண்டுமே, மீண்டும் உத்தரவுபெற்றுக்கொண்டு கிளம்பினார். அப்போது சாயி,

“எல்லாம் சரி சாந்தாராம். ஆனால் நீ ஏன் ஒரு ஏழையின் இரண்டணாவை எனக்கு சமர்ப்பிக்காமல் வைத்துக்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். சாந்தாராமுக்குத் தூக்கிவாரிப்போட்டது. அப்போதுதான் சாமந்த் தன்னிடம் கொடுத்த இரண்டணா பற்றிய நினைவு வந்தது.

சாயி அறியாத ரகசியம் என்று உலகில் இல்லை. தான் வேண்டுமென்றே அதை மறைக்கவும் இல்லை என்பதை சாயி அறிவார். அதே நேரம் அந்த ஏழையின் காணிக்கையை ஏற்று அவருக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர் அவ்வாறு கூறினார் என்பதையும் புரிந்துகொண்டார்.

இன்னொருமுறை சாந்தாராம் நள்ளிரவில் ஓர் ஆற்றைத் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது. ஒரு பரிசலையும் அதைச் செலுத்த ஒரு பையனையும் ஏற்பாடு செய்துகொண்டார். பாதி ஆற்றைக் கடந்தபோது சாந்தாராம் பரிசலில் ஒரு பக்கமாக நகர்ந்தார். சற்றுப் பருமனான சரீரம் அவருக்கு. ஆற்றின் பாய்ச்சலில் பரிசல் கவிழ்ந்தது. சாந்தாராமுக்கோ நீந்தத் தெரியாது. நீரில் மூழ்கத் தொடங்கினார். அவர் மனம் ‘சாயிநாதா’ என்று அலறியது.

பாபாயணம் - 52
ஓவியம்: பாலகிருஷ்ணன்

அப்போது திடீரென்று அங்கு ஒரு படகு தென்பட்டது. சாந்தாரமிற்கு அருகில் ஒரு கயிறு மிதந்து வந்தது. பரிசல் பையனுக்கு நீந்தத் தெரியும். அவன் கயிற்றைப் பற்றிக்கொண்டு சாந்தாராமுக்கு உதவினான். அடுத்த சில நிமிடங்களில் சாந்தாராம் காப்பாற்றப்பட்டார்.

அடுத்த முறை சாந்தாராம் ஷீர்டிக்குச் சென்றபோது சாயி, “சாந்தாராம், அன்றே உன் விதி முடிந்திருக்கும். ஆனால் உன் இதயத்தின் ஆழத்திலிருந்து நீ என்னை அழைத்தாய். யார் என்னை இதயத்தின் ஆழத்திலிருந்து நம்பிக்கையோடு அழைக்கிறார்களோ அவர்களை நான் நிச்சயம் காப்பாற்றுவேன். அதனால்தான் உன் அருகே அந்தப் படகு வருமாறு செய்தேன். நீயும் பிழைத்துக்கொண்டாய்” என்றார் பாபா.

(தரிசனம் தொடரும்)

வாசகர் அனுபவம்

இது நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்தது. என் கணவருக்கு ஏற்பட்ட தொழில் நஷ்டம் காரணமாக ஊரிலிருந்த சொத்துகளை விற்றுவிட்டு சென்னைக்கு வந்து சேர்ந்தோம். என் மகனை ஆறாம் வகுப்பில் சேர்க்க வேண்டும். நாங்கள் இருந்த பகுதியில் ஒரு தனியார் பள்ளி இருந்தது. பையனை அந்தப் பள்ளியில் படிக்க வைக்க ஆசை. கட்டணம் மிக அதிகம். நான் அந்தப் பள்ளிக்குச் சென்று விண்ணப்பம் கேட்டபோது ஆறாம்வகுப்பு சேர்க்கை முடிந்துவிட்டது என்று கூறிவிட்டார்கள். எங்கள் தாமதத்துக்கான காரணத்தைச் சொல்லியும் அவர்கள் ஏற்கவில்லை. என் தோழியிடம் சென்று புலம்பினேன். அவள் என்னை வீட்டுக்கு அருகே இருக்கும் சாயி கோயிலுக்கு அழைத்துப்போனாள். அன்று வியாழக்கிழமை ஆதலால் நல்ல கூட்டம். நான் மனமுருக வேண்டிக்கொண்டேன்.

மறுநாள் மீண்டும் பள்ளிக்குச் சென்றேன். அந்த கிளார்க் என்னைக் கண்டதும் எரிச்சல் அடைந்து திட்டினார். அப்போது அங்கே ஒரு பெரியவர் வந்தார். என்ன என்று விசாரித்தார். நான் என் நிலையைச் சொன்னேன்.. உடனே, அந்தப் பெரியவர் கிளார்க்கை அழைத்து உடனே சீட் வழங்குமாறும், கட்டணம் எதுவும் வாங்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டார். அப்போதுதான் தெரிந்தது அவர்தான் அந்தப் பள்ளியின் தாளாளர் என்று. எல்லாம் சாயியின் கருணையே.

- சுபா, சென்னை.

பாபாவும் நானும்...

திருநாவுக்கரசர்  எம்.பி
திருநாவுக்கரசர் எம்.பி

“எங்கள் வீட்டில் எல்லோருமே ஷீர்டி சாயிபாபாவின் பக்தர்கள்தான். குறிப்பாக, என் மனைவி கற்பகம், வியாழக்கிழமைதோறும் பாபாவுக்காக விரதமிருப்பார். அன்றையதினம் அசைவ உணவைத் தவிர்த்துவிடுவோம். குடும்பத்தினரோடு அடிக்கடி ஷீர்டிக்குச் சென்றுவருவோம்.

எங்களுக்கு மூன்று மகன்கள். முதல் மகனுக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்தான் ‘அன்பரசன்’ எனப் பெயர் வைத்தார். இரண்டாவது மகனுக்கு ‘ராமச்சந்திரன்’ என, தலைவரின் பெயரை நானே வைத்தேன். மூன்றாவது மகனுக்கு சாயிராம் நினைவாக, ‘சாய் விஷ்ணு’ எனப் பெயரிட்டோம்.

எங்களின் இரண்டு மகள்களில் முதல் மகளுக்கு எம்.ஜி.ஆர் அம்மாவின் நினைவாக, ‘சத்யா ராஜேஸ்வரி’ என்று பெயர் வைத்தோம். இரண்டாவது மகளின் பெயர் சாய் லட்சுமி. அவரும் 30 ஆண்டுகளாக பாபாவின் பக்தையாக இருந்துவருகிறார். தினமும் ‘சாயி சத் சரிதம்’ புத்தகத்தில் இரண்டு பக்கங்களாவது வாசிப்போம்.

அரசியலில் இக்கட்டான சூழ்நிலைகளைக் கடந்து வரும் போதும் நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவின் போதும் பாபாவைப் பிரார்த்திப்பது வழக்கம். குறிப்பாக, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திருச்சித் தொகுதியில் போட்டியிட்டேன். ‘எனக்கு முற்றிலும் புதிய தொகுதி, அதில் நான் வெற்றிபெற வேண்டும்’ என்று என் மனைவி பாபாவிடம் வேண்டிக்கொண்டார். அதைப்போலவே நான் வெற்றி பெற்றேன்.

கடந்த 30 ஆண்டுகளில் எங்கள் வீட்டின் குடும்ப உறுப்பினாராகவே ஷீர்டி சாயிபாபா மாறிவிட்டார். நாங்கள் வைக்கும் பிரார்த்தனைகள் எல்லாமே எங்களின் உள்முகச் சிந்தனையில் அவர் வழங்கும் ஆலோசனைகளாக, அறிவுரைகளாக, அவரின் ஆசீர்வாதங்களாக எங்களுக்குத் திரும்பக் கிடைக்கின்றன.

எளிமையின் திருவுருவம் சாயிபாபா. ஏழைகளின் இதயமாகத் திகழ்பவர் சாயி பாபா. எல்லோருக்கும் ஏற்ற துணை சாயிபாபா”

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.