மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 53

பாபாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாபாயணம்

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.

“எனக்கு இங்கே வலிக்கிறது” என்று தன் உடலில் ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டிக் கூறினார் பாபா.

அது பிற்பகல் நேரம். சுற்றிலும் அவரின் பக்தர்கள் அமர்ந்திருந்தனர். பாபா உண்மையில் நல்ல ஆரோக்கியத்துடன், உற்சாகமாகக் காணப்பட்டார். ஆனால் அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று யாருக்கும் புரியவில்லை.

“ஆனால் இது மூன்று அல்லது நான்கு நாள்களில் சரியாகிவிடும்” என்று மேலும் கூறினார்.

அவர் சொற்களை எல்லையற்ற வியப்புடனும், மனம் முழுதும் பரவசமும் சூழக் கேட்டபடி பாபாவையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் பிரதான். அவர் ஓர் உயர்நீதி மன்ற வழக்கறிஞர்.

பாபாவைச் சந்திக்க ஷீர்டி சென்றவர், தட்சிணை கேட்டால் கொடுப்பதற்காகத் தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள் எனத் தலா நான்கு நாணயங்களை எடுத்துக் கொண்டார். ஷீர்டியை அடைந்தபோது அவர்களின் வருகைக்குக் காத்திருந்ததைப்போல் லெண்டியின் அருகில் நின்றிருந்தார் பாபா. பாபாவின் திருமுக தரிசனம் கண்டதும் பிரதானுக்குள் ஒரு மின்னல் பாய்ந்தது. பாபாவின் முகம், கண்களை உற்று நோக்கியபோது அவரின் அறியாமை அகன்று, ‘இவரே மகான்’ என்ற எண்ணமும் ஏற்பட்டது.

“நல்லவேளை நான் அவர் சந்நிதிக்கு வந்து விட்டேன்” என்ற திருப்தியும் ஏற்பட அவர் பாதங்களில் விழுந்து வணங்கினார் பிரதான்.

அப்போது பாபா அவரிடம் தட்சிணை கேட்டார். பிரதான் முதலில் தங்க நாணயங்களை வைத்தார். அதில் ஒருபுறம் ஜார்ஜ் மன்னரின் உருவம் இருக்கும். அதை ‘கினி’ என்று கூறுவார்கள். ‘இது என்ன’ என்று ஒவ்வொருமுறையும் நானாவிடம் கேட்டு நான்கு சவரன்களையும் வாங்கிய பாபா, அதைப் பிரதானிடமே திருப்பி அளித்துவிட்டு, பதினைந்து ரூபாய் கேட்டார். வெள்ளி நாணயங்களைக் கொடுத்ததும் ‘இதில் பத்து ரூபாயே உள்ளது’ என்று கூறி மீதி ஐந்து ரூபாய் கேட்டார். அனைவரின் வாதத்தையும் எதிர்த்து வாதாடும் வக்கீலோ அன்று மறுமொழி எதுவும் கூறாமல் ஆனந்தமாய் ஐந்து ரூபாய் எடுத்துக் கொடுத்தார்.

பாபாயணம் - 53

அதன்பின் பாபாவைச் சந்திக்கச் சென்ற போதெல்லாம் அவரை பாபா ‘பாவ்’ என்று அழைத்து அன்புடனும் கனிவுடனும் பேசுவார். மூன்றாவது முறை வந்தபோது பிரதான் ஊர் திரும்ப அனுமதி கேட்டபோது “நாளை போ” என்றார். அன்று பிற்பகல்தான் பாபா வலி என்று சொன்னார்.

சிறிது நேரம் கழித்து பாபா உள்ளே தனியாக இருந்தபோது பிரதான் அவரை வணங்க உள்ளே சென்றார். அப்போது பாபா “ராம், ஜெயராம், ஜெயஜெய ராம்” என்றார் அவரிடம். அது பிரதானின் குரு குரல் போலவே இருந்தது கண்டு கண்ணில் நீர் பெருக, நன்றியும் உணர்ச்சியுமாக விழுந்து பணிந்தார் பிரதான். பிரதானின் குலகுரு ஹரிபுவாவிடமிருந்து அவர் பெற்ற உபதேசம் அது.

“நீ உன் குருவையும், அவர் கூறிய மந்திரத்தையும் மறக்கக் கூடாது” என்று அறிவுறுத்தினார் பாபா.

பாபாவைச் சந்தித்த பின் குரு கூறிய மந்திர உபதேசத்தை மறந்துபோயிருந்த பிரதானுக்கு அதை நினைவுபடுத்தினார் பாபா.

“நீ இன்று கிளம்பலாம்” என்கிறார். ஷீர்டி வந்துவிட்டுக் கிளம்பும்போது நானாவின் மகன், பாபாவின் பாதங்களைக் கழுவி அந்த நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துச் செல்வது வழக்கம். பிரதானையும் எடுத்துச் செல்லும்படி பாபா குறிப்பு காட்டுகிறார்.

“உடனே செல்லுங்கள்” என்கிறார் சாயி.

ஷீர்டிக்கு அருகில் இருக்கும் ரயில்வே நிலையம் மன்மட். அங்கிருந்து மூன்றாம் வகுப்பு டிக்கெட்தான் கிடைத்தது. பின்னால் வரும் வண்டியில்தான் ஏற வேண்டும். ஆனால் உடனடியாகக் கிளம்ப இருந்த பஞ்சாப் மெயிலில் இவர்கள் ஏறிவிட்டார்கள். விதிகளுக்குப் புறம்பாக இருந்தாலும் எந்த அசம்பாவிதமும் நேராமல் குறித்த நேரத்திற்கு நாலைந்து மணி நேரத்திற்கு முன்பே தங்கள் வீடு சென்று விட்டார்கள்.

அங்கு சென்ற பிறகுதான் பிரதானின் தாயாரைப் பாரிசவாயு தாக்கியிருப்பதை அறிகிறார்கள்.

பாபாயணம் - 53
ஓவியம்: பாலகிருஷ்ணன்

“உடலின் ஒரு பக்கம் வலி” என்று பாபா கூறிய அந்த நேரம்தான் அவர் தாயாருக்குப் பாரிச வாயு தாக்கியிருக்கிறது. அவரைக் கவனித்த மருத்துவர் குடல் சுருக்கம், நிலைகொள்ளாமை எல்லாவற்றையும் கவனித்து உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. மலஜலம் கழித்துவிட்டால் நிலைமை முன்னேற்றம் அடையும் என்று கூறியிருந்தார்.

பிரதான் பாபாவின் உதி மற்றும் தீர்த்தத்தைத் தன் தாயாருக்குக் கொடுத்தார். அதை அருந்தி விட்டு உறங்கிய தாயார் காலையில் எழுந்து நன்றாக மலஜலம் கழித்து, ஜுரம் தணிந்து, வழக்கம்போல் செயல்பட ஆரம்பித்தார். மறுநாள் அவரைப் பரிசோதித்த மருத்துவர் ‘இனி கவலை இல்லை’ என்றார். அதன்பின் அவர் தாயார் நான்கு ஆண்டுகள் உயிருடன் இருந்தார்.

இறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன் அவர் ஷீர்டி சென்று பாபாவை தரிசித்தபோது “அன்று உன் வலியை நான் வாங்கிக்கொண்டேன். கூடவே, எப்போதும் மன்மட்டில் நிற்காத பஞ்சாப் மெயிலை உனக்காகவே அன்று நிறுத்தினேன்’’ என்று பாபா கூறிச் சிரித்தார். இதைக்கேட்டு பிரதானின் தாயாரும் பிரதானும் கண்கலங்கி சிலிர்த்தனர்.

(தரிசனம் தொடரும்)

வாசகர் அனுபவம்

என் அம்மாவுக்கு வயது 83. சில வருடங்கள் முன்பு கை தூக்க முடியாமல் வலியால் மிகவும் அவதிப்பட்டார். தலை வாருவது, உடை அணிவது, பொருள்கள் தூக்குவது என எதுவுமே செய்ய முடியவில்லை.

ஒரு நாள் இரவு தூங்கும் முன்பு, "பாபா, உன்னால் தான் என் கைவலியைக் குணப்படுத்த முடியும்" என்று சொல்லிக் கண்ணீர் விட்டு மனமுருகி வேண்டினார். அன்று நள்ளிரவில் யாரோ தன் கையைத் தடவி, அமுக்கி விடுவது போல் உணர்ந்த அம்மா, பக்கத்தில் படுத்திருந்த எங்களை எழுப்பி நீங்கள் யாராவது 'இப்போது என் கையைத் தடவி விட்டீர்களா' என்றார். நாங்கள் 'இல்லை' என்று சொன்னோம். 'நீங்கள் யாரும் இல்லை என்றால் வந்தது என் பாபாதான்' என்று சொல்லிவிட்டுத் தூங்கிவிட்டார்.

அடுத்த நாள் காலை எழுந்தவுடன் முதல் வேலையாக கையை மேலே கீழே தூக்கிச் சுழற்றிப் பார்த்தார். கொஞ்சம் கூட வலியில்லை. மடமடவென்று எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பித்துவிட்டார். பின்பு அந்தவலி வரவேயில்லை. இதுபோன்ற அற்புதங்களை யெல்லாம் சாயியைத் தவிர வேறு யார் செய்ய முடியும்?

- ராதிகா ரவீந்திரன், சென்னை

பாபாவும் நானும்

ஷீர்டி சாயிபாபாவைப் பொறுத்தவரைக்கும் சோதிப்பார்... ஆனால், கைவிட மாட்டார். என் வாழ்க்கையில் பல சோதனைகள், சிக்கல்களை நிறையவே கொடுத்திருக்கிறார். ஆனால் எல்லா நேரமும் அவரே அவற்றிலிருந்து என்னை விடுவித்திருக்கிறார்.

90-களில் நான் சினிமா, டி.விக்கு வருவதற்கு முன் மயிலாப்பூர் சித்திரக் குளம் அருகில் ஒரு மேன்சனில் தங்கியிருந்தேன். வாய்ப்புகள் தேடி அலைந்தேன். அடிக்கடி ஏமாற்றங்கள், மனச்சஞ்சலங்கள், பணக்கஷ்டம் இதெல்லாம் தொடர்ந்துகொண்டே இருந்தன. அந்த மாதிரி நேரங்களில் நான் பாபா கோயிலுக்குப் போய் சாமி கும்பிடுவேன். மணிக்கணக்கில் உட்கார்ந்து பாபாவையே பார்த்துக்கிட்டிருப்பேன்.

பாபாயணம் - 53

அப்படிப் பார்க்கும்போது நம்ம வீட்டுல ஒரு பெரியவர் இருந்தால் அவங்க காலடியில உட்கார்ந்து நாம நம்ம கஷ்டத்தைச் சொல்கிற ஒரு உணர்வு வரும். அப்படி நான் என் கஷ்டத்தைச் சொல்லி பலமுறை வருத்தப்பட்டிருக்கேன். அவர் என் முதுகில் தட்டி ஆறுதல் படுத்தி அனுப்புற மாதிரி இருக்கும். இன்னொரு விஷயம், பாபா கோயிலில் கிடைக்கிற பிரசாதம் ரொம்ப சுவையாக இருக்கும். எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிச் சாப்பிடலாம். பலமுறை என் பசியை அங்கு சென்று போக்கியிருக்கிறேன். இப்படிப்பட்ட நேரத்தில்தான் எனக்கு விஜய் சாரின் ‘நிலாவே வா’ படத்தில் முதன் முதலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து பல படங்களில் நான் நடிக்க ஆரம்பித்தேன். பிறகு சீரியல், டி.வி ஷோ என்று வந்துவிட்டேன். மயிலாப்பூர் பாபா கோயில்போலவே திருவான்மியூரில் இருக்கும் பாபா கோயிலுக்கும் அடிக்கடி சென்று வருவேன். பூச்சி முருகன்தான் என்னை அங்கு அடிக்கடி அழைத்துச் செல்வார். அங்கு சென்றுவிட்டு வந்தாலே ஏதோ ஒரு நல்ல வாய்ப்பு எனக்காக என் வாசலில் காத்திருப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.

என்னுடைய வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்போதெல்லாம் பக்கத் துணையாய் இருந்து ஒரு தாத்தா தன் பேரனை வழிநடத்திச் செல்வதுபோல் என்னை வழிநடத்திச் செல்கிறார் பாபா.

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.