மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 54

பாபாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாபாயணம்

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.

ஷீர்டியைச் சேர்ந்த சிறு வியாபாரி அஜய். பாபாவின் மேல் அளவுகடந்த அன்பும் பிரியமும் பக்தியும் கொண்ட அவர், தினசரி பாபாவை தரிசிக்காமல் எந்தச் செயலையும் தொடங்கு வதில்லை. மனம் முழுவதும் பாபாவை நிறைத்திருந்த அவரின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த பாபா, “அஜய், நீ என் பிரியமான குழந்தை” என்று அடிக்கடி பிரியத்துடன் கூறுவார்.

அஜய்க்கு ‘கங்காதாம்’ செல்ல வேண்டும் என்பது ஆவல். புனிதமான கங்கை நதியை தரிசிப்பதும் அதில் புனித நீராடுவதுமே அவரின் லட்சியம். ஆனால், ‘அதிக வருமானம் இல்லாத தன்னால் செலவு பிடிக்கும் அந்த யாத்திரை செல்ல முடியுமா’ என்ற ஏக்கம் அஜய் மனதி லிருந்துகொண்டே இருந்தது. அதை அவ்வப்போது பாபாவிடமும் பகிர்ந்து கொண்டார். பாபாவோ “பொறுமையாக இரு. நிச்சயம் உன் ஆசை நிறைவேறும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

ஒரு வியாழக்கிழமை அஜய் சாயியை தரிசனம் செய்ய வந்தார். அப்போது பாபா, “அடுத்த வாரம் நீ கங்கா யாத்திரை செல்லலாம்” என்று ஆசி கூறினார்.

பாபாயணம்
பாபாயணம்

அஜய்க்கு மிகவும் குழப்பம். ‘எப்படி இது சாத்தியம், கையில் பணம் கொஞ்சமும் இல்லை’ என்று யோசித்துக்கொண்டே தன் கடைக்கு வந்தார். அங்கே அவருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவர் கடையின் முன் ஏராளமான கூட்டம். அவர் மனைவி பொருள்களை எடுத்துக் கொடுத்து, காசு வாங்கிப் போட்டுக்கொண்டு பரபரப்பாக இருந்தார். இதுநாள்வரை யாருமே வராமல் வெறிச்சோடிப் போயிருந்த வியாபாரம் பரபரப்பானதைப் பார்த்து மகிழ்ந்தார்.

அன்றிலிருந்து அஜய் கடையில் வியாபாரம் மிக அருமையாக நடைபெற்றது. பொருள்களை எடுத்துக் கொடுப்பதும் பணத்தை வாங்கிக் கல்லாவில் போடுவதும் அவர் வாழ்க்கையே மாறிப் போனது. கையில் நிறைய காசு சேர்ந்தது. அவரால் சந்தோஷத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. குடும்பத்தினருடன் கங்கா யாத்திரை கிளம்பிச் சென்றார்.

தன் வாழ்நாளின் லட்சியமாகக் கொண்டிருந்த கங்கை யாத்திரை வந்தபின்னும் அவர் மனம் அதில் ஈடுபாடு கொள்ள வேயில்லை. அவருக்குக் கடையின் மீதே ஞாபகம்.

‘கடையில் நல்ல வருமானம் வருகிறது. இந்த நேரத்தில் அதை விட்டு வந்துவிட்டோமே... தொடர்ந்து வியாபாரத்தில் கவனம் செலுத்தினால் அதிகம் சம்பாதிக்க முடியும்’ என்று தனக்குள்ளாக எண்ணிக் கொண்டே வந்தார்.

ஒருவழியாக யாத்திரை முடிந்தது. தன் கடைக்குச் சென்று மீண்டும் வியாபாரத்தைத் தொடர்ந்தார். நேரத்தை வீணாக்கக்கூடாது என்று நினைத்தார்.

ஓவியம்: பாலகிருஷ்ணன்
ஓவியம்: பாலகிருஷ்ணன்

‘உன்னால் கங்கை யாத்திரை போகமுடியும்’ என்று நம்பிக்கையூட்டிய சாயியை அவர் மீண்டும் தரிசிக்கச் செல்லவேயில்லை. இப்போதி ருக்கும் நிலைக்கு யாரின் ஆசி காரணமோ அவரைச் சந்திக்க வேண்டும் என்று அஜய் நினைக்க வேயில்லை.

பேராசை அவரை இறுகப் பற்றிக்கொண்டது. சாயியை மறந்தார். மசூதியை மறந்து விட்டார். பாபா ஒருமுறை அவரைச் சந்திக்கக் கடைக்குச் சென்றார். ஆனால் அஜய் வியாபார மும்முரத்தில் பாபாவைக் கவனிக்கவில்லை. பாபா அங்கிருந்து எதுவும் பேசாமல் மசூதிக்குத் திரும்பி விட்டார்.

சில நாள்களில் அஜய்யின் கடையில் கூட்டம் குறையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் வியாபாரம் என்பதே இல்லை. வரவு இல்லாமல், சேமிப்புகள் கரைந்தன. ஒருகட்டத்தில் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாத நிலை.

ஒருநாள் அஜய்யின் மனைவி கூறினாள்.

“இன்று வியாழக்கிழமை மசூதியில் பாபாவைச் சென்று தரிசித்து பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டால் ஒரு நேர உணவு கிடைக்குமே” என்று கூறினார்.

அப்பொழுதுதான் அஜய்க்கு, தான் எவ்வளவு பெரிய பிழை செய்துவிட்டோம் என்று புரிந்தது. குற்ற உணர்வோடு சாயி இருக்கும் மசூதியின் வாசலில் சென்று நின்றார்.

வாயிலில் அஜய் நிற்பதைக் கண்ட பாபா இரு கை நீட்டி “அஜய், என் குழந்தாய், அருகில் வா” என்று அழைத்தார். கண்ணீர் மல்க ஓடோடிச் சென்று அவர் பாதத்தில் விழுந்து கதறித் தன் பாவங்களைக் கரைத்துக் கொண்டார் அஜய்.

அப்போது பாபா “தவறு செய்வது மனித இயல்பு. அதை உணர்ந்து அதிலிருந்து உன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும். மனிதன் பணத்திற்கு அடிமையாகிவிடக் கூடாது. எப்பொழுதும் எல்லா இடங் களிலும் எல்லா நேரங்களிலும் எல்லோரி டத்திலும் ஒன்றுபோல இரு. உன் மனதை எப்பொழுதும் பணத்தின் மீது குவிக்காதே, பரம்பொருளின் மீது குவி” என்று கூறிய பாபா அவர் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்தார்.

“நீ என்னை விட்டு எப்போதும் விலக முடியாது. ஜன்ம ஜன்மமாக என்னுடன் தொடர்ந்து வரும் பக்தர்கள் அனைவரையும் நான் என்னிடம் இழுத்துக் கொள்கிறேன். என் கவனம் எப்பொழுதும் உங்கள் மேல்தான் இருக்கிறது. என்னை விட்டு நீயே விரும்பினாலும் விலக முடியாது” என்றார் பாபா.

இந்தமுறை அஜய் சாயியின் பொற்பாதங்களை உறுதியாகப் பற்றிக்கொண்டார். சில நாள்களில் வியாபாரம் மறுபடி செழித்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமா..!

(தரிசனம் தொடரும்)

வாசகர் அனுபவம்

1998-ம் ஆண்டு ஒரு நாள் காலை 10.30 மணிக்கு என் வீட்டின் கதவு தட்டப்பட்டது. வெளியே தாடியுடன் காவியுடையில் நடுத்தர வயதுடைய ஒரு சாது நின்றிருந்தார். தெய்விகக் களையோடு காணப்பட்ட அவரை உள்ளே அழைத்தேன். பாலில்லாத தேநீர் கேட்டு அருந்தினார். பின் என் மனைவியைப் பார்த்து `அம்மா, உனக்கு மூன்று அண்ணண்கள். சரிதானே... நான் நான்காவது என்று வைத்துக்கொள்' என்று கூறினார். என் மனைவி `ஆம்' என்று சொல்லி அவரை வணங்கினாள். அவர் சாயி சத்சரிதத்தில் இருந்த சாயி படத்தைக் காண்பித்து இவரைத் தெரியுமா என்று கேட்டார்.

அப்போது `நாங்கள் சாயி குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் விரிவாக அறிந்ததில்லை’ என்றோம். பின்பு `அவர் அன்னதானத்துக்குப் பணம் கொடு’ என்று சொல்லி 450 ரூபாய் வாங்கிக்கொண்டார். என்னையும் என் மனைவியையும் ஆசீர்வதித்துச் சென்றார். அன்றுமுதல் எனக்கு சாயிபாபாவின் மீது ஈர்ப்பு உண்டானது. ஷீர்டி சென்று வந்தோம். வாழ்வில் படிப்படியாக முன்னேறினேன். சாயிக்குக் கோயில்கட்ட வேண்டும் என்ற ஆசை மனதுக்குள் இருந்தது.

2008-ல் என் தந்தையார் வீடுகட்டக் கொடுத்த நிலத்தை விற்று நான் காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரத்தில் கோயிலுக்காக நிலம் வாங்கினேன். பாபாவின் பேரருளால் அங்கு அவருக்கு 2019-ம் ஆண்டு ஓர் ஆலயம் கட்டி கும்பாபிஷேகம் செய்தேன். சாயியின் பேரருள் எங்களோடு எப்போதும் இருக்கிறது.

- ஜி. ஸ்ரீனிவாசன், சென்னை.

பாபாவும் நானும்

“பொதுவாக, நான் எல்லா தெய்வங்களையும் வணங்குவேன். பிரார்த்தனை செய்வேன். மகான்களின் அருளாசியைப் பொறுத்தவரை ஆழ்ந்த நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த வகையில், ஷீர்டி சாய்பாபாவின் மீதும் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. 2007-ம் ஆண்டில் ‘சிவாஜி’ பட ஷூட்டிங்கிற்காக நாங்கள் புனேவில் தங்கியிருந்தோம். எதேச்சையாக ஒருநாள் ஷூட்டிங் கேன்சல் ஆனது. அப்போது என்னுடன் இயக்குநர் மணிவண்ணன் சாரும் நகைச்சுவை நடிகர் விவேக் சாரும் தங்கியிருந்தனர். மணிவண்ணன் சாரும் நானும் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் எல்லா விஷயங்களையும் நகைச்சுவையுடன் பேசிக்கொள்வோம். அன்று படப்பிடிப்பு கேன்சல் ஆனதால் மணிவண்ணன் சார், நாம் அருகில் இருக்கும் ஷீர்டி சாயிபாபா கோயிலுக்குப் போய் வருவோமா என்று கேட்டார். அவர் கடவுள் மறுப்புக்கொள்கையில் நம்பிக்கை உள்ளவர் என்றாலும், அவரின் துணைவியார் ஷீர்டி சாயிபாபாவின் பக்தை. அவர் மணிவண்ணன் சாரை தரிசனம் செய்து விட்டு வரும்படி கூறியிருக்கிறார். அதனால் மணிவண்ணன் சாரும் போகலாம் என்று என்னை அழைத்தார். `தரிசனம் செய்யாமல் போனால் அவள் வீட்டுக்குள்ளே விடமாட்டாள்' என்று அவருக்கே உள்ள நகைச்சுவையோடு கூறினார். பிறகு நான் இயக்குநர் மணிவண்ணன், அவரின் உதவியாளர், நடிகர் விவேக் மற்றும் அவரின் உதவியாளர் என ஐவரும் புறப்பட்டு ஷீர்டிக்குக் கிளம்பிச் சென்றோம்.

ராஜா
ராஜா

நாங்கள் சென்றிருந்த நேரம் கோயிலில் கூட்டமான கூட்டம். பழநி தைப்பூசம் பாதயாத்திரைக்கு மக்கள் வருவதுபோன்ற ஒரு கூட்டம் அலைமோதியது. கோயிலுக்குள்ளேயே அபரிமிதமான மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிலரின் உதவியோடு எளிய முறையில் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைக்குமா என்று பார்த்தோம். ஆனால் அங்குள்ள எவருக்கும் தமிழ் தெரியவில்லை. வந்தவர்கள் எல்லாம் வட இந்தியர்களும் மராட்டியர்களும் கன்னடர்களும். கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று பாபாவை தரிசனம் செய்துவிடுவோம் என்று கூட்டத்தில் கலந்து நடக்க ஆரம்பித்தோம். நடிகர் விவேக் ‘சாயிராம் ஜெய் சாயிராம் சாயிராம்’ என்று குரல் கொடுத்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தார். எங்களை அப்படியே நகர்த்திக்கொண்டே சென்று பாபாவின் முன் நிறுத்தினார்கள்.

- எஸ்.கதிரேசன்

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.